இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத் தோராம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சிங்களப் பேரினவாதத்தால் (சிங்கள ஏழைகளின் நியாயங்கள் ஒரு புறம் இருந்தால்கூட) ஈழத்தமிழர்கள் அடைந்த துன்ப துயரங்கள், அவமானங்கள், இனஅழிப்புகள், சிதைப்புகள், கொடூரங்கள், கொலைகள், நிர்க்கதியால் ஒடுக்கப்பட்ட சுயமரியாதைகள், அவமரியாதைகள் என எத்தனையோ குற்றங்களால் அழித்தொழிக்கப்பட்டனர்.

முப்பதாண்டு கால யுத்தச்சூழலுக்குள் இவ்வளவு இன்னல்களைக் கண்ட தமிழினத்திலிருந்து இலக்கியமும் எழுந்து வளர்ந்துள்ளது. கொடூரமான மானுட அவலங்களை ஈழத்தமிழ்க் கவிதைகளில்தான் காணமுடிகிறது.

யுத்த நெருக்கடிகளில் கிடந்து உயிருக்காக அவர்கள் பட்ட அவமானங்கள், வேறொரு இனம் சந்தித்திராத ஒன்று. இந்த வாழ்வியல் அனுபவங்களை ஈழத்தமிழ்க் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.வாழ்க்கையின் இயல்பான கதியைத் தலைகீழாக்கிவிட்டபேரவலங்களை முன்வைக்கின்றன. வாழமுடியாத ஒரு வாழ்க்கையை வாழும்படி ஆக்கிவிட்ட யுத்தச்சூழலும் இனவாதமும், தமிழின் இலக்கிய முகத்தையே மாற்றிவிட்டது. இதுவரை உணராத கொடூர அனுபவங்களை முன்வைக்கின்றன. எனவே உலகத்தரத்திற்கு நிகரானவையாக விளங்கு கின்றன, ஈழத்தமிழ்க் கவிதைகள். ஆனால் இப்படி பேரவலங்களுள் வாழ்ந்த ஈழப்புனைகதையாசிரியர்கள், கவிஞர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளை நிகழ்த்த வில்லை. பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

ஈழத்து ‘ஞானம்’ கலை இலக்கிய இதழாசிரியர் ஞானசேகரன் ‘ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்’ என்றொரு தொகுப்பை 2012 இறுதியில் கொண்டு வந்துள்ளார். இத்தொகுப்பில் கடந்த முப்பதாண்டுக்கால இலக்கியச் சாதனைகளிலிருந்து 26 கதைகளைத் தேர்ந் தெடுத்துக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். பல்வேறு இதழ்களிலிருந்தும் பல்வேறு தொகுப்புகளி லிருந்தும் தெரிவு செய்துதான் தந்துள்ளார். ஏற்கனவே முக்கியமான கதைகள் என்று குறிப்பிடப்பட்டவைதான் இவை. (என் வாசிப்பில்) கலாப்பூர்வமான சாதனைகள் மிகமிகக் குறைவாக இருக்கின்றன. இக்கதைகள் பேசும் விசயங்கள் அத்தனையும் ஈழ மக்கள் படும் உக்கிரமான துயரங்களே. தொடர்குண்டு வீச்சிற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கிராம-நகரங்களைவிட்டு வேறு பகுதிகளுக்குத் தப்பித்து ஓடும் குடும்பங்கள் படும் பரிதவிப்புகள், அநாதரவான நிலைகள், தப்பிவரும் வழியிலேயே ஏற்படும் உயிர் இழப்புகள் போன்றவற்றைக் கதை யுலகிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

