இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் கொடுந்தாக்குதல்களுக்கு ஆளாகி ஈழத் தமிழ் மக்கள் கடந்த பல்லாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களையும் எதிர்கொண்டு வரும் இன்னல்களையும் நாடறியும். தாங்களும் அறிவீர்கள்.
தமிழகத்தில் இச்சிக்கல் குறித்து அக்கறையுடைய அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அவ்வப்போது நடத்திய போராட்டங்கள், அனுப்பிய கடிதங்கள், மனுக்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக சட்டமன்றமே அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு மனதோடு நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களும் தங்களின் மேலான பார்வைக்கு வந்திருக்கும் என நம்புகிறோம்.
எனினும், இலங்கையில் இன ஒழிப்புத் தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ள இந்த நிலையிலும் தாங்கள் இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யக் கோரவில்லை என்பதும், அளித்து வரும் ராணுவ உதவிகளையும் படைப் பயிற்சிகளையும் நிறுத்தவில்லை, ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ள படைக் கருவிகளையும் பயிற்சியாளர்களையும் திரும்பப் பெறவில்லை என்பதும், மாறாக இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போரை ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பதாகச் சித்தரித்து இப்போர் தொடரும் என அறிவித்திருப்பதும் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிரான கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு, பாலஸ்தீன விடுதலையை, அங்கோலா நமீபிய விடுதலையை, ஏன் இந்தியத் துணைக் கண்டத்துக்குள்ளேயே பாகிஸ்தானுக்கு எதிரான பங்களாதேச விடுதலையை ஆதரித்த இந்திய அரசு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டும் ஆதரிக்க மறுப்பது ஏன், ஆதரிக்க மறுப்பதோடு மட்டுமல்ல, மாறாக, அப்போராட்டத்துக்கு எதிராகச் செயல் பட்டு தமிழின அழிப்புப் போரை நடத்தி வரும் சிங்கள அரசுக்கு உதவி வருகிறதே இந்த அளவுக்கு ஈழ மக்கள் செய்த பாவம்தான் என்ன என்கிற கேள்வியையும் உணர்வுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுப்பி வருகிறது.
கேட்டால் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் சொல்கிறார்கள், அன்னை சோனியாவின் அன்புக் கணவரும், முன்னாள் இந்தியப் பிரதமருமான ராஜிவின் மறைவுக்கு காரணமானவர்கள் போராளி அமைப்பினர், அதனால்தான் நாங்கள் போராளிகள் அமைப்பை எதிர்க்கிறோம். அவ்வமைப்புக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறோம் என்கிறார்கள்.
அரசு அதிகாரம், ஆட்சி பீடம், பட்டம், பதவி என்கிற சமூக நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு சாதாரண சராசரி மனிதன் என்கிற நோக்கில் பார்க்கவும், துடிப்பும் சுறுசுறுப்பும் செயலாற்றலும் மிக்க ஓர் இளைஞர் இப்படி இளம் வயதிலேயே அகால மரணத்தை எதிர்கொள்ள நேர்வதும், அதனால் கனிவுள்ளம் கொண்ட ஓர் இளம் பெண்மணி தன் அன்புக் கணவரை, குழந்தைகளை தங்கள் பாசமிகு தந்தையை இழக்க நேர்வதும் நெஞ்சை உருக்கும் வேதனைமிக்க மாபெரும் துயர சம்பவமே என்பது தமிழக மக்கள் அறியாததல்ல.
ஆனால் ராஜிவ் மறைவுக்குக் காரணமானவர்கள் யார் என்கிற முழு உண்மையும் இன்னமும் வெளிப்படாத நிலையில், அவர் மறைவு குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கைகளும் சில காணாமல் போக, யாரோ சிலரைக் காப்பாற்றும் நோக்குடன் யாரோ சிலர் மட்டுமே குற்றவாளிகள் ஆக்கப்பட்டு அவர்கள் மட்டுமே தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற பொதுவான மதிப்பீடு நாடு தழுவி நிலவ, இதற்கு போராளி அமைப்பினரே காரணம் என்று அவர்களை மட்டுமே குற்றம் சாட்டுவது ஏற்புடையதாக இல்லை என்பதும் தமிழக மக்களுடைய கருத்து.
