‘திணைக்கோட்பாடும் தமிழ் இலக்கிய மரபும்’ என்ற தலைப்பில் க.ஜவகர், பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு அளித்த முனைவர் பட்ட ஆய்வேட்டை ‘திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்’ என்ற நூலாக ஆக்கியுள்ளார். நூலினுள் முன்னுரை, முடிவுரை இல்லையே தவிர, மற்றபடிக்கு நூல் முனைவர் பட்ட ஆய்வேடு போன்றே உள்ளது. இந்த நூல் ஐந்து இயல்களைக் கொண்டது.

jawahar_book_231முதல் இயல் ‘தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு - ஆக்கமும் விரிவும்’. மேலை இலக்கியக் கோட்பாடுகளுக்கு மாற்றாகத் திணைக் கோட் பாட்டை இலக்கியக் கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து க.ஜவகர் முதல் இயலைத் தொடங்குகிறார். தொல்காப்பியப் பொருளதிகாரம் முன்வைக்கும் திணைக்கோட்பாடு, பின்வந்த இலக்கண நூல்கள், உரையாசிரியர்கள் திணைக்கோட்பாட்டிற்கு அளித்த விளக்கம், அகம் - புறம் ஆகிய கருத்தாக்கத்தின் ஒருங்கிணைந்த தன்மை, உரிப்பொருளை முதன்மையாகக் கொள்ள வேண்டியதின் அவசியம், பொருளியல் முன்வைக்கும் விடயப்பொருளின் முக்கியத்தும், திணைக்கோட்டை விரிவாக்குதல் என்று பல்வேறு விடயங்களை முதல் இயலில் க.ஜவகர் விவாதிக்கின்றார். முதல் இயலில் திணைக்கோட்டை நவீன திறனாய்வுக் கோட்பாடாக ஆக்க ஜவகர் முயல்கிறார். ஜவகர் திணைக்கோட்பாட்டின் முதற்பொருளான நிலம், காலம் (இந்தக் காலம் என்பது திணைக்கோட் பாட்டினுள் தட்பவெப்பநிலை சார்ந்த பகுப்பான பெரும் பொழுது, சிறுபொழுது ஆகியவற்றைக் குறிக்கின்றது) ஆகியவற்றுடன் படைப்பாளியின் மனஅமைப்பையும், வரலாற்றுக் காலத்தையும் சேர்க்கிறார்; திணைக்கோட்பாட்டினுள் இயற்கைச் சூழலையும், அதிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் வாழ்வுப்பயன்பொருட்களையும் குறிக்கும் கருப் பொருள்களைச் சமூகச் சூழலாக உருமாற்றுகிறார். வர்க்கச் சமூகத்தின் தோற்றக் காலத்தில் நிலவும், அசமத்துவ சமூக வளர்ச்சியின் வடிவங்களாக விளங்கும் உரிப்பொருள் என்னும் பாடுபொருள் வகைப்படுத்தலை விலக்கி, இன்றைக்கு வரை வளர்ச்சி யடைந்துள்ள அனைத்துப் பாடுபொருள்களையும் உரிப்பொருளாகக் கொள்கிறார். திணைக்கோட்டை ஜவகர் மாற்று விளக்கம் செய்துள்ளார். இங்கு மாற்று விளக்கம் என்று சொல்லுவதற்குக் காரணம் நமது மரபு விளக்கத்தையும், நவீன இலக்கிய ஆய்வில் அளிக்கப்பட்டிருக்கும் பகுப்பாய்வு விளக்கத்தையும் மறுக்காமல், மாற்றாக ஒரு விளக்கத்தை ஜவகர் முன்வைப்பதால் ஆகும். திணைக்கோட்பாட்டின் பயன்பாட்டு எல்லையையும் தொல்தமிழ் இலக்கியப் பரப்பெல்லைக்கு வெளியே ஜவகர் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்.

“விரிவு செய்யப்பட்ட திணைக்கோட்பாட்டு அடிப்படையில் இலக்கியத்தைப் பார்த்தல் என்பது முதல், கரு, உரிப்பொருள்கள் எங்கெல்லாம் வருகின்றன என்று கூறுபோட்டுப் பார்ப்பதன்று. அவ்வாறு பார்த்தால் ஒட்டுமொத்த இலக்கியத்தையும் அதன் உயிர்த்தன்மையும் காண இயலாது. படைப்பின் உரிப்பொருள்(கள்) எவ்வாறு நிலம், வரலாற்றுக் காலச் சூழல், சமூகப் பரப்பு, மனித வாழ்புலம், அவற்றின் அனுபவம், படைப்பாக்கக் கூறுகள் முதலிய எல்லாம் சேர்ந்து உருவாக்கம் பெறு கின்றது (ன) என்பதுதான் விரிவு செய்யப்பட்ட திணைக்கோட்பாட்டின் நோக்கு நிலை” என்று தான் மாற்று விளக்கம் செய்த கோட்பாட்டைப் பற்றிச் சுருக்கமாக ஜவகர் கூறியுள்ளார். இக் கூற்றின் மூலமே ஜவகர் கூறும் ‘விரிவு செய்யப் பட்ட திணைக் கோட்பாடு’, தமிழ் மரபில் கூறப் பட்ட திணைக்கோட்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும். அடுத்த நான்கு இயல்களில் தான் மாற்று விளக்கம் செய்த திணைக்கோட்பாட்டைக் கையாண்டு வேறுபட்ட காலத்தைச் சேர்ந்த நான்கு இலக்கியங் களைத் திறனாய்வு செய்கிறார்.

சிலப்பதிகாரம், திருவாசகம், கலிங்கத்துப் பரணி, ஜெயமோகனின் ‘காடு’ - நாவல் ஆகிய வற்றை விரிவு செய்யப்பட்ட திணைக்கோட்பாட்டு அடிப்படையில் ஜவகர் திறனாய்வு செய்துள்ளார். மனித வாழ்வை முழுமையாக நோக்கி, அறத்தை முதன்மைப்படுத்தி நோக்கும் இளங்கோவின் மன அமைப்பால் சிலப்பதிகாரம் உருவாகிறது. அக் காப்பியம் மூவேந்தர் நிலப்பரப்பில் இசை, கூத்து, நாட்டியம், ஊழ் பற்றிய நம்பிக்கைகள், சிறுதெய்வங்கள், பல்வேறு சமயங்கள், நிலவும் வளர்ச்சி பெற்ற வணிகச் சமூகச் சூழலில் நடக்கிறது. பாண்டியனை எதிர்த்து வழக்காடி வென்று, மதுரையை எரித்து, சேரநாட்டில் தெய்வநிலை அடைந்த கண்ணகி, “தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில் / நல்விருந் தாயினான் நானவன் நன்மகள்” என்ற பெரும் தரிசனத்தை இளங்கோ சிலப்பதிகாரக் காப்பியத்தின் மூலம் வெளிப்படுத்துவதாக ஜவகர் திறனாய்ந்து கூறுகிறார்.

“சிவபக்தியை, பக்தியனுபவத்தை மொழிதல் என்னும் திருவாசக உரிப்பொருள் இரண்டாம் வரகுணபாண்டியன் வரலாற்றுக்காலப் பின்புலத்தில்; தமிழக நில அமைப்பில், பௌத்தம், மாயாவாதம், உலகாயதம், சமணம் போன்ற பல்வேறு சமயப் பின்புலக் கருப்பொருட் சூழலில்; புனைவுமொழி, புராணக் கதைகள், மெய்ப்பாடு போன்ற பல்வேறு உத்திமுறைகளைக் கொண்டும்; சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் ஈறாக ஐம்பத்தோர் உள்ளடக்கப் பகுதிகளைக் கொண்டு பல்வேறு மொழிதல் முறை களுடன் இணைந்து படைப்பாக்க மன அமைப் புடன் இணைத்து ஆக்கப் பெற்றுள்ளது” என்று திருவாசகத்தை விரிவு செய்யப்பட்ட திணைக் கோட்பாட்டு நோக்கில் திறனாய்ந்து ஜவகர் கூறுகிறார். இதைப் போன்ற முடிவுகளுக்கே செயங்கொண் டாரின் கலிங்கத்துப்பரணி பற்றியும், ஜெயமோகனின் ‘காடு’ நாவல் பற்றியும் வருகிறார்.

க.ஜவகர் தமிழ் மரபிலிருக்கும் திணைக்கோட் பாட்டை சமகால பிரயோகத் திறனாய்வுக் கோட் பாடாக மாற்ற முயல்கின்றார். இம்முயற்சி மேலை சிந்தனைகளை உயர்வாக மதிக்கும் காலனிய மனோபாவத்திலிருந்து விடுபடுவதற்காக மேற் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் திணைக்கோட்பாட்டை மாற்று விளக்கம் செய்யும் போது அதே மேலை சிந்தனைத் தாக்கங்களுக்குட் பட்டு ‘விரிவு செய்யப்பட்ட திணைக்கோட்பாடாக’ முன்வைக்கிறார். இந்த வகையில் அவர் முரண்களில் சிக்கிக் கொள்கிறார். இதே போன்று மேலை இலக்கிய மரபிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கியக் கோட் பாடுகள் தமிழ் இலக்கியங்களில் பிரயோகிப்பது பொருந்தாதது என்று கூறும் ஜவகர் விரிவு செய்யப் பட்ட திணைக்கோட்பாட்டை உலகளாவிய இலக்கியக் கோட்பாடாக எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இப்போதைய நிலையில் திணைக்கோட்பாடு குறித்துக் குறிப்பிடத் தக்க ஆய்வுகளை நிகழ்த்தியவர்கள் கா.சிவத்தம்பியும், பெ.மாதையனும். ராஜ்கௌதமன் தன்னுடைய தொல்தமிழ் இலக்கியம் பற்றிய இருநூல்களில் திணைக்கோட்பாட்டின் சமூக உருவாக்கப் பின்புலம் பற்றி அற்புதமாக எழுதியுள்ளார். இம்மூவருடைய ஆய்வுகளை ஜவகர் சிறிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக இந்நூலின் நடையும், எடுத்துக்கூறும் தருக்க முறையும் நூற்பொருளைப் புரிந்துகொள்வதில் சிக்கல்களை விளைவிக்கின்றன.

திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்

ஆசிரியர் : க.ஜவகர்

வெளியீடு : காவ்யா

விலை : ரூ.250/-

Pin It