புராதன மாயவித்தையிலிருந்து தேர்ந்த திறத்துடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மதம் மந்திரம், சடங்கு ஆகியவற்றால் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த மந்திரம், சடங்கு ஆகியவையும் மதத்தால் வளர்க்கப்பட்டு வருவதை அறிவோம். மதம் என்னும் ‘கூறு கெட்ட’ கூறு கடவுள், மறுபிறவி என்கிற அருவத்துக்கு உருவம் கொடுத்து, அதன் மூலம் அடித்தள மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி, அவர்களின் பண்பாட்டையும், பொருளாதாரத் தையும் கையகப்படுத்தி ஆதிக்கச் சமூக மக்களுக்கு ஆண்டாண்டு காலமாகத் தாலாட்டுப் பாடி வருகின்றது.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட மார்க்சிய அறிஞர் பெருமக்களின் தடத்தைப் பின்பற்றி, தமிழகத்தில் அடித்தள மக்களின் பண்பாட்டை ஆய்ந்து, அது ஒற்றை மதம் என்னும் பெயரால் மத ஆதிக்கத்துக்கு ஆளாவதை எதிர்த்துக் களம் கண்ட வர்களில் முன்னோடியானவர் அறிஞர் நா.வானமாமலை. நாட்டார் வழிபாட்டு மரபை, பண்பாட்டைப் பேணும் அவரது முயற்சியில் ஆ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அவரது மாணவர்கள் விடாது தொழிற் பட்டு வருகின்றனர். அத்தொழிற்பாடுகளில் ஒன்றாக, ‘பொத்தன் தெய்யம்’ என்னும் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. ஆ.சிவசுப்பிரமணியனின் ஆற்றுப் படுத்தலின்கீழ், நா.இராமச்சந்திரன் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள சங்கர் சென் குப்தா ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை நா.வானமாமலை தமிழில் மொழிபெயர்த்து, ‘ஆராய்ச்சி’ இதழில் வெளியிட்டதாகும். அதற்கு நா.வானமா மலை எழுதிய ஒரே பத்தியளவுள்ள சிறப்புமிகு அறிமுகத்துடன் ‘கணேசர் குடும்பம்’ என்னும் இக் கட்டுரை தொடங்குகிறது. கணேசரின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலையைப் பற்றிய விவரங் களைக் கொண்டது இக்கட்டுரை. பழங்காலத்தைச் சேர்ந்த யானை முகச் சிற்பங்களும், யானைமுக மூடிகளும் இருந்தனவென்று அகழ்வாராய்ச்சிகள் சான்று பகர்வதால் பண்டைய நாகரிகங்கள் தழைத் திருந்த ஆசியாவிலும் மெஸபடோமியாவிலும் மனித விலங்கு வணக்கம் பரவியிருந்ததை அனு மானிப்பது எளிது. இந்தக் கருத்தோட்டத்துடன் பார்த்து, வங்காளத்தில் கணேசர் துர்க்கையின் குடும்ப உறுப்பினராக நம்பப்படுகிறார் என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாளர் சங்கர் சென்குப்தா.

பாதி விலங்கு பாதி மனிதனாகக் காணப்படும் கணேசர் அறிவு, கல்வி, வினைத் திட்பம் போன்ற பண்புகளின் ஆதிதேவதையாகவும், சிவகணங்களின் தளபதியாகவும் அதே வேளையில் இடையூறுகளை நீக்குபவராகவும், ஈன தேவதைகளின் தலைவராகவும் பார்வதி சிவனது மகனாகவும் கருதப்படுகிறார். வங்காளத்தில் துர்க்கைக் குடும்பத்தில் துர்க்கை, அவளுடைய கணவர் மகாதேவர், அவர்களுடைய குமாரர்கள் கார்த்திகேயர், கணேசர், அவர்களுடைய குமாரிகள் லட்சுமி, சரஸ்வதி, கணேசரின் மனைவி கலாபொவ் ஆகியோர் இடம்பெறுவர். அம்