வேலை நிமித்தமாக நகரங்களுக்கு வந்த தமிழ் இளைஞர்கள், ‘விசாரணை’ என்ற பெயரில் நிலைபெறவிடாமல் துரத்தியடிக்கப் படுகின்றனர். சிங்களவாத தொடர்தாக்குதலைத் தாங்க முடியாமல் போராளிகளாக மாறுகின்றனர். போராளி களின் சாவு, பெற்றோர்களுக்குச் செய்திகளாக எப்படியோ வருகின்றன. சந்தேகத்தின் பெயரால் போராளிக் குழுக் களிடமும் சிங்கள இராணுவத்திடமும் இழுத்துச் செல்லப்பட்டு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிதைக்கிற அக்கிரமங்கள் கதையுலகிற்குள் வந்திருக் கின்றன. அவநம்பிக்கைகளால் இசுலாமியத் தமிழர் களைப் போராளிகள் மண்ணைவிட்டுத் துரத்தியடிக் கின்றனர். இந்தியப் படையின் வருகையால் அமைதி யிழந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிதைவிற் குள்ளாகின்றனர்.

சொந்தவீடுகளை இழந்து புலம் பெயர்கின்றனர். தமிழர்கள் துரத்தப்பட்டு அவர்களின் வீடுகள் இராணுவத் தினரின் அலுவலகங்களாக மாறுகின்றன. அந்த வீட்டை மீட்க விரும்புகின்றனர். இராணுவத் தாக்குதலால் சிதறடிக்கப்பட்ட வீட்டை மீட்க முடியாமல் பரிதவிக் கின்றனர். வீடு, வயல், மரங்கள் என இழந்தவற்றை மீட்கத் திட்டமிடுகின்றனர். நிறைவேறாமல் புலம் பெயர்கின்றனர். பதுங்கு குழிகளுக்கள் குண்டு வீச்சி லிருந்து தப்பிக்க ஒளிகின்றனர். நீண்ட போர் அழிவு களின் சாட்சியங்களாக மூத்தோர்கள் தங்கள் நினைவு களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

புதையுண்டோரின் வாழிடங்களைப் பார்க்கமுடியாமல் நினைவுகளில் மீட்டியபடி இருக்கின்றனர். போரின் தாக்குதலுக்கு உள்ளான சொந்தபந்த உறவுகளின் சிதைந்த உடல் களைக் காண நேர்கிறது.

போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் விளையாட்டுகளில் மனிதாபிமானமற்ற அம்சங்கள் குடியேறிவிட்டதையும் காண்கின்றோம். சிங்கள இராணுவம் நடத்திய படுகொலைகள், சந்தேகக் கொலைகள், பாலியல் வன்முறைகள், உருவகக் கதை களாகவும், யதார்த்தக் கதைகளாகவும் பதிவாகி இருக்கின்றன. எளிய மக்கள் போர்ச்சூழலுக்குள் பட்டழுந்திய இன்னபிற சொல்லவொண்ணாத் துயரங்கள் இக்கதையுலகிற்குள் முகம் காட்டுகின்றன. என்றாலும் வாசகனைப் பாதிப்பிற்குள்ளாக்கும் கலையாற்றல் பல எழுத்தாளர்களின் புனைகதைகளில் கூடிவரவில்லை. பிரச்சினைகள் உண்மையானவை. புனைகதையுலகில் அவை உயிர் பெற்றுவிடும் மிக்க பேராற்றலை உள்ளீடாக ஈர்த்து வைக்கவில்லை.

 தமிழ் உணர்வையும் இன உணர் வையும் சிறப்பாக வெளிப்படுத்த முடிந்த இவர்களால் மண்ணோடு பிணைந்த நுட்பமான இழைகளைக் கொண்டு வரமுடியவில்லை. எழுத வந்த எழுத்தாளர்கள் தமிழ் விவசாயக் குடிகளிலிருந்து எழுந்துவராதவர்களோ என்று யோசிக்க வேண்டியதிருக்கிறது.

மண்ணின் வாசமோ அப்புலத்தின் உயிரோட்டமான நினைவலைகளோ உயிர் பெறுவதில்லை. விவசாய மணம் இல்லை. இனமோதல் களின் அரசியல் பார்வைதான் தூக்கலாக இருக்கின்றது. இங்குத் தொகுக்கப்பட்டிருக்கும் கதைகளைவிட உக்கிர மான கதைகள் இருக்கின்றன.

