Aspects of Political Ideas and Institutions in Ancient Indiaஎன்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள், நிலையங்கள் - சில தோற்றங்கள்என்னும் நூலாகும்.  இந்த நூல் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தாய்மொழி களில் வரலாற்று நூல்களை வெளியிடும் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாறு பற்றிய மார்க்சிய ஆய்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க நூல் இது.  இந்நூலில் ஆர்.எஸ்.சர்மா பண்டைய இந்திய வரலாற்றில் அரசியல் நிறுவனங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் அவற்றின் பின்புலமாக அமையும் அரசியல் கொள்கைகளின் உருவாக்கத்தையும், மாற்றத்தையும் ஆராய்ந்துள்ளார். வேத இலக் கியங்கள், பௌத்த, சைன இலக்கியங்கள், தொல் பொருள் சான்றுகள், கல்வெட்டுகள் ஆகியவை ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்க்சிய ஆய்வு நோக்கு இந்நூலின் பார்வையாக அமைந் திருக்கின்றது. அரசு என்னும் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிப் புதிய ஒளியை ஆர்.எஸ்.சர்மா பாய்ச்சியுள்ளார்.

ஆர்.எஸ்.சர்மாவின் இந்நூல் உள்ளடக்கம் பற்றிய சிறு அறிமுகத்தைத் தொடங்கும் முன்னர் சில செய்திகள்:

டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத் யாயா, ஆர்.எஸ்.சர்மா ஆகிய மூவரும் இந்திய வியலில் மார்க்சிய முறையியல் நோக்கிலான ஆய்வுகளுக்கு மூலவர்கள். மூவரும் முறையே மராட்டியம், வங்கம், பீகார் ஆகிய தேசிய இனப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டவர்கள். அதே போலப் புலமை நெறியிலும்கூட வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்கள்.  வரலாற்றை மீளுரு வாக்குவதற்கு டி.டி.கோசாம்பி பண்பாட்டு மானிடவியலை அதிகம் சார்ந்து நின்றார். ஆர்.எஸ்.சர்மா வரலாற்றுத் துறையைச் சார்ந்தவர். தேவி பிரசாத் சட்டோபாத்யாயா மெய்யியல் துறையைச் சார்ந் தவர்.

பின்னிருவர் கல்வித் துறை சார்ந்தவர்கள்.  டி.டி.கோசாம்பி சுதந்திரமான ஆய்வாளர். மூவருமே பல்துறை சங்கம ஆய்வு முறையைப் பயன்படுத்தினாலும் டி.டி.கோசாம்பியே எந்தத் துறையைச் சார்ந்தவர் என்று பிரித்தறிய முடியாதபடிக்கு நாணயவியல் முதலான பல்துறைகளுக்கும் அடிப் படைகளை இட்டுச் சென்றவர்.  கோசாம்பியின் தாக்கங்கள் சர்மாவிடமும், சட்டோபாத்யாயா விடமும் உண்டு. ஆனாலும் அவ்விருவரும் கோசாம்பி யிடமிருந்து வேறுபட்ட இடங்களும் உண்டு.

பண்டை இந்தியாவில் அரசு நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிய ஆர்.எஸ்.சர்மாவின் இந்நூல் கோசாம்பியின் இந்திய வரலாற்று ஆய்வுக்கு - ஒரு முன்னுரைஎன்னும் நூல் வெளிவந்த பிறகு வந்தது.  எந்த வொரு முன்மாதிரி மார்க்சிய ஆய்வும் இல்லாமல் ஆர்.எஸ்.சர்மா இத்துறையில் தன் பங்களிப்பை நல்கினார். இந்த நூலின் முதற் பதிப்பு 1959-இல் வெளிவந்தது. திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 1968-இல் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பினை சர்மாவின் தமிழக நண்பர் சோமலெ நல்ல ஓட்டமான நடையில் தமிழாக்கம் செய்துள்ளார். சோமலெ பயன்படுத்தியுள்ள கலைச்சொற்கள் பல இன்று புழக்கத்தில் இல்லை.  இருந்தாலும் அவை வாசிப்பில் தடையேதும் ஏற்படுத்தவில்லை.

