நவீன கல்வி கற்ற மக்களுக்குத் தாந்திரிகம் மச்சம் (மீன்), மாமிசம் (இறைச்சி), மது (மட்டுமீறிய போதையளிக்கும் பானம்), மைதுனம் (உடலுறவு), முத்திரை (உடற்சைகைகள்) ஆகிய ஐந்து மகரங்களுக்கு அடிமையான கட்டற்ற காமக்களியாட்டச் சடங்குகள் என்று தோன்றுகிறது. ஆனால் இது வேறு பல முக்கியமான கூறுகளைக் கொண்டு இருக்கின்றது. தாந்திரிகச் சடங்குகளும், அடையாளக் குறியீடுகளும் சாக்தத்தில் உள்ள தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமே உரியவை அல்ல. அவை சைனம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகியவற்றிலும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பொதுவாகத் தாந்திரிகம் மதிப்பளிக்கப்படாத வருணத்தினரையும் சூத்திரர் களையும், பெண்களையும் சமயவினைமுறையில் அனுமதிக்கிறது. சூத்திர ஆச்சாரியர்கள் சூத்திரர் களுக்கும், சண்டாளர்களுக்கும் சமயவினை ஏற்பை (தீக்கையை) அளிக்கின்றனர்; முக்கியமான சடங்குகளை நிகழ்த்துகின்றனர்.

அன்றாடம் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமல்ல, பாம்புக்கடி, எலிக்கடி முதலான விஷக்கடிகளுக்கும் பேய்ப்பிடித்தல்களுக்கும் எண்ணற்ற சடங்குகள், பண்டுவங்கள் (மருத்துவச் சடங்குகள்) வாயிலாகக் குணமேற்படுத்துவதினால் தந்திரங்கள் சமூகப் பயன்பாட்டில் முக்கியத்துவம் பெற்றவை. விதை முளைகளை எலிகள் உள்ளிட்ட வயல் விலங்குகள் தின்று அழிப்பதற்கு எதிரான பயிர்ப்பாதுகாப்புப் பண்டுவங்களும் நம்பப்படுகின்றன. சடங்குகளும் மந்திரங்களும் கோள்கள், நோய்கள், விஷக்கடிகள் ஆகிய இடர்களைத் தடுக்கின்றன. அந்த இடர்கள் மந்திரத்தின் மூலம் கட்டுக்குள் கொணரப்பட்டு மேலாண்மை செய்யப்படுகின்றன. இடைக்காலத் தாந்திரிகன் பண்டுவக்காரனாகவும் (மருத்துவனாகவும்), வானவியலாளனாகவும் (ஜோசியக் காரனாகவும்) செயல்பட்டான். இப்போதும்கூட மிதிலாவிலும், நேபாளத்திலும் தாந்திரிகன் விழாக் களையும், கிரகண நாட்களையும், எதிர் காலத்தையும் முன்கூறுவது தொடர்கின்றது.

மக்களுக்கு இவ்வுலக விருப்ப நிறைவேற்றுதலின் மூலம் நிறைவையும் (காம்யானி), மகிழ்ச்சியையும் (புக்தி), வீடுபேற்றையும் (முக்தி) அளிக்கும் எண்ணற்ற மந்திரச் சடங்குகள் தாந்திரிகத்தில் நம்பப்படுகின்றன. வி.எஸ்.பதக் கருத்துப்படி ஹயசீர்சம் என்னும் வைணவத் தந்திரம் கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது; ஆனால் விண்டர்நிட்ஸ் எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறார். இத்தந்திரப் பனுவலின்படி சித்தாந்த தந்திர வழி செல்வம் (அர்த்தம்), அறம் (தர்மம்), இன்பம் (காமம்), வீடு பேறு (முக்தி) ஆகிய சதுர்வர்க்கத்தை அருளுகின்றது. சடங்குகள் இறவாமையை வழங்குகின்றன.

கி.பி. நான்காம் நூற்றாண்டை அடுத்து வந்த ஆண்டுகளில் குப்தப் பேரரசு உறுதியாக வீழ்ச்சி யடைந்துகொண்டிருந்த வேளையில் தங்கக் காசுகளின் புழக்கம் குறைந்து போனது. அந்தக் காலத்தில் அந்த மஞ்சள் உலோகம் கிடைப்பதற்கு அரிதானது. அப்போது மண்ணையும், வேறு உலோகங் களையும் தந்திரச் சடங்குகளினால் பொன்னாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பரவியது. மக்களுக்கு நல்வாழ்வை அருளும் கடவுள் அல்லது குருவுக்கு முழுமையாகச் சரணடைதல் என்ற கோட்பாட்டின் மூலம் பக்தியுடன் இணைந்து தாந்திரிக பூசையும் புகழ்பெற்றுப் பரவியது. சிவன், விஷ்ணு, சக்தி இன்னும் பல நாட்டார் தேவதை வீடுகளான கோயில்கள், குரு அல்லது ஆச்சாரியர் களுக்கு முதன்மை இடமளிக்கும் மடங்கள் ஆகிய வற்றின் மூலம் தந்திர மரபு நிறுவனமயமானது. இதன் விளைவாகத் தந்திர மரபுகளையும் சடங்கு களையும் உள்ளடக்கமாகக் கொண்ட எண்ணற்ற இலக்கியக் கருவூலங்கள் எழுத்திற்கு வந்தன.

இடைக்காலத்தில் தாந்திரிகம் இந்து மதங்களுடன் இணைத்து அடையாளம் காணப்பட்டது. எந்த வொரு மதப்பிரிவையும்விட பல்வேறு வர்க்க மக்களின் வாழ்வுடன் நெருக்கமாகப் பிணைந்து உள்ள தந்திர மரபின் உலகப் பார்வை மிகவும் சமயச் சார்பற்றதும், பொருள்முதல்வாதத் தன்மை வாய்ந்ததும் ஆகும். முதன்மையான இந்தக் காரணத் தினால்தான் தந்திரமரபு இந்தியாவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வாழ்க்கை முறையானது; இன்றும்கூட சில வழிகளில் பிழைத்திருக்கின்றது. தாந்திரிகத்தின் உள்ளார்ந்த தத்துவ, குறியீட்டு நோக்கு விதிமுறைகள் மிகச் சில தேர்ச்சியுள்ள பயில்வாளர்கள் வட்டத்தில் மட்டுமே பேசப்படு கின்றது. ஆனால் வெளியிடப்பட்டுள்ள தந்திரப் பனுவல்களின் உள்ளடக்கக் கூறுகள் எளிய மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்துள்ள நடைமுறை களுடனும், சடங்குகளுடனும் தொடர்பு கொண்டு உள்ளன.

