இந்தியப் பனிமலைச் சாரலில் 'நமஸ்தே’ என்ற சொல் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கிறது, மலாய்த் தீவுக்குறைக்கும் இந்தோசீனத்திற்கும் இடைப்பட்ட ''சவ்பாயா’ பள்ளத் தாக்கிலும் மெக்கோங் ஆற்றுப்படுகையிலும் ஓங்கி ஒலிப்பது 'சவாஸ்டி/சவாடி காப்’ மற்றும் 'கா’வாகும். பெண்கள் "சவாடி காப்’ எனவும் ஆண்கள் ‘கா’ என்றும் உரைப்பர். "சவாஸ்டி” என்பதனை வருகவெனவும் "சவாடிகா/ காப்” என்பதனை வணக்கம் எனவும் கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் பிறப்பு ஆசியக் கண்டத்திற்கு உவப்பானதாக இருக்கவில்லை. பொருளாதாரத் தட்டுப்பாட்டைப்பற்றி அறிந்தவர்கள், இங்கு நிலவிய குழப்பங்களுக்கான பின்னணியை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளவில்லை. களப்பணியாளர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க இயலாத அளவிற்குத் தன்னலம் உடலெங்கும் வீங்கியிருந்த காலகட்டமது. (இப்போது மட்டும் என்னவாம் என்று கேட்கத் தோன்றுகிறதா?) மாற்றங்களை நிகழ்த்திக்காட்டுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தபோதும், புரிதலற்ற நிலையில் மெல்ல மெல்லச் சரியாகிவிடும் என்பதனையே திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து கொண்டிருந்த சூழல். மதுபானம் மற்றும் ஆட்டம், பாட்டு, கேளிக்கை விடுதிகள், பேரங்காடிகள், உடம்புப்பிடி நிலையங்கள் பலவும் வெறிச்சோடி கிடந்ததோடு தொழிலகங்கள் சில பலவும் சீன நாடு நோக்கி படையெடுத்தும், வேறு சில நிறுவனங்கள் மூடப்பட்டும் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த- அடுத்த மாதம் எந்தக் கம்பெனி மூடப்படுமோ என்பன போன்ற பேச்சுகள் மிகப் பரவலாக புழக்கத்திலிருந்த- கலக்கம் மிகுந்த சூழல். எங்கும் வியாபித்திருந்த பொருளாதார வீழ்ச்சியினால் அனைத்து நிலையினரும் சோர்வடைந்திருந்தார்கள்.

சுவான் லெக் பாய் யை வென்ற தக்சின் சினவத்தானா

கிராமப்புறங்களில் வலுவான அடித்தளத்தை கொண்டிருப்பதற்காக இலவச சுகாதாரத் தேவைகள், உழவர்களின் மூன்றாண்டு கடனை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், கிராமத்து ஏழைகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி போன்ற உறுதி மொழிகளின் வழி, ஏராளமாக அள்ளிக் கொடுக்கிறவர் என்ற உருவகத்தை தோற்றுவித்து- 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்,- அப்போதைய தலைமையமைச்சர் சுவான் லெக் பாய் நாட்டுப் பொருளியலை ஏற்றபடி கையாளவில்லை என்பதோடு, ஏழைகள் கவனிக்கப் படவில்லை என்றும், தாம் தாய்லாந்தை ஓர் நிறுவனத்தை நடத்துவதைப்போல் இன்றியமையாதவைகளை நிறைவேற்றும் புதுப்பாணி அரசியல்வாதி என்று பரப்புரை செய்து அன்றைய தேர்தலில் வென்று ஆட்சிப்பீடமேறியவர்தான/

வாணிபத்தில் ஈடுபாடு கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்த தக்சீன் சினவத்தானா. அவர் வட அமெரிக்காவில் மேற்கல்வி கற்றவர். அதன்பின் நடந்தவை அனைத்திலும் ஏறுமுகம்தான். மலேசிய நாட்டு இந்தியர்கள் குறிப்பாய் தமிழர்கள்- சங்கிலி முத்து சாமிவேலுவின் தலைமைத்துவம் தங்களின் இன்னலைக் கலைந்து, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்த்ததைப் போலவே, தாய்லாந்து நாட்டு நடுத்தர வர்க்கம் தக்சினின் செயலாற்றலில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தது. நம்பிக்கை குவிப்பு சரிந்தபோது புத்தனை போற்றுபவர்க்கு எதிர்ப்பலைகள் தோன்றி இருக்கையைச் சாய்த்தது.

பராசக்தியை இரண்டாக கிழிப்பேன் என்று பேசியவரோ, எதிர்பார்ப்புகளை குழிதோண்டிப் புதைத்து தம்மை எவராலும் ஒன்றும் செய்து விட முடியாது என முழக்கமிட்டு, சிலபொழுது அக்கூற்றை மெய்யாக்கியும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாய் மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) பிரதிநிதியாகவும் ஒரே முழுஅமைச்சராகவும் நாற்காலிக்கு சூடேற்றிக் கொண்டிருக் கின்றார். தமிழரின் பிணியாம் சாதி இவருக்கு கருவியாகி வருகின்றது. போட்டிகள் ஏற்பட்ட போதெல்லாம் கட்சி உறுப்பினர்களைச் சாதியால் பிளவுப்படுத்தித் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்பவர் இவராவார்.

தமிழிளைஞர்கள் மத்தியில் ரௌடியிசம் எனப்படும் அரம்பத்தனம் பல்கிப் பெருகியதற்கு இவரின் கைத்தடிகளே முக்கிய காரணியாகும். இரத்தக் குளியல் இல்லாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு அடிதடி, குத்து வெட்டு என தமிழருக்கிடையில் அண்மைக் காலமாக ஒரு öபேசன் எரியூட்டி வருகிறது. ஒரு புறம் பொலீசு அடக்குமுறையில் சாவு; மறுபுறம் தங்களுக்கிடையிலான வன்முறையில் சாவு என்று மாய்கிறது மலேசியத் தமிழிளைஞர்களின் வாழ்க்கை. இந்தத் தமிழர்கள் பிதற்றுவதைப்போல் மலாய்க்காரர்கள் இவர்களை அழிக்க வேண்டிய தேவையில்லை. மாறாய், பிரமைமிகுந்த தமிழர்களே அவற்றை நிறைவேற்றிக் கொள்வார்கள். தமது மகனை இந்தியர்களுக்கு தலைவராக்கும் உச்சகதி முயற்சியில் அமைச்சர் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்களின் வாக்கு மூலங்களின் வழி அறிய முடிகின்றது.

