வம்பன்:- என்ன அய்யா கம்பரே! அனாவசியமாக வெள்ளைக்காரர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டு வெளியில் போங்கள் என்று சொல்லுகின்றீரே! இது நியாயமா?

கம்பன்:- சொன்னால் என்ன அய்யா முழுகிப் போய்விட்டது. அவர் களுக்கு இங்கு என்ன வேலை? அவர்கள் என்ன நம்ம மதமா? ஜாதியா? ஜனமா? போ என்றால் போக வேண்டியதுதானே?

வம்பன்:- அப்படிச் சொல்லிவிடலாமா திடீரென்று. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே; இந்த நாட்டுக்கு அவர்கள் வந்து சுமார் 400, 500 வருஷத்துக்கு மேலாகின்றது. அது மாத்திரமல்ல இந்த நாட்டு அரசாட்சி பெற்று சுமார் 200 வருஷமாகின்றது. அப்படியிருக்க நீ போ வெளியில் என்று சொல்லுவது நியாயமா?

கம்பன்:- 400, 500 வருஷமாய் விட்டதால் ஒருவனுக்குப் பாத்தியம் வந்து விடுமா? 200 வருஷம் ஆண்டால் அவனுக்கே என்றைக்கும் நிரந்தரமாகி விடுமா? ஆயிரம் வருஷம் ஐந்நூறு வருஷம் இருந்த மரஞ்செடிகளை வெட்டித்தள்ளி காடுகளைத் திருத்துவதில்லையா? 4000 வருஷம் 5000 வருஷமாய் இருக்கிற பாறைக் கல்லுகளையெல்லாம் டைனாமெட்டு வைத்து உடைத்து தூளாக்கி அப்புறப்படுத்துவதில்லையா? ஆதலால் வேண்டாம் என்றால் போய்விட வேண்டியதுதானே.

periyar sleepingவம்பன்:- வேண்டாம் என்றால் போக வேண்டியதுதானே என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டாம் என்பதற்கு ஏதாவது சட்டப்படி நியாயம் சொல்லுகின்றீர்களா? அல்லது கை பலத்தைப் பொறுத்து நியாயம் சொல்லு கின்றீர்களா?

கம்பன்:- சட்டமென்ன? கைபலமென்ன? இந்த இரண்டும் நமக்குக் கிடையாது. நம் இஷ்டம் தான்.

வம்பன்:- அப்படியானால் அந்த இஷ்டத்துக்காவது ஒரு காரணம் வேண்டாமா?

கம்பன்:- காரணம் என்ன? காரணம் அவர்களால் இந்த 200 வருஷமாய் நமக்கு என்ன பிரயோஜனம் என்ன சாதித்தார்கள்? நமது நாட்டுச் செல்வத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போகின்றார்கள். அவர்களிடத்தில் நியாயம் என்பதில்லை, கருப்பனுக்கு ஒரு நீதி, வெள்ளையனுக்கு ஒரு நீதி, இது போதாதா? அவர்கள் இந்த தேசத்தை விட்டுப் போக வேண்டியதற்குக் காரணம்?

வம்பன்:- அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னால் போதுமா? (1)இந்த 200 வருஷகாலத்தில் இந்தியா எவ்வளவு நாகரீகம், கல்வி அறிவு பெற்றிருக்கிறது. அவர்கள் வருவதற்கு முன் 100க்கு 99 தற்குறி களாயிருந்தோமே. பார்ப்பான் காலத்தைவிட வெள்ளைக்காரன் காலம் மோசமா? (2) பணம் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் யாருடைய பணம்? பாடுபடுபவர்கள் பணத்தை நம்ம பணக்காரனும் கொள்ளை அடித்தான், வெள்ளைக்காரனும் கொள்ளை அடித்தான், பணக்காரன் கொள்ளை அடிக்கும் பணமும், மோட்டார் பெட்ரோல், ரயில், சீப்பு, சோப்பு, டிரஸ், பிராந்தி, உஸ்கி, பெட்டி, பேழை முதலிய சாமான்கள் வாங்கி எல்லாம் வெளிநாட்டுக்குத்தான் அனுப்பி விடுகிறான். (3) நீதி விஷயத்திலும், இங்கும் பார்ப்பானுக்கு ஒரு நீதி, பறையனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி, பணக் காரனுக்கு ஒரு நீதி, கோவில், குளம், வீதி, பள்ளிக்கூடத்திலும், மேல் ஜாதிக்கு ஒரு நீதி, கீழ் ஜாதிக்கு ஒரு நீதி, சம்பளத்திலும் ஒருவனுக்கு மாதம் 6000 ரூபாயும், ஒருவனுக்கு மாதம் 6 ரூபாயும், ஒரு ஜாதி பாடுபட வேண்டும், ஒரு ஜாதி சோம்பேரியாய் இருந்து வாழ வேண்டும். இப்படி அநேக வித்தியாசங்கள் அக்கிரமமாய் இருக்கும்போது வெள்ளைக்காரனை மாத்திரம் ஏன் குற்றம் சொல்லுகிறாய்? அவன் போய்விட்டால் இதெல்லாம் திருத்துப்பாடாகி விடுமா?