பல்வேறு கணக்கு வழக்கு களால் இடம் பெறாமல் போயிருக்கின்றன. அத்தோடு தேர்வு சார்ந்த இலக்கிய மதிப்பீடுகள் ஆளுக்கு ஆள் வேறுபடவும் கூடும். ஆனாலும் ஞானசேகரனுக்கு மேலான படைப்பு எது என்பதில் கறார்தன்மை இல்லாது போயிருப்பதால், ஏமாற்றம் தரும் படைப்புகள் அதிக அளவில் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

முக்கியமாகக் கடுமையான ‘சென்டிமெண்ட் ஏக்கங்களாக’த் திருப்பப்பட்ட கதைகளை நல்ல படைப்புகள் என்று ஞானசேகரன் நம்புகிறார். போர்க்காலச் சூழலில் ஈழத்திலிருந்து வெளியேறியவர்களின் படைப்புகள் இடம்பெறவில்லை. தொகுப்பின் நோக்கம் சார்ந்து விடுபட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனாலும் ஈழமண்ணைக் களமாகக்கொண்டு எழுதிய புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் சரியான முறையில் தொகுக்கப்பெறவில்லை. 1983-க்கு முன் நிகழ்ந்த இனமோதல்களில் விளைந்த வலுவான படைப்புகள் மீளக் கொண்டுவரப்படாமலே போய் விட்டன. கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் சொந்த அனுபவப் பதிவுகளில் வெளிப்படும் படுபயங்கரமான அனுபவத்திற்கு நிகராகப் பெரும்பாலான கதைகள் இல்லை. அனுபவப் பதிவுகளுக்கு நிகரான பல அம்சங் களைப் புனைகதையாசிரியர்கள் புனைகதைகளுக்குள் ஆற்றல்களாகத் திரட்டிக் கொள்ளவில்லை.

பல்வேறு சிடுக்குகள் ஊடுபாவாக, வாழ்வியலாக மாறவில்லை. முக்கியமாக யுத்தச்சூழலில் மானிடஅபத்த தரிசனங் களைக் கதையுலகிற்குள் பெரும்பாலான படைப்பாளி களால் உண்டாக்கிக் காட்ட முடியவில்லை.

செய்திகளைக் கொண்டு கட்டப்பட்டவைகளாக இருக்கின்றன கதைகள். படைப்புச்சவாலை ஏற்று உருவாக்கிய படைப்புகள் மிகச்சிலவே. இத்தொகுப்பிற்கு வெளியே இன்னும் வாசிப்பில் ஆற்றலோடு இயங்கும் படைப்புகள் உள்ளன. மு.தளையசிங்கத்தின் ‘இரத்தம்’ பிரமிளின் ‘லங்காபுரி ராஜா’, ‘அங்குலிமாலா’, ‘குமார்மூர்த்தியின் ‘பயணம்’, கலாமோகனின் ‘மூன்று நகரங்களின்கதை’, ‘நைஜீரிய இளம் விபச்சாரியும் நானும் எனது நாயும்’ ஈழப் போர்க்கால படைப்புகளில் மிகவும் முக்கியமானவை.

பிரமிளின் இருகதைகளும் விடுதலைப்புலிகளின் ஒரு காலத்திய வெற்றியின் சாகசத்தைக் குறிப்பிடுவன. என் வாசிப்புக்குக்கிட்டாத வேறு உக்கிரமான படைப்புகள் கூட நிச்சயம் இருக்கும். இக்கதைகளின் தரத்திற்கு இத்தொகுப்புகளில் உள்ள 26 கதைகளிலிருந்து நான்கு கதைகளை மட்டுமே சொல்ல முடியும். அடுத்த நிலையில் பொருட்படுத்தத்தக்க நல்ல சிறுகதைகள் மூன்று இருக்கின்றன.