பௌத்தம், சைனம் ஆகியவற்றுடனான போட்டியிலும், எண்ணற்ற நாட்டார் தேவதை வழிபாட்டின் வழி கிடைத்த காணிக்கையாலுமே பார்ப்பனர்கள் தாந்திரிகத் தோற்றத்திற்கான விதையை ஊன்றினர் என்று வெப்பர் விளக்கு கிறார். பார்ப்பனர்கள் புதியதாகக் கண்டுபிடித்தனர் என்று எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கும் அதே வேளையில் பௌத்தம், சைனம் ஆகியவற்றுடன் தாந்திரிகமும் முன்னிடைக் காலத்தில் பார்ப் பனியத்தைத் தடுத்து நிறுத்தி அழிவுக்குள்ளாக்கும் வலுமிக்க ஆற்றலாக விளங்கியது. தாந்திரிகம் என்பது மட்டுமீறிய பாலுறவுச் சடங்குகள் என்று சிலர் கூறுகின்றனர். வேறு பலர் தாந்திரிகம் மிகத் தூய்மையான ஆன்மிக, மெய்யுணர்வு சார்ந்த (ஆலளவiஉ) முறையாகத் தோன்றி வளர்ச்சியடைந்தது என்று விளக்குகின்றனர். ஆனால் இந்த விளக்கங்கள் யாவையும் இடைக்கால இந்தியாவில் என்ன நடந்தது என்று தெரிவிப்பதில்லை. தாந்திரிகத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் புரிந்து கொள் வதற்கு முன்னிடைக் காலத்தில் நாட்டின் பருப் பொருள் சார்ந்த சூழ்நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிகப் பெருமளவில் கோயில்களுக்கும், குருமார்களுக்கும் நிலக்கொடை வழங்கப்பட்டது முன்னிடைக் காலத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்கு ஆகும். ஐந்தாம் நூற்றாண்டில் வடக்கு வங்காளத்தில் அசாமிலும், ஆறாம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்திலும், ஏழாம் நூற்றாண்டில் ஒரிசாவிலும் பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டதுடன் அவர் களுக்கு நிலக்கொடைகளும் அளிக்கப்படுகின்றன. ஏறக்குறைய இதே காலத்தில் இமயத்தின் நேபாள அரசிடமிருந்தும் சம்மர், கங்கர் ஆகியோரிடம் இருந்தும் பார்ப்பனர்கள் நிலக்கொடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

மைய, மேற்கு மத்தியப் பிரதேசத்தில் வாகடகர் பார்ப்பனர்களுக்கு எண்ணற்ற நிலக்கொடைகளை வழங்கினார்கள். இவர்களுடைய சமகாலத்தினரான சில குப்த சிற்றரசர்கள் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டு களில் வடக்கு, கிழக்கு, மத்தியப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுக்கு நிலக்கொடைகளை வழங்கினர். ஆனால் மாநிலத் தென்கிழக்குப் பகுதி முதன் முதலாக நள, பாண்டவ, சரப பூரிய சிற்றரர்கள் கீழ் ஆறு - ஏழாம் நூற்றாண்டுகளில்தான் பார்ப்பன மயமாகியது.

மேல் தக்காண மகாராஷ்டிரத்தில் சாத வாகனர்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் பௌத்தர்களுக்கு நிலக்கொடை வழங்கும் முறையைத் தொடங்கினர். கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் நாகர்ஜுன கொண்டாவில் இருந்த பௌத்த மடலாய முறை ஆந்திரர்களின் கவனத்தை ஈர்த்தது. இட்சவாகரின் வீழ்ச்சிக் காலமான மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் இட்சவாகு மன்னர்கள் பழங்குடிப் பகுதிகளில் பௌத்தத் துறவிகளின் மடலாலயங்களையும், தோட்டங்களையும் நிறுவி னார்கள். ஹுவாங் சுவாங் ஆந்திராவின் பல பௌத்த மடலாயங்கள் பற்றிக் கூறியுள்ளார். நிலக்கொடைகள் வாயிலாக பௌத்த விரிவாக்கத்தைப் பற்றிய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கவனத்தை ஈர்க்கின்றன. இந்தப் பகுதியில் பெருங்கற்கால மக்களின் பின்தங்கிய பண்பாட்டுடன் முரண்பட்டு பௌத்தத் துறவிகள் அம்மக்களிடம் முன்னேறிய சமூக ஒழுங்கையும் பண்பாட்டையும் அறிமுகப்படுத்தினார்கள். ஆந்தி ராவின் கிழக்கு நிலப்பரப்பு இட்சவாகர், சாலங் காயார், விஷ்ணுகுந்தினர் ஆகியோரின் கீழ் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் பார்ப்பன மயமானது. ஆனால் மேற்குப் பகுதி ஐந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் பார்ப்பனமயமானது. மைசூரின் மேற்குப் பகுதி பார்ப்பன அரச மரபான கடம்பர்களின் கீழ் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு களில் பார்ப்பன ஆதிக்கத்திற்குள் வந்தது. ஆனால் இந்தப் பகுதிகள் முழுமையிலும் சாளுக்கியர்களின் கீழ்தான் ஆறு - எட்டாம் நூற்றாண்டுகளுக் கிடையில் பார்ப்பனக் குடியிருப்புகள் உருவாக்கப் பட்டு நிலக்கொடைகள் வழங்கப்பட்டன.

எட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய சோழர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரும் எண்ணிக் கையிலான பார்ப்பனர்கள் அறிமுகப்படுத்தப் பட்டனர். ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில் பார்ப்பனக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, நிலக்கொடைகள் வழங்கப்பட்டன. ஒன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த சங்கராச் சாரியாரின் பிறப்பிடமான கேரளத்தில் பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளில்கூட மிகப் பெரிய எண்ணிக்கையிலான நிலக்கொடை வழங்கல் களையும், பார்ப்பனக் குடியிருப்புகளையும் காண முடிவதில்லை.

கல்வெட்டுகள், வைணவத்தின் வைகானச, பாஞ்சராத்திர சம்கிதைகள் ஆகியவற்றின் மூலம் சோழர் ஆதிக்கக் காலத்தில் எண்ணற்ற கிராமங் களில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்று தெரிய வருகின்றது. தீங்கிழைக்கும் சக்திகள், கொள்ளைக்காரர்கள் ஆகியோரின் தொல்லை களற்ற, பரத்தையர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியமான வசதிகள் உள்ள செழிப்பான ஊர்களை வைணவப் பார்ப்பனர் களுக்கு மன்னன் நல்க வேண்டும் என்று வைகானசிய காசியப சம்கிதை கூறுகின்றது. இந்தச் சம்கிதை ஊர் என்பதை முதன்மையாக விப்ரர்களின் அக்ரா காரம் என்றழைக்கப்படும் விப்ரர், அவர்களின் பரத்தையர்கள் வாழும் குடியிருப்பு என்று வரை யறுக்கின்றது. பொதுவாகப் பாஞ்சராத்திர ஆகமங்கள் ஊர்களை உருவாக்குவதற்குக் கோயில்கள் கட்டுவது மிகமிக அவசியமான முன்நிபந்தனை என்கின்றன. வேளாண்மையின் புதிய முறைகள் அறிமுகப் படுத்தப்படுவதற்கும், பார்ப்பனக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதற்கும் முன் கோயில்களும் புண்ணியத் தலங்களும் உருவாக்கப்படுகின்றன.

