தமிழ்நாட்டில் சமூகவியல் அறிவுத்துறையில் உழைக்க விரும்பும் இளைஞர்களுக்கு நா.வானமா மலை மிகச் சிறந்த முன்மாதிரி, உந்துதல். அவரைப் பற்றி சாகித்திய அகாதமி இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எஸ்.தோதாத்ரி எழுதிய வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுள்ளது. இப்போது ஆ.சிவ சுப்பிரமணியன் நா.வா.வின் வாழ்க்கை பற்றியும், ஆய்வுகள் பற்றியும் ‘பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் படிப்பதற்கு மிகமிகச் சுவாரசியமாக இருக் கின்றது. இந்த நூலின் முன்னுரையில், விபத்திற் குள்ளாகிப் படுக்கையில் இருக்கும் சூழ்நிலை வந்த போது இப்படியொரு நூலை எழுதியதாக ஆ.சிவ சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் சலிப்பினைப் போக்கிக் கொள்வதற்காக எழுதிய இந்நூல் பல இளைஞர்களுக்கு உற்சாகம் தரக் கூடியதாக அமைந்துள்ளது.

vanamamalai_370இந்நூலின் ‘நாங்குநேரியிலிருந்து கோர்பா வரை’ என்ற முதல் தலைப்பில் நா.வா.வின் வாழ்க் கையைச் சுருக்கமாக ஆ.சிவசுப்பிரமணியன் விவரித் துள்ளார். அவர் நா.வா.வுடன் நெருங்கிப் பழகிய வராக இருப்பதால், புதிய புதிய வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையான முறையில் எடுத்துக் கூறியுள்ளார்; நா.வா.வின் முக்கிய பண்புகளை, சம்பவங்களை விவரிப்பதின் ஊடே நம்மை உணர்ந்து கொள்ள வைக்கின்றார். நா.வா. இளவயதில் தன் சூழலின் விளைவாக நாட்டுப்பற்றுடையவராக வளர்ந்து, பொதுவுடைமைக் கொள்கைக்காரர் ஆகிறார். தன்னல மறுப்பு அவருடைய முக்கிய பண்பு. தான் வாழும் சமூகத்திற்குப் பயன்படும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். எடுத்துக் கொண்ட வேலைகளில் கடுமையாக உழைக்கிறார்.

1950-களுக்குப் பிறகு மார்க்சிய நோக்கில் தமிழ் நாட்டு வரலாறு, பண்பாடு, இலக்கியம் ஆகிய வற்றை ஆராயத் தொடங்குகிறார். இப்படி ஆர்வம் காட்டிய நாள் தமிழியலுக்கு ஒரு நல்ல நாள். எப்படிப்பட்ட இழப்பு நேர்ந்தபோதும் ஆய்வின் மீதான குன்றாத ஆர்வம் மற்றொரு முக்கிய பண்பு. அவருடைய தனிப்பயிற்சி நிறுவனம் எரிந்து இக்கட்டான நிலையில் இருந்தபோதுகூட நா.வா. முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இரு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி அனுப்பினார். அன்றைய தமிழக அரசு சரியாக ஒத்துழைப்பு தாராதபோதும், மலேசியாவில் நடந்த மாநாட்டில் தோழர்கள் உதவியுடன் கலந்துகொள்ள முயன்றார். இந்தப் பண்புகள் முக்கியமானவை; இன்றைய தமிழியல் ஆய்வாளர்கள் பின்பற்ற வேண்டியவை.

‘நெல்லை ஆய்வுக் குழு’ பற்றி அடுத்து ஆ.சிவ சுப்பிரமணியன் கூறுகிறார். நா.வா. தனது ஐம்ப தாவது பிறந்த நாள் முதற்கொண்டு தனது நண்பர்கள், மாணவர்கள் ஆகியோருடன் சேர்ந்து மாதம் தோறும் ஆய்வுக் கட்டுரைகள் படிக்கும் கருத்தரங்கை நடத்த முடிவு செய்கிறார். இதன் மூலம் அவர் தனது ஆய்வுப் பணிகளை ஒழுங்கு செய்து கொண்டதுடன், தனது நண்பர்களையும் குறிப்பிட்ட துறையில் ஆற்றுப் படுத்தியுள்ளார். ஒரு ஒருங்கிணைந்த ஆய்வு முறை யியலை வளர்த்தெடுத்துள்ளார்; மற்றவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார். இந்தத் தலைப்பினுள் நா.வா. எந்தச் சூழ்நிலையில் சில கட்டுரைகளை எழுதினார் என்பது பற்றி மிகச் சுவையான விவரணை உள்ளது. கா.சிவத்தம்பி இந்த நெல்லை ஆய்வுக் குழுதான் நிறுவனரீதியான முதல் மார்க்சிய ஆய்வு அமைப்பு என்று கூறுகிறார். ஆனால் நா.வா. நெல்லை ஆய்வுக் குழுவை ஒரு கட்டுத்திட்டமான அமைப்பாக இல்லாமல், இளம் ஆய்வாளர்கள் பங்கேற்கும் சுதந்திரமான, நெகிழ்வான அமைப்பாக உருவாக்க முயன்றுள்ளதை ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக் காட்டியுள்ளார்; இதன் விளைவாக நேர்ந்த சில குறைகளையும் கூறியுள்ளார். அதாவது ஆய்வுக் குழுவின் செயல்பாடுகளை முறையாகப் பதிவு செய்து வைக்காமல் போய்விட்டதையும், ஆய்வுக் குழுச் செலவுகள் அனைத்தும் நா.வா. மட்டுமே ஏற்று, பொருளாதாரச் சுமையைச் சுமந்ததையும் குறையாக ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். நா.வா.வுக்குத் தெரியாமல் அவருடைய பொருளாதாரச் சுமையைக் குறைக்க நா.வா.வின் மாணவர்கள் மேற் கொண்ட செயல்பாடு நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

