பெரியார் நினைவு நாளில் டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர்விடுதலைக் கழகம் வேத மரபு மாநாட்டை நடத்துகிறது. “வேத மரபை மறுப்போம்; வெகுமக்கள் உரிமை மீட்போம்” என்பதே மாநாட்டின் முழக்கம். வேத பார்ப்பனிய மரபு சமூகத்தை ஒடுக்கி வந்த வரலாறுகளை பல்வேறு கருத்தாளர்கள் விரிவாகப் பேச இருக்கிறார்கள்.

வேதங்கள் கற்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்பான சிந்தனைகள் சமூகத்தில் உருவாகியே வந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பனியம் அந்த எதிர்ப்புகளை சூழ்ச்சியால், அழிப்பால், இருட்டிப்பால், ஊடுருவலால் வீழ்த்தியது என்பதே கொடூரமான வரலாறு.  

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘இந்து’ என்ற பெயரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது பார்ப்பனியம். வேத பார்ப்பனிய மரபுகளால் அடிமைகளாக்கப்பட்டு, உருக்குலைக்கப்பட்ட மக்களை தனது கட்டுப்பாட்டில் உறுதிப்படுத்திக் கொண்டது. அதற்கு சட்டப் பாதுகாப்பையும் தேடிக் கொண்டது. இந்து மதம்  என்ற பெயரில் நமது மக்கள் மீது பார்ப்பனியம் திணித்த அடக்குமுறைகளை எதிர்க்கும் போதெல்லாம், “பார், பார்- இந்துக்களின் விரோதிகளைப் பார்” என்று பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத வெகுமக்களை உசுப்பி விடுகிறார்கள். சமூக வரலாறுகளை அறிந்திடாத நமது மக்களில் சிலர் பார்ப்பனர்கள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் விட்டில் பூச்சிகளாக வீழ்ந்து விடுகிறார்கள். ‘என்னுடைய இந்து மதத்தையா எதிர்க்கிறாய்?’ என்று கொதிக்கிறார்கள்.

வேத மரபுகளின் பார்ப்பனியத்தைப் பாதுகாத்துக் கொள்வதே பார்ப்பனர்கள் முன்வைக்கும் ‘இந்துமத எதிர்ப்பு’ என்ற உண்மையை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இதை ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்த வேண்டும். அதற்கான தொடக்கம்தான் சேலத்தில் நடக்கும் வேதமரபு மறுப்பு மாநாடு.

•                     வேதம் என்பதுதான் என்ன? அது எழுத்து வடிவில் எழுதப்பட்டது இல்லை. காதாலே கேட்கப்பட்டு வந்தது. எனவே அதை ‘சுருதி’ என்றார்கள். சுருதி என்றால், எழுதப்படாமல் கேட்கப்படுவது.

•                     வேதகாலக் கடவுள்கள் எப்படி இருந்தன? மனிதர்களில் ஒருவராகவே வேதகாலக் கடவுள்கள் கற்பனை செய்யப் பட்டிருந்தன. கடவுளை நண்பனாகவும், தங்களோடு ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக உறங்குகிறவர்களாகவுமே வேதங்களின் ‘சுருதி’கள் கூறின.

•                     மனிதர்களுள் மனிதர்களாக தொடக்கத்தில் இருந்த வேதக் கடவுளர்களை பிறகு பார்ப்பனர்கள், விண்ணில் வாழும் கடவுளாக மாற்றினார்கள். தரையிலிருந்த கடவுள், மேலே வானத்துக்கு மாற்றப்பட்டதால் கடவுள்களுக்கு பூமியி லிருந்து ‘படையல்’களை எடுத்துச் செல்லும் ‘சக்தி’ மிக்க தரகர்கள் தேவையானார்கள். அந்த சக்தி தங்களுக்கும் தங்கள் வேத மந்திரத்துக்கும் மட்டுமே உண்டு என்று பார்ப்பனாகள் நமது மக்களை நம்ப வைத்தார்கள். அப்போதுதான் ‘புரோகித வர்க்கம்’ உருவானது.