இந்த நூல் பதினெட்டு இயல்களை உடையது. இறுதியில் பத்தொன்பதாவதாகச் சுருக்கமான முடிவுரை உள்ளது. முதல் இயல் இந்திய அரசு பற்றிய ஆய்வு வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது.  இரண்டாவது இயல் சான்றுகளின் தன்மையைப் பகுப்பாய்வு செய்கிறது.  அடுத்த மூன்று இயல்களும் அரசு, குடும்பம், வர்ணம் ஆகியவற்றின் தோற்றம் பற்றி வைதிக, அவைதிக மரபில் புழங்கும் கருத்துகளைத் தொகுத்தாய்கின்றது. ஆறிலிருந்து ஒன்பது வரையுள்ள இயல்கள் தொல்குடி மரபிலிருந்து அரசு படிப்படியாகத் தோற்றம் பெறும் நிகழ் முறையை எடுத்துக் கூறுகின்றன. ரத்தின ஹவிம்சிஎன்ற முடிசூட்டுச் சடங்கு பற்றிய பகுப்பாய்வு மிக மிக முக்கியத்துவம் கொண்டது.  பன்னிரண்டாவது இயல் தர்ம சாஸ்திரங்கள் பற்றிய பகுப்பாய்வை

மேற்கொள்கிறது. பதின்மூன்றாவது இயல் அர்த்த சாஸ்திரம் பற்றிய மிக நுண்ணிய ஆய்வை மேற் கொள்வதன் வழி மௌரிய அரசு முறை பற்றியும், மௌரிய அரசின் கருத்துநிலை அடிப்படை பற்றியும் சிறப்பான தெளிவை ஏற்படுத்துகின்றது. அடுத்த மூன்று இயல்கள் முறையே சாதவாகனர், குசானர், குப்தர் ஆகியோரின் அரசு முறையை ஆய்கின்றது.  பதினேழாவது, பதினெட்டாவது இயல்கள் பண்டைய இந்திய வரலாற்றில் அரசின் வளர்ச்சியை ஆறு கட்டங்களாக வகுத்து விளக்குகின்றன.

பண்டைய இந்தியாவில் அரசு வளர்ச்சியின் முதல் கட்டம் ரிக் வேத காலம் ஆகும்.  இக்காலம் தொல்குடி முறையின் இறுதிக் கட்டம் ஆகும்.  தொல் இராணுவ மக்களாட்சிஎன்று ஆர்.எஸ்.சர்மா இதனை வரையறுக்கின்றார். இன்னும் அரசு தோன்றாத நிலையில், ஆனால் அரசு தோன்று வதற்கான சில கூறுகள் இக்காலகட்டத்தில் தோன்றி விட்டன.  இறுக்கமற்ற தந்தைவழிக் குடும்ப முறையில் பெண்களுக்கு இன்னும் சில உரிமைகள் இருந்தன. படிநிலையான வர்ண முறையும் தோற்றம் பெற வில்லை. ஒரு வீட்டில் தகப்பன் குருக்களாகவும், தாய் அவல் ஆட்டுபவளாகவும், மகன் மருத்து வனாகவும் இருந்தனர்என்று சர்மா குறிப்பிட்டு உள்ளார். அலுவல் முறைக்கான ஆட்களும் மிகக் குறைவாகவே இருந்தனர். குடி உறுப்பினர் அனை வரும் ஆயுதந் தாங்கினர்; போரிட்டனர். இதனால் குடியமைப்பு இராணுவமயமானது.

வருணம், நிலப்பரப்பு அடிப்படையில் அரசு தோற்றம் பெற்ற பின் வேத காலம் இரண்டாம் கட்டம் ஆகும். இக்காலத்தில் இறுக்கமான தந்தை வழி மரபுக் குடும்பங்கள் தோன்றிவிட்டன. பல தாரமணமுறை தோன்றி விட்டது. பெண் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. அரசனை வேள்வி செய்தோ, இறைவனை வேண்டியோ பெற்றனர் என்ற கருத்துகள் இக்காலத்தில் தோன்றின. அலுவல் முறைகளில் பார்ப்பனர்கள் முதன்மை இடத்தைப் பெற்றனர்; அடுத்த இடத்தில் சேனானிகள் இருந்தனர். 