மாநிலத்தில் எல்லாத் தேவர்களிலும் தேவியர்களிலும் முதன்முதலாக வணங்கப்படுபவர் கணேசர்தான். கணேசரின் மனைவி கலாபொவ் வனதுர்க்கை என்றும் பழங்குடி மக்களால் வழங்கப்பட்ட தெய்வ மென்றும் கருதப்படுவதாகக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். இவ்வாறு ‘கலாபொவ்’வும், கணபதியும் வெவ்வேறு இடங்களில் தோற்றம் பெற்றிருந்த நிலையில் மெள்ள மெள்ள பரிணாம வளர்ச்சி பெற்று பிராமணியப்படுகின்றனர். பழங்குடி மக்கள் தெய்வமாக இருந்த கணபதி குப்தர் காலத்தில் தான் இந்துக் கடவுளானார் என்று அவதானிப் பதாகக் கூறுகிறார் சென்குப்தா. அதற்கு முந்திய காலத்தில் பயிர்த் தொழில் தெய்வமாக nக்ஷத்திர பாலர் என்ற பெயரோடு பழங்குடி விவசாயிகளில் வணங்கப்பட்டார் என்கிறார். அந்த nக்ஷத்திர பாலன் என்ற பெயரைக் கொண்டு தமிழ்நாட்டில் nக்ஷத்திர பால புரங்கள் பல உண்டு என்பதும் கவனிக்கத் தக்கது. இவரைப் பல விதங்களில் சிவனோடு தொடர்புப்படுத்தினார்கள். சில இடங்களில் கணேசருக்கு சம்பு தனயன் (சிவகுமாரன்) என்ற பெயரும் உண்டு. வேறு சில இடங்களில் சிவனின் அவதாரம் என்றுகூடப் போற்றப்படுகிறார்.

சிவனுக்கும் கணேசனுக்கும் இடையே உறவு ஏற்படுத்தும் கூறுகளையெல்லாம் ஆய்ந்து, சிவனும் கணேசனும் வெவ்வேறு சமுதாயங்களின் தேவர்கள் என்று, முடிவு செய்கிறார் சென்குப்தா.

இடையில் சிவன் பார்வையில் பட்டு, கணேசரின் தலை எரிந்ததாகவும், அதன் பிறகு, பார்வதி முதலில் பார்த்த ஐராவதத்தின் தலையை வெட்டிக் கொணர்ந்து தன் மகன் தோளில் பொருத்தினாள் என்றும் ஒரு கதையைச் சுட்டிக்காட்டி, அந்தக் கதை, பயிர்த் தொழில் தெய்வத்தைத் தங்கள் தெய்வ வரிசையில் சேர்க்க பிராமணர்கள் புனைந்த கட்டுக்கதை என்று சுட்டிக்காட்டுகிறார் கட்டுரையாளர். மக்கள் மனங்களில் இடம்பிடிக்க ஆளும் வர்க்கத்தினர் கணேசரை வெற்றியின் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர் என்பதற்கு, இக்கட்டுரையில் ஏராள மான சான்றுகள் காட்டப்படுகின்றன.

பிரதேச நாட்டுப் பண்பாட்டில் அறிவாளி வர்க்கத்தின் புதிய கதைகள் நுழைந்து அசல் நாட்டுப் பண்பாட்டை மாற்றுவதாகச் சுட்டிக் காட்டும் சங்கர் சென்குப்தா “பிராமணீயப் பண் பாட்டை ஏற்றுக்கொள்ளாத இனக்குழுப் பண் பாடுகளும் நாட்டுப் பண்பாடுகளும் பல நூற்றாண்டு களாகப் பிராமணீயத் தத்துவத்தால் பாதிக்கப் படாமல் தங்கள் பண்பாட்டுப் போக்கில் பிராமணீயப் பண்பாட்டைத் தன்வயமாக்கிக் கொள்ளுகின்றன” என்று கட்டுரையை முடிக்கிறார்.

அடுத்து, கே.கே.என்.குரூப் எழுதிய ‘பொத்தன் தெய்யம்’ என்னும் கட்டுரை நா.வா.வின் தமிழாக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தெய்யம் என்பது ஒரு தெய்வ ஆட்டம். கேரளத்தில் பொத்தன் என்ற தெய்வத்துக்காக ஆடப்படும் ஆட்டமே இந்தப் ‘பொத்தன் தெய்யம்’. பாடலோடு சேர்த்து ஆடப்படும் இந்த ஆட்டத்தின் கதைப் பொருள் சங்கராச்சாரியாருக்கும் புலைய சாதிப் பிரதிநிதியான பொத்தன் என்பவனுக்கும் இடையே நடைபெற்ற சூடான விவாதமே.

இத்தெய்யத்தை மலையன் என்ற தாழ்ந்த குலத்தோர் ஆடுவது தொடர்பான வர்ணனைகள் இக்கட்டுரையில் விசாலமாக இடம்பெற்றுள்ளன.

அத்வைத வேதாந்தியான சங்கராச்சாரியார் காசியில் உள்ள சர்வஞான பீடத்திற்குச் செல்லும் வழியில், விசுவானந்தக் கடவுள் அவரைச் சோதிக்க நினைத்தார். சிவனும், பார்வதியும் சண்டாளத் தம்பதியினராக உருவெடுத்து, சங்கரர் எதிரே வருகின்றனர். சமூக வழக்கப்படி சங்கரர் அவர் களை வழிவிட்டு விலகி நிற்கச் சொல்கிறார். அப்போதுதான் அந்தச் சண்டாளன் பிராமணரான சங்கரரின் கட்டளையை மீறி எதிர்க் கேள்வியைத் தொடுக்கிறான். சங்கரர் பதிலளிக்க இயலாமல் திணறுகிறார். இந்திய மெய்யியல் சாரத்தைச் சங்கரருக்கு எடுத்துரைத்து, தீண்டாமையை மேல் வகுப்பினரான பிராமணர்கள் புகுத்தியதைக் கண்டித்தான். மூக்குடைந்த சங்கரர் தனது தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டார்.

கூர்மர எழுத்தச்சன் என்பவர் இத்தோற்றத்தை எழுதினார் என்று கருதப்படுகிறது. தீண்டத் தகாதவர்களின் துன்பங்களை இப்பாமரர் பாடல் விளக்குவது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.

இந்நூலில் அடுத்து இடம்பெற்றுள்ள ‘கடன் கோட்டு பக்கம்: வடமலபாரின் நாட்டு நடனம்’ என்னும் கட்டுரையும் கே.கே.என்.குரூப் எழுதியதே. இது கொளத்தநாடு என்னும் வடமலபாரின் நிலப் பகுதியில் ஆடப்படும் ‘தெய்யாட்டம்’ (தேவராட்டம்) என்னும் ஆட்டத்தைப் பற்றியது. நாயர் குலத்தைச் சேர்ந்த ஒரு கற்புடைப் பெண்ணின் நினைவைப் போற்றும் வகையில் எழுந்த ஆடல். இந்தத் தெய்யத்தை வண்ணார்கள் ஆடுகிறார்கள். ஆட்டக் காரன் ஒவ்வொரு கையிலும் ஆறு வளைகளும், ஒரு சூடகமும் அணிந்து, இடுப்பில் ‘வட்டோடா’ என்ற ஒட்டியாணம் போன்றதோர் அணிகலனை அணிந்து ஆடுவது வழக்கம். பிள்ளைப் பேற்றை விரும்புகிறவர்கள் இந்த ஆட்டத்தை நடத்துவது வழக்கம்.

சோகரசம் நிரம்பிய இக்கதையின் நாயகி மக்கம். அவளுக்குப் பன்னிரண்டு சகோதரர்கள். ஒரே தங்கையான அவளை சகோதரர்கள் மிகவும் நேசித்ததைப் பொறுக்கமாட்டாமல், அவர்களுடைய மனைவிமார்கள் நாத்தனார் மக்கத்தின் நடத் தையைப் பற்றி அவதூறு கிளப்ப, அதைத் தாங்கிக் கொள்ள இயலாத அண்ணன்மார்கள் வெகுண் டெழுந்து தங்களுடைய ஒரே தங்கையை வெட்டிக் கொன்று, இறுதியில் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிகின்றனர்.

டாக்டர் சி.அச்சுதமேனனின் ‘மக்கம் கதை பெண்வழி உரிமை கூட்டுக் குடும்பத்தின் தெளிவான சித்திரத்தை அளிக்கிறது’ என்னும் மேற்கோளோடு நிறைவுறுகிறது இக்கட்டுரை.

‘கேரளத்தின் நாட்டார் பாடலில் கண்ணகி மரபு’ என்னும் தலைப்பிலான அடுத்த கட்டுரையும் கே.கே.என்.குரூப் எழுதியதே. இதனை ஆ.சிவசுப்பிர மணியன் தமிழாக்கியிருக்கிறார்.

“நாட்டுப்புற மக்களின் சமயப் போக்கை மிக நாகரிகமடைந்த மக்களின் சமயப் போக்குடன் ஒருங்கிணைக்க அவர் ஒரு முயற்சி செய்கிறார்” என்று இளங்கோவடிகளின் செல்நெறியைச் சுட்டிக் காட்டியே கட்டுரையைத் துவங்குகிறார் குரூப். “கண்ணகி கோவலனின் திருமணம்கூட ஆரியச் சடங்குகளுக்கு ஏற்ப அக்னி சாட்சியாக நடத்தப் பட்டது” என்ற கூற்றுடன் கண்ணகி எப்படி கேரளத்தின் இந்து சமயப் பரிணாமத்தின் வரலாற்றில் உயர்த்தப்பட்டாள் என்பதைத் தக்க பின்புலத்துடன் விளக்குகிறார்.

மலையாள மொழியில் தாருகா வதம் களப் பாட்டு, பத்ரோல்பதி கிளிப்பாட்டு, பானதோரம் போன்ற பல நாட்டார் பாடல்கள் உள்ளன. இப் பாடல்களில் தாருகாசுரன் சிவனின் மகளான காளி தெய்வத்தால் எப்படிக் கொல்லப்பட்டான் என்று விவரிக்கப்படுகின்றது. இதை ஆய்வு செய்து, பிராமண மதம் வருவதற்கு முன்பாகவே தாருகனின் கதை கேரளத்தில் பிரபலமாகியிருந்தது என்றும் பிராமண மதத்தின் கேரள வருகைக்குப் பிறகு ஆரியச் சூழ்நிலைக்கு ஏற்ப தாருகனைப் பற்றிய ஒரு புதிய கதை புனையப்பட்டது என்றும் உரைக்கிறார் குரூப். நாட்டார் மரபில் படிப்படியாக கண்ணகி தாருகா அசுரனை அழித்த காளி அல்லது பத்ரகாளி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டாள் என்றும் சிங்களத்தின் கண்ணகி அம்மன் என்ற பிரபலமான தமிழ்ப் பெயரால் இன்னமும் வழங்கப்படுகிறாள் என்றும் கூறுகிறார் அவர்.

கேரளத்தில் சிலப்பதிகாரத்தின் செல்வாக்கின் அடிப்படையிலேயே பத்திரகாளி, ஸ்ரீகுரும்பா சம்பந்தப்பட்ட நாட்டார் பாடல்கள் எழுதப்பட்டன என்பதைச் சுவையான குறிப்புகளுடன் விளக்கிச் செல்லும் குரூப், “கேரள கிராம மக்கள் தங்களை நோய்களிலிருந்தும், பிற அழிவுகளிலிருந்தும் காப்பாற்றும் கண்ணகியை முழுக்க முழுக்க திராவிடப் பெண் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் கேரளாவை ஆரியமயமாக்கும் நிகழ்ச்சிப் போக்கின் போது ஆரியப் புராணங்களில் அவளுக்கு ஓர் இடம் கொடுக்கப்பட்டு, காளி மற்றும் தாய்த் தெய்வம் ஆகிய வழிபாட்டு மரபில் சேர்க்கப்பட்டாள்” என்று கட்டுரையின் நோக்கத்தை வாசகர்களுக்கு நினைவூட்டி அதனை நிறைவு செய்துள்ளார்.

இந்நூலைப் பதிப்பித்த நா.இராமச்சந்திரன் ‘வெட்டுப்பட்ட தெய்வம் : பிச்சைக்காலன்’ என்னும் கட்டுரையை யாத்துள்ளார். “நாட்டார் தெய்வம் நடைமுறையில் தனித்தவொரு செயல்பாடாக விளங்கு வதில்லை. பல்வேறு செயல்பாடுகளிலிருந்து உருப் பெறுகிற மனோபாவமாகவே வெளிப்படுகிறது” என்பதை சில விவரங்களின் துணையோடு பேசுகிறார். பிச்சைக்காலன் ஆண் குழந்தையாகப் பிறந்ததை அறிந்த பங்காளிகள் அவனுடைய தகப்பன் மாடப் பனைக் கொல்ல, பிச்சைக்காலன் தன் தாயார் மூலம் வேற்றூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே சேனைகுட்டி நாடார் என்ற நிலக்கிழாரிடம் ஆதரவு பெற்று, அவரிடத்தில் செல்வாக்கு பெறு கிறான். அவனது சகோதரி அரிதிப்பிள்ளை பருவப் பெண்ணானதும், அவளோடு நாடார் சேர்ந்து வாழ்கிறார். பின்னர், அங்குள்ள உழைப்பாளர் களைத் துன்புறுத்தி, இறுதியில் கொலையுறு கிறான் என்பதே கதை. அது நிகழ்ந்ததாகக் கருதப் படும் சமூகச் சூழலை எடுத்துரைத்து அக்கதையின் நாயகன் எவ்வாறு தெய்வமாகிறார் என்பதையும், பிச்சைக்காலன் கதைப் பாடல் நடக்கும் நிகழ்ச்சி விவரங்களையும் முன்வைக்கிறார்.

கட்டுரையின் இறுதியில் ‘இவ்வாறு கொலை செய்யப்பட்டு வணங்கப்படும் தெய்வங்களின் வழிபாட்டையும் வரலாற்றையும் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார் கட்டுரையாளர் நா. இராமச்சந்திரன்.

ஆ.சிவசுப்பிரமணியன் தம்முடைய இயல்புக் கேற்ப, முறையே களஆய்வு செய்து ‘மலுக்கம்மா பரம்பரை’ என்னும் கட்டுரையினை எழுதியுள்ளார். கோவில்பட்டிக்கு அருகிலுள்ள ‘நள்ளி’ என்னும் சிற்றூரிலுள்ள கருப்பசாமி கோவில் தன்னகத்தே கொண்டுள்ள சுவைமிகு சமூக வரலாற்றுச் செய்தி யினை ஆய்ந்து எழுதியுள்ளார். நள்ளி கிராமத்தில் வெற்றிலை வாணிபம் செய்யும் நாடார் ஒருவர் தொழில் காரணமாக ஆவுடையார்புரம் சென்றிருந்த போது நிறைமாதக் கர்ப்பிணியான இஸ்லாமியப் பெண்ணொருத்தியைச் சந்தித்திருக்கிறார். ஆபத்து ஒன்றில் சிக்கியிருந்த அப்பெண்ணை அவர் தன்னுடன் அழைத்து வர, ஓரிரு தினங்களில் ஆண் குழந்தை யொன்றைப் பெற்றெடுத்துவிட்டு, அந்தப் பெண் இறந்துபோகிறாள். அவளது கோரிக்கைக்கு இசைந்து, அவளது மகனை வளர்த்த அந்த நாடார் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்க, அந்தத் தம்பதியின் பரம்பரையினர் பல்கிப் பெருகி, கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ‘மலுக்க நாடார் வம்சம்’ என்ற பெயருடன் வசித்து வருவதாகச் செல்கிறது கதை. பின்னர் அந்த மலுக்கம்மாவை வழிபட்டு வரும் முறையைக் குறிப்பிட்டுள்ளார் சிவசுப்பிரமணியன். கருப்பசாமி கோவில் பீடத்திற்கு வெகு அருகில் மலுக்கம்மாவின் கருவறை உள்ளது என்றும் கருப்பசாமி கோவில் திருவிழாவின் போது மலுக்க நாடார் வம்சத்தினர் அங்கே கூடுகையில் ஆண் வாரிசுகளிடம் மட்டுமே கோவில்வரி வாங்கப்படுவதாகவும், பெண் வாரிசு களிடம் வரி வாங்கப்படாமல் வழிபாட்டில் அவர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் களத் தகவல் அளிக்கிறார்.

“பெண்ணுக்குச் சொத்துரிமை கிடையாது என்ற நிலை தமிழ்ச் சமூகத்தில் நிலவியதன் அடிப் படையில் கோவில் வழிபாட்டில் வரி செலுத்தும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்ற செய்தியைக் கட்டுரையில் வெளிப்படுத்துவதே முதன்மையான முத்தாய்ப்பு.

“நாட்டுப்புறச் சமயமும் ஆய்வுப் போக்கு களும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள ச.பிலவேந்திரன், “நாட்டுப்புறவியல், பொருள் கோடலியல் போன்ற புதிய அறிவுப்புலங்களின் ஒளியில் வைத்துப் படிக்கும்போது சங்ககாலத்

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றினையும், தத்துவார்த்த மரபினையும் மீட்டுருவாக்கம் செய்ய முடியும்” என்று வாதிட்டு அதற்கு ஆதரவாகப் பல குறிப்பு களைப் பதிவு செய்துள்ளார். நமது தொல்பழங்கால சமயக் கூறுகள், தெய்வங்கள், அவற்றின் தோற்றப் புராணங்கள், கோவில்கள், சடங்குகள் போன்ற வற்றைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளன என்று ஐரோப்பியர்கள் சிலரின் நூல்களை இங்கே எடுத்துக் காட்டி, அவர்கள் இந்த நாட்டைச் சாராதவர்கள் என்பதோடு, குறிப்பாக ஐரோப்பியர்களாக இருப் பதால், அவர்களது நூல் இனமையவாதப் போக் கினையும் ஒரு சார்புப் போக்கினையும் கொண்டன வாக உள்ளன என்று குறிப்பிடுகிறார். பின்னர் 1950களில், 60களில் தென்னிந்தியச் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைக் கூர்ந்தாய்ந்து கருத்துரைத்துள்ளார்.

இந்தியாவில் ‘சிறுமரபு, பெருமரபு என்ற இரு நிலைகளைக் கொண்ட சமூகங்களாகக் கொள்ளப் பட்ட செல்நெறி எவ்வாறு தோற்றம் பெற்றது என்று விளக்குகையில், ‘சிந்துச் சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட பாம்பு வழிபாடு, முற்றிலும் ஆரியக் கூறுகளின் கலப்பு இல்லாத ஒன்று என்றாலும் பிற்காலத்தில் அது ‘சக்தி’ வழிபாட்டுடன் இணைக்கப் பட்டது’ என்ற ஒரு மேற்கோளை எடுத்து வைத்து, மேலும் தென்னிந்தியாவில் கிராமியப் பெண் தெய்வங்கள் சிறுமரபினவாக இருந்து, பெரு மரபுத் தெய்வத்துடன் இணைக்கப்படும்போது, ஏற்படும் பண்பு மாற்றம் பற்றிய ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளார். கட்டுரையாளர் பிலவேந்திரன் எடுத்துவைத்துள்ள மேற்கோள்களும், குறிப்புகளும் இன்றியமையாதவை.

இந்நூலின் உள்ளடக்கத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் வெவ்வேறு ஆளுமைகள், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட ஆரியமயத்தின் அடிச்சுவட்டை வாசகர்களுக்கு அம்பலப்படுத்து கின்றனர்.

இந்நூல் பொது வாசகர்களுக்குச் சுவையும், பயனும் அளிக்கக்கூடியது என்பது ஒருபுறம் இருக்க, நாட்டார் வழிபாடு குறித்த ஆய்வுப் பணியின் விரிதலுக்கு நல்ல வித்தும்கூட.

பொத்தான் தெய்யம்

பதிப்பாசிரியர்: நா.இராமச்சந்திரன்

வெளியீடு: என்.சி.பி.எச்.

விலை ரூ.40.00

Pin It