கம்பன்:- ஆகுதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலையில்லை. நாங்கள் எப்படியோ எங்களுக்குள் அடியோ உதையோ போட்டுக் கொள்ளுகிறோம். வெள்ளைக்காரன் மாத்திரம் இனி அரை நிமிஷமும் வேண்டாம். அவ்வளவுதான் நம்ம சங்கதி.

வம்பன்:- சரி எப்படியோ நடக்கட்டும் எல்லாருக்கும் ஒத்தது எனக்கும் ஆகட்டும். நானும் வேணுமானால் உன்னுடனேயே சேர்ந்து கொள்ளுகிறேன். ஆனால் ஒரு சேதி.

கம்பன்:- என்ன சேதி?

வம்பன்:- இந்தியாவிலிருந்து கொளும்பு, சிங்கப்பூர், பினாங்கு, செய்கோன், கொச்சின், சைனா முதலிய ஊர்களுக்கு நம்ம ஆளுகள் 10-லட்சக்கணக்காகப் போய் அந்த தேசங்களை கொள்ளையடித்து கோடிக் கணக்காக ரூபாய்கள் கொண்டு வந்து இங்கு எத்தனையோ பேர் லட்சாதி பதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் பிழைக்கிறார்களே! அதுமாத்திரமல்ல இன்னும் வெகுபேர் அந்த தேசங்களில் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்களே! இதற்கு என்ன செய்கின்றது?

கம்பன்:- செய்வது என்ன? அந்த ஊர்க்காரர்கள் பார்த்துப் போ என்று சொன்னால் போய்விடவேண்டியதுதான்.

வம்பன்:- அப்படியானால் சைய்கோன் அரசாங்கம் இந்திய “வெள்ளைக்காரர்”களாகிய நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு நோட் டீஸ் கொடுத்து விட்டதாமே. இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும்.

கம்பன்:- செய்வதென்ன இந்த இரண்டு வருஷ சங்கராந்தி நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மேல் தான் வந்திருக்கின்றது. மரியாதையாய் மூட்டை கட்டிக் கொண்டு இந்தியாவுக்கு திரும்ப வேண்டியதுதான்.

வம்பன்:- அப்படியானால் இப்பொழுது தேசீயவாதிகள் உள்பட எல்லோரும் சேர்ந்து என்னமோ ஆபத்து வந்துவிட்டதாக இதற்குக் கூச்சல் போடுகிறார்களே அது ஏன்? இதற்கு இந்திய சட்டசபையில் அவசரப் பிரேரேபணை எதற்காக? “போ என்றால் போய்விட வேண்டியதுதானே” “இவர்களால் செய்கோனுக்கு என்ன நன்மை” “செய்கோனை கொள்ளை அடித்து பொருள் திரட்டி இந்தியாவுக்கு கொண்டு வருவது நியாயமா?” என்று செய்கோன்காரர்கள் சொல்வதில் என்ன தப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.

கம்பன்:- எதற்கும் எதற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறீர்? இது உமக்கு ஒரு வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்ததுதானோ? திரைகடலோடியும் திரவியம் தேடு என்று ஒளவை பாடி இருக்கிறாளே திரைகடல் என்றால் இந்தியாவுக்குள் என்றுதான் அருத்தமோ?

வம்பன்:- சரி அப்படியானால் எல்லோருக்கும் எல்லா தேசத்தாருக்கும் இந்த உரிமை உண்டா? இல்லையா?

கம்பன்:- என்ன நியாமய்யா நீர் பேசுகிறது. வெரும்வம்பு பேசுகிறீரே நியாயம் அநியாயம் இல்லையா?

வம்பன்:- சரி அப்படி வாருங்கள் நியாயம் பேசலாம். நியாயம் என்றால் என்ன? கம்பன் சொன்னதா? காளிதாசன் சொன்னதா? ராமன் சொன்னதா? கிருஷ்ணன் சொன்னதா? வள்ளுவன் சொன்னதா? புத்தன் சொன்னதா? கிறிஸ்து சொன்னதா? முஹம்மது சொன்னதா அல்லது காந்தி சொல்வதா?

