வரலாறு பல கொடிய அரசர்களை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது. நாடு பிடிப்பதற்காகவும், மதத்தை பரப்புவதற்காகவும் இன்னும் பேருக்காகவும், புகழுக்காகவும் என பலவற்றுக்காக மனித உயிர்களை மலிவாக கொன்று குவித்த அந்த அரசர்கள் ஒருபோதும் தன்னைப் போலத்தான் தன்னால் கொல்லப்படுபவர்களுக்கும் வலிக்கும் என்று உணர்ந்திருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களை கடவுள்களாக கருதிக் கொண்டார்கள். மக்களையும் அதையே நம்பச் சொன்னார்கள். தங்களைக் கும்பிடுவதும், கடவுளைக் கும்பிடுவதும் ஒன்றே என மக்கள் கருதும்படி ஆள்வைத்து கதைகளைப் புனைந்தார்கள். தமிழில் கோயில் என்ற சொல் மன்னனின் அரண்மனையையும் சேர்த்தே குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் காலகட்டத்தில் தோன்றிய மதப் புனித நூல்கள், புராணங்கள் போன்றவற்றிலும் வந்த கடவுள்கள் கூட பக்தர்களின் பக்தியை நிரூபிப்பதற்கு மிகக் கொடிய சோதனைகளை வைத்தார்கள்.

பைபிளில் ஆபிரகாமின் பக்தியை சோதிக்க கடவுள் ஆபிரகாமின் மகன் ஈசாக்கை பலிகேட்டார். தமிழில் பெரிய புராணத்தில் சிறுத்தொண்டனிடம் சிவபெருமாள் பிள்ளைக்கறி கேட்டான். கேட்டதோடு அல்லாமல் அதை அவனே சமைத்துத் தர வேண்டும் எனவும் வற்புறுத்தினான். இது தான் கொடுங்கோலர்களின் காலத்தில் தோன்றிய பக்தியின் வெளிப்பாடாக இருந்தது. மன்னன் மீதான விசுவாசமும், கடவுள் மீதான பக்தியையும் நிரூபிப்பதற்கு நாட்டின் குடிமக்கள் தங்களது உயிரையும் கொடுப்பதற்குச் சித்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்கள். பின்னர் காலம் மாற மாற கடவுள்கள் உயிர்பலி கேட்பதை நிறுத்திவிட்டு நிலம், பணம், நகை போன்றவற்றை கேட்கும் நிலைக்கு மாறியது. மன்னர் ஆட்சி மறைந்து மக்களால் ஆளப்படுவோர் தேர்தெடுக்கும் முறை வந்துவிட்டது.

ஆனால் மக்களாட்சி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த ஆட்சிமுறையில் கூட மக்கள் தங்களது அரச விசுவாசத்தை நிரூபிப்பதற்குத் தங்களது உயிரை கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றார்கள். அப்படி கொடுக்காத போது அரசு அவர்களை சும்மா விட்டுவிடுவது கிடையாது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதுவே எடுத்துக் கொள்கின்றது. ஆனால் அரசு எதிர்பார்க்கும் இந்த விசுவாசமானது அனைவரிடம் இருந்தும் கிடையாது. அரசு என்ற கட்டமைப்பு ஏற்பட்ட நாள்முதல் அது சாமானிய மக்களிடம் இருந்து மட்டும்தான் விசுவாசத்தை எப்போதும் எதிர்பார்த்து வந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை அரச விசுவாசம் என்பது மதத்துடனும், தேசபக்தியுடன் சம்மந்தப்பட்டது. ஒருவன் பார்ப்பன இந்துமதத்தை அதன் அனைத்து சனாதன உட்கூறுகளோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவன் முஸ்லிமாக இருக்கின்றானா, கிருஸ்தவனாக இருக்கின்றானா அல்லது சீக்கியனாக இருக்கின்றானா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை அவன் யாராக இருந்தாலும் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவானாக இருக்க வேண்டும். இல்லை என்றால் கூன்பாண்டியன்களால் நீங்கள் கழுவேற்றப்படுவீர்கள். அல்லது புஷ்யமித்திர சுங்கன்களால் ரத்த வெள்ளத்தில் முழ்கடிக்கப்படுவீர்கள்.

