'பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி’ என்னும் கா.சிவத்தம்பியின் நூல் நீண்ட காலம் அச்சில் வராமல் இருந்தது. இந்நூல் முதலில் ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பாக ‘Studies in Ancient Tamil Society’ என்ற தலைப்பில் என்.சி.பி.எச். வெளியிட்டிருந்தது. இப்போது ‘பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி’ நூலை என்.சி.பி.எச். கடந்த ஆண்டு மறுபதிப்பு செய்துள்ளது. இந்நூல் கட்டுரைகள் அறுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரை நீண்ட கால இடைவெளியில் எழுதப்பட்டவை. இதனை வாசகர்கள் மனதில் கொண்டு வாசிக்க வேண்டும். அப்போதுதான் கா.சிவத்தம்பி பண்டைத் தமிழ்ச் சமூகம்பற்றிச் செய்துள்ள ஆய்வுகளின் வளர்ச்சியை விளங்கிக்கொள்ள முடியும்.

இந்நூல் கட்டுரைகள் இரண்டு முக்கியமான பேசு பொருள் பற்றியவை. அவை திணைக்கோட்பாடும், அரசு உருவாக்கமும் ஆகும். ‘சங்க இலக்கியமும் தொல்லியலும்’ என்னும் கட்டுரை சங்க இலக்கிய ஆய்வுகளுக்கும், தொல்லியல் ஆய்வுகளுக்கும் உள்ள இயைபு, இயை பின்மை, இயைபேற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த பணிகள் பற்றிப் பேசுகின்றது.

திணைக்கோட்பாடு பற்றிய பகுப்பாய்வை முதலில் நோக்குவோம். ‘திணைக்கோட்பாட்டின் சமூக அடிப் படைகள்’ என்னும் முதல் கட்டுரையும், ‘முல்லைத் திணைக்கான ஒழுக்கம்’ என்னும் இறுதிக் கட்டுரையும் தொல்காப்பியர் முன்வைக்கும் திணைக்கோட்பாட்டிற்கான சமூக அடிப்படைகளை அலசி ஆராய்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்புலங்களும், வாழ்முறைகளும் வரலாற்றுக்கு முன்னேயிருந்து வரலாற்றுக் காலம் வரையிலும் தமிழரின் சமூகப் படிமலர்ச்சியைக் காட்டி நிற்கின்றது என்று கா.சிவத்தம்பிக்கு முன்னிருந்த தமிழியல் ஆய்வாளர்கள் வாதிட்டனர். கா.சிவத்தம்பி இவ்விளக்கத்தை மறுத்தொதுக்கினார். ‘சமனற்ற சமூக வளர்ச்சி’ என்ற மார்க்சிய எண்ணக் கருவின் மூலம் புதியதொரு விளக்கத்தைத் தருவித்துள்ளார்; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்புலங்களும் அவற்றின் வாழ்முறைகளுள் ஒரே சமகாலத்தில் நிலவின என்று வாதித்துள்ளார்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் சமனற்ற சமூக வளர்ச்சி காரணமாக வெவ்வேறு திணைப்புலங்களில் வெவ்வேறு சமூக - பொருளாதார முறைகள் நிலவின. இந்த எதார்த்தம் தொல்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இதனையே தொல்காப்பியம் திணைக்கோட்பாடு என்று எடுத்துரைத்துள்ளது. தொல்காப்பியம் திணைக்கோட் பாட்டை இலக்கண விதிமுறையாக எடுத்துரைக்கவில்லை; ‘பாடலுள் பயின்றவை நாடுங்காலை’ என்று தொல் தமிழ் இலக்கியத்தில் பயின்றுள்ளவற்றையே எடுத்துரைக் கின்றது. “தொல்காப்பியரைப் பொருத்தவரை, சமஸ் கிருதத்தில் காணக் கிடைக்காத தமிழ் இலக்கிய மரபு களைப் புரியவைக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது” என்று தொல்காப்பியம் திணைக் கோட்பாட்டை எடுத்துரைத்தற்கான காரணத்தையும் கா.சிவத்தம்பி விளக்குகிறார்.

