“மனித சமுதாயம் வெகுதூரம் முன்னேறி விட்டது. இன்றைய சமுதாயத் தேவையும் மாறி விட்டது. (தமிழ்) மொழி அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சங்கத் தமிழ்க்கூறுகள் இன்று மொழியில் மாறிவிட்டன. எழுத்தில் சொல்லில், பொருளில் இன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றை நோக்கும்பொழுது தமிழில் இன்றைய நிலையைக் காணும்பொழுது அதன் வளர்ச்சி நிலை நமக்கு புலப்படும்”. (ஓ. பாலகிருஷ்ணன்)
“மொழியில் பொருள் வளம், மொழியைப் புதிய பொருள் துறைகளில் பயன்படுத்தினால் தான் கூடும். தமிழுக்கு வேண்டிய புதிய பொருள்களில் ஒன்று அறிவியல். மொழி பண்பாட்டை வெளிப்படுத்தும் கருவி என்று சொல்லும் போது இன்றைய அறிவியல் பண்பாட்டை வெளிப்படுத்தும் கருவி என்று சொல்லும்போது இன்றைய அறிவியல் பண்பாட்டை தமிழ் வெளிப்படுத்த வில்லை என்றால் தமிழை இக்காலத் தமிழர்களின் மொழி என்று சொல்ல முடியாது”. (அண்ணாமலை)
“அறிவியல் கருத்துக்களைத் தமிழில் தருவதில் கலைச்சொற்களே உயிர் நாடியாக விளங்குகின்றன”. (இராதா செல்லப்பன்)
“மொழிநடை, உரைப்பாங்கு ஆகியவைகளும் அறிவியல் தமிழுக்கு அவசியம். எப்படியானாலும் கலைச்சொல்லாக்கம் அறிவியல் தமிழில் ஒரு முக்கிய பிரச்சினை என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது” (சண்முகம்).
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் கலைச்சொல்லின் தன்மையை அறிஞர்கள் மேற்கண்டவாறு எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஆனால் இன்றைய நிலையில் அறிவியல் உரையாடலில் அல்லது எழுத்தில் தமிழ்க் கலைச் சொற்களின் பயன்பாடு குறைந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது மிகுதியாக உள்ளது. சில சமயங்களில் சில ஆங்கிலச் சொற்களை மட்டும் பேசுவதும், மற்றும் சில சமயங்களில் வாக்கியங்களை அப்படியே ஆங்கிலத்தில் பேசுவதும் நடை முறையில் உள்ளன.
மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அந்நிலைக்கு ஆளாக்கப்படுவதற்கான காரணம் மருத்துவரும், செவிலியரும் தம் பாடங்களை ஆங்கிலத்தில் கற்று வருவதினாலேயே ஆகும். மேலும், மருத்துவத்திற்கு உபயோகப்படும் கருவிகள் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகே அதற்கான தமிழ்க்கலைச் சொற்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இக்கால இடைவெளியும் அச்சொற்களை நடைமுறையில் கொணரத் தடைவிதிக்கிறது.
மேலும், மருத்துவ உண்மைகளை ஆங்கிலம் தெரிந்த பொதுமக்களும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களும், சஞ்சிகை, பத்திரிகை மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தின் மூலம் படித்து உடன் நடை முறைக்கு, அன்றாடப் பழக்கத்திற்குக் கொணர்ந்து விடுவதும் ஒரு காரணம். இந்தியா ஆங்கில அடிமைத்தனத்தில் 200 ஆண்டுகள் இருந்ததும் மற்றொரு காரணமாக அமைகிறது. இவை களெல்லாம் விட மிக முக்கியமாக சிறப்பான கண்டுபிடிப்புகளில் மருத்துவத்துறைக்கு தமிழர் களின் பங்களிப்பு மிக மிகக் குறைவேயாகும்.
ஆகவே, கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப் பட்டாலும் எல்லா இடங்களிலும், நடைமுறையில் தமிழில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. (எ.கா) ஒருவர் தாம் அறுவை சிகிச்சைக்கு உட்படும் பொழுது, அதை மற்றொருவருக்குக் கூற நேர் கையில் ‘எனக்கு ஆபரேஷன்’ என்று கூறுவதும், வயிற்றில் புண் ஏற்பட்டதை ‘வயிற்றுப்புண்’ என்று கூறாது ‘வயிற்றில் அல்சர்’ என்று சொல்வதும் பழக்கத்தில் உள்ள ஒன்று.