அப்படிப் பார்க்கும் போது இந்தியாவில் பார்ப்பனியத்தையும் அதன் பதாகையையும் தூக்கியெறிவது முஸ்லிம்களும், கிருஸ்துவர்களும், பழங்குடியின மக்களுமே ஆவார்கள். இவர்கள் தான் இன்று இந்திய அரசின் பார்வையில் அரச விசுவாசமற்ற தேசவிரோதிகளாக பார்க்கப்படுகின்றார்கள். அதனால் இயல்பாகவே அவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரை சாதிகளை ஏற்றுக்கொண்டும், மதத்தை ஏற்றுக்கொண்டும் எப்படி கேலிக்கூத்தாக சட்டம் அனைவருக்கும் சமம் என்று பிரகடனப்படுத்தியதோ அதே போலத்தான் இந்தியாவில் ஜனநாயகம் என்பதும் மிகக் கேலிக்கூத்தான ஒன்றாகவே எப்போதுமே இருந்து வருகின்றது. இது அனைத்து மக்களுக்குமான ஜனநாயகமாக எப்போதுமே இருந்தது கிடையாது. காங்கிரசு ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சீக்கிய படுகொலையாகட்டும், இல்லை மோடியின் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையாகட்டும் - இது எல்லாம் இந்தியாவின் ஜனநாயகம் அனைத்து மக்களுக்கானது கிடையாது என்பதையே எப்போதும் நிரூபித்து வந்திருக்கின்றது.

குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருகின்றார்கள். ஒருபடி மேலே சென்று அவர்கள் அரசியல்வாதிகளாகவும், அனைத்து மக்களுக்கானதாக சொல்லப்படும் அரசாகவும் செயல்படுகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை யார் திட்டமிட்டு கொலை செய்கின்றார்களோ, யார் நிரந்தர அச்சத்தில் வைத்திருக்கின்றார்களோ அவர்களிடமே தங்களுக்கான நீதியைப் பெற நிர்பந்திக்கப்படுகின்றார்கள். இந்த நிலைதான் குற்றவாளிகளை மேலும் மேலும் குற்றம் செய்யத் தூண்டுகின்றது. தாங்கள் என்ன செய்தாலும் தங்களை யாருமே ஒன்றும் செய்துவிட முடியாது, சட்டம் என்பதெல்லாம் தங்களது சாதிய அதிகார பலத்தின் முன் மண்டியிட வேண்டிய அற்பவிசயங்கள் என்பதுதான் அவர்களது கருத்தாக உள்ளது. அனைத்து ஆதாரங்களும் உள்ளன, குஜராத் கலவரத்தில் மோடிதான் முதன்மையான குற்றவாளி என்று நிரூபிக்க... ஆனால் என்ன செய்வது அவரை இந்தியாவில் உங்களால் தண்டிக்க முடியாது. அவர் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர். தங்களுக்குப் பிடிக்காத மக்களைக் கொல்லும் அதிகாரம் படைத்த பண்டைய முடியாட்சியின் கொடுங்கோலர்களுக்கு நிகராக தன்னை கற்பனை செய்துகொள்ளும் ஆதிக்க மனப்போக்கர்.

அதிகாரத்தை காலம் காலமாக சுவைத்துப் பழகிய பார்ப்பனக் கூட்டமும் அதன் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சாதிய நிலவுடமை வர்க்கமும் அதைப் பிறருக்குப் பங்கிடுவதில் எல்லையில்லாத வெறுப்பை உமிழ்கின்றது. அதை தக்க வைத்துக்கொள்ள தனது கருத்தியல் நிறுவனங்களால் முயற்சிக்கின்றது. அதுமுடியாமல் போகும்போது தனது சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி அப்படிப்பட்ட பங்குகேட்கும் அவர்களது மொழியில் சொல்வதென்றால் தீய சக்திகளை தீர்த்துக் கட்டுகின்றது. அப்படித்தான் அது தற்போது எட்டு மனித உயிர்களை தங்களது ஆதிக்கத்தை நிறுவுவதற்காக காவு வாங்கியுள்ளது.

போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த எட்டு பேரை போலி மோதலில் போலிசார் கொன்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை ஆண்டுகொண்டு இருக்கும் பார்ப்பன பி.ஜே.பி அரசாங்கம் திட்டமிட்டு இந்தப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது. தீவிரவாதிகள் தலைமை சிறைப் பாதுகாவலரின் கழுத்தை இரும்பு தட்டுகள் மட்டும் டம்ளாரைக் கொண்டு அறுத்துவிட்டு 20 அடி உயர மதில் சுவரை துணியால் திரிக்கப்பட்ட கயிறைப் பயன்படுத்தி தாண்டி தப்பித்துச் சென்றாதகவும், அப்படி தப்பித்துச் சென்றவர்கள், போபால் புறநகர் பகுதியான இந்த்கேதி என்ற மலைகிராமத்தில் பதுங்கி இருந்த போது அவர்களை சுற்றி வளைத்து கைதுசெய்ய முயன்றபோது, தீவிரவாதிகள் போலிசாரை நோக்கிச் சுட்டதால் பதில் தாக்குதலில் அவர்கள் எட்டுபேரையும் கொன்றதாக முதலில் ஒரு பரபரப்பான திரைப்படத்தில் சண்டைகாட்சி அரங்கேற்றப்படுவதற்கு நிகரான ஒரு கதையை உருவாக்கி ஊடகங்களில் உலவவிட்டார்கள். ஆனால் ஒரு மட்டமான திரைக்கதை ஆசிரியன் திரைக்கதையில் பல ஓட்டைகளை கவனக்குறைவால் விட்டுவிடுவதால் மொத்த திரைப்படமுமே தோல்வியைத் தழுவுவதைப்போல மத்திய பிரதேச அரசும், போபால் மத்திய சிறை நிர்வாகமும் சேர்ந்து புனைந்த இந்தக்கட்டுக்கதை பொய் என்பது அப்பட்டமாக தற்போது தெரிய வந்துள்ளது.