உயிர்வாழவே முடியாது நிர்க்கதியாகிப்போன ஒரு இன மக்களின் வாழ்க்கை பற்றிய கதைகளில் கலாப்பூர்வ மான படைப்புகள் என்று ஒரு தரத்தின் அடிப்படையில் மதிப்பிடலாமா? என்றொரு எண்ணமும் தோன்றுகிறது. படைப்புகோரி நிற்கும் அத்தனை சாத்தியப்பாடு களையும் மனவெழுச்சியோடு படைப்பிற்குள் படைப் பாளி கொண்டுவந்திருக்கிறானா என்ற அடிப்படை யிலேயே இதனைப் பார்க்கிறேன். சில சமயம் கட்டுரையின் தன்மையையும், சிலசமயம் சென்டி மெண்டை ஒரு முடிவு சார்ந்த உத்தியாகவும் எழுது கின்றனர். மகத்தான படைப்புகள் குறித்து இந்த எழுத்தாளர்களுக்கு ஆழ்ந்த ஞானம் இல்லை.

யுத்தச் சூழல் உண்மைதான். கதையுள் பேசப்படும் பிரச்சினை களும் உண்மைதான். அதைக் கையாளும் எழுத்தாளர் களிடம் படைப்பு எழுச்சி இல்லை. மாறாக, கேள்விப் பட்ட செய்திகளை வைத்துக் கதைகளாக இட்டுக்கட்டப் பட்டவையாக இருக்கின்றன. படைப்பாளி அதனை ஒரு அனுபவமாக, இதயப்பூர்வமான குரலில் வாசகனைப் பாதிக்கச் செய்யும் பேராற்றலாக மாற்றமடையச் செய்ய வில்லை. யுத்தச்சூழலில் நடந்த இனஅழிப்புகளைக் காலவாரியான வரலாறாகச் சொல்ல இந்தக்கதை வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சிங்கள இனவாதி களின் இனஅழிப்புச் செயல்களைக் காலவாரியாக நந்தியின் ‘பதுங்குகுழி’ கதை சொல்கிறது.

‘செல்’ தாக்குதலில் இரண்டுநாள் மூன்றுநாள் பதுங்கு குழிக்குள் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும், வயது முதிர்ந் தோரும் படும் இன்னல்களின் மானுட உள்ளங்களைச் சொல்ல முடியாமல் 25 ஆண்டுகாலப் போரினால் பெற்ற துயரங்களை வரிசையாகச் சொல்ல ‘பதுங்குகுழி’ என்ற போர்க்காலப் பாதுகாப்பு அரண் விசயத்தை எடுத்துக்கொள்கிறார்.

இந்தியராணுவம் நடத்திய அட்டூழியங்களைச் சொல்லும் ‘அம்மாவைக் கும்பிடுகிறார்கள்’ கதை கும்பிடுவது கண்ணகிதெய்வம், அழிப்பது தமிழச்சிகளை என்று விமர்சிக்கிற கதை. இக்கதை எழுதியவர் பெயரில்லாமல் விடுதலைப்புலிகள் அமைப்பால் வெளியிடப்பட்டது. யுத்த நெருக்குதல்களில் புலம் பெயர்ந்ததற்கான அரசியல் காலங்களையும் காரணங் களையும் சொல்கிறது. இன ஒடுக்குதலுக்கு உள்ளான அரசியல் காரணங்கள் படைப்பின் பின்னணியில் நின்று இயங்கி வாழ்வின் அவலங்களை உக்கிரப்படுத்தி படைப் பாக மாற்றுவதற்குப் பதில் இப்படியான வாழ்விற்கு அரசியல் காரணங்கள் தகவல்களாக அடுக்கப்படுகின்றன.

‘கண்ணீரினூடே தெரியும் வீதி’, ‘போர்’, ‘படுவான் கதை’, ‘ஆத்ம விசாரம்’, ‘வார் சிண்ட்றோம்’ முதலிய கதைகள் எல்லாம் தகவல்களை முன்வைக்கும் கதைகளாக இருக்கின்றன. இதே போல யுத்தநெருக்குதலில் தெறித் தோடிய மக்களின் ஏக்கங்களை, பூர்வீக இடம் குறித்தான நினைவுகளைச் சொல்லும்போது அதை செண்டிமெண்ட் என்ற முடிச்சால் முடிந்து வைக்கின்றனர். சென்டிமெண்ட் ஒரு முடிவு சார்ந்த உத்தியாகவராமல் வாழ்தலின் கோலத்தி லிருந்து உருவாகிவரும் போதுதான் அக்கதைகள் உச்ச பட்சமான வீச்சை நிகழ்த்தமுடியும். எழுத்தாளன் மறைந்து படைப்பு மேலெழுகிறபோதுதான் இது சாத்தியம். எழுத்தாளனுக்கு கச்சாப் பொருளாகும்போது கதைகளாகிப் போகின்றன. படைப்புகளாக மலராமல் இமிங்கிப் போகின்றன. இந்தக்கதைகளின் வன்மை, நம்மை ஈர்க்கவே செய்கின்றன.