•                     அடுத்து, தங்களால் மட்டுமே ‘விண்ணுலகக் கடவுள் களிடம்’ தொடர்பு கொள்ள முடியும் என்ற புரட்டை மக்களிடம் நம்ப வைக்க வேண்டும் அல்லவா? அதற்காக பார்ப்பனர்கள் ‘மாயாஜாலக் கதைகளை’ உருவாக் கினார்கள். வேதங்களை ஓதி யாகங்களை நடத்தினால் கடவுள்களை பணிய வைக்க முடியும். கடவுள் மனம் மாறுவார் என்று நம்ப வைத்தார்கள். வேத காலத்தில் தொடங்கிய இந்த பார்ப்பன சூழ்ச்சி, இப்போது ‘அப்போலோ மருத்துவமனை’ காலம் வரை தொடர்ந்து  கொண்டே இருக்கிறது என்றால் வேத பார்ப்பன மரபு எப்படி ஆதிக்கம் பெற்று நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

•                     வேத மரபு வழியாக தங்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டு வரும் பார்ப்பனர்கள், அதற்காக வேதக் கடவுள்களை தூக்கிக் குப்பைக் கூடையில் வீசவும் தயங்கவில்லை. வேத காலத்திலேயே பார்ப்பனர்கள் வேதக் கடவுள்களை மறுத்து, தூக்கி எறிந்தார்கள். அதே பார்ப்பனர்கள்தான் இப்போது கடவுள் மறுப் பாளர்களை “கடவுளை நிந்திக்கிறார்கள்; இந்து மதத்தைப் புண்படுத்து கிறார்கள்” என்று கூப்பாடு போடுகிறார்கள்.

•                     ரிக் வேதத்தில் தியோசன், மித்திரன், சாவித்திரி, பூசன், ஆதித்தியன், மாருத்தியன், அதிதி, திதி, ஊர்வசி போன்ற கடவுள்கள் கூறப்பட்டன. பூமியிலிருந்த ‘கடவுளை’ பார்ப்பன புரோகிதர்கள் ‘விண்ணுக்கு’ மாற்றிய பிறகு, இந்தக் கடவுள்கள் புரோகித கூட்டத்தின் பிழைப்புக்கு பயனில்லலாமல் போய்விட்டன. எனவே கடவுளையே மாற்றினார்கள். அவர்கள் ‘தகுதி’யையும் மாற்றினார்கள். எப்படி?

•                     ‘ருத்திரனை’, ‘மகாதேவன்’ என்று உயர்த்தி அவனுக்கு, ‘சிவன்’ என்று பெயர் சூட்டினார்கள். தங்களின் ‘யாக சக்தி’யை நம்ப வைக்க சிவனைப் பயன்படுத்தினார்கள். ‘யாக குண்டம்’ நடக்கும் இடத்தில் சிவன் கருப்பு உடை தரித்து தோன்றி, ‘யாக குண்டங்களில்’ எரிக்கப்படும் உணவுப் பொருள், வாசனை திரவியங்களை சிவன் தன்னிடமே ஒப்படைக்க வேணடும் என்று உரிமை கொண்டாடுகிறான் என்று கதை விட்டார்கள். சிவனைத் தொடர்ந்து ‘விஷ்ணு’வை  யாக சாலைக்கு இழுத்து வந்தார்கள். அனைத்து முக்கியமான யாகங்களிலும் வேதங்கள் ஓதும்போது ‘விஷ்ணு’ பங்கேற்கிறான் என்று கதை கட்டினார்கள்.