அப்படியே ஒரு வாதத்துக்கு போராளி அமைப்பினர்தான் இதற்குக் காரணம் என்று வைத்துக் கொள்வதானாலும், அதில் தவறு செய்ததாக மெய்ப்பிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே தண்டனை அளிப்பதுதான் நியாயமாயிருக்க முடியுமே தவிர, அதை விட்டு ஒட்டு மொத்த அமைப்பையுமே பகையாக நோக்குவது என்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அது இயற்கை நீதிப்படி தருமமுல்ல என்பதும் தமிழக மக்களுடைய எண்ணம்.
அண்ணல் காந்தியைக் கொன்றவர்கள் இந்து மதவாத அமைப்பினர் என்பதால் இந்து மதத்தையே எவரும் வெறுப்பாக நோக்குவதில்லை, பகையாகப் பார்ப்பதில்லை. அன்னை இந்திராவை அவர் பிரதமர் பதவியில் இருக்கும் போதே அவருக்குப் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்து கொண்டே கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால் சீக்கிய சமூகத்தையே எவரும் எதிராகப் பார்ப்பதில்லை, பகையோடு நோக்குவதில்லை.
அவ்வளவு ஏன் இதே ராஜீவ் காந்தி அவர் இலங்கைக்குச் சென்றபோது, சிங்களக் கப்பற் படைச் சிப்பாய் ஒருவனது துப்பாக்கிக் கட்டையால் தாக்கப்பட்டாரே, கெடு வாய்ப்பான முறையில் அப்போதே அவருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இந்திய அரசு என்ன இலங்கையின் மீது படையெடுப்பா நடத்தி விட்டிருக்கப் போகிறது. சம்மந்தப்பட்ட சிப்பாய்க்குத் தண்டனை வழங்கி நாடுகளுக்கிடையே நல்லுறவு என்கிற பெயரில் இலங்கை அரசுடன் நட்பு பாராட்டித்தானே வந்திருக்கப் போகிறது. இப்போதும் அப்படித்தானே இருந்து வருகிறது.
இப்படியெல்லாம் இருக்க ராஜீவ் மறைவுக்குக் காரணமானவர்கள் எனப்படுபவர்கள் பற்றி மட்டும் அவர்கள் போராளி அமைப்பினர் என்று குற்றம் சாட்டி ஒட்டுமொத்த போராளி அமைப்பையுமே, அந்த அமைப்பு எந்த இனத்துக்காகப் போராடி வருகிறதோ அந்த ஒட்டுமொத்த இனத்தையுமே பகையாகப் பார்ப்பதும் அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும்தான் எந்த வகையில் நியாயம் என்பதே தமிழக மக்களின் கேள்வி.
இந்த தார்மிக நியாயத்தின் அடிப்படையில், மரியாதைக்குரிய அன்னை சோனியா காந்தி அவர்களே தாங்கள் தாயுள்ளமும் இரக்கச் சிந்தையும் பரிவுணர்ச்சியும் மிக்க மாந்த நேயமுள்ள ஒரு மகத்தான பெண்மணி என்கிற மேலான மதிப்பீட்டில் தங்களின் கனிவான சிந்தைக்கும் மேலான பரிசீலனைக்கும் கீழ்க்கண்டுள்ள கருத்துகளை முன் வைக்க விரும்புகிறோம்.