சென்டிமெண்ட்டிற்கான திருப்பம் வாசகர்களுக்குப் பிடிக்கலாம். ஒரு இனத்திற்குக் கூடப் பிடிக்கலாம். வாழ்க்கையின் நேர்முகம் என்பது அது அல்ல என்பதையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

யுத்தச் சூழலில் மனிதனுள் எழும் சுயநலத்தை இன்ன பிற விநோத உளவியல் பிரச்சினைகளை இவை பின்னுக்குத் தள்ளுகின்றன. கம்பாவரி இ.ஜெயராஜ் அவர்கள் பதிவு செய்திருக்கும் சொந்த அனுபவங்களில் இனங்காட்டப்படும் சிக்கலான உளவியல்பிரச்சினை சகமனிதனைக் காப்பாற்றமுடியாமல் தப்பிக்க நிர்ப் பந்தப்படுத்தும் உளவியல் நெருக்கடிக்குமுன் மானுட நசிவு நிகழ்கிறது. சுயநலம் கடுமையாகிறது. இந்தப் பாதிப்பு அதன் உண்மைத் தன்மையால் ஏற்படுகிறது.

இந்த உண்மைத் தன்மையைப் புனைவில் உருவாக்க, படைப்பாளிகளின் உளவியல்  பிரச்சினையோடு யுத்த நெருக்குதலில் மனிதனின்பாடுகளைப் பார்க்க வேண்டிய திருக்கிறது. இந்த எல்லையை ‘மனிதம்’, ‘கடல் எப்பவும் இருக்கும்’, ‘தொலையும் பொக்கிசங்கள்’, ‘நான் இப்படி ஒரு நாளும் அழுததில்லை’, ‘கருவறைக் கனவுகள்’, ‘மாணிக்கம்’ முதலிய கதைகள் தம்முள் ஆற்றலாக உள்ளிழுத்துக் கொள்ளவில்லை.

அதேபோல உருவகக்கதைகளில் ‘விலங்கு நடத் தைகள்’. ‘கபாலபதி’, ‘உவப்பு’ ‘மஞ்சள்வரி கறுப்புவரி’ போன்ற கதைகளின் சொல்முறைக்காகவும் புனைவில் இருக்கும் சமூக உண்மைக்காகவும் படிக்கலாம். ஆனால் இந்த வடிவம் வாசகனுள் மாபெரும் அனுபவத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் உமாவரதராசனின் ‘அரசனின் வருகை’ எல்லாவரிகளிலும் உக்கிரமான ஒரு கலைப்படைப்பாக உருவாகியிருக்கிறது. உலகின் ஆகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாக நிற்கவும் செய்கிறது. இது படைப்பாளியின் படைப்பெழுச்சி

மிக்க தருணத்தில் யுத்தத்தின் ஒட்டுமொத்த சமூக வரலாற்றவலங்கள் கூடிவந்திருக்கின்றன. யாவராலும் கைவிடப்பட்ட தமிழ் இனத்தின் அழிவை இதுபோலச் சித்திரித்த படைப்பு வேறொன்றில்லை. பேரினவாதத் திற்கு எதிராகத் தாய் தந்தையர்களுக்குத் தெரியாமல் இளைஞர்கள் போராளிக் குழுக்களுக்குள் செல்வதும், தடுக்க முடியாமல் பிள்ளைகள் கைமீறிப் போய்விட்ட தன்மையைத் தாய் உணர்வதுமான ரஞ்சக்குமாரின் ‘கோசலை’ யுத்தத்தின் ஆரம்பக்கட்ட கதைகளுள் மிகச் சிறந்த விதத்தில் அதன் மனோநிலையைக் கொண்டு வந்திருக்கிறது.