இலங்கை ராணுவத்தின் அராஜகத்தை எதிர்த்து கோலாலம்பூரில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் முன் சிலதிங்கள்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இனமான தமிழர்களை நோக்கி,- "அங்கு கொல்லப்படுகின்ற தமிழர்களுக்கு இங்கு ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய தேவையில்லை’ என்பது போலவும், "அவர்களுக்கும் இங்கடை வாழ்பவர்களுக்கும் என்ன உறவு’ என்பதாகவும் தரக்குறைவான சொற்களில் வசைபாடியதாக தாளிகைகளில் வெளிவந்த செய்திகளால் மேலும் பிரபலமான மங்கையர்க்கரசி, சாமிவேலுவின் மகள் என்பதும் கவனப்படுத்த வேண்டியதாகின்றது. அச்சிங்கள தூதரகம் உள்ள பகுதியில்தான் சவடால் தலைவரின் மகளும் வசிப்பதாக இழிசொற்களால் காயப்படுத்தப் பட்ட நண்பர்கள் கதைத்தனர்.

2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் "பட்டாணி’ விடுதலை இயக்கம் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இது பற்றி சற்று விரிவாக பார்க்க வேண்டிய தேவை உள்ளது. போராட்டத்தின் தொடக்கமறிய வரலாற்று ஏடுகளைப் புரட்டிட வேண்டியவர்களாகின்றோம். லங்கசுகா (Lankasuka) மலாய்த் தீபகற்பத்தின் மிகப் பழைய மலாய் சாம்ராச்சியமாகும். பண்பாடு, கலைத்திறன் அமைப்பு என்று நாளும் முன்னேற்றம் கண்டு வரும் இன்றைய நவீன மலேசியாவிற்குத் தோற்றுவாயாக அமைந்த 'பட்டாணி’யே மலாய் நாகரிகத்தின் தொட்டில் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். மக்கள் பெருக்கமின்றியும் அரைகுறை ஆடைகளோடும் ஆற்று முகத்துவார வாழ்க்கை நிலையில் மலாக்கா இருந்தபோதே, சிறி விஜயா, ஐப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் அரசியல் உறவு கொண்டிருந்ததோடு அந்நாடுகளின் கிடங்காகவும் ஆரவாரமிகுந்திருந்ததாம் அன்றைய பட்டாணி. மலாய் மன்னர்களின் துவக்கம் மலாக்கா மன்னன் பரமேசுவரா காலத்திலிருந்துதான் தொடங்கியது எனப்படும் வரலாற்றுக்கு மேற்கண்ட செய்தி மறுப்பாகின்றது. பரமேசுவரன் இசுலாமிய மார்க்கத்தை ஏற்ற தமிழன் எனவும் சாவாகியன் என்றும் கூறப்படுகின்றது.

லங்க சுகத்தை மறந்த தமிழர்கள்:

தமிழ்-மலாய் அரசான லங்கசுகம் இன்றைய மலேசிய கிழக்குக்கரை மாநிலங்களான கிளந்தான், திரெங்காது மற்றும் வடமாநில செடாவின் வடபகுதி (கடாரம் வென்றவனின் எச்சமாகத் திகழும் பூஜாங் பள்ளத்தாக்கு இம்மாநிலத்தில் தான் உள்ளது.), இப்போது குழப்பங்கள் தலைவிரித்தாடும் தென்தாய்லாந்து மாநிலங்களான பட்டாணி, யாலா, நாராதிவாட், சொங்களா, சத்துன் ஆகிய பகுதிகளில் பரவியிருந்ததை வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்து கின்றன. பழம்பெருமை பேசும் தமிழர்கள் இராசேந்திர சோழன் வென்ற கடாரத்தோடு நின்று விடுவதே வழமை. அதற்கடுத்திருந்த லங்க சுகத்தை ஏறத்தாழ மறந்தே விட்டனர்.

லங்க சுகத்தை மையப்படுத்தியிருந்த பட்டானி இசுலாமிய மானதை, அதன் காலத்தை மிகச்சரியாக வரையறுத்துக் கூறுவது இயலக்கூடியது அல்ல என்றாலும், மத்திய தரைக்கடல் மார்க்கத்தை கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுக்கூறில் தழுவிய தொடக்க மலாய் இராச்சியமாகக் காண்கின்றனர் ஆய்வாளர்கள். சுல்தான் இஸ்மாயில் ஷா என்பாரின் அரசாட்சியில்தான் பட்டாணி என்ற பெயர் ஏற்பட்டதாம். புதியதொரு தலைநகரினை நிர்மாணிப்பதற் காக இடம் தேடி வெகு தூரம் தம் பரிவாரங்களோடு அலைந்த மன்னர் திடீரென தாம் விரும்பிய ஓரிடத்தில் நின்று ''பந்தாய் இனி’ என்று சத்தமிட்டதாகவும் பின்னர் அவ்விடத்திலேயே தலைநகர் கட்டியெழுப்பப்பட்டதாகவும் நாட்டுப்புறக் கதை ஒன்று வழக்கில் உள்ளது. (பந்தாய்-கரை; இனி-இந்த) பந்தாய் இனி என்பது காலப்போக்கில் பட்டாணி ஆகியதாம்.

பட்டாணியை மேற்குலகினர் நன்கு அறிந்திருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. போர்த்துகேய கடலோடியான கோடினோ டி எரிடியா (Godinho de Eredia) 1516இல் இங்கு தலையிறங்கியதை சிறப்பாக குறிக்கின்றனர். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய மலாக்காவின் வீழ்ச்சி இந்திய முசுலிம் வணிகர்களிடையே பட்டாணி பிரபல மடைய வழி கோலியதொடு, வட சுமத்திர அச்சே இராச்சியத்துடன், முன்சொன்ன சூழல் பலவகையிலும் போட்டியினை ஏற்படுத்தியதாம். சவாரடீவிபா என்ற சுமத்திராவின் வடமுனை இலமுரி தேசமே இன்றைய அச்சே ஆகும். கிறித்துவுக்கு முந்திய காலத்தில் கிரேக்கத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்த தமிழ்நிலத் தமிழர்கள் தென்கிழக்காசியா வோடு கொண்டிருந்த உறவுதனை ஆராயும்போது உடல் சிலிர்த்து உரோமங்கள் விறைத்து நிற்கின்றன. அனைத்தையும் இழந்து வெற்றுக் கோவணான்டிகளாக நிற்பவர்கள்தாம் இன்றைய இனமானமற்ற தமிழர்கள்!