இலங்கையில் தமிழ்ப் பெண்கள் எத்தனை பேர் சிங்கள இனவெறி ராணுவத்தால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள், எத்தனை இளஞ்சிறுவர் சிறுவர் தந்தையை இழந்து தாயை இழந்து சகோதர சகோதரிகளை இழந்து அனாதைகளாக்கப் பட்டிருப்பார்கள், பெற்றோர்கள் மகனை, மகளை இழந்து நிராதரவாக விடப்பட்டிருப்பார்கள், எத்தனை குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாக நிர்மூலமாக்கப் பட்டிருக்கும், எத்தனை அப்பாவி மக்கள் குழந்தைகள், பெண்கள், முதியோர் என சிங்கள இனவெறி ராணுவத்தால் குரூரமாகக் கொல்லப் பட்டிருப்பார்கள், ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்கள் ஓர் இனத்தில் பிறந்து விட்டார்கள், தமிழராய் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக புவியியல் இருப்பும் மனித குல வரலாறும் வழங்கிய அந்த ஒரே அடையாளத்துக்காக இப்படி அநியாயமாகக் கொல்லப்படுவதை விடவும் கொடுமையானதொரு நிகழ்வு உலகில் வேறென்ன இருக்க முடியும்?
இத்தனை கொடுமைகளும் நம் கண் முன்னே நம் கூப்பிடு தூரத்தில் நிகழ அத்தனையையும் பார்த்துக் கொண்டு, கேட்டுக் கொண்டு நாம் எப்படி வாளாயிருக்க முடியும். “தானாடா விட்டாலும் தன் சதையாடும்” என்பார்களே அதைப்போல தமிழர்களாகிய எங்கள் மொழியைப் பேசும் எங்கள் சகோதர மக்கள் எம் தொப்புள் கொடியுறவு சந்தித்து வரும் கொடுமைகளை எப்படி சகித்துக் கொள்ள முடியும்.
ஊர் உலகமெலாம் இது போன்ற துன்பத்திலும் துயரத்திலும் உழன்று அல்லல்பட்ட மக்களுக்கெல்லாம் அவ்வப்போது நாம் எவ்வளவோ உதவிகள் செய்தோமே, ஆனாலும் தற்போது நம் சொந்தங்கள் இப்படி ஒரு துன்பத்தில் உழலும்போது அவர்களுக்கு மட்டும் உதவ முடியாமல் கைகள் கட்டப்பட்டும் அது பற்றி பேசவும் முடியாமல் வாய்ப் பூட்டும் போடப்பட்டவர்களாக இருக்கிறோமே என்கிற ஆதங்கம், வேதனை தமிழக மக்களுக்கு இருக்காதா......?
இந்திய ராணுவம் என்பது தமிழக மக்களின் வரிப்பணமும் படையாள்களும் பங்கு கொண்டுள்ள ஒரு ராணுவம்தானே, இந்த ராணுவம் தமிழர்களுக்கு உதவாமல் அப்படி உதவாவிட்டாலும் பரவாயில்லை, சும்மாயில்லாமல் தமிழர்களுக்கு எதிராகத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி ராணுவத்துக்குப் போய் உதவுகிறதே, நம்முடைய வரிப் பணத்தில் வாங்கிய படைக்கலன்களைத் தருகிறதே, இந்த ராணுவத்துக்கு இன்னமும் தமிழர்களின் பங்களிப்பு தேவையா என்கிற பொருமல் எழாதா..
இந்த அநியாயத்தை அக்கிரமத்தை நிறுத்துங்கள் என்று சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் களமிறங்கி அவரவர் சக்திக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப பல போராட்டங்கள் நடத்தி தமிழகமே ஒருமித்துக் குரல் கொடுத்த பின்னும் அதைப் பொருட்படுத்தாமல், சட்டை செய்யாமல், இந்திய அரசு எப்போதும் போல் தான் பாட்டுக்கு தன் நடவடிக்கைகளைத் தொடர்வது தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் ஆகாதா....., அது தமிழக மக்களின் வேதனைகளை அதிகரிக்கச் செய்யாதா...