யுத்தகளத்தில் பெண்கள் போராளிகளாக வருவதும், அவர்கள் எளிய கனவுகளிடையேயும், விருப்பங் களிடையேயும் போராடுவதும் தமிழ் இனத்திற்காக மடிவது மான இளம் பெண்ணின் உலகம், அம்புலியின் ‘உள்ளே எரியும் தீ’ கதையில் உணர்வுபூர்வமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. அதேபோல யுத்தகளத்திற்குச் செல் வதற்கு முன் இளைஞர்கள் சில வீடுகளில் இனப் போராட்டத்திற்காக மறைமுகமாகக் கூடிப் பேசுவதும் அவர்களின் வருகையால் வீட்டில் உள்ள இளம் பெண்களிடம் காதல்மலர்வதும், போராளியாவதும் போராளிக் குழுக்களின் செயலிடமாவதும் எனக் காலத்தின் சித்திரத்தை ‘சாருமதியின்வீடு’ காட்டுகிறது. வரையறுக்க முடியாத எல்லையையும் காட்டுகிறது.

‘சாருமதி வீட்டின்’ நிர்ப் பந்தத்தால் காதலித்தவனை விட்டுவிட்டு வேறொருவனை திருமணம் செய்து குழந்தைகளுக்குத் தாயாவதும். திரும்ப காதலித்த சேந்தனோடு இணைந்து கொள்ளுவது மான பகுதியில் பல்வேறு விசயங்கள் யூகித்துக் கொள்ளும்படி விடப்பட்டுள்ளன. ராணுவத்தால் அவ்வீடு கைப்பற்றப்பட்டு, அவர்களின் கைவசமானபின் சிதைக்கப்படுவதுமான சித்திரத்தை தோழியின் ஆசாபாச மனோநிலையோடு சொல்லப்பட்டிருக்கும் நுட்பமான கதை, தாட்சாயிணியின் ‘சாருமதியின்வீடு’. மலைமகளின் புனைவுவெளிக்குள் போராளிப் பெண்களின் புதிதான நடவடிக்கைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

அவரைப் பற்றிய மற்றவர்களின் மதிப்பீட்டின்வழி அறிய முடிகிறது. இத்தொகுப்பில் அத்தகைய புதுசான வெளிப்பாட்டு எழுத்தை இனங்காட்டவில்லை. ஒரு புனைகதை எவ்வளவு தூரம் உண்மை உணர்வுகளைத் தன் சக்தியாக ஈர்த்து வெளிப்படுத்துகிறதோ அந்த அளவு எடுத்துக்கொண்ட விசயம் கலையாற்றலாக மரிப் பாதிக்கும். சாருமதியின் பள்ளிக்கால, கல்லூரிக்கால, தோழிக்குள் இருந்த ‘பொசசிவ்நஸ்’ ‘விலகல்’ இரண்டும் இந்தக்கதையில் போகிறபோக்கில் அற்புதமாகக் கூடிவந்திருக்கிறது. இந்நான்கு கதைகளும் தமிழ் இலக்கியப்பரப்பில் சாதனைகள்.

வேறுசில நல்ல கதைகள் பற்றியும் கூறவேண்டிய திருக்கிறது. ஞானசேகரனின் கதை ‘காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும்’, பள்ளிக்குச் செல்லும் பெண்பிள்ளை களிடம் இராணுவ சோதனைச் சாவடிகளில் நிற்கும் சிங்களக் காவலாளிகள் சோதனை என்ற பெயரில் செய்யும் பாலியல் தொந்தரவுகளைச் செய்துகொண்டே, தமிழ்ப்பெண்களுடன் பழகுகின்றனர். சோதனை களுக்குப் பயந்து அந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கப் பெண்கள் சிரித்துப் பேசித் தப்பிப்பதும், இந்தச் சிரிப்பை பள்ளித்தோழர்கள் மோசமாக ஜோடிப்பதும் இவற்றிற் கெல்லாம் மீறி, சிங்களவன் பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தி மனரீதியாகச் சிதைப்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கமிருந்து உருவாக்கியிருக்கிறார். நல்ல சிறுகதைதான். ஆனால் யுத்தச் சூழலுக்கே உரிய பிரத்யேகமான நடவடிக்கைகள் கூடிவரவில்லை.