அயோத்தியா அல்லது அயூத்தாயாவைத் தலைநகராகக் கொண்டிருந்த வடபகுதி சயாமிய அரசு; வடக்கிலிருந்த பர்மிய அரசின் படையெடுப்பினை எதிர்கொண்ட சமயத்தில், சூழ்நிலையை வாய்ப்பாகக் கருதிய பட்டாணியின் சுல்தான் செபர் ஷ 1563இல் தெற்கிலிருந்து அயூத்தாமாவை தாக்கினார். போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புதிரான முறையில் மரணமடைந் தாராம் அவ்வரசர். பட்டாணி இராச்சியத்தின் பொற்காலமாக குறிப்பிடப்படுவது கிபி 1584 தொடங்கி நேரிய முறையில் அரசாண்ட நான்கு அரசிகளின் காலமாகும். இவர்கள் முறையே பச்சை அரசி, நீல அரசி, கருஞ்சிவப்பு அரசி மற்றும் மஞ்சள் அரசி என வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றனர். இந்நால்வரின் ஆட்சிக் காலத்தில் நாடு பொருளாதாரம் மற்றும் இராணுவத்தில் வலிமை கொண்டிருந்ததாகவும் நான்கு பெரும் சயாமிய படையெடுப்புகளை ''கிழக்கு மலாய் இராச்சியமான பகாங் மற்றும் தென் மலாய் ஜோகூர்’ அரசின் துணையோடு புறமுதுகிட்டோடச் செய்ததாகவும் வரலாறு விவரிக்கின்றது.

17ஆம் நூற்றாண்டு கடைசி அரசியின் ஆட்சியில் ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டு படிப்படியாக ஆட்சி தேய்வடையத் தொடங்கியதாம். தக்சின் என்ற பெயர் கொண்ட சயாமிய மன்னன் விடுதலைப் போரில் பர்மிய படையெடுப் பாளர்களை வெருண்டோடச் செய்தாராம். முதலாம் இராமா என்றப் பட்டப் பெயர் கொண்ட முந்தைய மன்னரின் பிறங்கடை சக்ரி பரம்பரையை தோற்றுவித்த வராவார். இன்றைய இராமா சக்ரி வமிசாவளியைச் சேர்ந்தவரே. மறைந்திருந்து வாலியைக் கொன்ற இராமனின் வழிவந்தவர்களாக இவ்வரசப் பரம்பரையினர் தங்களைக் கருதுகின்றனர். வலிமையுடன் விளங்கிய சாயாமிய படைத்துறை பிறிதொரு பர்மியப் படைநகர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்த நிலைக்குள்ளானபோது ஆர்வமற்றிருந்த பட்டாணி படையணிகளைக் கோரினாராம்.

முதலாம் இராமாவின் இளைய தம்பியான இளவரசர் சுரசி, பட்டாணியை படையெடுப்பின் மூலம் கையகப்படுத்தினார். அப்போரில் சுல்தான் முகமது கொல்லப்பட்டதோடு தலைநகரமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 4,000 ஆண்கள் அடிமைப்படுத்தப்பட்டு பேங்காக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பட்டாணியரைக் குறைவுபடுத்தும் வண்ணம் அவர்களின் படைத்துறை அடையாளமான சிறீ பட்டாணி மற்றும் சிறீ நெகரா என்ற இரண்டு பீரங்கிகளைத் தங்களோடு கொண்டு சென்றனராம். இன்றும் தாய்லாந்து நாட்டின் தற்காப்பு அமைச்சகத்தில் இவ்விரு பீரங்கிகளையும் காணலாம்.

1791 மற்றும் 1808 ஆகிய ஆண்டுகளில் சயாமிய பிரபுக்களை எதிர்த்து வெற்றி பெறாத சில கிளர்ச்சிகள் மேற்க் கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து பெருகி வந்த கலகங்களைத் தவிர்ப்பதற்காக தன்னாளுமை கொண்ட பிரதேசங்கள் என்னும் பெயரில் பட்டாணி, நொங்சிக், சைபூர் அல்லது தெலுபான், யாலா அல்லது ஜாலா,யாரிங் அல்லது ஜம்பு, இராங்கே அல்லது லெகே மற்றும் ரெமன் என்று ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இவ்வேழு மாவட்டங்களும் சயாமியர்கள் விரட்டியடிக்கப்படும்வரை மன்னர் லிகோரால் ஆளப்பட்டுள்ளன. கூடவே கெடா மலாய்க்காரர்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர். இச்சுதந்திரமானது குறைந்த வாழ்நாளையே கொண்டிருந்தது.

சித்தார்த்த நெறியினரின் கோரமுகம்

1902இல் சயாம் நாடு பட்டாணியைத் தன்னோடு இணைத்துக் கொண்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1909இல், பிரித்தானியாவும் சயாமும் கைச்சாத்திட்டதின் பேரில் பட்டாணியின் மீதான சயாமின் ஆட்சியதிகாரம் அங்கீகரிக்கப்பட்டது. அண்மைக்காலத்தில், பறையனங்குலம் என்ற தமிழூர் சப்புமல்புரா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதைப்போல், தன்மூப்பான பலவும் அடுத்தடுத்து வந்த காலங்களில் தொடர்ந்துள்ளன. அக்கால், நடைபெற்ற பன்னூற்றுக்கணக்கான சம்பவங்கள் சித்தார்த்தனின் நெறியை ஏற்றவர்களின் கோர முகத்தை நன்கு வெளிப்படுத்துபவை ஆகும்.

அனாதையாக கைவிடப்பட்ட உலகின் கூரையான திபெத்தில், தினம் தினம் நிகழ்ந்தேறுவதைப் போல், அன்று பட்டாணியில் பாலியல் வலுத்தாக்கங்கள், இன மற்றும் பண்பாட்டுக் கலப்பும் அழிப்பும், இவற்றோடு புத்த விகாரைகள் மற்றும் மடாலயங்கள் பெருக்கம் என்று மிகப் பல நடந்தேறின. 1933இல் எல்லாப் பகுதிகளையும் இணைத்து பட்டாணி, யாலா, நாராதிவாட் என்று மூன்று மாநிலங்கள் அமைத்தனர். இரண்டாம் உலகப் பெரும் போரில், சப்பானியப் பேரரசின் படைகள் மலாயாவினுள் புக, தம் நாட்டில் தென்பகுதியை நுழை வாயிலாக்கியது தாய்லாந்து அரசு. அதுபோது மலாயா பிரித்தானியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது என்பது கவனங் குவிக்கத் தக்கதாகும். நிப்பொனிய இராணுவத்தினர் பட்டானி மற்றும் சிங்கோராவில் தரையிறங்கி, பின்னரே மலாயிவினுள் புகுந்ததும் தாக்குதல் தொடுத்ததும்.

