திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சியல்ல; சமுதாய சீர்திருத்த இயக்கம் ஆகும். அரசியல் கட்சி என்பது தேர்தலில் ஈடுபடுவது, மக்களிடம் ஓட்டுப் பெற்று பதவிக்குப் போவது:

periyar speechஎங்கள் இயக்கம் தேர்தலுக்கு நிற்கின்றதோ, பதவிக்குப் போகின்றதோ இல்லை. சமுதாயத் துறையில் பாடுபடுகிறவர்களுக்கு அரசியல் பேரால் சட்டசபைக்கோ, பார்லிமென்டுக்கோ போய்ச் செய்ய ஒன்றும் இல்லை.

சட்டசபைக்குப் போகின்றவர்களால் சமுதாயத் தொண்டு உண்மையாகச் செய்ய முடியாது. மக்களின் மூடத்தனம், மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித்தனங்களைச் சட்டசபைக்குப் போகின்றவர்களால் கண்டிக்க முடியாது. கண்டித்தால் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். சட்டசபைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களிடம் வந்து ஓட்டு கேட்காத எங்களால்தான் முடியும்.

தோழர்களே! நான் காங்கிரஸ்காரனாக, தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளனாக, தலைவனாக இருந்து பாடுபட்டவன் தான். பிறகு காங்கிரஸ் பார்ப்பனர்கள் நலனுக்கும், நமது இனநலனுக்குக் கேடாகவும் உள்ளது என்பதை உணர்ந்து காங்கிரசில் இருந்து வெளிவந்து சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து கடவுள், மதம், சாஸ்திரம் ஒழிய வேண்டும், பார்ப்பான் ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டுமென்று பாடுபட்டுக் கொண்டே வந்து இருக்கின்றேன்.

எங்களுடைய தொண்டு எதிர்நீச்சல் தொண்டாகும். சமுதாயத் தொண்டு எவன் செய்ய முற்பட்டாலும் ஒழிக்கப்பட்டே இருக்கிறார்கள். நாங்கள் தான் துணிந்து இந்தத் துறையில் பாடுபட்டு வருகின்றோம்.

எங்களுக்குப் பொதுமக்களுடைய ஆதரவோ, பத்திரிகைகாரர்கள் விளம்பரமோ கிடையாது. எதிர்ப்புதான் அதிகம்.

ஆனால், நமது எதிரியான பார்ப்பனர்கள் நிலை அப்படி அல்ல. நமது நாட்டில் சுமார் 30- லட்சம் பார்ப்பனர்கள் உள்ளார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

ஒரு பார்ப்பான் வாய் அசைந்து எதைப் பேசினாலும் அதையே அத்தனை பார்ப்பனர்களும் பேசுவார்கள்! பார்ப்பான் ஒருவனை அயோக்கியன் என்றால், அத்தனை பார்ப்பானும் அவனை அயோக்கியன் என்பான். சுத்த அறிவுசூன்யமான ஒருவனை ஒரு பார்ப்பான் மகரிஷி என்று கூறினாலும், அத்தனை பார்ப்பானும் பகவான் மகரிஷி என்பான்.

பத்திரிகைக்காரர்கள் எல்லாம் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றார்கள் என்றாலும், பல இன்னல்களுக்கு இடையே எதிர்ப்புகளுக்கும் இடையே தான் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றேன்.

எங்கள் தொண்டு ஒன்றும் வீண்போகவில்லை. 40- ஆண்டு தொண்டும் இன்று தான் பலன் தர ஆரம்பித்து உள்ளது.

காங்கிரஸ் ஆனது பார்ப்பானுடைய ஸ்தாபனமாக இருந்து வந்தது; இன்று அடியோடு மாறி தமிழர்கள் கைக்கு வந்துவிட்டது.

காங்கிரசும், மனுதர்மத்தினை ஆட்சி தர்மமாகக் கொண்டு இருந்ததை மாற்றி மனித தர்மத்தை ஆட்சி தர்மமாகக் கொண்டு தொண்டு புரிய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய மாறுதலுக்குக் காரணமாக இருந்தவர்கள் நாங்கள் தான் ஆவோம்.