இதே போல் “Gastroscope” என்ற சொல் இரைப்பை அகநோக்கி என்று கலைச்சொல்லாக எழுதப்பட்டாலும், அறுவை அரங்கில் வேலைபார்க்கும் பொழுது மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் அனை வரும் ஒருவருக்கொருவர் பேச்சின் பொழுது அந்நோக்கியை ‘ஸ்கோப்’ என்றே கூறுகின்றனர். காரணம், சொல்லின் எளிமையும் அன்றாடப் பழக்கமும் ஆகலாம்.
மருத்துவர் நோயாளியிடம் பேசும்பொழுது அடிக்கடி ஆங்கில வார்த்தைகளையே கூறுவது சாதாரணமாகக் காணப்படும் ஒரு செயல். இதற்குக் காரணம், ஆங்கிலத்தில் வார்த்தைகளை அடிக்கடிப் பேசினால் நோயாளி தன்னைப் பெரிய படிப்பு படித்த பெரிய மருத்துவர் என்று நினைப்பார் என்றும், அதற்கு ஒரு தனி மரியாதை உண்டு என்றும் எண்ணுவதாலும் ஆகும். சில சமயங் களில் அவரே பழக்கத்தில் ஆங்கிலச் சொற்களைத் தமிழ் என நினைத்துக் கொள்வதும் உண்டு.
(எ.கா) ஆம்ப்யூல். இதற்கு மாறாக மருத்துவர் நோயாளியிடம் தமிழிலேயே மருத்துவத்தைக் கூறவேண்டும் என்று நினைத்துச் சொன்னாலும் நோயாளி அவ்வார்த்தைகளையே திரும்ப ஆங்கிலத்தில் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, குழாய், கரை அல்லது குப்பி மாத்திரை என்று மருத்துவர் கூறினாலும் நோயாளி உடனே காப்சூல் என்றும், படுக்கை என்றால் பெட் என்றும் மாத்திரை என்றால் டாப்பிலட் என்றும் கூறுகிறார்.
இதே வார்த்தைகளை ஆங்கில மருந்து விற்பனைக் கூடங்களிலும் கூறியே மருந்துகளும் விற்கப்படுகின்றன. செவிலியரும் மருத்துவ உதவியாளர்களும் மேற் கூறிய வார்த்தைகளுடன் வார்டு, ஆஸ்பத்திரி, ஸ்ட்ரெச்சர் என்ற வார்த்தைகளை மருத்துவ மனையில் தவிர்க்க முடியாதவைகளாக மருத்துவர் மற்றும் நோயாளியும் உரையாடலின் பொழுது பேசுவது நாமறிந்தது.
இதே மாதிரியாக பொறியியலில் ஆங்கிலமே தெரியாத தச்சர், அல்லது கொத்தனார் ஆங்கிலம் பயின்ற பொறியியலாளர்களிடம் பேசும்பொழுது மரபு வழிச்சொற்களையே மறந்து அவரைப் போலவே தானும் பேச முயல்கிறார். இதற்குக் காரணங்கள்
1) அவருடன் சேர்ந்த பழக்கம்,
2) இப்படிப் பேசுவதின் மூலம் தனக்கு சமூகத்தில் தனி மரியாதை கிடைக்கும் என்ற நினைப்பு,
3) அக்கருவிகளுக்கு தகுந்த கலைச்சொற்கள் இல்லாத நிலை, (எ.கா) நட்டு, போல்ட். இவ் விடத்தில் காந்தியின் வார்த்தைகளை நினைவு கூறுவது சாலச் சிறந்தது. “அயல்மொழிக் கல்வியில் நம் குழந்தைகள் தம் சொந்த நாட்டிலேயே அயலவர்கள் போல் ஆகிவிட்டார்கள்”.
இருமொழிப் பயன்பாடு குறைவதற்கான ஒரே வழி எல்லா மட்டங்களிலும் பயிற்று மொழி ஒன்றாக இருத்தல் வேண்டும். அது தாய்மொழி யாக இருக்க வேண்டும். அந்நிலையில் அறிஞர்கள் தமிழிலேயே சிந்தித்து எழுதினால் நல்ல கலைச் சொற்கள் மொழி அமைப்பையும் வழக்கையும் ஒட்டித் தோன்றும்.