அச்சமயத்தில் பட்டானியின் கடைசி மன்னரின் மகனும் நன்கு அறியப்பட்டிருந்தவருமான துங்கு மாமூட் மாயூடின், பிரிட்டனுடன் ஒத்துழைப்பது தமது தாயக விடுதலைக்குப் பயன் தரும் என்று முடிவெடுத்து அவர்களோடு ஒத்துழைத்து நிப்பொன் இராணுவத்தினர் மீது கரந்தடி தாக்குதலைத் தொடங்கியுள்ளார். தேசபக்தி கோட்பாடுகளைக் கொண்டிருந்ததோடு தங்களது பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை கைநெகிழ்க்க கட்டாயப்படுத்திய ''பிபுன்” ஆட்சியின் மீது வெறுப்படைந்திருந்த குடிமக்கள் விடுதலை போராட்டத்திற்கு ஒன்று பட்ட ஆதரவை வழங்கி நின்றுள்ளனர்.

1945இல், துங்கு ஜலால் தலைமையில் ஒன்றுசேர்ந்த மலாய்த் தலைவர்கள் தாய்லாந்து நாட்டின் பகுதியாக்கப்பட்டிருந்த நான்கு மாநிலங்களுக்கு பிரிட்டிசாரிடமிருந்து சுதந்திரம் கோரினர். உலகப் போர் முடிவடைந்ததின் பின் சில காலத்திற்கு மலாயூ பட்டானி ராயா (அகண்ட் பட்டாணி மலாய் நாடு)வின் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்துள்ளது. இருப்பினும் வெகுவிரைவிலேயே தாய் நாட்டு ஆளுமையை உறுதிப்படுத்தியதின் மூலம் பட்டானியர்க்குத் தந்திருந்த போர்க்கால உறுதிமொழியை முறித்தது பிரிட்டிசு ஏகாதிபத்தியம். பட்டானி விடுதலை நிழலுண்மையானது. இதனால் உடனடியாக மேலும் பல குழுக்கள் சுதந்திரத்திற் காகக் கிளர்ச்சிகளை முன்னெடுத்தனர். மலாய கம்யூனிச்டு கட்சியின் கெரில்லாப் போரை அடக்கி ஒடுக்குவதற்காக இவை யாவற்றையும் பின்தள்ளியது பிரிட்டன்.

துங்கு மாமூட் மாயூடிக் தலைமையிலான மாபெரும் பட்டானி மலாய் இயக்கம் தவிர மார்க்க அறிஞரான சுலோங் தொக்மினா என்பவரின் தலைமையில் பிறிதொரு அமைப்பும் இசுலாமிய குடியரசு ஒன்றிற்காக நிப்பொனியர்களை எதிர்த்துக் களம் கண்டது. இவ்வமைப்பினர் இன்றும் சிறிய அளவில் தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போராடி வருகின்றனர்.

ஐக்கிய பட்டானி விடுதலை அமைப்பு (பியூஎல்ஒ)

இயங்கும் போராளிக் குழுக்களில் ஆகப்பெரியதும் கூடுதலான நடவடிக்கை மேற்கொள்வதும் ''புளோ’ எனும் அமைப்பாகும். மார்ச் 22, 1968இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் இன்றைய போராளிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ முந்நூறு பேர் மட்டுமே எனப்படுகின்றது. பியோ கொடோனியோ என்பவரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பு 1992ஆம் ஆண்டில் இரண்டாக உடைந்தது. தாய் புளோவிற்கு டாக்டர் ஆ-ரோங் முளேங்கும், பிரிந்து சென்று அமைத்த இயக்கத்திற்கு அயிறெடி மின்டோ சாலீயும் தலைமை வகிக்கின்றனர். வாளோடு குத்துவாளும் இரண்டு பக்கம் கொடியும் சின்னமாய்க் கொண்ட மூத்த அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கு ''சட்டன் ஆர்மி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

கழுகை சின்னமாய் ஏற்ற இளைய இயக்கத்தினர் தங்களது படைப்பிரிவை ''அபு டாபன்” என்றழைக்கின்றனர். இவ்வியக்கத்திற்கு தலைமை தருபவர் சம-ஹய் தனம் என்பவராவார். 1998இல் பழைய மற்றும் புதிய இயக்கங்களின் முன்னோடிகள் சிறை செய்யப்பட்டதாலும் இயக்கங்களுக் கிடையில் நிகழ்ந்த மோதல்களினாலும் வெறுப்புற்ற போராளிகளில் சிலர் தாய்லாந்து நாட்டு இராணுவத்திடம் சரணடைந்தனர். முரண்பட்ட அமைப்புகளை ஒன்றுப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் முழுமையான வெற்றி என்பது எட்டப்படாமலேயே உள்ளது. இவைகளில் முகாமையான இரண்டு இயக்கங்கள் தங்களது கட்டளையகத்தை மலேசியாவில் கொண்டிருப்பதாகப் பரவலாகக் கூறப்படுகின்றது. புத்தனின் அகிம்சை போதனைகளை அடிநாதமாய்க் கொண்ட தாய்லாந்து நாட்டின் ராணுவம் தக்சினின் ஆளுமைக் காலத்தில் தென்பகுதி பள்ளிவாசல்களில் அத்துமீறி ஆடிய வெறியாட்டங்கள் மதம் பிடிக்காதவர்களைக் கூட முகம் சுளிக்க வைத்தது. குண்டுகளால் துளைக்கப்பட்டவர்களின் கிடத்தப்பட்ட உடல்களின் ஒளிப்படங்கள் நாளேடுகளில் வெளிவந்தபோது பலரும் நிலைகுலைந்தனர். புத்தன் சிங்கள ஆமியளிடத்தில் மட்டுமல்ல தாய்லாந்து ராணுவத்திடமும் தோற்றுப்போனான்.