இந்த வேதனையில் கூட்டுக் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட ஒரு மனிதன் அந்த வேதனையில் விரக்தியின் விளிம்புக்குச் சென்று “என்னைத் தனியே விட்டு விடுங்கள், வாழ்வோ சாவோ எப்படியோ நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தன் உளக் குமுறலை வெளிப்படுத்தினால் இக்குமுறலில் உள்ள வேதனையின் வலியைப் புரிந்து கொள்ளாமல், வெறும் குரலை மட்டும் வைத்து எங்களை “தேசத் துரோகிகள்”, “பிரிவினைவாதிகள்” என்று குற்றம் சாட்டி அரசு சிறையில் அடைக்கிறதே,இது நியாயமா....
பிரான்சு நாட்டு கல்விக் கூடங்களில் மத அடையாளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு சீக்கிய பண்பாட்டு அடையாளமான தாடிக்கும் தலைப் பாகைக்கும் அனுமதி மறுக்கப்பட்ட போது, அந்நாட்டு அதிபருடன் இது பற்றி முறையிட்ட மாண்புமிகு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்கையில் அன்றாடம் கொல்லப்பட்டு வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு எப்போதாவது குரல் கொடுத்திருப்பாரா, செஞ்சோலைச் சிறுமிகள் 61 பேர் சிங்கள இனவெறி ராணுவ விமானத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டார்களே, அப்போது அதற்குக் கண்டனம் தெரிவிக்க இயலாவிட்டால் போகட்டும், குறைந்தபட்சம் ஓர் இரங்கலாவது தெரிவித்திருப்பாரா.... இதுபோன்ற நிராகரிப்புக்குள்ளான நிலையில், சீக்கியர்களின் தாடிக்கும் தலைப்பாகைக்கும் உள்ள பாதுகாப்பு கூட தமிழன் உயிருக்கு இல்லையே என்கிற வேதனை தமிழர்கள் நெஞ்சத்தில் எழாதா...
இப்படி எத்தனையோ தார்மிக நியாயம் மிக்க பல கேள்விகள் தமிழ்ச் சமூகத்தின் உள்ளங்களில் குமுறிக் கொண்டிருக்கின்றன. விவரிப்பின் நீளும், ஆகவே, இவற்றை இத்தோடு நிறுத்தி இந்த மனக் குமுறலோடும் பொருமலோடும் ஒரே ஒரு கருத்தை மட்டும் தங்கள் மேலான சிந்தைக்கும் கவனத்திற்கும் வலியுறுத்திச் சொல்லி எங்கள் வேண்டுகோளைத் தங்கள் முன் வைக்க விரும்புகிறோம்.
எங்களது இவ்வளவு கூக்குரல்களுக்குப் பிறகும், இந்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல், தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாமல், எங்களைப் புறக்கணித்து, உதாசீனம் செய்து தன் நடவடிக்கைகளைத் தான் பாட்டுக்குத் தொடர்ந்து இதே நிலையை நீட்டிக்க வைக்குமானால், அதாவது ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யாமலும், இந்த இக்கட்டான தருணத்திலும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு தானும் உதவாமல், தமிழக மக்களையும் உதவி செய்ய விடாமலும், தொடர்ந்து ஈழ மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருமானால், இதன் விளைவாக ஈழ மக்களுக்கு ஏதும் விரும்பத்தகாத விளைவுகள் நேருமானால், அது இந்திய அரசை என்றென்றைக்கும் தமிழினத்துக்கு எதிரான தீராத இனப் பகையாளியாய் மாற்றிவிடும். பிறகு இனி வரலாற்றின் எந்தத் தருணத்திலும் இணக்கப்படுத்த முடியாத, சம்பவங்களின் காயம் ஆறினாலும் விளைவுகளின் வடு மாறாத அளவுக்கு, சாந்தப்படுத்த முடியாத, சமரசப் படுத்த இயலாத வெறுப்பை, இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழக மக்களை உமிழ வைக்கும். இப்படி ஒரு நிலை தேவைதானா என்பதை இந்திய ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். போனது போகட்டும் என இனியாவது ஆட்சியாளர்கள் இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