இதில் ஒரே சொல்லுக்குப் பல கலைச் சொற்கள் வரலாம். காலப்போக்கில் பொருத்த மானதும், பல ஏற்றுக்கொண்டதும் நிலைத்து நிற்கும். (எ.கா) 1872-இல் ஃபிஷ்கீரினினால் மருத்துவ நூல் எழுதப்பட்ட பொழுது (Anatomy) ‘மனுஷ அங்காதி பாதம்’ என்றும் பிறகு அதே வார்த்தை 1932-இல் ‘தேக உறுப்புக்களைச் சொல்லும் சாஸ்திரம்’ என்றும், பிறகு ‘அங்க வியூகம், ‘அனாட்டமி’, உடற்கூற்றியல், ‘உடற்கூறு இயல்’, ‘மெய்யியல்’ எனவும் படிப்படியாக மாறி, புதிய சொற்கள் உண்டாயின. (இராம சுந்தரம்). இன்று ‘உடற்கூறு இயல்’ என்பது வழக்கில் உள்ளது. இது அவர் அவர்களுக்கே தோன்றிய புதிய சொல்; எக்குழுவினாலும் இச்சொல் உண்டாக்கப்படவில்லை.
இந்தோனேசியாவில் இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பல மொழிகள் பழக்கத்தில் இருந்து வந்தன. யுத்தத்திற்குப் பிறகு ஜப்பான் அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் டச்சு மொழியும், மலாய் மொழியும் தடைசெய்யப்பட்டது. அதன் பிறகு மக்கள் ஆட்சி வந்த பின்னும், எந்த ஒரு கட்சி அரசு பொறுப்பில் இருந்தாலும் பாஷா இந்தோனேசியா மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
அவ் ஆணைக்குப் பிறகு அரசாங்கமே புத்தகம் எழுத, சிலரை நியமித்து அவர்களுக்கு உதவியாக மொழியியலாளர்களையும் உதவிக்கு அழைத்து அறிவியல் மொழி வளர உதவினார்கள். அதன் பிறகு பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை புத்தகங்கள் பாஷா இந்தோனேசியா மொழி யிலேயே வெளிவருகின்றன. (உட்டோசன்). தற் போது பாஷா இந்தோனேசியாவே அங்குக் கோலோச்சுகிறது.
ரஷ்யா, போலந்து, ஜப்பான், ஜெர்மனி முதலிய நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளே கலைச்சொல் வழக்கில் உள்ளன. தவிர்க்க இயலாத சில நேரங்களில், தன்மயமாக்கப்பட்ட லத்தீன் அல்லது கிரேக்க மொழிச் சொற்கள் (Nativised Latin / Greek) பயன்படுத்தப்படக் கூடும். ஆனால் நமது நாட்டிலுள்ளது போல, தமிழைத் தவிர்த்துவிட்டு, ஆங்கிலமே பயன்படுத்தும் சூழல் அங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ரஷ்யா, ஜப்பான் முதலிய நாடுகளில் ஆங்கிலப் பயன்பாடு குறைவாகவே உள்ளது.
பயிற்றுமொழி யாக அந்தந்த நாட்டு மொழிகளே உள்ளன. மருத்துவக் குறிப்புகள், மருந்துகளைப் பயன் படுத்தும் முறைகள் முதலியன கூட அந்தந்த மொழியில்தான் உள்ளன. நம் நாட்டில் இன்றும் அவை ஆங்கிலத்தில் தான் அதிகமாக உள்ளன, எனவே தமிழைப் பயன்படுத்த நினைத்தாலும் இயலாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. இதை யெல்லாம் தவிர்க்க தமிழை மட்டும் பயிற்று மொழியாக்கவேண்டும். கோத்தாரி கல்விக் குழுவும் இதனால்தான் தாய் மொழியில் கல்வி அமையவேண்டும் எனவும், கல்வி தொடர்பான யுனெஸ்கோ அமைப்பும் கல்விக்கேற்ற மொழி தாய்மொழியே எனவும் வலியுறுத்தியுள்ளன.