தக்சின் பெற்ற பெருவெற்றியும் அதனால் ஏற்பட்ட தலைக்கணமும்:

இத்தகைய நிலையிலும் கூட தக்சினின் செல்வாக்கு நாட்டின் பிற பகுதிகளில் சரியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருந்தது 2005இல் நடந்த தேர்தல் முடிவுகள். பிரிச்சினைகள் பல தலைதூக்கியிருந்த சூழலிலும் பிப்ரவரி 2005இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐநூறு இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 377 இடங்களை வென்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது தக்சின் தலைமை தந்த தாய் ராக் தாய் கட்சி தலைமையிலான கூட்டணி. அத்தகைய பெரு வெற்றியும்கூட ஏறத்தாழ ஓராண்டிற்குள் நிகழ்ந்த வெளியேற்றத்தைத் தடுக்க வல்லதாக அமையவில்லை என்பது காலமும் சூழலும் தாட்சண்யமற்றவை என்பதற்குச் சான்றாகும்.

மக்களின் ஏகோபித்த ஆதரவில் அமைந்த அரசாங்கம் என்ற மிதப்பில் இருந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பின் செப்தம்பரில் சொன்டி லிம் தொங்கூன் என்பார் சிறப்பாளராகப் பங்கு கொண்ட செய்தி விளக்கப்படத்தை தேசிய தொலைக்காட்சி ஒளியேற்றுவதினின்று தவிர்த்தது. பொறுப்பற்ற முறையில் தக்சின் வெகுவாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளதால் அக்குறும்பட ஒலிப்பரப்பு ரத்துச் செய்யப்பட்டதாகக் காரணம் சொல்லப்பட்டது. இச் சம்பவம் நடந்து இரண்டு மாதமாகியிருந்த நிலையில், இலஞ்ச நிர்வாகம், அதிகார முறைகேடுகள், வரம்பற்ற தணிக்கை மற்றும் தென்பகுதி முசுலிம் கிளர்ச்சியைத் தொலைநோக் கற்றுப் பிழையாகக் கையாளுதல் போன்றவை ஒவ்வொரு வாரக் கிழமை இறுதியிலும் தலைநகரில் சொன்டி ஒழுங்கு செய்த கூட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களை ஈர்க்கத் துவங்கின. எதிர்ப்புணர்வுகள் பெரிய அளவில் தலைகாட்டத் துவங்கிய சமயத்தில்தான் தக்சினின் முழு முகத்தையும் வெளிக்காட்டிய, அவ்வாசாமியின் தலைமைத் துவத்தில் பாரிய மக்கள் நம்பிக்கையிழந்த நிலையினை ஏற்படுத்திய அந்தக் கறுப்பு நிகழ்வு அரங்கேறியது.

சின் கார்ப் (Shin Corp) எனும் பெயருடைய தக்சின் குடும்பத்தின் தொலைத் தொடர்பு சாம்ராச்சியத்தை, சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) அரசின் முதலீட்டு நிறுவனமான தெமாசிக் ஓல்டிங்சிற்கு விற்றதில் நிகழ்ந்த திருகுதாளங்கள் பெரும் அதிருப்தி எழக் கரணியமாகியுள்ளது. அவற்றின் மதிப்பு 1.9 மில்லியன் அமெரிக்க டாலராகும். இவ்விற்பனையின் வழி முறையாக அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டிய வரி தவிர்க்கப்பட்டது. வரிச்சலுகை என்பதின் பேரில் அரசு கரூவூலத்திற்குச் சேரவேண்டிய வருமானம் தவிர்க்கப் பட்டிருப்பதானது மனநிறைவின்மையை ஏற்படுத்தியுள்ளது.

2006ஆம் ஆண்டு பிப்பிரவரியில் சில பத்தாயிரம் குடிமக்கள் தலைநகர் பேங்காக்கில் கூடி, தக்சின் பதவி விலகக் கோரி ஆர்ப்பரித்து நின்றனர். கட்டுக்கடங்காமல் நிலவிய சூழலை கருத்தில் எடுத்த தக்சின், நாடாளுமன்ற அவையை கலைக்கக் கோரினார். பதவிக் காலம் முடிவடைய மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த விரும்பி அதற்கான முனைப்புகளில் ஈடுபாடு காட்டத் துவங்கினார். நடைபெறவிருக்கும் தேர்தலைத் தாங்கள் புறக்கணிக்கவிருப்பதாக முக்கிய மூன்று எதிர்க்கட்சிகள் அறிவித்தன. பிரதமரின் முடிவு வெளியிடப்பட்ட பின்பும் பதற்றம் தணிவதாக இல்லை. மாறாக, போராட்டம் உச்ச கதிக்குச் சென்றது. மார்ச்சுத் திங்களில் அரசு திணைக்கள தலைமையகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தக்சின் பதவி விலகும் வரை தாங்கள் வளாகத்தை விட்டு அகலப் போவதில்லை என்று அறிவிக்க, பிறிதொரு மக்கள் திரள் தலைநகரின் முகாமையான பேரங்காடிகளை முற்றுகை யிட்டு தலைமையமைச்சர் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் பட்சத்தில் நாட்டுப் பொருளாதாரம் பாரிய தாக்கத்திற் குள்ளாகும் என்ற செய்தியைத் தெளிவுப்படுத்தினர்.

எதிர்க்கட்சிகள் பங்கு பெற மறுத்த ஏப்பிரல் மாத தேர்தலில், சாவடிக்கு சென்ற வாக்காளர்கள் தக்சின் தலைமையிலான கூட்டணிக்கு தங்களது எதிர்ப்பினை வடிவாய்ப் பதிவு செய்தனர். ஆயினும் தாய் ராக் தாய் கட்சி ஐம்பத்தேழு விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாக அக்கட்சி வட்டாரம் கூறிக்கொண்டது. இருந்தபோதும் தொடர்ந்த அழுத்தங் களின் கரணியத்தால் ஒன்பதாம் ராமா பூமிபோல் அடூல்யாடேச் உடனான சந்திப்பிற்குப் பின் எதிர்ப் பியக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டி தாம் பதவி துறப்பதாக அறிவித்தார் பிரதமர். சில வார இடைவெளியில், சனநாயக நாட்டில், எதிர்க்கட்சிகள் பங்கெடுக்காத தேர்தல் கேலிக்குரியவை என்பதால் தாய் ராக் தாய் கட்சி தலைமையிலான கூட்டணியின் வெற்றி செல்லுபடியாகாது என்று கூறி வெற்றி முடிவை ரத்து செய்தது நீதி மன்றம்.