சங்கராச்சாரி சொல்வதா? சத்தியமூர்த்தி சொல்வதா? மற்றும் யாராரோ சொல்லுவதா? என்பவைகளை நியாயம் என்று வைத்துப் பேசுவதானால் உலகம் உள்ளவரை நியாயம் பேசித் தீராது.

கம்பன்:- பின்னை என்னதான் பண்ணித் தொலைக்கச் சொல்லுகிறீர்.

வம்பன்:- தங்களுக்குப் புத்தி இருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளுகிறீர்களா?

கம்பன்:- ஆம் ஒப்புக் கொள்ளுகிறேன்.

வம்பன்:- சரி எனக்கு புத்தியிருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளுகின்றீரா?

கம்பன்:- சரி ஒப்புக் கொள்ளுகிறேன்.

வம்பன்:- அப்படியானால் நாம் இருவருமே நம் புத்தியை-அறிவைக் கொண்டு பேசுவோம். நம் இருவர் புத்திக்குட்பட்டதை நாம் சரி நியாயம் என்று ஒப்புக் கொள்ளுவோம். இதில் ஒன்றும் தடை இல்லையே.

கம்பன்:- தடை இல்லை.

வம்பன்:- முதலாவது மக்களை மதத்தின்பேரில் பிரிக்கலாமா? தேசத்தின் பேரால் பிரிக்கலாமா? ஜாதியின்பேரால் பிரிக்கலாமா? அல்லது பாடுபட்டு உழைக்கும் மக்கள் சோம்பேறிகளாய் இருந்து உழைப்பாளிகளை ஏய்த்து வாழுகின்ற மக்கள் என்று இரண்டுவித வகுப்பாய் பிரிக்கலாமா? என்பதை முதலில் முடிவு செய்வோம். ஆகவே எப்படிப் பிரிக்கின்றது சொல்லுங்கள் பார்ப்போம்.

கம்பன்:- இப்படிச் சொன்னால் எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

வம்பன்:- இது உங்களுக்குப் புரியாதல் என்ன? சற்று தயங்குவதாகத் தெரிகின்றது. நியாயம் என்று தோன்றுவதைச் சொல்ல வேண்டியதுதானே.

கம்பன்:- நீர்தான் சொல்லுமே.

வம்பன்:- சொல்லுகிறேன் நன்றாய் யோசித்துப்பாரும். என்ன வென்றால் மனிதர்களைப் பிரிக்க வேண்டுமென்றால் இரண்டு வகையாய்த் தான் பிரிக்கலாம்.

கம்பன்:- எப்படி?

வம்பன்:- பாடுபட்டு உழைக்கும் மக்கள் ஒரு வகுப்பு. அப்படிப் பாடுபட்டு உழைக்கும் மக்களின் உழைப்பின் பலனை பல பலவித வழிகளால் ஏமாற்றி அனுபவிக்கிறவர்கள் ஒரு வகுப்பு ஆக இரண்டு வகுப்பாகத் தான் பிரிக்கலாம்.

கம்பன்:- சரி அப்புறம்.

வம்பன்:- இந்தப்படி ஏமாற்றி வாழும் மக்களைப் பார்த்து நீயும் உன் விகிதாச்சாரம் உழைத்து விகிதாச்சாரம் கூலி எடுத்துக் கொள் என்று சொல்ல வேண்டும்.

கம்பன்:- சரி அப்புறம்.

வம்பன்:- அந்தப்படி நாம் சொல்லுவதை அவர்கள் கேட்கா விட் டால் ஊரைவிட்டு நாட்டைவிட்டு தேசத்தைவிட்டு வெளியில் போகிறாயா இல்லையா? என்று கேட்க வேண்டும்.

கம்பன்:- அவன் போக மாட்டேன் என்றால் என்ன செய்வது.

வம்பன்:- வெள்ளைக்காரன் போக மாட்டேன் என்றால் என்ன செய்ய வேண்டுமென்கிறாயோ அதைச் செய்ய வேண்டியதுதான்.

கம்பன்:- இதில் வெள்ளைக்காரனும் சேர்ந்தவன்தானே.

வம்பன்:- அவர்கள் பாட்டன்கூட சேர்ந்தவனேயாவான்.

கம்பன்:- அப்படியானால் சரி.

('சித்திரபுத்திரன்', குடி அரசு - உரையாடல் - 10.09.1933)

Pin It