பிரச்சினை வேறொன்றும் இல்லை. கடைசி வரை நான் தொப்பியை கழற்றவில்லை என்பது தான்.
 
traffic policeஎடுத்ததுமே "டேய்... வண்டிய விட்டு இறங்க மாட்டியோ.....!!?"
 
இறங்கி விட்டேன். 
 
"இந்த நேரத்துக்கு இங்க என்னடா பண்ற....?"
 
இந்த நேரம் என்பது இரவு 8.30 தான். வண்டி தொடர்பான அனைத்து சரியான சான்றிதழ்களையும் தந்து விட்டு நின்றேன். "டா" போட்டு பேச அவருக்கு யார் உரிமை தந்தது...?" யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. கோபம் கூட கொப்பளித்தது 
 
ஆனாலும்... முறைத்தார். 
 
ஆண் பெண் உறுப்புகளை தழுவி கட்டமைக்கப்பட்ட வார்த்தைககளை முன் பின்னாக என் மீதும் பொதுவான சூனியத்தின் உதிர்த்துக் கொண்டே இருந்தார் அந்த டிராபிக் காவலர். நான் பதிலும் பேசவில்லை. கடைசி வரை தொப்பியையும் கழற்றவில்லை. இது நடந்து 8 வருடங்கள் இருக்கும். இரண்டு நாட்கள் மன உளைச்சலில் திரிந்தேன். 
 
அவ்வளவே...என் புரட்சி. 
 
இது இப்போது எதற்கு நினைவுக்கு வந்ததென்றால் சமீபமாக காவலர்கள் தொடர்பான இரண்டு காணொளிகளைக் காண நேர்ந்ததும்......அதன் முன் பின் மன ஓட்டத்தின் விளைவாகவும் கூட இருக்கலாம்.
 
முதலில் ஒரு பெண் காவலர் சீருடையோடு ஒரு வண்டியில் சாய்ந்தமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார். காட்சி குளோஸ் அப்-பில் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் வெட்கப் படுகிறார். ஏதோ முணங்குகிறார். பின் போதையோடு மீண்டும் குடிக்கிறார். 
 
நான் குடிப்பது பற்றியோ...... அவர் பெண் காவலர் என்பது பற்றியோ இங்கு எதுவும் பேசவில்லை. ஒருவேளை டியூட்டி முடிந்து செல்லும் போது கூட அவர் குடித்திருக்கலாம். அதற்குள் செல்லவில்லை. ஆனால் ஒரு காவலரின் அந்தரங்கம்..... சக காவலரால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ஒருவேளை தெரியாமல் எடுத்து வெளியில் விட்டிருந்தால் கூட அதிகார வர்க்கத்தின் மீதான நியாயமான கோபமோ.... நாட்டைக் காக்க வேண்டியவர்கள் மோசமாய் நடந்து கொள்வதை ஊர் அறிந்து கொள்ளட்டும் என்ற போராட்டமோ இப்படி மறைமுகமாக வெளிவருகிறது என்று சொல்லலாம். ஆனால் நன்கு தெரிந்தவராகத்தான் இருக்க முடியும். அதுவும் அந்த வண்டிக்குள் இன்னொரு காவலராகத்தான் இருக்க முடியும். ஆக, சக காவலர் ஒருவரின் நம்பிக்கை இன்னொரு காவலராலே சிதைக்கப்படுகிறது என்றால் இவர்கள் எப்படி மக்களுக்கு காவலர்களாக இருப்பார்கள். கிட்டத்தட்ட துரோகத்தின் விளிம்பில் நின்று தான் இக்காட்சிகளை காண வேண்டி இருக்கிறது.
 
ஒருவேளை இந்த காணொளி வெளியே வந்தால் அந்த காவலருக்கு வேலை பறி போக வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. இது எதுவுமே தெரியாத பச்சைக் குழந்தை அல்ல அந்த படம் பிடித்த நபர். எது பற்றியும் துளியும் அக்கறையின்றி காணொளியை பகிர்ந்து விட்டது பகீரென இருக்கிறது  இயல்பாக இருக்க வேண்டிய தார்மீக நம்பிக்கை இங்கே காவு வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நவீனமும் டெக்னாலஜியும் மனிதத்தன்மையை அற்று போக செய்து விட்டதா என்ற சுய பரிசோதனையை அந்த காவலரிடம் மட்டுமல்ல நம்மிடமும் தான் செய்து பார்க்க வேண்டி இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் பகிர்ந்த பிறகு நான் பார்த்தேனோ..?
 
காவலர்கள் காவலர்களாக இருக்கிறார்களா காலன்களாக இருக்கிறார்களாக என்பதுதான் கேள்வி. கடந்த மாதத்தில் ஓடுகிற வண்டியை உதைத்து விட்டு ஒரு பெண் உயிரிழந்ததை எப்படி எடுத்துக் கொள்வது.....? மூன்றாம் உயிர் அத்தனை இலகுவா....ஆபீசர்களுக்கு...!  
 