சிறப்பாகத் தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் பார்ப்பனர்கள் நேபாளம், இமாலயப் பகுதிகள், தக்காணம், குஜராத், மத்திய இந்தியா, ஒரிசா, வங்காளம், அசாம் ஆகிய அயல் பகுதிகளிலிருந்து ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் நிலக்கொடைகள் அளிக்கப் பட்டு வரவழைக்கப்பட்டனர். சாசனங்களில் நிலக் கொடைகள் பெறுபவர்களாகவே பார்ப்பனர்கள் அறிமுகமாகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் ஆயிரம் பார்ப்பனர்களுக்கு மகாராஷ்டிரத்தின் ஒரு மாவட்டத்தையே ஒரே முறையில் இரண்டாம் பிரவாரசேனன் வழங்கினான். ஏழாம் நூற்றாண்டின் முதற்பாதியில் நாற்பது பார்ப்பனர்கள் இருமடங்கு நிலத்தை குஜராத்தில் கொடையாய்ப் பெற்றனர். இதே நூற்றாண்டில் இரு நூற்றைந்து பார்ப்பனர் களுக்கு அசாமில் நிலக்கொடைகள் வழங்கப் பட்டன. சுமார் கி.பி.650-இல் நூற்றுக்கும் மேற்பட்ட பார்ப்பனர்களுக்குக் கிழக்கு வங்காளத் திப்பேரா மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் நிலம் வழங்கப் பட்டது. ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருபத்தி மூன்று பார்ப்பனர்களுக்கு ஒரு முறையும், பன்னிரண்டு பார்ப்பனர்களுக்கு மற்றொரு முறையும் ஒரிசாவின் கட்டாக் பகுதியில் நிலக் கொடைகள் வழங்கப்பட்டன.

வேறுபட்ட பண்பாட்டு வளர்ச்சி நிலைகளில் உள்ள மக்களைச் சமாளிப்பதற்கு நடுஇந்தியாவின் மேற்கு, தென் - மேற்குப் பகுதிகளிலிருந்து கிழக்கிற்குக் குடியேறிய பார்ப்பனர்கள் நாடு முழுவதும் ஒரே வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். பார்ப்பனர்கள் குடியேற்றப்பட்ட பகுதி மக்களில் சிலர் பாதியளவு பார்ப்பனமயமானவர்கள்; மற்றவர்கள் முழுவதும் பழங்குடிகளாக இருந்தனர். எடுத்துக்காட்டாய் மத்தியப் பிரதேசத்தை அடுத்துள்ள ஒரிசாப் பகுதியை வாழிடமாகக் கொண்ட சபரர்களை முன்னிடைக் காலத்தில் பார்ப்பனர்கள் தொடர்பு கொண்டனர் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அங்கு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த புளித்தபட்டன் என்னும் நிலக்கொடையாளரின் சாசனம் பார்ப் பனர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள புளிந்தர் களைத் தொடர்பு கொண்டனர் என்று காட்டு கின்றது. புளிந்தன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பார்ப்பனர்கள் அல்லது காயத்திரியர்களை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். பிறகு சைவத் துறவி களுக்கும், கோயில்களுக்கும் நிலக்கொடைகள் வழங்கிய ஒன்பதாம் நூற்றாண்டு பௌமகாரா ஆட்சியாளர்கள் ஆன புளிந்தராஜாக்கள் பற்றிக் கேள்விப்படுகின்றோம்.

பழங்குடிப் பகுதிகளில் பார்ப்பனர்கள் உட் புகுந்து சூத்திரர்களின் எண்ணிக்கையை மிகப் பெரியதாய் ஆக்கினார்கள். பழங்குடி மக்களுக்கு மிகக் கீழான சமூகநிலையே வழங்கப்பட்டது. அவர்கள் ஆன்மிக மனக்குறைகள் அடைவது தவிர்க்க இயலாதது ஆகியிருந்தது. வைதிக முறைப் படி வேத மந்திரம் ஓதுதல், வேள்வி நடத்தல், உபநயனம் ஆகியவை பழங்குடிகளுக்கு இல்லை. மத்திய தேசத்தில் கம்மியர்களும், வேளாண் உழைப்பாளர்களான சூத்திரர்களும் அதிகமான போது மதநிலை வளர்ச்சியடைந்தது. உள்ளூர் மக்கள் பார்ப்பனர் உதவியுடன் சூத்திரர்கள் ஆக்கப் பட்டு வேளாண் விரிவாக்கம் நிறைவேற்றப்பட்டது. புதிய குடியிருப்புகள் உருவாக்குவதற்குச் சூத்திர அடிமைகளைக் குடியமர்த்துமாறு கௌடில்யர் பரிந்துரைத்துள்ளார். முதல்முறையாகச் சூத்திரர் களை உழவர்களாக ஹுவாங் சுவாங்கும், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்ம சாத்திர உரையாளரான அசகாயரும் குறிப்பிடுகின்றனர். பார்ப்பனர்களும், நிலக்கொடை பெற்ற பிறரும் அதிக அளவிலான உரிமைகளை அனுபவித்தபோது சூத்திரர்கள் நிலத்தில் சில உரிமைகளையும், பயன்களையும் பெறுவது இயல்பானதே. இப்போது தாந்திரிகப் பிரிவில் சூத்திரர்களுக்கான சமயவினை ஏற்பு அளிக்கப்பட்டது; சூத்திரர்களின் மரபார்ந்த சடங்குநிலை மதிப்பு திடீரென்று உயர்வடைந்தது.

விரிவாக நடப்பில் இருந்த தாய்த்தெய்வ வழிபாட்டுப் பழங்குடிப் பகுதிகளில் பெண்கள் உயர்நிலை பெற்றிருந்தனர் என்பது தெளிவானது. இப்போது சமஸ்கிருத ஆகமங்கள் சூத்திரர்களின் சடங்குநிலை சார்ந்த மதிப்புயர்வு எழுகையை ஒழுங்குபடுத்தின; அவர்களுக்கான தாந்திரிக சமயவினை ஏற்பு (தீக்கை) முறையைத் தமதாக்கிக் கொண்டன..

நாட்டில் மிகப் பழங்காலத்திலேயே தாய்த் தெய்வ வழிபாட்டு மரபுகள் மேலோங்கி இருந்தன. ஆனால் அவை ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் பார்ப்பனிய, பௌத்த மரபுகளின் எழுத்துகளில், ஆக்கங்களில் மிகப்பெரும் இடத்தைப் பெற்றன. பழங்குடித் தாய்த் தெய்வங்கள் சக்தியாகவோ, பௌத்த மதத்தாராகவோ வழிபடப்பட்டனர். சாக்தம் ஒரு சமய முறையாக ஆறாம் நூற்றாண்டில் தோன்றி ஒன்பதாம் நூற்றாண்டில் மிக வலுவான ஆற்றலாக மாறியது.