போக்கிரி பொலிஸ் தலைவனுக்கு எழுதப்பட்ட கடிதம். . .

''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிற அரசியலமைப்பை கடைபிடிக்கின்ற காரணத்தால் குடியாட்சி ஒழுங்கமைப்பு முறையின் திறவுகோலான தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வலிவற்றதாகி வருகின்றன” எனும் வாசகத்தை உள்ளடக்கிய கடிதமொன்றினை தாய்லாந்து நாட்டு செய்தியூடகங்கள் மீள் வெளியீடு செய்திருந்தது. ஞாலத்தின் சில பல நாடுகளின் ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளையும் கூட தமது ஏவலர்களாக ஆட்டிப்படைக்கும் வடஅமெரிக்க அரசாங்கத்தின் போக்கிரி தலைவன் புஷ்ஷுக்கு, தக்சின் சினவத்ரா சூன் திங்கள் அனுப்பிய கடித வாசகத்தின்படி மக்களாட்சி முறைமையை சீர்க்குலைப்பது, தேர்தலைப் புறக்கணித்து தெருக்களில் இறங்கிய மக்களா! அல்லது தக்சீனா! என்பதே தலைநகர் பேங்காக்கில் அண்மையில் பரவலாக எழுந்த வினாவாக இருந்தது. ''தக்சின் தலைமை யமைச்சராக அரசை வழி நடத்திய ஆண்டுகளில், சனநாயக அமைப்பு வடிவத்தை சீர்குலைத்ததோடு அவற்றின் வயிற்றை மிகக் கொடுரமாகக் கிழித்து அதன் குடலை வெளிக் கொணர்ந்ததின் விளைவால் தக்சினை ஆதரிப்பதா அல்லது அரசியலமைப்பை காப்பதா! என்று முடிவெடுக்க வேண்டிய சூழலுக்குள் வெகுமக்கள் தள்ளப்பட்டார்கள்” என்கிறது விமர்சனமொன்று.

நிலைமைகளை சோம்பேறித்தனமாக பார்த்துக் கொண்டிருக்கும் வேறு சில தென்கிழக்காசிய நாட்டு மக்களைப் போன்று அல்லர் தாய் நில மக்கள் என்பதனை வரலாறு செறிவாய் பதிவு செய்துள்ளது. மாணவர்களோடு மக்களும் சேர்ந்து ஆட்சிக்கதிரைகளை ஆக்கிரமித்திருந்த ராணுவ தடியன்களையும், கொடுங்கோலன்களையும் பரிதாபத்திற்குரியவர்களாக்கிய நிகழ்ச்சிகள் பல நூறு பக்கங்களுக்குரியவை. அத்தகைய வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றில் பங்கெடுத்தும் தொலைவிலிருந்து ஆதரித்தும் அவதானித்தது மான மறக்கமுடியாத பட்டறிவுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்கூறில் எமக்கேற்பட்டன. தேரவாத பிக்குகளோடு கைகோர்த்து நின்ற மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கி கண்ணீர்ப்புகை, இராணுவம் பீய்ச்சியடிக்கும் வேதியல் கலவை நீர் ஆகியவற்றுக்கு முகம் தந்தது ஈறாய் இளைஞர்களோடு அணிவகுத்து துப்பாக்கிச் சனியன்களை எதிர்க்கொண்டது வரையிலான சித்திரங்கள் எம் வாழ்வின் அங்கம்.

''மெய்யான சனநாயகத்தை பிரதிநிதித்த தக்சின் சினவத்ராவை தெருவில் எறிந்ததை ஏற்க முடியாது என்பதில் கிஞ்சிற்றும் உண்மையில்லை” என்று கருத்துரைத்திருந்தார், சூலாலங்கோன் பல்கலையின் அரசியலறிஞர் தித்தினான் பொங்சூடிக். தாய்லாந்து நாட்டுத் தேர்தல் வரலாற்றிலேயே மிகப்பெரும் தேர்தல் வெற்றி பெற்றவர் தக்சின்தான் என்ற உண்மையினை மறுக்க வேண்டிய தேவையில்லை. இதுபற்றிக் கதைத்திருந்த விமர்சகரொருவர் ''இன்றைக்கும் பெருவெற்றி கொள்ளும் ஆதரவு ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களிடத்தில் தக்சினுக்கிருப்பதால் நடைபெறும் எந்தவொரு ஓட்டு வாக்கெடுப்பிலும் அவர் மிக எளிதாக வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அöது நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளையோ இன்றைய மேற் செல்ல முடியாத நிலைகளையோ தீர்த்து விடாது” என்று முடித்திருந்தார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்க தாகின்றது. ''அரசியலமைப்பால் பந்தாடப்படுவதாக கூறிக்கொள்ளும் தக்சின்தான் பெரும்பாலான வேளைகளில் சட்டத்தை மீறுபவராக விளங்குகின்றார்” என்ற கவிஞர் சோங்கித்தவொன், ''சனநாயகம் என்பது மிகப்பலவற்றை உள்ளடக்கியதாகும். அöது தேர்தலோடு மட்டும் முற்றுப் பெற்று விடுவதில்லை. மாறாக கட்டுப்பாடு எந்நிலையிலும் நிலை குலையாதிருத்தல், ஒப்பீடு, அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறை, தலைமை ஏற்பவர் என்ற வகையில் மக்களுக்குப் பதில் சொல்லுவது என்று பிறவற்றையும் உள்ளடக்கியதாகும். முன்சொன்னவற்றில் தக்சினின் செயற்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இல்லை,” என்று முடித்திருந்தார்.