ஹெல்மெட் என்பது அவரவர் நலன் சார்ந்த அவரவர் உரிமை. அதை கட்டாயப் படுத்தியதே தவறு. அப்படி என்றால்.... ஹெல்மெட் போடாமல் வரும் காவலர்களை என்ன செய்யலாம். ஸீட் பெல்ட் போடாத எத்தனை காவலர்களை காண்கிறோம். இதற்கெல்லாம் பொருள் என்ன...? பொருளுள்ளோருக்கு தான் இவ்வுலகா... ! அறியாமைக்குள் இருக்கும் மனிதனை மெல்ல மெல்ல மேலிழுத்து வர வேண்டுமே தவிர முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சிட்டு 100 ரூபாயிலும் 50 ரூபாயிலும் தீர்வு காண முடியாது. காவல்துறைக்கும் பொது ஜனத்துக்கும் பாதி சண்டைகள் ஈகோவினால் வருவது என்பது தான் உட்சபட்ச முட்டாள்தனம். காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறுவது கண்டவரையில் சாத்தியமில்லை என்று தான் நிரூபணம் ஆகி இருக்கிறது.
 
இன்னொரு காணொளியில் ஒரு பையனை கம்பத்தில் சேர்த்து ஒரு காவலர் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு அம்மா பக்கத்தில் பரிதவித்து கத்திக்கொண்டிருக்கிறார்.  கம்பத்தில் பிடிபட்ட அந்த பையனை கையை உடைக்க ஒரு காவலர் முயற்சிக்கிறார். அடிக்கிறார்...... திட்டுகிறார்....... அறைகிறார். அத்தனை ஆக்ரோஷம் அந்த காவலர் முகத்தில். உடல்மொழியில். அந்த காட்சி ஒரு தேச துரோக தீவிரவாதியை சுற்றி வளைத்து விட்ட மாதிரி ஒரு தோரணையைக் கொடுக்கிறது. பிறகு அப்படி இப்படி என்று ஹெல்மெட் விஷயத்துக்கும் ட்ரிப்பிள்ஸ் சென்றத்துக்கும்தான் இத்தனை களேபரம் என்று தெரிய வருகையில்...வெட்கத்தோடு யோசிக்க வேண்டி இருக்கிறது. எப்போதும் வேடிக்கை பார்க்கும் என் மனிதர் குலம் இம்முறையும் அதை செவ்வனே செய்ததில் பெருத்த மகிழ்வு. மாட்டுக்கு கூடிய கூட்டம் மனிதனுக்கு கூடாதது முரண் என்றாலும் நகைக்க இடமில்லை. 
 
சிலர் செய்யும் தவறான முன்னுதாரணங்கள் ஒட்டுமொத்த துறையையே தவறாக காட்டி விடும் பெரும் ஆபத்தை தவிர்க்க வேண்டியது அத்துறையின் பொறுப்பே. மக்களுக்கும் பொறுப்பிருக்கிறது. தவறு யார் செய்தாலும் தட்டி கேட்கும் ஒரு சமூகம் முன்னொரு காலத்தில் இருந்ததாக ஞாபகம். இப்போதெல்லாம் காத்திருந்து ட்விட்டரிலும்... முக நூலிலும்.. இதோ இம்மாதிரி கட்டுரையிலும் சாவகாசமாக கேட்டுக் கொள்ளலாம் என்பது மிகவும் ஆபத்தான போக்கு. 
 
அந்த பையன் என்ன தவறு செய்திருந்தாலும்.. இதுதான் ஜனநாயக நாட்டில் விசாரிக்கும் முறையா....? நடு ரோட்டில் கட்டி பிடித்து அடிப்பதுதான் காவல் துறையின் நீதியா?   இப்போதுதான் என்ன நடந்தாலும் உடனே வீடியோ எடுத்து யார் வேண்டுமானாலும் பகிர்ந்து விடுகிறார்களே... அந்த பயம் கூட அந்த காவலர்களிடம் இல்லாமல் போனது எதனால்...! இதற்கு பெயர் தான் அதிகாரமா....? ஒரு கொலைக் குற்றவாளியைக் கூட இப்படி நடுரோட்டில் போட்டு அடிப்பார்களா என்று தெரியவில்லை. சட்டத்தை காவல்துறை கையில் எடுத்துக் கொண்டால் பிறகெதற்கு நீதி துறை...? இது மனித உரிமை மீறல் இல்லையா...! 
 
நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னை தலைக்கு மேல் இருக்கிறது. இதில் ஹெல்மெட் பிரச்னை எல்லாம் சாபக்கேடு. நினைத்தாலே கசக்கும் காரியங்களை கடக்கும் வழி என்னவோ நானறியேன் தலைக்கவசமே.....
 
- கவிஜி 
 
Pin It