எங்கள் தொண்டு காரணமாகத்தான் ஆச்சாரியாரின் மனுதர்ம ஆட்சி ஒழிக்கப்பட்டு காமராசர் 1954-இல் பதவிக்கு வந்தார். அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.

காமராசரின் ஆட்சியின் பயனாக நம் மக்களும் படிக்கவும் எல்லா உத்தியோகமும் பார்க்க வாய்ப்பும், வசதியும் ஏற்பட்டது.

நமது மாநாடுகளில் 30-ஆண்டுகளுக்கு முன்பு என்ன என்ன தீர்மானங்கள் போட்டோமோ அவை எல்லாம் இன்றைக்குக் காங்கிரசினால் அமலாக்கப்படுகின்றது. இன்றைக்குக் காங்கிரசு கொள்கை ஜாதியை ஒழிப்பது, பணக்காரனை ஒழிப்பது ஆகும். ஆனால் காங்கிரசிலேயே இதற்கு விரோதமானவர்கள் அனேகம் பேர்கள் இருக்கின்றார்கள்! இன்றைக்குக் காங்கிரசிலேயும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். தங்கள் ஆதிக்க வாழ்வு போய்விடக் கூடாது என்பதற்காகக் காங்கிரசுக்குக் குழிதோண்டுகிறவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைக்கு நம் முதல்மந்திரியார் பக்தவச்சலனாருக்குக் குரு ஆலோசனை கூறுகின்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்தான் ஆகும்.

கடவுள், மதம், சாஸ்திரம், நாமம், சாம்பல், பக்தி இத்தனையும் காங்கிரஸ்காரர்கள் வைத்துக் கொண்டே சமதர்மம் பேசுவது முட்டாள்தனம் ஆகும். இவற்றை வைத்துக் கொண்டால் எப்படி சமதர்மம் நிலவ முடியும்? எனவே, சமதர்மம் நிலவ வேண்டுமானால், கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை ஒழித்தாக வேண்டும்.

நெற்றி சுத்தமாக இருந்தால் தான் புத்தி சுத்தமாக இருக்கும்.

இன்றைக்குக் காங்கிரசில் பணக்காரர்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் 'சமதர்மம் காங்கிரசில் நடக்கவா போகின்றது?' என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற முயற்சியில் பணக்காரன்கள் எல்லாம் காங்கிரசில் இருந்து வெளியாகி விடவேண்டும். காங்கிரசில் பணக்காரன் இருக்கவே விடக் கூடாது.

தோழர்களே! எங்கள் கழகம், கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி. இப்படிப்பட்ட எங்கள் கட்சியில் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம் இவற்றில் நம்பிக்கை வைத்தவர்கள் இருக்கவே மாட்டார்களே.

எங்கள் கட்சி பார்ப்பானை வெறுக்கின்ற கட்சி. எங்கள் கட்சியில் பார்ப்பான் கிடையாதே! இது போல காங்கிரஸ் ஆக வேண்டும். காங்கிரஸ் சமதர்மம் என்று பேசிக் கொண்டு பணக்காரன்களையும், கோடீஸ்வரன்களையும் காங்கிரசில் வைத்துக் கொண்டு, மந்திரியாக வைத்துக் கொண்டு இருந்தால் எப்படி காங்கிரஸ் உண்மையான சமதர்மதிட்டத்தை அமலாக்குகின்றது என்று கூற முடியும்?

நாம் நெருக்குகின்ற நெருக்கில் பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களும் காங்கிரசில் இருந்து வெளியாக்க காங்கிரஸ் முயல வேண்டும். இல்லாவிட்டால், பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களும் தாமாகவே காங்கிரசை விட்டு ஓடும்படியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

சமதர்மம் என்பது பேதம் அற்ற தர்மமாகும்.

காங்கிரசுக்காரர்களுக்கு நமது பேச்சு பிடிக்கும் என்று நான் கருதவில்லை. கேட்டால் கேள், கேட்காவிட்டால் வீணாகப் போ. சீரழி! வருகின்றதை அனுபவி என்று கருதியே நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

----------------------------------------

தந்தை பெரியார் இராமநாதபுரத்தில் ஆற்றிய அறிவுரைகளின் தொகுப்பு. ’விடுதலை’, 07.10.1965

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It