நெல்லை ஆய்வுக் குழுவில் படிக்கப்பட்ட கட்டுரைகளை வெளிக்கொணர்வதற்கு நா.வா. தொடங்கிய இதழே ‘ஆராய்ச்சி’. இந்த இதழை நடத்துவதற்கு நா.வா. எடுத்துகொண்ட முன் முயற்சியும், பொருளாதாரச் சுமையும் பற்றி விரிவாக ஆ.சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார். நா.வா.வின் இத்தகைய முன்முயற்சியாலே இன்று தமிழ் ஆய்வுலகம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி இதழின் மூலமே நல்ல மாணவர் குழாத்தை நா.வா. உருவாக் கினார்; முக்கியமான பல நூல்களைத் தமிழ் ஆய்வுலகத்திற்கு அளித்தார்; அளிக்கச் செய்தார். இவை பற்றியும் ஆ.சிவசுப்பிரமணியன் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டார் வழக்காற்றியலுக்கு அளித்த பங்களிப்பை ‘தமிழக நாட்டார் வழக்காற்றியலின் தந்தை’ என்ற தலைப்பில் விரிவாகக் கூறியுள்ளார். நா.வா.வின் கதைப்பாடல் பதிப்பு, நாட்டுப்பாடல் பதிப்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் பற்றி விளக்கமாக ஆ.சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் களஆய்வுகளுக்கு நா.வா. எடுத்துக்கொண்ட முன்முயற்சி பற்றியும் கூறி யுள்ளார்.

நா.வா. பற்றிய மதிப்பீட்டை நூலின் இறுதியில் பின்வருமாறு ஆ.சிவசுப்பிரமணியன் செய்துள்ளார். “நா.வா. ஒரு நல்ல மார்க்சியவாதி. இவ்வகையில் அவர் அறிவால் ஆலமரமாகவும், பண்பால் வாழை மரமாகவும் விளங்கியவர். தன்னருகில் தன் பக்கக் கன்றுகளுக்கு இடம் கொடுத்து வளர்க்கும் வாழை மரம் போன்று தாம் உருவாக்கிய நெல்லை ஆய்வுக் குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வாயிலாக இளம் ஆய்வாளர்களை உருவாக்கினார். அவர்களைப் படிக்கவும், எழுதவும், விவாதிக்கவும் தூண்டினார். அவர்கள் எழுதும் கட்டுரைகளைப் படித்துத் திருத்தினார். இவற்றின் பொருட்டுச் செலவழித்த நேரத்தில் அவர் மேலும் சில கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்க முடியும். ஆனால் வாழைமரம் தனக்குரிய நீரையும், உரத்தையும் தன் பக்கக் கன்றுகளுடன் பகிர்ந்து கொள்வதைப் போன்று அவரது செயல்பாடு அமைந்திருந்தது.” இந்த மதிப்பீடு மிகச் சரியானது. நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள நா.வா. பற்றியும் நெல்லை ஆய்வுக் குழு நிகழ்வு பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகள், நெல்லை ஆராய்ச்சிக்குழுக் கூட்ட அழைப்பிதழ்கள், ஆராய்ச்சிக் கட்டுரையடைவு, நா.வா.வுடன் நேர்காணல் ஆகிய பின்னிணைப்புகள் மிகப் பயனுள்ளவை.

இப்பதிப்பில் நா.வா.வின் இலக்கிய, தத்துவ ஆய்வுகள் பற்றி எழுதவில்லை என்று ஆ.சிவசுப்பிர மணியன் குறிப்பிட்டுள்ளார். இவை பற்றியும், இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தால் அவை பற்றி எழுதி இந்த நூலின் அடுத்த பதிப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன். அப்படி இந்த நூல் வருமானால் தமிழிலேயே எழுதப்பட்ட மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலாக அமையும்.

பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை

ஆசிரியர் : ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.80/-

Pin It