•                     ‘சிவன்’ பங்கு கேட்கிறான்; எனவே யாகப் பொருள்கள் சிவனுக்கு போய்ச் சேர வேண்டும் என்று கூறி, யாகங்களில் குவிந்த உணவுப் பொருள்களை தானியங்களை வாரிச் சுருட்டி ஏப்பம் விட்டார்கள். அதன் காரணமாக உற்பத்திப் பொருள்களின் பெரும் பகுதி பார்ப்பனரிடம் குவிந்தது; புரோகித வர்க்கம் செல்வாக்குப் பெற்றது. ‘பண்பாட்டுக் காவலர்களாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டது; தனித்த உரிமைகளுடன் வலம் வரத் தொடங்கியது.

•                     சமூக ஆதிக்கவாதிகளாக மாறியவர்கள், பிறகு சமூக அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்டார்கள். எப்படி?

•                     ஆதி காலத்தில் சமூகம் இயற்கையின் சீற்றங்களை கட்டுப் படுத்தி, உயிர் வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ளவே விரும்பியது.  மந்திரங்கள், சடங்கு களாலேயே கட்டுப்படுத்தி விடலாம் என்று முதலில் நம்பியது. காலப்போக்கில் இயற்கையின் இயங்கும் தன்மைகளையும், அதன் விதிகளையும் புரிந்துக் கொள்ளத் தொடங்கினார்கள். இயற்கை செயல்படும் ‘காரண-காரியங்களை’ புரியத் தொடங்கிய மனித சமூகம், இயற்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கியது. அதற்கான ஆற்றலைப் பெற்றது. உலகம் முழுதும் ஆதிகால சமூகம் இப்படி அறிவியலை நோக்கி திரும்பியபோது அந்த மாற்றம் இங்கே மட்டும் நிகழாமல், புரோகிதப் பார்ப் பனர்கள் திட்டமிட்ட சூழ்ச்சிகளை அரங்கேற்றி னார்கள். இயற்கையின் ‘விதி’களை அறிவியலுக்கு உட்படுத்த விடாமல் தங்களின் புரோகித மந்திரங்களாக மாற்றியதுதான் வரலாற்றில் பார்ப்பனர்கள் இழைத்த மகத்தான சமூக துரோகம். இன்று வரை ‘மழை பெய்வதற்கும்’, ‘உலக நன்மைக்கும்’, ‘முதலமைச்சர் உடல்நிலை தேறுவதற்கும்’ பார்ப்பனர்கள் வருண ஜெபத்தையும், யாகங்களையும் நடத்தி வருவதிலிருந்தே இந்த வரலாற்று உண்மையை  புரிந்து கொள்ளலாம்.

•                     அறிவியலை ‘புரோகிதத்துக்குள்’ முடக்கியதால் சமூக மாற்றங்கள் முடங்கிப் போயின. புராதன சமூகம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகராமல், ‘பார்ப்பனிய பொருள் உற்பத்தி சமூகமாகவே’ தேங்கியது. (பிரிட்டிஷ் ஆட்சி வரும் வரை இந்தியா சமூக மாற்றங்களுக்கு உட்படாது தேக்கமுற்றுக் கிடந்தது என்பதை காரல்மார்க்சும் சுட்டிக் காட்டியிருக்கிறார்)

•                     ‘யாகங்கள்’ நடத்தும் உரிமைகளை தங்கள் வசமாக்கிக் கொண்ட புரோகிதக் கூட்டம், அவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பதற்காக ‘பிராமணங்களை’ உருவாக்கியது. ஆனால், இந்த ‘பிராமணங்களில்’ எந்த யாகம் எப்படி நடத்தப்பட வேண்டும்? யாகங்கள் எவருடைய நலனுக்காக செய்யப்படுகின்றன என்ற விளக்கங்கள் ஏதுவுமில்லை. அதை தங்களின் ‘இரகசிய சொத்தாக்கிக்’ கொண்டார்கள். இதன் மூலம் தங்களை கடவுளுக்கு சமமாக உயர்த்திக் கொண்டார்கள்.