2001ஆம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்றத்திற்குப் பெரும்பான்மையோடு சென்று ஆட்சிபீடமேறியவர் தக்சின். கட்டுப்பாடும் நிலைத்தன்மையும் கொண்ட அரசாங்கத்திற்காக 1997ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் வழிதான் இவரால் ஆட்சி அமைக்க முடிந்தது என்பது கவனம் குவிக்க வேண்டிய விசயமாகின்றது. பிரதமரானதின் பின்னர் தாம் அதிகாரத்திற்கு வர வழி வகுத்த அதே அரசியமைப்புச் சட்டங்களை பலவீனப் படுத்துவதற்கே மக்கள் வழங்கிய ஆதரவை பயன்படுத்தினார் என்கின்றனர் விமர்சகர்கள். தமது அடிவருடிகளை தேர்தல் மற்றும் கையூட்டு ஒழிப்பு, நீதிமன்றம், மேலவை போன்ற அரசு எந்திரப் பகுதிகளில் மட்டுமன்றி இராணுவ தலைமைத்துவம், சிவில் இயக்கங்கள், தகவல் துறை என்று அங்கெங்கெனாதபடி அனைத்திலும் புகுத்தி அரசை முழுமையாகத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், எதிர்த்தரப்பு அரசியலாளர்களை ஒடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவற்றுக்கிடையில் தம் சொந்த ஊரான வடப்புலம் சார்ந்த சியாங்மாயின் கிராமப்புறங்களில் மேற்கொண்டிருந்த மக்கள் சந்திப்பின்போது கீழ்க்கண்ட கருத்தினை உதிர்த்திருந்தார் முந்தைய தலைமையமைச்சர்: ''இன்றைய தாய்லாந்து நாட்டு சமூகப் பிரச்சனை என்னவெனில் அவற்றின் மக்களே குறிப்பாய் பேங்காக்கில் வசிபவர்களேயாவர். நகரத்தவர்கள் வெகு இலகுவாக கெட்டவர்களால் வழிகெடுக்கப்பட்டு முட்டாள்களாக்கப் படுகின்றனர். வதந்திகளை நம்புபவர்கள் சாமான்யர்கள் மட்டுமல்ல; மாறாக உயர்கல்வி பெற்றவர்களும்தாம்; அந்தோ பரிதாபம்!”

வரலாற்று நகரம் சியாங்மாயும்; எழிலரசி கான் பிறந்த மே வொங் சொன்னும்!

தாய்லாந்தின் வடப்புலம் ஹக்க, கெரன், லாவூ அல்லது முசோர், மொங் அல்லது மியோ, லீசு, லூவா, மியோன் அல்லது இயோ, காமூ மற்றும் பாலோங் ஆகிய மஞ்சள் குடிகள் நிறைந்த பகுதியாகும். ஆவி வழிபாடு பெருவழக்கில் உள்ள இம்மக்களிடையே கற்றல், கற்பித்தல் என்று சுற்றித் திரிந்த காலம் ஒன்றிருந்தது. உழைப்பை மட்டுமே உடைமையாய்க் கொண்ட உழைக்கும் மக்களுக்கான பணியில் ஒளிர்ந்து கரைந்த வசந்த காலமது. மஞ்சள் பிசாசின் மகிமை போற்றும் நடுத்தர வகுப்பைப் பற்றிப்படர்ந்திருக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகியவை மிகவும் குறைவாகக் கொண்டிருந்த அன்பு மக்கள்.

பார டா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்

என்று பார் அதிரப் பாடி செவிப்பறையைக் கிழிந்தவனின் வரிகளுக்குள் இழைந்தோடிய மானுடத்தை தேடித் திரிந்தலைந்து, அனுபவமாய் உணர்ந்து, மானிட சமுத்திரம் நானென்று கூவி, பரந்து கிடந்த வயல்வெளிகளிலும் வகை வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் சமவெளிகளிலும் சிறகடித்த பொழுதுகளை ''கலைந்து போன குருவிக் கூட்டை நினைவுப்புலனில் மீட்டெடுப்பது” என்று கவிதாசரண் சொல்லுமாப்போல் மீட்டு தொகுக்கத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாட்டுக் கோலங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள மனம் விழைகிறது. பல்வேறு மலைவாழ் பழங்குடிகள் வசித்த பகுதிகளை ஒன்றுப்படுத்தி, அவற்றைப் பல கிராமங்களாக்கி, நகரத்தையும் கட்டியமைத்த ''லான்னா” என்ற சாம்ராச்சியத்தை உருவாக்கியவர் மன்னர் மெங்ராய் ஆவார். கி.பி. 1296இல் 1.6 கி.மீ அகலம் 2 கி.மீ நீளத்தில் செங்கற்களைக் கொண்டு சுவர் எழுப்பியவர் அவர். கோட்டை, கொத்தளம், அகழி என்பவற்றைப்போல் இம்மதிற்சுவருக்கும் காரணம் இருந்திருக்கக்கூடும். கிடைக்கும் விளக்கங்கள் ஆழமாய் இல்லை. சீரமைக்கப்பட்ட சுவரின் ஒரு பகுதி இன்றைக்கு ''தப்பே கேட்” என்றழைக்கப்படுகின்றது. அதன் ஒரு பக்கத்தில் உள்ள கால்வாயில் கிடைக்கிற மீன்களை உண்பது உடலுக்கு கேடு பயப்பது என்று அமெரிக்க முதியவரோடு சேர்ந்து கருத்து பரப்பல் செய்தது ஒரு காலகட்டமாகும். பிங் ஆற்றின் இருகரைகளுக்கு அப்பாலும் தமது ஆட்சியினை விரிவுப்படுத்திய மெங்ராய், தாம் கட்டியெழுப்பிய நகரத்திற்கு ''நொம் பூரி சிறீ நக்கோள் பிங் சியாங்மாய்” என்று பெயரிட்டாராம். மேலும் விரிவுப்படுத்தப்பட்டு பாரிய வடபகுதி நிலங்களை உள்ளடக்கிய ''லான்னாஃ” சாம்ராச்சியத்தின் மையமாய் விளங்கியுள்ளது இந்நகரம்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கிடையே இங்குமங்குமாக தொடர்ந்து நடைபெற்ற போர்களினால் பர்மியர்களின் ஆளுகையில் சிலமுறையும் ''சாவ்பாயா” பள்ளத்தாக்கில் மையம் கொண்டிருந்த வலிமை மிகுந்த தென்பகுதி அரசாட்சியின் ஆளுகையில் சில தடவையும் அடிமைப் பட்டிருந்துள்ளது இந்நகரம். இறுதியில் ஐந்தாம் இராமாவின் ஆட்சிக்காலத்தில் தாய்லாந்து நாட்டோடு இணைக்கப் பட்டது. முந்நூற்று பத்து மீட்டர் கடற்மட்ட உயரத்திலுள்ள சியாங்மாய் சமவெளி சாதாரணமாக பகலில் தமிழ்நாட்டு நீலமலைத் தொடரின் (ஊட்டி) அளவு குளிரானது. தொண்ணுறுகளின் இறுதியில் கடுங்குளிரில் அகப்பட்டுக் கொண்டது சுகானுபவம். ஊசி மிளகாயைத் தின்றும், விஸ்கி குடித்தும் சில பொழுதுகள் உடலைச் சூடேற்றிக் கொள்ளச் செய்த வேளையது. மேற்குலகின் வெள்ளைத்தோலர்களே குளிரைக் கண்டு மிரண்டதைப் பார்த்த சமயது. இரவு நேர கலகலப்பிற்குப் பெயர்பெற்ற நகரம் வெறிச்சோடிக் கிடந்ததைக் கான வருத்தமாய் இருந்தது. நீண்ட காலத்திற்குப் பின் ஏற்பட்ட கடுங்குளிரது என்று கதைத்தார்கள் உள்ளூர் முதுமக்கள்.