1971இல் அன்னை இந்திரா காந்தி ஆட்சியின்போது பங்களாதேஷ் பிரச்சினையில் எழாத பாகிஸ்தான் இறையாண்மை, உள்நாட்டு விவகாரம் என்கிற கேள்விகளையெல்லாம் தற்போது ஈழச் சிக்கலில் மட்டும் எழுப்பி இலங்கை இறையாண்மை, உள்நாட்டு விவகாரம் என்கிற சாக்குப் போக்குகளைச் சொல்லி சொத்தை வாதங்களை முன்வைத்து இந்திய அரசு சிங்களவர்க்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படும் போக்கைக் கைவிடவேண்டும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை சாசனம் பிரிவு 15இன் படி ஈழத் தமிழர்களின் இன உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். இன ஒடுக்கு முறை நிலவும் ஒரு நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அண்டை நாடுகள் தலையிட உரிமை வழங்கும் ஜெனிவா மாநாடு 1948இன் படி இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சிக்கலில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அடிப்படையில் தங்களின் மனச்சாட்சியின் மீதான பெருத்த நம்பிக்கையோடும் மிகுந்த மரியாதை யோடும் கீழ்க்கண்டுள்ள கோரிக்கைகளைத் தங்களின் மேலான பரிசீலனைக்கும் உடனடி நடவடிக்கைகளுக்காகவும் முன் வைக்கிறோம்.
1. இலங்கை இனவெறி அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஈழத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
2. சொந்த மண்ணிலேயே அகதிகளாய்ப் புலம் பெயர்ந்துள்ள ஈழ மக்களுக்கு உணவு, மருந்து, உடை, இருப்பிடம் முதலான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்பட வேண்டும். வழங்கப்படும் எல்லா உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்றடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
3. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை அளித்துள்ள உதவிகளையும் திரும்பப் பெற வேண்டும்.
ஈழச் சிக்கல் சார்ந்து தமிழக மக்களுக்கு வெவ்வேறுபட்ட பல கோரிக்கைகள் இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையிலும், மனித உரிமை அடிப்படையிலும் எல்லா தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இந்த மூன்று கோரிக்கைகளை மட்டும் இப்போதைக்கு தாங்கள் உடனடியாக நிறைவேற்றித் தருமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அரசு பொறுப்பில் பிரதமராக மன்மோகன்சிங் இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற ஆளும் கூட்டணியின் தலைவராக இருப்பவர் நீங்கள் என்ற முறையிலும், தவிர, தங்கள் கணவர் மறைவில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட திருமதி. நளினிக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க பரிந்துரைத்த, பரிவு நெஞ்சம் கொண்டவர் நீங்கள், மேலும் தன் தந்தையின் மறைவுக்குக் காரணமானவர் என்று கருதப்பட்ட நிலையிலும் நளினியை நேரில் சென்று பார்த்து உரையாடித் திரும்பிய பெருந்தன்மையும் பரந்த நோக்கும் மிக்க அருமைச் சகோதரி திருமதி. பிரியங்காவை ஈன்ற பெருமைமிகு அன்னை நீங்கள் என்ற வகையிலும் இந்த வேண்டுகோள்களைத் தங்களின் இரக்கமுள்ள நெஞ்சிற்கும் கனிவான பார்வைக்கும் முன் வைக்கிறோம். தாங்கள் இதை விரைந்து நிறைவேற்றித் தருவீர்கள் என்றும் நம்புகிறோம்.
மிகுந்த நன்றியுடனும், வணக்கத்துடனும்,
தங்கள் உண்மையுள்ள
எழுத்தாளர் இராசேந்திரசோழன்
ஆசிரியர் - “மண்மொழி”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஒரு சாமானியத் தமிழனின் மனம் திறந்த மடல்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: கட்டுரைகள்