காந்தி ஒரு சீர்திருத்தவாதி ஆனால் அம்பேத்கர் அவர்களோ சமூகப் புரட்சியாளர். சீர்திருத்தவாதி பழைய கட்டிடத்தைப் புதுப்பிப்பவர், புரட்சியாளர் அவர்களோ பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை கட்டுவார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விகற்க வேண்டும் என்பதற்காக விடுதிகளைத் திறத்தல், அம்மக்கள் நல்ல முன்னேற்றம் பெறுவதற்காக, கலாச்சார தன்மையிலிருந்து உயர்த்திட வேண்டி நூலகங்கள், சமூக மையங்கள், பயிற்சி வகுப்புகள், வாசகர் வட்டங்கள் ஆகியவற்றை அமைத்தல், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டி தொழில் மற்றும் வேளாண்மை பயிற்சி பள்ளிகளைத் தொடங்குதல் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி புரட்சியாளர் அம்பேத்கர் அமைப்பு ஒன்றை நிறுவ முன்வந்தார். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்ந்த இடத்திலிருந்து முன்னேறி சமுதாயத்தில் மற்ற சமூகத்திற்கு இணையாக கல்வி பெற்று சமூகம் மற்றும் அரசியல் என எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதாக இருந்துவந்தது.
தீண்டப்படாத மக்கள் அனைவரையும் மேலே உயர்த்துவதற்காக ஒரு இயக்கத்தை அமைத்திட வேண்டும் என்று முடிவு செய்து 1924 மார்ச் மாதம் பம்பாய் தாமோதர் அரங்கில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தீண்டப்படாதவர்கள் துயரங்கள் நீக்கவும் அவர்களுடைய கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துக்கூறுவதற்கும் ஒரு மத்திய அமைப்பை ஏற்படுத்துவதன் தேவைப்பற்றி பேசப்பட்டது. 1924 ஜூலை 20ஆம் தேதி பகிஷ்கிரித் ஹித்தகாரினி சபா என்ற அமைப்பு நிறுவப்பட்டது, நிர்வாகக்குழுவின் தலைவராக புரட்சியாளர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பாடுபட பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இருந்தாலும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் புதிய ஒரு பாதையை வகுத்தார். ரானடே அவர்கள் தொடங்கிய சமூக மாநாட்டில் விதவை மறுமணம், பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்கல்வி, குழந்தை மணம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
புரட்சியாளர் அவர்கள் தொடங்கப்பட்ட அமைப்பு சாதியை ஒழித்து இந்த சமூகத்தை சமஉரிமை அடிப்படையில் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.
புரட்சியாளர் அவர்கள் எல்லா திசைகளிலும் வந்த விமர்சனங்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தார். எல்லா விமர்சனங்களையும் தகர்த்தெரிய வேண்டுமென்றால் தமக்கென்று ஒரு பத்திரிகை இருக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தார். சரியான எண்ணத்தையும் கொள்கைகளையும் முன் வைத்திடவும், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் பத்திரிகை தேவையாயிருந்தது. பகிஷ்கிரித் பாரத் என்ற பத்திரிகையை மாதம் இருமுறை வெளியிட்டு வந்தார். தான் தொடங்கிய பத்திரிகையின் மூலம் தன்னுடைய கருத்துக்கள் நோக்கங்கள் இவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதினார். மேலும் பலபேரின் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலளித்தார். எந்தவிதமான அச்சமுமின்றி தன்னுடைய உணர்ச்சிகளைச் சுருக்கமாக அடுத்தடுத்து எழுதிவந்தார்.
இந்திய வரலாற்றில் 1930ஆம் ஆண்டு எல்லாவற்றிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அது திகழ்ந்தது. மகாத்மா காந்தி 1930இல் நாட்டின் விடுதலைக்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து தண்டியாத்திரை நடத்துவதற்கு முன்னரே இந்திய சமூகப் புரட்சியின் தந்தையான அம்பேத்கர் அவர்கள் கோயில் நுழைவுப் போராட்டத்தை முன்னணித் தோழர்களின் மூலமாக வழிகாட்டி எழுச்சியூட்டி அப்போராட்டத்தை வலுப்படுத்தினார்.