இது ஒரு அப்பட்டமான போலிமோதல் என்பதற்கு ஆதாரமாக முதலில் சிமி தீவிரவாதிகளை மிக அருகில் வைத்து போலீசார் சுடும் வீடியோ காட்சிகள் முதலில் வெளியானது. தற்போது போலிமோதல் நடப்பதற்கு முன்னால் போலீசாருக்கும் ,கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கும் இடையேயான ஒலிநாடா வெளியாகி இருக்கின்றது. அதில் ‘கைதிகள் அனைவரையும் முடித்துவிடுங்கள், அவர்களை கைது செய்ய முயற்சிக்க வேண்டாம்’ என ஒரு குரல் உத்தரவிடுகின்றது. சிறிது நேரம் கழித்து ‘கைதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். துப்பாக்கி சூடு முடிந்துவிட்டது’ என சில குரல்கள் கேட்கின்றன. உலகமே இதை உறுதியாக போலிமோதல் கொலைதான் என இவ்வளவு ஆதராங்களையும் பார்த்துச் சொன்ன பின்னர்தான் பார்ப்பன பிஜேபியின் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. பாண்டே தலைமையில் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டுள்ளார். இது போன்ற விசாரணை கமிசன்கள் அமைப்பதே குற்றவாளிகளை சட்டப்படி தப்பவைப்பதற்கான தந்திரம் என்பது கடந்த காலங்களில் நாம் பார்த்து பார்த்து சலித்துப் போனதுதான்.

வரலாறு வக்கிரத்துடன் மீண்டும் திரும்புகின்றது. இப்பொழுது பார்ப்பன கடவுள்களுக்குப் பதில் அவர்களின் அரசியல் வாரிசுகள் மனித உயிர்களை பலி கேட்கின்றார்கள். தாங்கள் கடவுளாக கருதும் மோடி என்ற கொடுங்கோல் மன்னனின் காலடியில் அவர்கள் இஸ்லாமிய, தலித் மக்களின் ரத்தத்தால் தினம் தினம் அபிசேகம் செய்து அகம் மகிழ்கின்றார்கள். மன்னனை வேறு வழிகளில் திருப்திபடுத்த முடியாது என்பது கடந்த கால வரலாறு. பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் ரத்தத்தை அந்தக் கடவுள் ஏற்கெனவே சுவை பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்ததும் அதன் பக்தர்களிடம் தன்னை வழிபடவேண்டும் என்றால், தன்னை திருப்திபடுத்த வேண்டும் என்றால் அது முஸ்லிம் மற்றும் தலித் மக்களின் ரத்தத்தால் மட்டுமே முடியும் என காட்டியுள்ளது.

பார்ப்பனியத்தால் புனிதக் கடவுளாக அங்கீகரிக்கப்பட்ட மோடி தேர்தலில் வெற்றிபெற அவரது பரிவார பக்தர்கள் இந்தியா முழுவதும் நமோ டீக்கடைகளை திறந்தார்கள். அதில் மலிவான விலைக்கு டீயை கொடுத்து நமோவின் எளிமையை பறைசாற்றினார்கள். அதில் மயங்கிய மக்கள் நமோவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள். இப்பொழுது நமோவை இந்தியாவின் கடவுள் என்ற நிலையில் இருந்து உலகத்திற்கே கடவுள் என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் விரும்புகின்றார்கள். அதனால் வரும் காலங்களில் இந்தியா முழுவதும் நமோ மனிதக்கறிக் கடைகள் திறக்க அவர்கள் முடிவு செய்து இருக்கின்றார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்த நமோ கறிக்கடையில் முஸ்லிம் மற்றும் தலித் மக்களின் கறிகள் நமோ டீயைவிட மலிவாக கொடுக்க அவர்கள் திட்டமிட்டு இருக்கின்றார்கள். அதனால் நமோவின் இந்துபக்தர்கள் இனி மாட்டுக்கறி, ஆட்டுக்கறிகளுக்குப் பதில் முஸ்லிம், தலித் மக்களின் கறிகளை உண்டு களிக்கலாம்.

- செ.கார்கி

Pin It