வேறுபட்ட பகுதிகளில் உள்ள தாய்த் தெய்வங்களின் பெயர்கள் அத்தெய்வங்களின் பழங்குடித் தன்மையைக் காட்டுகின்றன. ஏழாம் நூற்றாண்டில் அனேகமாக வங்காளத்தில் தோன்றிய பௌத்த மதத்தைச் சார்ந்த யோகினி தந்திரம் என்றழைக்கப்படும் ஹேவஜ்ரா தந்திரம் வேதாளி, கஸ்மாரி, சவரி, சண்டாளி, டொம்பினி ஆகிய தாய்த்தெய்வங்களைக் குறிப்பிடுகின்றது. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கௌடவாகம் கோலர், சபரர் ஆகியோருடன் தொடர்புடைய விந்தியா வாசினியை, காளி அல்லது பார்வதியுடன் அடை யாளப்படுத்தியது. அதே நூற்றாண்டைச் சேர்ந்த ஹரிவம்சம் சபரர், புளிந்தர், பர்பரர் ஆகியோர் வழிபட்ட தேவதைகளையும் இணைத்துக் கொண்டது. மாதங்கப் பழங்குடிகளிடையே தோன்றிய தேவ தையான மாதங்கி சக்தியாக அறியப்பட்டாள். சமயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சக்தியாக வழிபடப்பட்ட கன்னித் தெய்வங்களான சண்டாளி, கர்மகாரி, மாகதி, புக்கசி, சுவபட்சி, கத்தகி, கை வர்த்தி, வைசிய யோசிதா, சாஸ்திர ஜிவினி, சில்பினி அல்லது கௌலிகி ஆகியோர் குலார்ணவத் தந்திரத்தில் தந்திர, மந்திர, யோக, முத்திரை ஆகிய பயிற்சி நடைமுறைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அனேகமாகச் சக்தி நான்கு வருணங்களில் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணமுடியாது. இங்குக் குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் பொதுவாகப் பழங்குடி, தாழ்த்தப்பட்ட, சூத்திர தோற்றுவாய்களைக் கொண்டவை.

நாடு முழுவதுமே பழைய தாய்வழி மரபுப் பழங்குடிகள் ஆங்காங்கே உள்ளனர். ஆனால் ஓ.ஆர்.எஹ்ரன்பெல்சு கூற்றுப்படி, மிகப் பெரும் பாலான தாய்வழி மரபுப் பழங்குடிகள், சாதிகள் அசாம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மைசூர், கேரளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவை. இவற்றுடன் மேற்கு வங்காளம், ஒரிசா ஆகியவற்றின் எல்லைப் பகுதி, தெற்குப் பீகார், கிழக்கு மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிலுள்ள தனித்தனி பழங்குடிப் பகுதி களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பகுதிகளில் உள்ள தாய்வழி மரபு மக்கள் பழங்குடி தோற்ற மூலத்தையுடைய தாய்த்தெய்வ வழிபாட்டு மரபிற்கு ஆதரவளிக்கின்றனர்.

மிகப் பழங்காலத்தில் தோன்றியிருந்தாலும் தாய்த்தெய்வங்களுக்கு ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னரே முறையான புண்ணிய தலங்கள் தோன்றி யதாக எங்கும் பரவி, ஊடுருவி நிற்கும் பார்ப்பனிய மரபிலிருந்து அறிகின்றோம். ஆந்திராவில் தாய்த் தெய்வங்களின் பீடங்கள் இடைக்காலத்தின் தொடக்கத்திலே உருவாயின. திருப்பதியில் இருந்த தாந்திரிகர்களுடைய பத்மாவதி கோயில் எட்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் புகழ்பெற்ற அந்நகர வைணவத் தலமான பாலாஜி கோயிலுடன் இணைக்கப்பட்டது. ஒரிசா, கிழக்கு மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிலுள்ள பழங்குடிப் பகுதிகளில் அறுபத்தி நான்கு வடிவத் தாய்த்தெய்வ வெளிப் பாடுகளான அறுபத்தி நான்கு யோகினிக் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஐந்து கோயில் பற்றி அறிந்துள்ளோம். ஜெபகல்பூர் அருகில் உள்ள பேரகட் என்னும் ஊரின் கோயிலும், கஜுரகோவில் உள்ள கோயிலும் ஒன்பதாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. மூன்றாவது கோயில் பழைய பாட்னா ஆட்சிக்குட் பட்ட ஒரிசாவின் சம்பல்பூர் அருகில் உள்ளது. இதே பகுதியில் உள்ள கலாபந்தியில் நான்காவது கோயில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தூதையில் ஐந்தாவது கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடித் தேவதை களுடன் இணங்கிப் போவதற்காகவே முன்னிடைக் காலத்தில் இந்தக் கோயில்கள் நிறுவப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஒருமுறை மக்களிடையே தாய்த்தெய்வங்களின் புண்ணிய தலங்கள் மிக விரிவான கவனத்தைப் பெற்றுவிட்டால், அத்தலங்களை பௌத்த, பார்ப் பனிய சமஸ்கிருத இலக்கியப் பனுவல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட விரிந்த மத ஒழுங்கிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டன. எச்.பி.சாஸ்திரியின் கூற்றுப் படி ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் படியெடுக்கப் பட்ட குப்ஜிகாமத தந்திரம் ஒரிசாவில் உள்ள உத்தியாண, பஞ்சாப்பில் உள்ள ஜாலா அல்லது ஜலந்தர், மகாராஷ்டிராவில் உள்ள பூரணா, ஆந்திராவின் சிறிசாலாவில் உள்ள மாதங்க, அசாமில் உள்ள காமாக்கியா ஆகிய ஐந்து பீடங்கள் பற்றி விரிவாகச் சொல்லுகின்றது. ஹேவஜ்ரா தந்திரம் ஜலந்தர், உத்தியாண, பௌர்ணகிரி, காமரூபம் ஆகிய நான்கு பீடங்களை மட்டுமே குறிப்பிடுகின்றது. இவற்றில் சிலவற்றை அடையாளம் காணுவதில் குழப்பம் உள்ளது. எடுத்துக்காட்டாக, உத்தி யாணாவை அடையாளம் காண்பது சிக்கலாக உள்ளது. சில இடங்கள் ஒரிசாவில் உள்ளன. மற்றவை சமவெளியில் உள்ளன. ஆனால் எல்லா இடங் களுமே மத்திய தேசத்திற்கு வெளியில் உள்ளன. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சாதனமாலை என்ற பௌத்த நூலிற்கு ஓரளவு சமகாலத்ததான காளிக புராணத்தில் முன்கூறிய பீடங்களின் பட்டியல் மெல்லிய வேறுபாடுகளுடன் குறிக்கப் பட்டுள்ளது. மத்திய இந்தியாவில் இந்தப் புண்ணிய தலங்கள் எதுவும் நிறுவப்படாதது போதுமான அளவுக்கு முக்கியத்துவம் உடையது.

ஹேவஜ்ர தந்திரம் யோகினிகளின் சந்திப்பு இடங்களாக வேறு இருபத்தியொரு இடங்களைக் குறிப்பிடுகின்றது. மாளவம், சிந்து, நாகரம் ஆகிய மூன்று உபபீடங்கள், மும்முனி, காருண்யபாடகம், தேவிக்கோட்டம், கர்மாரபாடகம் ஆகிய நான்கு சேத்திரங்கள், குலதம், அற்புதம், கோதாவரி, ஹிமாதரி ஆகிய நான்கு உபசேத்திரங்கள், ஹரி கோலம், லம்பாகம், கஞ்சிகம், சௌராஸ்திரம் ஆகிய நான்கு சந்தோகங்கள், கலிங்கம், கடவுளின் தீவு, கோகணம் அல்லது காமகணம் ஆகிய மூன்று உபசந்தோகங்கள், விந்தியாகௌமாரபௌரிகம், கோசலம், சரித்ரம் என்றழைக்கப்படும் மூன்று பிளவம் ஆகிய இடங்களை ஹேவஜ்ர தந்திரம் குறிப்பிடுகின்றது. இந்த எட்டாம் நூற்றாண்டுப் பனுவல் குறிப்பிடும் முழுமை பெறாத, குறிப்பிடப் பட்டுள்ள எல்லா இடங்களையும் கண்டறிய முடியாத முன்கூறிய பட்டியல் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபு மத்திய இந்தியாவுக்கு வெளியில் உறுதியாக நிலைகொண்டுள்ளதைக் காட்டுகின்றது.

சில தந்திர ஆகமங்கள் தெளிவாகக் குறிப்பிட்ட பழங்குடிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்தக் கூற்றை மாதங்க பரமேஸ்வர தந்திரம் மெய்ப் பிக்கிறது. இத்தந்திரம் ஆந்திரம், கிழக்கு மத்திய பிரதேசம் ஆகியவற்றில் வாழும் மாதங்கர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குத் தொகுக்கப் பட்டது என்பது உறுதி. மாதங்க ஆகமம் என்று அழைக்கப்படும் சைவ ஆகமம் தென்னிந்தியாவில் இருக்கின்றது. எட்டாம் நூற்றாண்டில் மாமல்ல புரத்தில் மாதங்கேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. பின்னிடைக் காலத்தில் உள்ளூர் மொழி வழக்குகளில் மந்திரங்களை உள்ளடக்கமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சவரத் தந்திரங்கள் பற்றி அறிகின்றோம்.

மிகப் பெரும்பாலான தந்திர ஆகமங்கள் தனித்துள்ள பழங்குடிப் பகுதிகளிலேயே தொகுக்கப் பட்டன. ஐந்தாம் நூற்றாண்டில் கிழக்கு இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் எழுதப்பட்ட ஜெயாக்கிய சம்கிதையின் சுவடி 1187-இல் நேபாளத்தில் படி யெடுக்கப்பட்டுள்ளது. ஆறாம் ஏழாம் நூற்றாண்டு களில் பிந்தைய குப்த எழுத்து முறையில் நேபாளத்தில் குப்ஜிகாமத் தந்திரச் சுவடி படியெடுக்கப்பட்டு உள்ளது. நிஷ்வாச சம்கிதை குப்த எழுத்து மரபு முறையில் எட்டாம் நூற்றாண்டில் நேபாளத்தில் எழுதப்பட்டுள்ளது. குப்த தன்மை கொண்ட முழுமையடையாத சர்வஜனோத்ர தந்திரம் ஒப்பீட்டளவில் மிகப் பிந்தையது. வங்காளி எழுத்து முறையில் எழுதப்பட்ட ஹேவஜ்ர தந்திரச் சுவடி கி.பி.1200-ஐச் சேர்ந்தது என்று பெந்தால் குறிப்பிடுகின்றார். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ள யோகரத்ன மாலையும் உரையும் குப்த எழுத்து மரபில் எழுதப் பட்டதால் மிகப் பழமையானதாக ஊகிக்கப் படுவது இயல்பு என்று எச்.பி.சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

பத்தாம் - பன்னிரண்டாம் நூற்றாண்டு களில் படியெடுக்கப்பட்ட வேறு பல தந்திரச் சுவடிகள் நேபாளத்தின் விர் நூலகத்தில் இப்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பல தந்திரச் சுவடிகளில் பின்பற்றப்பட்டுள்ளதைப் போன்று குப்த எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ள பார மகேஸ்வரி தந்திரம் கி.பி.859-இலும், சௌர சம்கிதை கி.பி.941-இலும் படியெடுக்கப்பட்டவை. கிரிண தந்திரம் கி.பி.924-இல் படியெடுக்கப்பட்டு உள்ளது. இத்தந்திரம் மக்களின் முழு வாழ்வையும் முறைப்படுத்த முயல்கின்றது; தூய்மையாக்கம், கழுவாய், உணவு, சமூகதர நிலை, கோயில் கட்டுதல், படிம அமைப்புமுறை ஆகியவற்றைப் பற்றிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இத்தந்திரங் களின் சுவடிகள் எல்லாம் முஸ்லிம் படையெடுப் பிற்குப் பிறகு, இங்கிருந்து எச்சுவடிகளும் அனுப்பப் படாமல் நேபாளத்திலேயே உருவாக்கப்பட்டவை. அதனால் பார்ப்பனர்களும், பார்ப்பனியமயமான பௌத்தத் துறவிகளும் இந்தியாவிற்கு வந்து இங் கிருக்கும் பழங்குடிகளுடன் தொடர்பு கொண்டு தந்திர மரபுப் பனுவல்களை உருவாக்கினர் என்று ஆய்வாளர்களுக்குத் தோன்றுகிறது.

நேபாளத்திலிருந்து தந்திர மரபுப் பனுவல்கள், குறிப்பாகப் பௌத்தத் தந்திர மரபுப் பனுவல்கள் சீனா, திபெத் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப் பட்டது. வடஇந்தியாவைச் சேர்ந்த பார்ப்பனப் பௌத்தத் துறவியான அமோக வஜ்ரர் கி.பி.746-771-இக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவில் வாழ்ந்தார். அவர் பல தந்திரங்கள் உள்ளிட்டு எழுபத்தேழு படைப்புகளை மொழிபெயர்த்து உள்ளார். அதீச தீபங்கரர் நான்கு வகை தந்திர ஆகமங்களில் துல்லியமான புலமை உடையவர். அவர் உத்தியாணவின் பத்மசம்பவத்தைப் பௌத்த வழிபாட்டின் தாந்திரிகப் பகுதியாகக் கருதினார்.