அதே வேளையில் புகழ்பெற்ற காலாராம் கோயிலைத் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்காக திறக்காவிடில் சத்தியாக்கிரகம் செய்வோம் என்றும் அக்கோயில் அறங்காவலருக்கு தெரிவிக்கப்பட்டது. அத்தகைய உரிமையை பெறும்படியாக நாராக்கில் தீண்டப்படாத மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும் என்று மக்களுக்கு எழுச்சிமிக்க புரட்சிகரமான வேண்டுகோள் அம்பேத்கரால் விடப்பட்டது.
சத்தியாக்கிரகக் குழுவின் வேண்டுகோளை ஏற்று 15000 தொண்டர்கள் தீண்டப்படாத மக்கள் வாழும் பகுதியில் பந்தலில் கூடினார்கள். 1930 மார்ச் 2ஆம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு வந்தவர்கள் நான்கு நான்கு பேராக அழகாக வரிசையில் நின்றார்கள். அந்த வரிசையானது ஒரு மைல் தூரத்திற்கு நீண்டது. நாசாக்கின் வரலாற்றில் அதுதான் மிகப்பெரிய ஊர்வலமாகும்.500 பெண் சத்தியாக்கிரகிகள் பெண்ணுலகின் புரட்சிகரமான மாற்றத்தின் அடையாளமாக வீர நடையிட்டனர். கோயிலின் நான்கு நுழைவாயில்களும் மூடப்பட்டு இருந்தது. அங்கே மாவட்ட நீதிபதி, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் நகர நீதிபதி ஆகியோர் கோயில் நுழைவாயில் அருகே வந்தார்கள். கோயில் மூடப்பட்டதால் அந்த ஊர்வலம் பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது. கடவுளான இராமனே நேரில் வந்து தீண்டப்படாத மக்களுக்கு கோயிலை திறந்துவிடுமாறு நேரில் சொல்லி இருந்தாலும் வெறிபிடித்த சாதி இந்துக்கள் இராமனையே தூக்கி எறிந்திருப்பார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மனதில் எப்போதும் மேலோங்கி நின்றது என்னவென்றால் நவீன விஞ்ஞான சாதனங்களையும், தகுதி மற்றும் சான்றுடைய ஆசிரியர்களைக்கொண்ட ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தை நிறுவவேண்டும் என்பதே ஆகும்.தீண்டப்படாத வகுப்பினருக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே புரட்சியாளர் அவர்களுடைய நீண்ட நாள் கனவாகும். "மக்கள் கல்விக் கழகம்" என்ற அமைப்பை உருவாக்கினார்.
1946 ஜூன் 20ஆம் தேதி ஒரு கல்லூரியைத் தொடங்கி விருப்பமுடன் பணியாற்றக்கூடிய அலுவலகர்களை அமர்த்தி மிகுந்த வெற்றிகண்டார். நாளடைவில் இந்தியாவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகப் புரட்சியாளர் உருவாக்கிய கல்லூரித் திகழ்ந்தது.ஆரம்பநாட்களில் புரட்சியாளரின் நண்பர்கள் முயற்சியைக் குறித்து குறைவாக மதிப்பிட்ட அவர்கள் புரட்சியாளரைப் பாராட்டினார்கள். அந்தக் கல்வி நிறுவனத்திற்கு "சித்தார்த்தா கல்லூரி" என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக ஒரு சமூகத்தின் விடிவெள்ளியாகப் புரட்சியாளர் பயணத்தைத் தொடர்ந்தார்.
- இரா.ஆதிமொழி, மாநில கொள்கை பரப்பு து.செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி