ஆசியாவில் நீண்டதொரு காலகட்டத்திற்கு ஆட்சியாளர்களையும் அவர்கள் சார்ந்த நிறுவனத்தையும் எதிர்த்து ஆயுதம் தரித்த போர் நடத்திய பர்மியக் கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் 16 ஏப்ரல், 89 இரவோடு முடிவிற்கு வந்தது. அரசாங்கத்துடன் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ அல்லது போரில் ஏற்பட்ட தோல்வியின் விளைவினாலோ முடிவடையவில்லை. மாறாக, முரண்பாடுகளினால் ஏற்பட்ட உட்கட்சி மோதல் கலகமாய் வெடித்ததின் விளைவு, வரலாறு படைத்த கட்சியும் அவற்றின் படையணிகளும் அழிந்து போக கரணியாகியது. பிறர் எவரையும் விட முரண்பாடுகள் குறித்து மிகுதியாகக் கற்பித்தவரின் வழியில் நடப்பவர்கள் என்று மார்தட்டியவர்கள்தாம் தங்களுக்குள்ளேயே கலகம் விளைத்துக் கொண்டனர்.

பாகம் ஒன்று

ஏப்ரல் 16 இரவு கிளர்ச்சியாளர்கள் சீனப் பெருநிலத்திற்கு அருகிலிருக்கும் வடகிழக்கு சான் மாநிலத்தின் பங்சாங்கில் (panghsang) அமைந்திருந்த பர்மிய பொதுவுடமைக் கட்சியின் தலைமையகத்தைத் தாக்கினார்கள். கட்சியின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தோடு இன்னபிற கட்டடங்களையும் கைப்பற்றிக்கொண்ட கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்த முன்னோடிகளின் உருவப்படங்களையும் கட்சி இலக்கியங்களையும் பாழ்ப்படுத்தினர். கோட்பாட்டில் மிக உறுதியோடிருந்த மாவோயிச தலைமைத்துவ மூத்த பொறுப்பாளர்கள் நம் கா (Nam Hka) எல்லை ஆற்றைக் கடந்து புகலிடம் தேடி சீனா சென்று சேர்ந்தனர். “வரலாற்றில் முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டம் தம் சொந்த படையினரிடையே ஏற்பட்ட கலகத்தால் முடக்கப்பட்டது” என்று வரலாற்றாசிரியர்கள் இது குறித்து கருத்துரைத்தார்கள்.

நடப்பியலைக் கணக்கில் கொள்ளத் தவறியும் மாற்றமில்லாத போர்த்தந்திரங்களைக் கைவிட மறுத்தும் வந்த, அகவை முதிர்ந்த தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட நிறைவின்மையும் மெத்தனமான செயல்தந்திரங்களும் கண்டு கொதித் தெழுந்தவர்களின் செயலின் விளைவினால்தான் 16/17களில் பங்சாங்கில் குழப்பம் நிறைந்த சூழல் ஏற்பட்டது என்பது உண்மையே. என்றபோதும், கட்சியினுள் ஏற்பட்ட இனக்குழு மோதலின் வெளிப்பாடும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையோடு வேறு பல வணிகம் சார்ந்த காரணங்களும் அடங்கியிருந்தன என்பதனையும் அவதானிக்கத் தவறக்கூடாது என்ற கள ஆய்வாளர்களின் முன்மொழிதலையும் புறந்தள்ளுவதற்கில்லை.

பர்மிய சீன எல்லை மலைத்தொடர் பகுதிகளிலிருந்து வந்த சிறுபான்மையினர்தாம் செம்படையில் பெரும் பொறுப்பு வகித்திருக்கின்றார்கள். சித்தாந்தத்தை விடவும், அரசாங்க எதிர்ப்பும் இனவாதமும் இவர்களுள் ஆழ வேரூன்றியிருந்ததும் மேற்சொன்ன சூழலுக்கு வழிகோலியிருக்கின்றது. படைத் தளபதிகளாக பாரிய எண்ணிக்கையில் வா, கோக்காங் சீனர், கச்சின் மற்றும் சான் போன்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள்தான் கடமையாற்றியிருக்கின்றனர். மூப்படைந்த மார்க்கிய இலெனினிய நெறியினரான பெரும்பான்மை பர்மியர்கள் கட்சித் தலைவர்களாகவும் அரசியல்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளின் கண்காணிப்பாளர்களாகவும் நெறிஞர்களாகவுமே பொறுப்பு வகித்திருக்கின்றனர்.

பெருந்தொகை ஈட்டித் தந்த போதைப் பொருள் விற்பனை தடையும் கிளர்ச்சிக்கு அடிப்படையாய் இருந்துள்ளது என்று நாம் சந்தித்த களப்பணியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். குறுநில மன்னர்களாக கொட்டமடித்தவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டதும் முறுகல் நிலைக்கு வழி வகுத்தது எனலாம்.

அடிமட்டத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ள ஓப்பியம் (Opium) வணிகம், ஏரோயின் உற்பத்தி மற்றும் சட்டவிரோத செயல்கள் ஆகியவை மட்டில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் இறுதிக் காங்கிரசாக விளங்கிய, 1985இல் நடைபெற்ற பேராயத்தில் முடிவெடுக்கப்பட்டது. நிலைமையைக் கண்காணித்துத் தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்ப கட்சிப் பிரதிநிதிகள் களப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். “இத்தகு நடவடிக்கைகள் தீவிரம் பெறுமானால் கட்சி பிளவுபடும்” என்று பார் ஈஸ்ட்டர்ன் எக்கனாமிக் ரிவியூவில் கட்டுரையாளர் ஒருவர் சுட்டியிருந்தது போலவே பின் விளைவுகள் ஏற்பட்டன. தவிரவும் மா ஓ சே துங் மறைவிற்குப் பின்னான சீன அரசின் வெளியுறவுக் கொள்கையும் கூடுதல் காரணமெனலாம்.

திரிபுவாத தெங் சியோ பெங் தலைமையிலான தன்னைப் பேணும் தன்மையினால் தாய்லாந்து நாட்டு பொதுவுடைமைக் கட்சி உடனடியாக வீழ்ச்சிகண்டது. மலேசிய அரசுடனான சீனத்தின் உறவும், மூன்று பிரிவாகிப் போன மலாய் கம்யூனிஸ்ட் கட்சியின் பலவீனமும் கருவியேந்திய விடுதலைப் போராட்டத்தில் தளர்ச்சி ஏற்படக் காரணமாகி, அரசாங்கத்தோடு அமைதி உடன்பாட்டுக்கு வரச் செய்ய, பர்மிய பொதுவுடைமைக் கட்சியோ தோழர்களாலேயே தலைமைக்கு எதிராய் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியினால் அடிசாய்ந்தது. சீன நாட்டுடனான ஏற்றுமதி குறைவும், அந்நாடு, கட்சிக்கான தனது உதவியைக் குறைத்துக் கொண்டதும், தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வதிந்த குடிமக்களின் மீது திணிக்கப்பட்ட புதிய வகை வரிகளும் வடகிழக்கில் வாழ்ந்த மக்கள் கட்சித் தலைமையோடு மேலும் அந்நியப்பட்டுப் போக வழி வகுத்தது. இத்தகைய நிலையிலும் தாய் மற்றும் மலாய் கம்யூனிஸ்டு கட்சிகளைப் போலல்லாது, இராணுவ அரசாங்கத்தோடு உடன்படிக்கை கொள்ள மறுத்து, அதன் வெளிப்பாடாக 1989 வரை ஆயுதம் தரித்த போராட்டம் மேற்கொண்டிருந்த விடுதலைப்படை பர்மிய பொதுவுடைமைக் கட்சியினுடையதாகும்.

கட்சியின் தொடக்கம்....

பிப்ரவரி திங்கள் பதினைந்தாம் நாள் 1939இல் மண்டலேயில் நடைபெற்ற பெரும் மக்கள் போராட்டத்தின் மீது பொகசார் சுட்டதில் 17 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் எழுவர் பிக்குகளாவர். கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டெரிந்த பர்மிய உழைக்கும் மக்களின் தேசிய மற்றும் வர்க்கப் போராட்டத்தில் வெடித்து வெளிக்கிளம்பியதே பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கமாகும். ஆகஸ்ட் 15, 1939இல் தலைநகர் இரங்கூனின், பார் தெருவில் அமைந்திருந்த சிறியதொரு வீட்டில் இளம் பர்மியக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். அவர்களில் இரண்டாம் உலகப் பெரும் போருக்கு முன்னர் மிகுந்த போர்க்குணம் கொண்டதாகத் திகழ்ந்த தேசிய அரசியல் கட்சியான “நம் பர்மா இயக்கம்” எனும் பொருள் கொண்ட “டொபமா அசியோனே” அமைப்பின் மாணவர் தலைவர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தனர். பின்னர் பர்மிய நாட்டின் சுதந்திரத் தந்தை எனப்பட்டவரும் படுகொலைக்குள்ளானவருமான அவுங் சான், அதுபோது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு கம்யூனிச வரலாற்றில் முதல் மாநாடு என்று குறிப்பிடுவது மேற்சொன்ன கூட்டத்தைத்தான்.

ஓர் அரை நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்டு படிப்படியாய் வளர்த்தெடுக்கப்பட்டு கால வளர்ச்சியில் திறப்பாடுகள் பல புரிந்த கட்சியும், காலனிய மற்றும் வர்க்கப் பகைவர்களோடு செங்களமாடிய நாற்பத்தொரு அகவைக்கொண்ட படையும் தோழர்களால் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியினால் அழித்தொழிக்கப்பட்டது.

பாகம் இரண்டு
மாற்றம் ஒன்றைத் தவிர...

கடல் நாக கண்காணிப்பின் கீழ் யூணான் மாநிலத்தின் கம்மீங்கில் வாழ்ந்துவரும் அவுங் சாங் எனும் பர்மிய கம்யூனிச்டு கட்சியின் உறுப்பினர், இரங்கூனிலுள்ள முன்னாள் எதிரிகளுடனான சீனத்தின் இன்றைய அணுக்க உறவு பற்றிப் பேசும்போது, “மிகுந்த எச்சரிக்கையோடிருக்க வேண்டும். மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களின் நெருங்கிய நாடு சீனா என்று மேற்குலகினர் மட்டும் கருதவில்லை. சொந்த நாட்டிலும் அயற்புலங்களிலும் வதியும் பாரிய எண்ணிக்கையிலான பர்மியர்களும் அவ்வாறே கருதுகின்றனர்,” என்று சொன்னதாக நேர்காணல் செய்தவர் எழுதியிருந்தார். சிங்கப்பூரின் (Balestiar) பர்மிய மடாலயத்தில் இத்தகைய உறவுகள் உள்ளிட்ட வேறு பல குறித்தும் பல மணித்தியாலங்கள் உள்வாங்கி விவாதித்த அனுபவங்கள் எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் பெறமுடியாத அறிவுச் செல்வங்கள். முன்சொன்னவைக்கு மாற்றானவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

சீனாவின் வளர்ச்சியினைப் பெரிதும் பாராட்டுமிவர்கள் இன்றைய யங்கூடனான பெய்ஜிங்கின் உறவினை மன்னித்து ஏற்ற, சீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பர்மிய கம்யூனிச்டு கட்சியினரே அவர்கள். தென்சீனத்தின் கம்மீங்கில் வாழ்ந்துவரும் இவர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் குறைவானதே. இக்கால் இவர்கள் எவருக்கும் அச்சுறுத்தலாக இல்லை. வேறு பல சீன நகரங்களிலும் இவர்களை ஒத்தவர்கள் வாழ்வதாக ஐரோப்பிய இனக்குழுத் தோழர்கள் எமக்குத் தெரிவித்ததுண்டு. செயின்ட் மார்டின் சாலை மியன்மார் தூதரகத்தில் இச்செய்திகளை உறுதிபடுத்த மறுத்தார்கள் அப்போது பணியிகருந்தவர்கள். மலேசிய, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அனுமதி பெற்றும் அவை இன்றியும் வாழ்ந்து கொண்டிருக்கும் மியன்மார் நாட்டு மக்களிடத்திலும், அந்நாட்டுத் தூதரக அலுவலர்களிடமும் நெருங்கிப்பழகி அவர்களிடமிருந்து கற்றதும் அவர்களுக்குக் கற்பித்ததும் ஈனாயனம் என்று சொல்லப்படும் தேரவாதத்தில், எமக்கிருந்த பயிற்சியினால் கைகூடியதே.

தமிழ் மக்களிடத்தில் விரவிப் பரவியிருந்தது தேரவாதம்தான் என்பது வரலாற்றாசிரியர்கள் பலரும் ஒப்பும் கருத்து. அற்றைநாள் தமிழர் பகுதிகளில் (இன்றைய ஈழ நாடு உட்பட) தேரவாதமும் தென்பகுதியில் மகாயானமும் கடைபிடிக்கப்பட்டன என்பது “காக்கை வன்னியன் முதல் கதிர்காமன் வரை” என்ற ஈழமுரசு ஏட்டுத் தொடர் கட்டுரையில் வெளிப்பட்ட விடயம். ஆனால் நமக்கு புத்தனை விரிவாய்ப் பயிலும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த செயின்ட் மைக்ககன், லங்கா ராமாயண மடாலயம் (சிங்களர்களுடையது) தேரவாதத்தை ஏற்றுப் போற்றுவதே. இப்படி வரலாற்றில் நிகழ்ந்தேறிய மாறுதல்கள் பல. அதற்கான காரணிகளும் மிகப்பலவாக இருந்துள்ளன என்பதனை வரலாறு வடிவாய் உரைக்கின்றது. மாற்றம் ஒன்றைத் தவிர பிற அனைத்தும் மாறும் என்பதே மாறாத நெறி. ஆனால் இக்கூற்று தமிழரினத்திற்கும் ஏற்புடையதுதானா? இது குறித்தெல்லாம் கட்டுரை படைக்க, விவாதிக்க உலகலாவிய மாநாடுகள் எத்தனை இதுநாள் வரை கூட்டப்பட்டுள்ளன? குறைந்த அளவு கவிதாசரணிலாவது உலகத் தமிழரின் இன்றைய வாழும் முறை குறித்த விவாதங்கள் காய்தல் உவத்தல் இன்றி வெளிவரவேண்டும் என்பது தவறாகாது.

தன்னாட்சி உரிமையும் ஒப்பந்தமும்:

உட்கட்சிப் பூசகனால் உடைந்த முந்தைய பர்மிய பொதுவுடமைக் கட்சியின் படைப்பிரிவில் முதன்மைப் படைஞர்களாக விளங்கிய சிறுபான்மை வா இனக்குழுவினர் தங்கள் மட்டில் 89இல் இராணுவ அரசாங்கத்துடன் “தன்னாட்சி உரிமைக்கான பரிமாறல்” என்பதன் அடிப்படையில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இவ்வொப்பந்தம் போதை உற்பத்தியை அதிகரிக்கவும், இடையூறின்றி அவற்றை சந்தைப்படுத்தவும் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பினை வழங்கியுள்ளது என்கின்றனர் அவதானிப்பாளர்கள். வா இராணுவத்தின் காப்பாளராக விளங்கிய ஜெனரல் கின் நியுந்த் (Khin Nyunt) 2004இல் யங்கூன் அரசு பொறுப்பிகருந்து நீக்கம் செய்யப்பட்டது, அவற்றின் கருவூலத்தோடு தொடர்புடைய வைப்பகம் ஆகஸ்ட் 2005இல் அரசாங்கத்தால் மூடப்பட்டது, அதன் முக்கிய அலுவலர் ஒருவர் 496 கிலோ ஏரோயினோடு சென்ற ஆண்டு செப்தம்பரில் கைது செய்யப்பட்டது, வெட்டு மரம் மற்றும் கனிவளங்களை பெய்ஜிங்கிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைக்காதது என்று தொடரும் காரணங்களால் ஐக்கிய வா இராணுவத்தின் தலைமை உற்சாகம் இழந்து காணப்படுகின்றது.

இப்படிப்பட்டதான சூழகல்தான் வருவாயை மட்டுமே குறிவைக்கும் தலைமை, பன்னாட்டுப் போதைப் பொருள் வாணிபத்தில் கைதேர்ந்த வெய் சுச் காங் (Wei Hsuch Kang) என்பவனைத் தமது பன்னாட்டு வாணிபப் பிரிவின் இயக்குநராக அமர்த்தம் செய்துள்ளது. இந்த ஆசாமி போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தாய்லாந்து மற்றும் வடஅமெரிக்க அரசுகளால் தேடப்படுகின்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்குச் சார்பாய் இருக்கும் வரை நல்லவர், வல்லவர். முரண்படும் போது தீவிரவாதி. அனைத்துவகை ஏகாதிபத்தியங்களின் அளவுகோலும் இதுதான். இது குறித்தெல்லாம் பொதுவான புரிதல் அடித்தட்டு மக்களுக்கு ஏற்படும் போதுதான் இவ்வுலகு அமைதிப் பூங்காவாகத் திகழும்.

நிரந்தர எதிரியும் இல்லை

ஒரு காலகாட்டத்தில் ஆயுதங்களை ஏற்றி வந்து எல்லைப்புறத்தே வைத்து பகிர்ந்தளித்து கரந்தடி தோழர்களின் தேவைகளை நிறைவு செய்த மக்கள் விடுதலைப்படை (பி எல் ஏ) எனப்படும் சீன நாட்டு இராணுவ டிரக்குகள், இன்றைக்குப் படைக் கருவிகளைச் சுமந்து தலைநகர் யங்கூன் இராணுவ முகாமிற்குச் செல்கின்றன. இந்தக் காரணத்தால்தான் சீனத்தில் வதியும் சி பி பீ எனப்படும் பர்மிய கம்யூனிச்டு கட்சித் தலைவர்களை, தளபதிகளை மற்றும் அதன் முந்தைய படைஞர்களை யங்கூனின் படைத்தளபதிகள் அச்சுறுத்தலாகக் கருதவில்லை என்பது சொல்லாமலே விளங்ககூடிய ஒன்றாகின்றது. முதலுதவி, கடனுதவி இராணுவ தளவாடங்கள் என்று இன்றைய மியன்மாரின் முக்கிய வாணிபப் பங்காளியாகத் திகழ்கின்றது, தோழர் மாவோவின் உடலைக் காண்பித்து தொகை தண்டும் இன்றைய சீனா! அது இராணுவ ஆட்சியாளர்களின் தீவிர ஆதரவாளரும் கூட.

குடியிருக்க வீடு, செலவிற்கு அரசுத் தொகை என்று சீனத்தில் அமைதியாகக் காலம் கழித்து வரும் ப க க முன்னோடிகள் பலரும் எண்பதை தொட்டுக் கொண்டிருப்பவர்கள். அங்கு நிகழும் சமூகம் சார்ந்த பலவற்றைப் புறந்தள்ளி அவற்றின் பொருளாதார மற்றும் தொழிகயல் நவீனமயமாக்கங்களை மட்டுமே கணக்கில்கொண்டு “எதிர்கால உலகின் செல்வந்த தேசியம் சீனா. அதன் அசுர வளர்ச்சி ஏழ்மை, இல்லாமை எல்லாவற்றையும் அங்கிருந்து துடைத் தெறிந்துவிடும்” என்பதோடு இல்லாததும் பொல்லாததுமான வேறு பல அடைமொழிகளையும் தந்து வாயூறிப் போகும் பிற நாடுகளின் எளிய மனிதர்களைப் போலவே (சீனாவில் முதலீடு செய்யுங்கள், தொழில் துவங்குங்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சாரம் செய்த சிங்கப்பூர் அமைச்சர்களில் பலர் இன்றைக்கு மௌனிகளாகி விட்டனர்) ''அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள்” என்ற பெயரில் அகதிகளாக வாழும் தோழர்களின் நிலையும் உள்ளது என்று கட்டுரையாளர் சிலர் விவரிக்கின்றனர்.

“இரு நாடுகளுடனான உறவு பற்றிய பேச்சுகள் எழும்போது உரையாடல் நிறுத்தப்படுவதோடு உதடுகள் ஒட்டிக்கொள்கின்றன” என்று எழுதியிருந்தார் நண்பர் ஒருவர். ஒரு காலத்தில் தங்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நரை பழுத்த சி பி பீ கட்சித் தலைவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி யங்கூன் அரசாங்கம் வேண்டிக் கொண்டபோதும் அவ்வாறு செய்வதை இன்றுவரை தவிர்த்து வருகின்றது பெய்ஜிங் அரசாங்கம். தாய்லாந்து, ஹிந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நாடு கடந்து வாழும் பர்மியர்களைப் போலல்லாது, இராணுவ ஆட்சியினருடனான சுகமான உறவு குறித்து எதிர்ப்புக் குரலெழுப்பப் பெரிதும் தயங்குபவர்கள், இடர்ப்பாடான நிலையிலேயே வாழுகின்றனர் என்பது நன்கு புலனாகின்றது.

சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தங்களது நாட்டில் வாழ்ந்து வரும் சி பி பீ யினரைக் கண்காணித்து வருகின்றனர். எதிர்ப்புக் குரலை தாழ்த்தும்படியும் வெளிப்படையாகப் பேசுவதினின்று விலகியிருக்கும் படியும் தாங்கள் மிகவும் பரிவுடன் கேட்டுக்கொள்ளப்படுவதாக சில தோழர்கள் தெரிவித்தனர். 70களில் சீனத்துக்கான பர்மியத் தூதராக கடமையாற்றியவர் சான் ஹ்துன் (Chan HTun), இரங்கூனில் வாழுமிவர் இது குறித்து கருத்துரைத்த போது, “சீனா அதன் தேசிய நலனுக்கேற்பவே செயற்படும். அது ஏற்படுத்தும் விளைவு மியன்மாரில் இராணுவ சர்வதிகாரம் நீடிக்கவே உதவும்,” என்றார். உலக ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கோபி அன்னன், மிகவும் தணிந்த குரகல்தான் தனது வேண்டுதலை யங்கூன் ஆட்சியாளர்கள் முன் வைக்கின்றார். (சூ கீ வீட்டுக் காவல் நீட்டிப்புத் தொடர்பில்).

“பர்மா, தானாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். வலிமை கொண்ட நாடுகள் தலையிடாமல் இருப்பதே நல்லது.”

மியன்மாரை எல்லையாய்க் கொண்ட யூணானிகருந்து பேட்டியளித்திருந்த சிபிபீ சார்பில் பேசவல்ல தோழர் அவுங் தெட் (Aung Htet) தான் மேற்சொன்ன கருத்திற்கு உரியவராவார். பெய்ஜிங் மற்றும் யங்கூன் இடையிலான உறவை விமர்சிக்க ப க கட்சி தயங்குகின்றதா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, உறுதி இழந்து காணப்பட்டவர், பெய்ஜிங்கின் கொள்கை குறித்து கருத்துரைக்க மறுத்ததாக “ஈராவடி” ஏடு எழுதியிருந்தது. மூன்று திங்களுக்கொருமுறை தமது தங்கல் அனுமதியை உள்ளூர் காவல் நிலையத்தில் புதுப்பிக்க வேண்டிய கட்டுப்பாட்டிற்குட்பட்டவர் அவுங்தெட் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

இப்படியான துன்பத் துயரங்களிலும் விடாப்பிடியாக உழைக்கும் மக்களின் நலனுக்காக ஞாலமுழுதும் பலதரப்பட்ட பதாகைகளின் கீழ் களமாடிக் கொண்டிருக்கும் போராளிகளை உறிஞ்சப்படும் மக்கள் அடையாளம் கண்டு அவர்களுக்குத் துணை நிற்க மறுப்பது ஏன்? “மதம், இனம் என்ற பேரில் திசைதிருப்பல், கேடான கலை, கலாச்சார, கேளிக்கை வழி அறிவு மழுங்கல், அடக்குமுறை இவற்றோடு தந்நலத்தால் ஏற்படும் அச்சம்” என்று வரிசைப்படுத்தினர் தோழர்கள் வேலுவும் கங்கமும். அண்மையில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோதே முன்சொன்ன கருத்தை அறிவித்தனர். இடைவெளிக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு அது. சூலை 16இல் நடைபெற்று முடிந்த மக்கள் கட்சியின் 38ஆம் பொதுப்பேரவைக்கு வருகை தந்திருந்த தோழர்களோடு ஓட்டல் ஒன்றில் பரிமாறிக்கொள்ள செலவிட்ட கணம் அது.

அதிகாலை மூன்று மணி வரை நீடித்த சூடான புரிதலுக்கான விவாதமது. விமர்சனம், சுய விமர்சனம் என்று ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டும் மோதிக்கொண்டுமிருந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்கூறில் Moiex எனப்படும் பன்னாட்டு மின்னனு வெள்ளை மாளிகையில், நாங்கள் உழைப்பை விற்றக் கொண்டிருந்தோம். அதிகாரிகள் என்ற பெயரில் தரகு கைக்கூலிகள் எங்களை உறிஞ்சிக் கொண்டிருக்க, சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத போதிலும் நாங்கள் சிலராக அவற்றைப் பலவகையிலும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த பொறி பறந்த காலத்தில் தற்திறனாய்விற்கு இலக்கணமாய்த் திகழ்பவரும், பர்மியர்களை நண்பர்களாய்க் கொண்டிருந்த வருமான தோழர் ஆறுமுகம் மூர்த்தியால் அடையாளம் காணப்பட்டவர்கள் இவ்விருவரும். “சிறு பொறியும் பெரும் காட்டுத்தீயை உண்டாக்கும்” என்பதனை நடைமுறைப் பட்டறிவால் அறிந்த பொழுதுகளின் காலமது. மங்கலாய்த் தெரியும் நிகழ்வுகளுக்கு அகவை ஒரு பத்திற்கும் மேலிருக்கும்.

“இந்த அமைப்பே தவறில்லையா!” என்ற ஒற்றை வாக்கியம் கந்தையா தங்கவேலுவின் “தேடலுக்கு” வழிவகுத்தது என்றால், மரபாகிவிட்ட தரகு முதலாளிய வாழ்க்கையில் நிறைவடையாமல் மாற்று வழி தேடி இயங்கியலை நாடியவர் சாத்தப்பன் கங்கமாவார். மூர்த்தியும் சமூகமளித்திருந்தார். வழமைபோலவே அமைதியாகக் காணப்பட்டவரின் இதழசைப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். குறுந்தாடி வளர்த்திருந்த இலெனின் அன்பனின் தந்தை, சரவெடிகளைப்போல் வினாக்களை வீசினார். ஒட்டகம் ஓய்வெடுப்பது அடுத்த கட்ட பயணத்திற்கு முன்பான இளைப்பாறல்தான் என்பதனைக் கவனத்தில் கொள்ள மறந்துபோன நிமையங்கள் அவை. மூவருமாய் தாக்குதல்களைத் தொடுத்து விளக்கங்களைத் தற்காலிகமாகவாவது ஏற்று, பின்னரே ஏனையதை பரிமாற முடிந்தது. இத்தோழர்கள் மூவரும் பிறநாடுகள் சென்று வந்தவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கும் மனிதர்களை அவர்கள் காலம் தள்ளும் அமைப்பை, உலகை படித்துக் கொண்டிருப்பவர்கள்.

இதனால்தான், சூடேறி கடும் வெப்பத்தை வெளிப்படுத்தினாலும் அவற்றை ஆரோக்கிய விவாதமாக்கி, பின்னர் தணிந்துவிடும் தன்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர் என்ற கருத்து சரியானதாகவே இருக்கும்.

ஆட்சியிலிருப்பவர்களைத் திறனாய்ந்தும், எதிர்க்கட்சியான தேசிய சனநாயக முன்னணியுடன் இராணுவ ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியும் 1998ஆம் ஆண்டுத் தொடங்கி பொதுவுடமைக் கட்சியினர் தொடர் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர் என்பது கவனம் குவிக்கத்தக்கது. மியன்மார் மட்டில் சீனாவின் கொள்கை குறித்து விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எதுவும் பெரும்பாலும் காணப்படுவதில்லை என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. பர்மிய கம்யூனிச்டு கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் சீனத்தின் கொள்கை மற்றும் முடிவுகளோடு ஒத்துப்போகின்றனர் என்று சொல்வதற்கில்லை. இவ்வாறானவர்களில் தலையாயவர் முன்னால் உறுப்பினரான தோழர் அவுங் கியாவ் ஜாவ் (Aung Kyaw Zaw) ஆவார். சீன அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் தாம் உறுப்பியம் பெற்றிருந்த கட்சி மீது காரசார கருத்தினை வெளியிட்டார்! “ப க கட்சித் தலைமை எங்களை நடத்திய விதம் இராணுவ அரசின் போக்கை விடவும் மோசமானதாக இருந்தது.

அதனால் தான் நாம் இந்த புரட்சியில் தோல்வியடைந்தோம்!” என்று வருத்தப்பட்டவர் க கட்சியுடனான நல்லுறவின்மையைத் தெளிவுபடுத்தவே செய்தார். எல்லை நகரான ருய்லியில் தேநீர் கடை நடத்துமிவர் சனநாயக பர்மாவுக்கான தமது வினைப்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். வீட்டுக் காவலில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவியான சூய் கீ யின் அறுபதாம் பிறந்த நாளின்போது அவரை புகழத்தக்க வகையில் கையேடுகள் வெளியிட்டு பரப்பியவரை சீன உளவு மற்றும் காவல்துறை அலுவலர்கள் சந்தித்து யங்கூன் ஆட்சியாளர்கள் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டாம் என்று அன்புடன் எச்சரித்துச் சென்றார்களாம். பெய்ஜிங்கின் மியன்மார் மீதான கொள்கை குறித்து கருத்துரைத்த போது பின்வருமாறு விளாசியிருந்தார்: “தொழில்நுட்பர்களால் ஆளப்படும் சீனாவின் தேசிய அக்கறை வருவாய் ஈட்டுவதே. அவர்கள் பர்மாவிலிருந்து அனைத்தையும் உறிஞ்சி விடவே விரும்புகின்றார்கள்!”

வெட்டு மரங்கள், மரக்கட்டைகள், மாணிக்கக் கற்கள் மற்றும் வேறு பல விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிய சீன சரக்குந்துகள் பர்மாவிலிருந்து வெளியேறுவதை அடிக்கடி காண்பதாக கூறியவர் போர்க்கருவிகள் நிரப்பப்பட்ட சீனத்து இராணுவ லாரிகள் பர்மாவினுள் நுழைவதையும் அவதானித்துள்ளார். சுதந்திரத் தந்தையான அவுங் சான் 1947இல் படுகொலை செய்யப்பட்டதின் பின்னர் நடந்தேறிய குடிமக்கள் கலகங்களுக்கு பிரிட்டிசு காலனித்துவ பிரித்தாளும் கோட்பாடு காரணமாகியது என்பது உண்மைதான் என்றபோதும், இன்றளவும் உள்நாட்டுப் போர் தொடருவதற்குக் காரணம் முதன்மையான குழப்பக்காரர்களுக்கு சீனர்கள் படைக்கலன்களை விற்றுவருவதாகுமென்றார். பர்மிய- இன்றைய மியன்மாரின் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் முந்தைய கருத்தை வழிமொழியவே செய்கின்றனர்.

நீண்ட பயண நாயகனுக்காக வரலாற்றை மறுதலிப்பது சரியெனப் படவில்லை எம் கருத்தில்! இன்றைய சீனாவை சோசலிசத் தூதுவனாக கருதிக்கொண்டிருக்கும் ஹிந்திய நாட்டு கம்யூனிச்டுகள் இதுபோன்றவற்றையெல்லாம் கருத்தில் எடுக்க வேண்டும். முன்னர் சி பி பீ க்கு படைக்கல உதவி செய்த சீனா இன்று கொடுங்கோல் இராணுவ ஆட்சிக் குழுவிற்கு அவற்றைத் தொடருகின்றது. சர்வதிகார இராணுவ ஆட்சியாளர்கள் இன்றைக்கும் தொடர்ந்து ஆட்சிக் குதிரைகளில் நிலைப்பதற்கு சீன நாட்டு ஆதரவே காரணமாகின்றது. “எமது நாட்டை நாசப்படுத்துபவர்களை சீனர்கள் ஆதரித்து வருகின்றனர் என்ற அவுங் கியாவ் சாவ், இராணுவ ஆட்சியை ஆதரிப்பவர் எவராயிருந்தாலும் அவர்கள் எமது எதிரியே,” என்று பிரகடனப்படுத்தியதாக தொடர்ந்தது கட்டுரை.

ஆளும் கவுன்சிலின் பலமும் ஆசியானின் பலவீனமும்...

வியட்நாம், லாவோஸ், கம்போடியா, இந்தோனிசியா, மியன்மார், பிகப்பைன்சு, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனை ஆகிய பத்து தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்”இன் 39ஆவது அமைச்சரவை கூட்டம் கோலாலம்பூரில் முடிந்தது. 24.7.2006 அன்று, கடந்த மார்ச்சு மாதம் மலேசிய வெளியுறவு அமைச்சரும் யங்கூனுக்குப் பயணித்த ஆசியானின் அதிகாரத்துவ குழுவிற்குத் தலைமை தாங்கியவருமான சையது அமீது தனக்கு நேர்ந்தவற்றை வெளிப்படுத்தினார். சனநாயகத்திற்கான அடையாளமாகக் கூறப்படும் சூய் கீயை சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டவர், மேலும், “அவர்கள் நம்மைக் கீழ்த்தரமாக நடத்துவதாக எண்ணுகின்றேன். மலேசியாவும் ஆசியானும் இயன்றதைச் செய்தோம். உலக ஒன்றிய பேரவை பெரிய அளவில் செயலாற்றுவதை மியன்மார் விரும்புகிறது.

ஆசியான் கூட்டமைப்பிற்கு வெளியில் மியன்மார் இருப்பது விரும்பத்தகாதது. தவிரவும் உறுப்பினர்களை வலிந்து வெளியேறும்படி செய்வதும் ஆசியானின் மரபல்ல,” என்று பேசியிருந்தார். இவரின் கடுமைக்கு எது காரணம் என்பதனை யூகிப்பது ஒன்றும் சிரமம் அல்ல. குறுகிய கால இடைவெளியில் கடந்த மே மாதத்தில், ஆட்சி செலுத்தும் SPDC எனப்பெறும் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான கவுன்சிகன் அழைப்பின் பேரில் மியன்மாருக்கு வருகை மேற்க்கொண்ட ஐ நா பிரதிநிதி இபுராகிம் கம்பிரிக்குத் தரப்பட்ட கூடுதல் சலுகை, திருவாட்டி சூய் கீயுடனான சந்திப்பு, இராணுவ ஆட்சியாளர்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெனரல் தான் சூவே (Than Shwe)யுடனான பேச்சு வார்த்தை என்று நடைபெற்ற சம்பவங்களேயாகும்.

இவற்றுக்கு விடையிறுத்த ஆசியான் செயலகத்தின் இயக்குநர் யூ அவுங் பூவா, (மியன்மாரின் குடிமகன்) “நாங்கள் ஆசியானை வெறுப்புடன் நடத்துவதாகச் சொல்லப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை. நாங்கள் ஆசியான் குடும்பத்தில் ஓர் பகுதி. சையது அமீது அல்பார் தலைமையிலான குழுவினரின் வருகையின்போது புதிய தலைநகரான பியிண்மானா (Pyinmana) விற்கு மாறிக் கொண்டிருந்த நிலையில் குழுவினரைத் தக்கவாறு உபசரிக்க இயலவில்லையே தவிர ஐ நா வின் அணுக்க உறவினால் ஆசியானுக்கு வெறுப்பேற்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை. நாங்களும் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் முகாமையும் முதன்மையும் ஆசியானுக்கே. இது மட்டும்தான் உண்மை,” என்றவர் பிற அனைத்தும் பத்திரிக்கைகளால் சொல்லப் பட்டவைகளே என்றார்.

“நாம் கடும் அழுத்தம் தரக்கூடிய முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்று அனைவரும் கருதுகின்றார்கள். ஆனால் கெட்ட போக்குடைய உறுப்பினர்களை தண்டிக்கும் சட்டங்கள் எம்மிடம் இல்லையென்பதோடு ஆசியானிடம் அவற்றுக்கான நெம்புகோலும் இல்லை,” என்று சொன்னவர் ஆசியானின் செயலாளர் நாயகம் ஓங் கேங் யோங் ஆவார்.

அண்மைய காலத்திய ஹிந்திய அரசின் பார்வையும் மியன்மாரை ஊடுருவுகின்றது. விரைவில் நெருங்கிய பங்காளியாகலாம். அணி சேரா நாடுகளில் பலவும் மியன்மாருடன் வாணிப உறவுகளை நன்கு பேணி வரவே செய்கின்றன. இன்னும் சிறப்பாய் கொரிய மக்கள் குடியரசுடனான பழைய பகைமை மறைய பியோங்யாங் வுடனான உறவு நெருக்கமாகி வருகின்றது. பர்மா/மியன்மார் மற்றும் மக்கள் சோசகச கொரிய குடியரசு குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ள பெர்தில் கன்தெனர் என்பார், “இரண்டு பறையர் (Pariah) தேசியத்திற்கிடையிலான 90களில் முறிந்த, இன்றைய உறவு புதுப்பிப்பு” ஆகியன குறித்து அண்மையில் விரிவாய் எழுதியுள்ளார்.

முடிவாய், இவ்வாறான சூழகல் சூய் கீயின், விரைவான விடுதலைக்கான எதிர்பார்ப்பும் இராணுவ தடியர்களின் பிடி விரைவில் தளரும் என்ற கணிப்பும் நிதர்சனமற்றது என்றே கூற வேண்டியுள்ளது. தகுதி பெற்றதே நிலைக்கும் என்பது மாறி வலிமை கொண்டதே வாழும் என்பதனை விதியாய்க் கொண்டதே நாளைய உலகு என்பதனை அரங்கேற்றி வரும் ஒவ்வொரு நிகழ்வும் துல்லியமாய்த் தெளிவுறுத்துகின்றது என்பது மிகைக் கூற்றல்ல!

Pin It