தந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட பௌத்த மந்திராயனம் ஆந்திரத்தில் ஆறாம் நூற்றாண்டில் உருவானதாகச் சொல்லப்படுகின்றது. குயசமாஜம், வஜ்ரசிகரம், சர்வ ததாக தத்துவ சங்கிரகம், மகாவைரோகனம் ஆகிய பழைய பௌத்தத் தந்திரப் பனுவல்கள் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டு களில் பௌத்த மரபைச் சார்ந்த, கலிங்க, ஆந்திரம் ஆகியவற்றுக்குத் தெற்கில் இருந்த நாகார்ஜூனரும் நாகபோதியும் அருளியதாகக் கூறப்படுகிறது. பிந்தைய சாதவாகனர், இட்சவாகர் ஆகியோர் ஆட்சியில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த பௌத்த மடலாயத் துறவிகள் உருவாக்கிய பிற்காலத்தைச் சேர்ந்த தந்திரங்களே மகாயானப் பௌத்த எழுகைக்கான தளமாக அமைந்தன.

ஆந்திரம், கலிங்கம் ஆகியவற்றிலிருந்து பௌத்தத் தந்திரங்கள் வங்கம், மகதம் ஆகியவற்றுக்குப் பரவி, பாலர் ஆட்சிக் காலத்தில் பௌத்த கல்வி நிலையமான நாளந்தாவில் வளர்ச்சியடைந்தன. பௌத்த மரபுப்படி இந்தப் பகுதிகள் தர்மக் கீர்த்தியின் (கி.பி.600 -15) காலத்திலிருந்து அறியவியலாத வழிகளில் பௌத்தர் கைகளுக்கு வந்து சேர்ந்தன. ஆனால் இது சரகர், லுயிபர், கம்பலர், பத்மவஜ்ரர், கிருஷ்ணாச்சாரியர், லாலிதவஜ்ரர், கம்பீரவஜ்ரர் என்ற சித்தர்கள் மரபான சகஜயான தாந்திரிகம் புகழ்பெற்ற எட்டு - பன்னிரண்டாம் நூற்றாண்டு களுக்கு இடையேதான் சாத்தியமாகி இருக்கும். குலார்ணவ தந்திரச் சுவடிகள் வடக்கு, கிழக்கு வங்காளத்தில்தான் மீளக் கண்டுபிடிக்கப்பட்டன. நமது காலத்திலும் கௌலச் சடங்குகள் மிதிலாவின் பகுதிகளில் உயிரோடு இருக்கின்றன. கௌலத் தந்திரங்களின் ஆசிரியர்கள் ஒன்பது நாதச்

சித்தர்களின் சிந்தனைகளுக்கு அடிப்படையாய் இருக்கின்றனர். மகாகௌல ஞான விஞ்ஞானச் சுவடியின்படி மச்சேந்திரநாதரால் நேபாளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தப் படைப்பு கிழக்கு வங்காளத்தின் பௌகர்கஞ்சில் உள்ள சந்திர வீபனிலிருந்து தோன்றியது என்று பொருள்படும் வகையில் சந்திரவீபவினிர்கதை என்றும் சொல்லப்படுகிறது.

ஒரிய எழுத்து முறையின் சமஸ்கிருதத் தாந்திரிகச் சுவடிகள் பல இடைக்கால ஒரிசாவில் தோன்றின. அவற்றில் கௌலகூதமணி, வராகி தந்திரம் ஆகிய இரண்டும் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் தோன்றி இருக்கும். ஒரிசாவின் அரசன் இந்திரபூதி பதவியடைய பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளை உள்ளடக்கமாகக் கொண்ட சகஜயானப் பிரிவின் வஜ்ரயோகினி சாதனம் என்றழைக்கப்படும் சுவடி 1154-இல் நேபாளத்தில் படியெடுக்கப்பட்டது. தாந்திரிகம் எட்டாம் நூற்றாண்டு வரை காஷ்மீரத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. அங்குத் தந்திர இலக்கியங்கள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து மலர்ந்தன. பெரிய ஜாகிர் வழங்கப்பட்டதற்காக கன்யகுப்ஜிலிருந்து காஷ்மீரத்திற்கு 250 ஆண்டு களுக்கு முன் குடிபெயர்ந்த பார்ப்பனக் குடும்பத்தைச் சார்ந்த அபிநவகுப்தர் மிகப் புகழ்பெற்ற தந்திர ஆகமப் படைப்பாளர். கௌல, திரிக முறைகளின் போதனைகளை முறையாக அளிக்கும் ‘தந்திர லோகம்’ என்றழைக்கப்படும் பெரிய நூலை அவர் எழுதியுள்ளார். ஜலந்தரிலுள்ள சடங்குகளும், கௌலிக பனுவல்களை அபிநவகுப்தருக்குக் கற்பித்த சம்புநாதர் என்ற ஆசிரியரும் அபிநவகுப்தர் மீது மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தியுள்ளனர்.

முன்னிடைக் காலத்தின்போது மைசூர், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய பகுதிகளில் சில தாந்திரிகப் பனுவல்கள் சைன செல்வாக்கின் கீழ்த் தொகுக்கப்பட்டன. தாந்திரிகக் கருத்துகளும், சடங்குகளும் கொண்ட ‘சமரைக்காடகம்’ எட்டாம் நூற்றாண்டு வாக்கில் ஹரிபத்ர சூரியால் இயற்றப் பட்டது. மான்யகேதாவில் கி.பி.939-இல் ‘சுவாலினி கல்பம்’ இந்திரமணியால் நிறைவு செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிபாட்டு மரபு மைசூர் மாவட்டத்தின் சாம்ராஜ் நகரில் திராவிட மடப் பிரிவின் தாந்திரிக ஆசிரியரால் மிகப் பழைய காலத்தில் தொடங்கப்பட்டது. குறிப்பிடத்தக்க ‘பத்மாவதி கல்பம்’ என்ற மற்றொரு தாந்திரிகப் பனுவல் கி.பி.1047-இல் மைசூரில் சைனத் துறவியால் தொகுக்கப்பட்டது.

முன்னிடைக் காலத்தில், குறிப்பாக எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்தியாவில் சைவத் திற்கும், வைணவத்திற்கும் போன்றே சைனத் தாந்திரிகப் பனுவல்கள் இருபத்தியெட்டு ஆகமங் களாகத் தொகைப்படுத்தப்பட்டன. சைனர்கள் இந்த ஆகமங்களைக் கோயில்களைக் கட்டுதற்கும், படிமங்களை அமைப்பதற்கும், வழிபாட்டை நடத்து வதற்கும் பயன்படுத்தினர். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலில் உள்ள பல்லவர் கல்வெட்டில் சைவ ஆகமங்கள் குறிப்பிடப் படுகின்றன. இக்கல்வெட்டு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக சக்ரவர்த்தி தவறாக விளக்கியுள்ளார். கோபிநாத் ராவ் கூற்றுப்படி ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சில சைவ நாயன்மார்கள் இயற்றிய தேவாரங்கள் அல்லது திராவிட வேதங்களுக்குச் சைவர்களின் ‘உத்தரக்காரணாகமம்’ உள்ளிட்டு வேறு சில ஆகமங்களும் கடன்படுகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது அடுத்து வந்த ஆண்டுகளில் வாழ்ந்த காஷ்மீர சைவப் புலவர் அதே காலத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ்ச் சைவப் படைப்புகளை மேற்கோள் காட்டுகிறார்.

வைணவ ஆகமங்கள் சம்கிதைகள் என்றே அறியப்பட்டுள்ளன. வைகாசன ஆகமத்தின் உரை நடைப் பனுவல் ஒப்பீட்டளவில் பழமையானதாக உள்ளது. தெய்வீகப் பயணங்களில் பாடப்பட்ட திராவிட வேதங்களான ஆழ்வார்களின் பிரபந்தங் களை சமயவினைகளின் மீது ஆணையில் வைப்பதை வைகாசன ஆகமம் உள்ளடக்கமாகக் கொண்டு உள்ளது. அகிர்புதன்ய, ஜெயாக்ய, சாத்துவத ஆகிய சில பாஞ்சராத்திர பனுவல்கள் வடக்கு, மேற்கு இந்தியாவில் ஐந்தாம் - ஒன்பதாம் நூற்றாண்டு களுக்கு இடையில் முறையாகத் தொகுக்கப்பட்டன. ஆனால் அவை முதன்மையாகத் தென்னிந்தியா விலேயே புழக்கத்தில் இருந்தன.

பழைய தாந்திரிகப் பனுவல்கள் காஷ்மீரம், நேபாளம், வங்காளம், அசாம், ஒரிசா, மேற்கிந்தியா, தென்னிந்தியா ஆகியவற்றிலேயே தோன்றின. மிதிலாவில் தோன்றிய தந்திரங்களின் எண்ணிக்கை அசட்டை செய்யக்கூடியன அல்ல. முன்னிடைக் காலத்திலிருந்து தந்திர மரபுச் சடங்குகள் நூலாக்கம் பெற்றதற்கு அரசியல், பொருளாதார, சமூகச் சூழ்நிலை மெய்ம்மைகள் காரணம் என்று வாதிக் கின்றோம். பின்னிடைக் காலத்தில் மிகப் பெரும் பாலான தந்திர மரபு ஆசிரியர்கள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்; வேறு சிலர் தென்னிந்தியாவையும், மகாராஷ்டிரத்தையும் சேர்ந்தவர்கள். சிலர் காஷ்மீர், குமௌன், நேபாளம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்; வாரணாசியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியது. பார்ப்பனியத்தின் இதயமாக விளங்கும் மத்திய தேசம் அல்லது ஆரியவர்த்தத்திலிருந்து தொலைத்தூரத்தில் உள்ள தனித்த பழங்குடிப் பகுதிகளில் தாந்திரிகக் கூறுகள் பிழைத்திருக் கின்றன என்பதை இங்குக் குறிப்பிடுவது மிக அவசியம். பெரும்பான்மையான மக்கள் இசுலாத்திற்கு மாறிய வடமேற்குப் பகுதிகளில் தாந்திரிகச் சடங்குகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து உள்ளன. ஆனால் 17, 18-ஆம் நூற்றாண்டுப் படைப்புகளில் குறிப்பிடப்படும் 108 பீடங்கள் உள்ள இமாலயப் பகுதியான கிழக்குப் பஞ்சாபிலும் உத்தரப் பிரதேசத்திலும் தாந்திரிகச் சடங்குகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்ள வில்லை. இந்த இடங்கள் எல்லாம் பெரும்பாலும் மத்திய தேசத்திற்கு வெளியில் உள்ளவை. அதனாலே தாந்திரிகப் பனுவல்களும், சடங்குகளும் தோன்றிய இடங்களில் அவை இன்றும் பிழைத்திருக்கின்றன.

ஆகையால், பார்ப்பனர்களுக்கும் அவைதிகத் துறவிகளுக்கும் நிலக்கொடைகள் அளிக்கப்பட்டதன் வாயிலாகத் தொலைத்தூரப் பழங்குடிப் பகுதிகளின் வேளாண்மயமாக்கம், தாந்திரிகத் தாய்த்தெய்வங் களின் பழங்குடிப் பின்புலம், பிடங்களின் தொன்மையும் பரவலாக்கமும், சமரர், மாதங்கர் முதலிய பழங்குடி களிடையே புழக்கத்திலிருந்த வேறுபட்ட தந்திரங்கள், தாந்திரிகப் பனுவல்களின் காலமும் அவை வழங்கப் பட்ட பகுதிகளும், இறுதியாகத் தாந்திரிகத்தில் பிழைத்துள்ளவைகள் ஆகிய பல்வேறு கோணங் களிலிருந்து தாந்திரிகத்தின் தோற்றம் பற்றிய சிக்கலை நோக்க வேண்டும். இவற்றையெல்லாம் சேர்த்து நோக்கும்போது, மத்திய தேசத்திற்கு வெளியே பழங்குடி வட்டாரங்களில் தாந்திரிகம் தோற்றமெடுத்தது என்ற ஒற்றை முடிவிற்கு வந்தடைகிறோம். தாந்திரிகத்தின் காமக்களியாட்டச் சடங்கில் சீன செல்வாக்குப் பற்றிய ஜெ.என்.பானர்ஜி பார்வையை அடிப்படையாகக் கொண்டும், இந்தியத் தாந்திரிகம் சீனா சடங்கியலில் உள்ள காமக் களியாட்டக் கூறுகள் ஆகியவற்றிடையே உள்ள சில தொடர்புகள் பற்றி ஜோசாப் நீதம் பரிந்துரைத்த வையைக் கொண்டும் பி.பென்சர், ஹோட்சன் ஆகிய மேலைநாட்டு ஆய்வாளர்கள் தாந்திரிகத்தின் மூலாதாரம் இந்தியத் தன்மையற்றது என்று நோக்குகின்றனர். இந்த நோக்கை வேறு இந்தியப் பண்பாட்டுக் கூறுகள் பற்றிய ஆய்வுகளிலும் கையாளுகின்றனர். இந்த ஊகத் தேடலுக்கான எந்தவொரு அடிப்படையும் இல்லை.