•                     இதற்குப் பிறகு கடவுளுக்கு யாகப் பொருள்களின் ஒரு பகுதியும், ‘மனிதக் கடவுள்களாக’ மாற்றிக் கொண்ட புரோகித கூட்டத்துக்கு ஒரு பகுதியும் பிரித்து, எல்லாவற்றையும் அவர்களே சுருட்டிக் கொண்டார்கள்.

•                     வேத புரோகிதக் கூட்டம் இப்படி படிப்படியாக தன்னை உயர்த்திக் கொண்டே வந்தபோது சமூகத்தில் எதிர்ப்புகளும் உருவாகித்தானே தீரும்? ஆம். எதிர்ப்புகள் வந்தன. எதிர்ப்புகளை எதிர்கொள்ள பார்ப்பனப் புரோகிதர் கூட்டம் கடவுளர்களுக்கும் மேலானவர்களாக தங்களை உயர்த்திக் கொள்ளத் திட்டமிட்டது. அதற்காக ஏற்கெனவே அவர்கள் உருவாக்கிய ‘பிராமணங்களில்’ சூழ்ச்சியாக இடைச்செருகல்களை செய்தார்கள். அதன்படி ‘சத்பத பிராமணம்’ என்ற ஒன்றை உருவாக்கி, ‘வேத புரோகிதர் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்; ரிஷிகள் மரபில் வந்தவர்கள்’ என்று கூறிக் கொண்டார்கள். அதன்படி அரசர்களே வேத புரோகிதர்களை கட்டுப்படுத்த முடியாது. அரசர்கள் பதவியேற்கும்போது அந்தப் பதவியேற்புக்கு சடங்குகளை நடத்த வந்த புரோகிதர்கள் இப்படி கூறினார்கள், “மக்களே நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள், இவன் உங்களுக்குத்தான் அரசன், வேத புரோகிதர்களுக்கு அரசன் ‘சோமன்’தான்” என்றார்கள்.

•                     வேதங்கள் - மனிதர்கள் உருவாக்கியவைதான் என்பதற்கு வேதங்களிலேயே சான்றுகள் இருக்கின்றன; ஆனாலும் பார்ப்பனர்கள் அதைப் புறக்கணித்து அவை கடவுள் உருவாக்கியவை என்றும், கடவுள்களே பிராமணர்கள்தான் என்றும் கூறத் தொடங்கினார்கள்.  மனு கூறினான்: “வேதங்கள் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவை. வேதத்துக்கு கீழ்ப்படிய மறுத்தால், சமூகத்தை விட்டு விரட்டப்படுவார்கள்.”

•                     வேதங்கள் - தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால், கி.மு. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு வரை எழுத்து வடிவமாக்கும் வாய்ப்புகள் இருந்தும், வேத புரோகிதர்கள் அதைத் தவிர்த்தே வந்தார்கள். எழுத்து வரி வடிவம் உருவாகி அதைப் படித்தவர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பிறகும், ‘வேதங்கள்’ எழுதப்படவில்லை. வேதத்தை கேட்கும் ‘சூத்திரர்’ காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது மனுநீதி.

•                     மரப்பட்டைகளிலும் ஓலைகளிலும் எழுதப்பட்ட பழங்கால எழுத்து வடிவங்கள் அனைத்தும் புத்த மார்க்கத்தைச் சார்ந்தவையாக உள்ளன. பவுத்த துறவிகள் இயற்றிய ‘வசிஷ்ட தர்ம சாஸ்திரம்’ தான், முதன்முதலாக எழுத்து வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டது. அதுவரை வேதங்கள் பார்ப்பனர்களின் ‘மூளை’யில் மட்டுமே பதிந்து கிடந்தது.

வேத காலத்தில் பார்ப்பனர்கள் நிலை நிறுத்திக் கொண்ட இந்த சூழ்ச்சிகளுக்கு எதிராக எதிர்ப்புகள் வரத் தொடங்கின.

அப்படி வேத பார்ப்பன மரபுக்கு சவால் விட்டது யார்?

(தொடரும்)

Pin It