முடியாட்சிகளும், சில்லோர் குடியாட்சிகளும் நிலவிய மௌரியர்களுக்கு முற்பட்ட காலம் மூன்றாம் கட்டம் ஆகும். இக்காலகட்டத்தில் நிலவிய அரசியல் கருத்து வளர்ச்சியின் முக்கியத் துவத்தைச் சிறப்பாக ஆர்.எஸ்.சர்மா எடுத்துக் காட்டியுள்ளார். அவைதிக நூல்கள் அரசின் தோற்றத்தை ஒப்பந்தக் கோட்பாட்டின் மூலம் விளக்கின. அரசும் மக்களும் தங்களுக்குரிய கடமைகள், உரிமைகள் ஆகியவற்றை மேற் கொள்ள இக்கருத்துநிலை வலியுறுத்தியது. இந்த ஒப்பந்தக் கொள்கையை மறுமலர்ச்சிக்கால ஒப்பந்தக் கொள்கையுடன் ஆர்.எஸ்.சர்மா ஒப்பிட்டுக் காட்டி யுள்ளார். நிலைப்படைகளின் வளர்ச்சியும், நிலையான வரி வசூல் முறையும், அலுவல் முறையின் உறுதியான வளர்ச்சியும் தொல்குடிப் பண்புகளைச் சவக்குழியில் தள்ளிவிட்டன.

மௌரியர் அரசு முறை முழுமையாக அதிகார வர்க்கத்தைச் சார்ந்து நடைபெற்றது. எண்ணற்ற அலுவலர்கள் அரசின் பல்லும் சில்லுமாக இருந்தனர். அரசே உற்பத்தியை ஒழுங்கமைத்தது; வாணிகம் செய்தது.  பெருநகரங்கள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தன.  பெருங்கோட்டைகளும், நிலைப் படையின் அளவு கடந்த வளர்ச்சியும் அரசின் கேள்விக்கிடமற்ற அதிகாரத்தைக் காட்டி நின்றன. அர்த்த சாத்திரம் அரசியல் கருத்துகள் வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் பெற்று விடுகின்றது. அரசின் ஏழு உறுப்புக் கொள்கையையும், அரசு ஒரு வன்முறைக் கருவி என்பதையும் கௌடில்யர் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டுகிறார்.  கௌடில் யரையும், மார்க்சையும் மிகவும் சுவையான முறையில் ஆர்.எஸ்.சர்மா ஒப்பீடு செய்துள்ளார்.  இருவருக்கிடையிலும் உள்ள வியக்கத்தக்க ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளார்.

தெய்வாம்சம் மிக்க மன்னன், அதிகாரப் பரவலாக்கம், நிலவுடைமை முறையின் தோற்றம் ஆகியவை அரசின் அடுத்த இரண்டு கட்ட வளர்ச்சி ஆகும்.  மனுஸ்மிருதி முதலான தரும சாத்திரங்கள் இக்கட்டங்களின் அரசியல் கருத்துகள் வளர்ச்சியைக் காட்டுகின்றன.  அரசு முக்கியமான மாற்றங்களைப் பெற்று விடுகின்றது. மத நிறுவனங்களைச் சார்ந்து நிற்பதும், குறுநில மன்னர்களைச் சார்ந்து நிற்பதும் பேரரசனுக்கு மிக முக்கியமானது ஆகிவிடுகின்றது.  கூறாக்க அரசுஎன்பது தனித்துவமிக்க அரசு அமைப்பு முறை என்று கூறப்படுவதை ஆர்.எஸ்.சர்மா வேறு பல கட்டுரைகளில் மறுத்துள்ளார்.  அது நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று வாதித்துள்ளார்.  இந்நூலில் அதற்கான அடிப் படைக் கருத்துகளைக் காண்கிறோம்.

அரசு, அலுவல் அமைப்புகள், அரசியல் கொள் கைகள் எவ்வாறு சமூக உற்பத்தி முறை, வாழ் வியக்கத்தின் அசைவியக்கங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன என்று அறிய விரும்பும் வாசகர்கள் இந்நூலை அவசியம் கற்றறிய வேண்டும்.  தமிழ்ச் சமூகத்தில் அரசு தோற்றம், வளர்ச்சி பற்றி ஆய்வு மேற்கொள்வோர் இந்நூலைப் பயிலாமல் எந்தவோர் ஆய்வையும் சிறப்புற மேற்கொள்ள இயலாது.

பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள், நிலையங்கள் -

சில தோற்றங்கள்

ஆசிரியர் : ஆர்.எஸ்.சர்மா

தமிழில் : சோமலெ

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.250.00

Pin It