“தந்திரங்கள், புதிரான பயிற்சி முறைகள், மதத்தின் சீரழிவுகள் ஆகியவற்றினை வெகுஜன நம்பிக்கைகள் அல்லது பழங்குடிப் பகுதிகளில் பின்பற்றப்படுகின்ற மரபு அல்லது ஆரியக் குடியேறி களான இறையியலாளர்களின் போலி - அறிவியல் கண்டுபிடிப்புகள் முதலியவற்றிலிருந்து ஆய்வாளர்கள் விளங்கிக் கொள்ளுவதில்லை” என்று விண்டர் நிட்ஸ் கூறியதற்கு நன்றிகள். பழங்குடிப் பகுதிகளில் உள்ள தொல்குடிகளோடும், அவர்கள் வழிபடும் தேவதைகளோடும் தாந்திரிகத்திற்கு உள்ள நெருங்கிய தொடர்பையும், சற்றும் குறைவுபடாத ஆதாயம் அளிக்கக்கூடிய சடங்குகளைக் கண்டுபிடித்தலுக்கான சமயக் குருமார்களின் வேட்கையையும் புறக்கணித்து விட இயலாது. சாக்தர்களால் கண்டறியப்பட்ட மெய்யுணர்வு விளக்க வரைபடங்களும் (யந்திரங்களும்), புனித சக்கரங்களும், தாந்திரிக வழிபாட்டாளர் களால் உற்றறியப்பட்ட வேறுபட்ட மண்டல கர்ம சடங்குகள், வழிபாட்டுக் குறியீடுகளாகத் தொடர்ந் திருக்கும் ஆயுதங்கள், கற்கருவிகள் ஆகியவை வளமைச் சடங்குகளோடு தொடர்புள்ளவை.

பாலுறவுப் பயில்பு தாந்திரிகத்தின் மிக மோசமான சடங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இந்தியாவிலும் அயல் பகுதி களிலும் தொல்குடி மக்களிடையே அவர்களின் வேளாண் மந்திரத்தின் மிக முக்கிய பகுதியாகப் பாலுறவுச் சடங்குகள் விளங்குகின்றன. மக்களின் செழிப்பிற்கும் பூமியின் வளத்திற்கும் இடையே தொடர்புள்ளது என்று தொல்குடிகள் நம்பினார்கள். பெண்களே வேளாண்மையைத் தோற்றுவித்ததால் வேளாண் சடங்குகளின் தோற்றங்களும், வளர்ச்சி நிலைகளும் அவர்களைச் சார்ந்ததாகவே இருந்தது. உடலுழைப்பற்ற மேட்டுக்குடி உறுப்பினர்கள், தங்கள் பாலுணர்வு மனமகிழ்வுத் தேவைகளுக்காகத் திருத்தப்பட்ட வகையில் தாந்திரிகத்தை வலிந்து கைப்பற்றிக்கொண்ட நிகழ்வு கெடுவாய்ப்பு ஆகும். மிக நுணுக்கமான எதிர்பாராத மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் கஜுரகோ, கோனர்க் ஆகியவற்றிலுள்ள பாலுறவுச் சிற்பங்கள் இளவரசர்கள், குறுநில மன்னர்கள், நிலக்கிழார் ஆகியோராலேயே அமைக்கப்பட்டன.

எல்லாப் பகுதிகளிலும் இதே வகையான தாந்திரிகம் தோற்றம் பெறவில்லை. மகதம், ஒரிசா, அசாம், நேபாளம் ஆகியவற்றில் பௌத்தப் பின் புலத்தைப் பெற்ற வஜ்ரயான, சகஜயான தாந்திரிகம் எழுந்தது. ஆந்திராவில் கீழ்நிலையில் உள்ளோர்க்கும், பெண்களுக்கும் சலுகை காட்டிய மகாயான பௌத்த குருமார் அமைப்பால் உருவாக்கப்பட்ட, ஆந்திராவில் தோன்றிய தந்திரங்கள் பிற பகுதிகளுக்கும் பரவின. மத்தியப் பிரதேசத்தின் பகுதி களில் குப்தர் காலத்திலிருந்து எண்ணற்ற வைணவத் தாய்த்தெய்வங்களின் படிமங்கள், கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன. வைணவத்தில் தாய்த் தெய்வம் அறிமுகப்பட்டதன் வாயிலாக பாஞ்ச ராத்திரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தாந்திரிகம் வைணவத்திற்குள் கடத்தப்பட்டது. இதுவே பிறகு தமிழ்நாட்டிலும், ஆந்திரத்திலும் நடந்திருக்கும். பாதியளவு இந்துமயமான பகுதிகளான காஷ்மீரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்த சைவம் தாந்திரிகத்தின் மீது தொற்றிக் கொண்டது. இதே போல குஜராத், மகாராஷ்டிரம், மைசூர் ஆகிய பகுதிகளில் சைனம் தாந்திரிகத்தின் மீது தொற்றிக் கொண்டது. ஆகவே பழங்குடிப் பகுதிகளில் நிலக்கொடை வளர்ச்சி வாயிலாக உருவான பார்ப்பனக் குடியேற்றங்களின் முடிவான விளைபொருளே தாந்திரிகம். மத்திய தேசத்திற்கு வெளியே நிலக்கொடைகள் பண்ணை அடிமைநிலையை மட்டுமே தோற்றுவிக்கவில்லை; பக்தியையும், தாந்திரிகத்தையும் தோற்றுவித்தது. பின்னர் இவை மத்திய தேசத்திற்குள் ஊடுருவின.

நிலக்கொடை பெற்ற பார்ப்பனர்கள், பழங்குடி மக்கள் ஆகியோர் நேருக்கு நேர் எதிர்ப்பட்டதன் மூலம் உருவான சமூக, பொருளாதார சிக்கல்கள் பகுதியளவு தாந்திகரித்தின் வாயிலாகத் தீர்க்கப்பட்டது. ஒருபுறம் இந்தப் புதிய வகை மதம் உள் நுழைந்த பழங்குடிகளையும், சூத்திரர்களையும், பெண்களையும் மதிப்பளித்து வரவேற்றது. மறுபுறம் நிலக்கிழமை படிநிலை சமூக இருப்பையும் ஏற்றுக் கொண்டது. ஆகவே மக்களின் எல்லாப் பிரிவுகளையும் தாந்திரிகம் தன்னுள் ஏற்றுக்கொண்டது. பிறகு ஓரளவுக்கு சமூக முரண்களுக்கு முகம் கொடுத்து சமூக இணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் நிறுவும் மதம் சார்ந்த முயற்சியாகவும் இருந்தது. கடன்பட்டவர்களுக்கும், அடிமைகளுக்கும் பௌத்த சங்கங்கள் கதவுகளை மூடிக்கொண்டன. ஆனால் கவனிக்கப்படாதோர், மதிப்பளிக்கப்படாத பாலினர், வருணத்தினர் உள்ளிட்ட எல்லா வகை மக்களுக்கும் தாந்திரிக சக்கரங்கள் கதவுகளைத் திறந்தன.

Pin It