‘முல்லைத் திணைக்கான ஒழுக்கம் - முல்லை நிலத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் மானுடவியல் முக்கியத்துவம் குறித்த ஒரு பகுப்பாய்வு’ என்னும் கட்டுரை முல்லைத் திணையினுள் ஏற்பட்ட சமூகப் பொருளாதார வளர்ச்சி, அந்நிலத்தின் உரிப்பொருளான ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ என்பதை எவ்வாறு நிர்ணயிக் கின்றது என்று கா.சிவத்தம்பி விளக்குகிறார். மேய்ச்சலும், சிறு அளவிலான வேளாண்மையும் முல்லைத் திணைப் புலத்தின் அடிப்படையான பொருளாதார நடவடிக்கை. முல்லையில் முக்கியமான பொருளாதாரச் செல்வம் கால்நடைகள். இக்கால்நடைகளைக் கவர்தல் மூலம் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கையும் முல்லைத் திணையில் முக்கியமானது. இக்கவர்தலில் ஈடுபடுபவர்கள் ஆண்களே. அவர்களே மேய்த்தலிலும் ஈடுபடுபவர்கள். இவற்றின் மூலம் கால்நடைகள் ஆண்களின் செல்வமாக, சொத்தாக மாறுகின்றன. ஆண் குடும்பத்தில் முதன்மை பெறுகிறான். தனிச்சொத்துடைய குடும்பங்களில் ஆண்கள் மேய்த்தலுக்காகவும், கால்நடை கவர்தலுக்காகவும், வேந்துவிடு தொழிலுக்காகவும் பிரிந்து செல்லும்போது, அவர்களுக்காக இல்லத்தில் பெண்கள் காத்திருக்கின்றனர். இந்தக் காத்திருத்தலே முல்லையின் உரிப்பொருளாகின்றது. இவ்வாறான விளக்கத்தைக் கா.சிவத்தம்பி தந்துள்ளார். கா.சிவத்தம்பிக்குப் பிறகு பெ.மாதையனும், ராஜ்கவுதமனும் திணைக்கோட்பாடுபற்றி மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் கா.சிவத்தம்பியின் ஆய்வு முறையை இன்னும் கூடுதலாக வன்மையுடையதாக ஆக்கியுள்ளனர்.

‘பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம்’, ‘பண்டைய தமிழ்நாட்டில் உயர்குடி ஆதிக்க மேட்டி மையின் வளர்ச்சி’ ஆகிய இரு கட்டுரைகள் அரசு உருவாக்கம் பற்றி ஆராய்கின்றன. ‘பண்டைய தமிழ் நாட்டில் உயர்குடி ஆதிக்க மேட்டிமையின் வளர்ச்சி’ என்ற கட்டுரை பழந்தமிழகத்தில் சமூக அடுக்கமைவு, அதாவது வர்க்க அமைவு பற்றி ஆராய்கின்றது. கோ, மன்னன், வேந்தன் முதலான சொற்களைக் கொண்டு பழந்தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றி கா.சிவத்தம்பி ஆராய்கின்றார். மருதநில வேளாண் உபரியின் விளைவாக வேந்தர்கள் உருவாகி, நான்கு திணைப் புலங்களையுமே அடக்கி ஆளுவதைச் சிவத்தம்பி எடுத்துக்காட்டுகிறார். இவ்விசயம் தொடர்பாக ஆர்.பூங்குன்றனும், பெ.மாதையனும் மேலாய்வு செய்துள்ளனர்.

கா.சிவத்தம்பியின் இந்நூற் கட்டுரைகள் தமிழியல் ஆய்வில் புதுதிசைவழியைத் தொடங்கி வைத்தன. அத்திசைவழியில் இன்று பல ஆய்வாளர்கள் பயணித்துத் தமிழியலுக்கு ஊட்டம் அளித்து வருகின்றனர். ஆயினும் இந்நூல் கட்டுரைகள் இன்னும் பலப்பல புதுச்சிந்தனை ஊற்றுகளை வழங்குவதாகவே உள்ளன.

Pin It