குறித்த ஒரு மொழியில் சயின்ஸ் சம்பந்தமான கருத்துகளையும், வேறுபல நுணுக்கமான விஷயங் களையும் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியா தென்றும் அந்த மொழியில் வளர்ச்சிக்கு இட மில்லையென்றும் சிலர் சொல்லிவருகின்றார்கள். இதைவிட பெரிய மூடநம்பிக்கை வேறு கிடையாது. (காந்தியடிகள்)
தாய்மொழிக்கு இணையாக இன்னொரு மொழி உலகில் இருக்க முடியாது. 200 ஆண்டு காலம் நம் தாய்மொழி மீது ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலத்தைத் தமிழோடு சமநிலையில் வைத்து இரண்டையும் தமிழரின் இரு கண்கள் என்று சொல்வது கூடாது. தமிழை அறிவியல் அறிவுக்கு விலக்கானது என்று கூறுவது படு மூடநம்பிக்கை யாகும். அதைவிட ஆங்கிலம்தான் அறிவியல் கலைகளைப் போதிக்கும் கற்றல் உடைய மொழி என்று கூறுவது அப்பட்டமான மூடநம்பிக்கையாகும். (ம.பொ.சி)
பயிற்று மொழி தாய்மொழியிலேயே அமைய வேண்டும். அப்பொழுது ஒரு சொல்லுக்கு பல கோணங்களில் சிந்தனை சென்று புதுப்புதுக் கலைச் சொற்கள் விரைவில் அவசியத்திற்காகக் கிடைக்கும். தமிழ் மொழிவழிக் கல்வியும் சிந்தனையும் செயலும் தான் கலைச் சொல் வழக்கில் நிலவும் இருமொழிப் பயன்பாட்டைக் குறைக்கும். அப்படி இல்லை யேல் இருமொழி வழக்கு நீடித்தே தீரும்.
“இன்றுவரை இயற்கைக்கு விரோதமான ஒரு இடத்தை வகித்துக்கொண்டு, ஆங்கிலமொழி அதிகாரம் செலுத்தி வருகிறது. சர்வகலாசாலைப் பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் தடபுடலாகப் பேசக்கூடுமாயினும் தங்களுடைய சிந்தனைகளைத் தங்கள் தங்கள் தாய்மொழியில் வெளியிட அவர் களால் முடியவில்லை. சர்.சி.வி. ராமன் செய் துள்ள ஆராய்ச்சிகள் யாவும் ஆங்கில மொழி யிலேயே இருக்கின்றன. ஆங்கிலம் தெரியாதவர் களுக்கு அவற்றால் யாதொரு பயனும் இல்லை’’. (காந்தியடிகள்).
அதாவது படிப்பிற்காக வாழ்வு நடக்கும்; வாழ்விற்காகப் படிப்பு அமையாது; நாட்டின் பொருளாதாரமும், பகுத்தறிவுப் பயன்பாடும், அறிவியல் வளர்ச்சியும் தடைப்பட்டு நீடிக்கும்.
துணை நூற்கள்:
1. அண்ணாமலை இ. 1986 அறிவியல் மொழியும் தமிழும், அறிவியல் தமிழ்க்கோவை பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.
2. இராதா செல்லப்பன் 1985 கலைச் சொல்லாக்கம், தஞ்சை.
3. காந்தியடிகள் 1921 யங் இந்தியா.
4. காந்தியடிகள் 1925 காந்திமலர், மாணவருக்கு.
5. காந்தியடிகள் 1925 நமது மொழிப் பிரச்சினை.
6. சண்முகம் செ.வை. 1985 தமிழ்ச் சொல்லாக்க நெறி முறைகள் ஒரு வரலாற்று அளவீடு தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சை.
7. சிவஞானம் ம.பொ. 1983 ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கை பூங்கொடி பதிப்பகம், சென்னை.
8. சுந்தரம் இராம. 1982 அறிவியல் இலக்கியத் தமிழாக்கம், மொழியியல், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சை.
9. பாலகிருஷ்ணன் ஓ. 1986 அறிவியல் தமிழ்நடைக் கூறுகள், அறிவியல் தமிழ்க்கோவை, பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.
10. Widdoswm 1979 Explorations in applied Linguistics, Oxford.