உமாவரதராசனின் உருவகக்கதையான ‘அரசனின் வருகை’ கதையில் ‘மயிர் உதிர்ந்த தெருநாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்’ என்ற வரிகள்போலப் பல இடங்களில் மானிட நசிவைச் சொல்கின்றன. ‘சாருமதியின்வீடு’ கதையில் ‘ஆனையிறவுப் பக்கம் அடிபாடு தொடங்கியது முதல் அந்த வீடு சில நாட்கள் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருந்தது.

போராட்டப் பாடல்கள் உள்ளிருந்து கசட்ரெக்கோடர்களில் உணர்ச்சி ததும்ப எழும்பி, உயிரை அருட்டுவதாக இருக்கும். அதன்பின் அடி பாடுகள் தமிழர் பக்கம் நடைபெறும் காலங்களில் விவரிக்கவியலாத ஒரு நிசப்தம் அந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும்” என்று காலத்தின் கோலத்தை அசலாகக் கொண்டு வருகிற கவனம் முக்கியமானதாகக் கருதுகிறேன். இப்படி பிரத்யேகமான நடவடிக்கைகள், படைப்பை ரத்தமும் சதையுமாக மாற்றுகின்றன. ‘உள்ளே எரியும் தீ’ ‘கோசலை’ ‘கதைகளில் இவ்வம்சம் இயல்பாகக் கூடி வந்திருக்கின்றன.

செங்கை ஆழியானின் ‘ஷெல்லும் 7 இஞ்ச் சன்னல் களும்’, தாமரைச் செல்வியின் ‘அழுவதற்கு நேரமில்லை’, ஞானசேகரனின் ‘காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும்’ முதலிய கதைகள் நல்ல சிறுகதைகள் என்று குறிப்பிடுவது இதனால்தான். போராளிக் குழுக்களில் இருந்தவரால் எழுதப்பட்ட ‘அம்மாவைக் கும்பிடுகிறான்கள்’ என்ற கதையில்கூட இந்த பிரத்யேகமான நடவடிக்கைகள் கூடிவரவில்லை. எனவே படைப்பாக்கம் என்பது வேறு. கதையாக்கம் என்பது வேறு. அது படைப்பாளியின் நுண்ணுணர்வுகளால் மீட்டெடுப்பது; 26 கதைகளில் நான்குகதைகள் சாதனைகளாகவும் மூன்று கதைகள் தரம் மிக்கவையாகவும் நமக்குக் கிடைக்கின்றன.

ஏழு கதைகள் தவிர கிட்டத்தட்ட 19 கதைகள் கதையாக்கம் என்ற அடிப்படையில் சுட்டப்பட்டவை. திரேசாவின் ‘கபாலபதி’ கதை, உமாவரதராசனின் ‘அரசனின் வருகை’ போல உணர்வின் தளத்தை உருவகத்திற்குள் கொண்டுவர முடியவில்லை.

அது மூளையால் கட்டமைக்கப்பட்ட  உருவகமாகவே நின்றுபோனது, ஆனாலும் அதன் வடிவத்திற்காகக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்ற தனித்த ஆளுமைகள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளைக்கூட இந்த முப்பதாண்டு யுத்தகாலப் படைப்பாளிகளிடமிருந்து திரட்ட முடிய வில்லை.

வாழ்க்கை முக்கியமா? இலக்கியம் முக்கியமா? என்ற கேள்வியின்முன் வாழ்க்கையே முக்கியம் என்பதால் ஈழப்புனைகதைகளின் பேசுபொருளை முக்கியத்துவப் படுத்தி விரிவாக வாதிப்பதே பொருள் பொதிந்ததாக இருக்கும் என்று இந்தக்கணம் தோன்றுகிறது.

Pin It