தென்கிழக்காசியாவின் பதினெட்டாம் விளையாட்டுப் போட்டி (சீ கேம்ஸ்) தாய்லாந்து நாட்டில் 1995இல் நடைபெற்றதை மறந்திருக்க முடியாது. ஒன்பது நாட்கள் நடைபெற்ற போட்டியில் 28 விளையாட்டுகள் இடம் பெற்றன. அவற்றில் சிலவற்றைத் தவிர பிற அனைத்தும் சியாங்மாயில்தான் நடந்தேறின. அவற்றுள் சிலவற்றைக் கண்டுகளித்த பலநூறு இணையர்களோடு நாங்களும் சேர்ந்திருந்தோம். மலர்ந்து விரியும், தொலைந்தும், தொலைத்தும் விட்ட தொட்டுணர் சுகங்கள் எத்தனையோ!

ஆம். நிறைந்த சிறப்புகளையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட சியாங்மாய்யில்தான் எழிலோவியம் கானைக் கண்டதும் பின்னர் காதலித்ததும். பொருளாதார நிலையில் ஏழை எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த கான், அன்பு, பண்பு, ஒழுக்கம், அறிவு, ஈகை என்று எதிலும் ஏழை அல்ல. தன் முயற்சியால் ஆங்கிலம் கற்றுக் கொண்டவர் எம்மை நேசித்த எழிலரசி கான். புத்தனின் போதனைகளை வாழ்வியல் நெறியாய்க் கொண்ட நங்கை. பத்தொன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய சியாங்மாயின் மேற்கில் மலைகள், காடுகள் என்று எழுபத்தைந்து விழுக்காடு அடர் பச்சை நிலப்பரப்பைக் கொண்ட மேற்கில் மலைகள், காடுகள் என்று எழுபத்தைந்து விழுக்காடு அடர் பச்சை நிலப்பரப்பாய் விரியும் ''மே வொங் சொன்” எனும் ஊரினர். இம்மேல்நிலம் குளிர்ந்த பகுதியாகும்.

இலிச்சி, லொங் கான் எனும் பூனைக் கண் பழம், அரத்தி, ஆரஞ்சு, கொடிமுந்திரி, போதாததற்கு பர்மிய மாம்பழம் என்று பல்வகைப்பட்ட பழவகைகளை சோற்றுப் பருக்கைகளுக்கு மாற்றாக்கி, ஓமியோபதி மாத்திரைகளால் என்றோ குணமான ''குடற்புண்” மீண்டும் உயிற் பெற்றுத் தொல்லை தந்ததெல்லாம் இவ்வூர் அளித்த பரிசென்பது நியாயமானதே. வடக்கும், மேற்குப் பகுதியும் மியன்மாரை எல்லையாய்க் கொண்டிருப்பதால் கட்டடம், மடாôலயம், மொழி, கலை, பண்பாடு என எல்லாத் தளத்திலும் பர்மியத் தாக்கம் ஊடுருவியுள்ளதைக் காணலாம். போதிய போக்குவரத்து, தொலைத்தொடர்பு இன்மையால் ஒரு காலத்தில் தாய்லாந்தின் ''சைபீரியாஃ” என்றழைக்கப்பட்ட இவ்வூர் இன்று ஓரளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. சுற்றுச்சூழலியர்களுக்கும், இயற்கையைப் பேணுபவர்களுக்கும் இவ்விடம் பேரின்பத்தை அளிக்க வல்லது.

இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் தாய், தாய் யாய் மற்றும் சா ஹ ன் இனக்குழுவின ராவர். சாஹன் இனக்குழு பர்மிய பழங்குடிகளோடு ரத்த உறவுடையதாகும். இங்கு மலை வாழ் மரபினரும் வாழ்கின்றனர். பூத்துக் குலுங்கும் கண்கவர் காட்டுப்பூக்கள் இப்பள்ளத்தாக்கிற்கு எழில் கூட்டுவன. மூலை முடுக்கெங்கும் கூட்டிச் சென்று பூபாளம் பாடிய ஆரணங்கு கானின் பிறந்தகம் எழில் கொஞ்சும் மலர்வனமாய் இன்றும் நினைவிலாடுகிறது.

காட்டு யானைகளைப் பிடிப்பதற்காக இப்பகுதிக்கு வந்த சியாங் மாய் மன்னரும் பரிவாரங்களும் வேழங்களோடு அவைகளை பயிற்றுவிப்பதற்கேற்ற இடம், அக்களிறுகள் நீராடுவதற்கும் நீர்த்துறைக்கும் ஏற்ற ஆழமற்ற ஆறு ஆகியவை ஒருங்கே அமைந்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனராம். விரைவிலேயே முகாம் அமைக்கப்பட்ட பகுதி சாலச்செலவில் கிராமமாகியுள்ளது. இறுதியில் ''யானை பயிற்றகத் தலைமையகம்” எனும் பொருளில் ''மே வொங் சொன்” எனும் பெயர் கொண்ட நகரானது என்பது வரலாற்று விளக்கம்.

தக்சிஸின் அரசியல் இருத்தல் கடுமையாகி வரும் சூழலில் இராணுவ மற்றும் அரசத் திணைக்கள அதிகாரிகளில் சிலர் "தெருப்போராட்டங்கள் இறுக்க நிலைகளை தோற்றுவிப்பதோடு வன்முறை மோதல்களை பிரசவிக்கும்” என்று எச்சரித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில், இனிவரும் மாதங்கள் தாய் நாட்டு அரசியல் நிலை முறுகல் கொண்டிலங்கும் என்பதனை இற்றை நாள் நிலவரங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

(குறிப்பு:- இதுவரையான பகுதிகள் தக்சின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன் எழுதப்பட்டவை.)

குழப்பங்களுக்கு யார் காரணம்?

ஏழு வார அரசியல் முழுக்கிற்குப் பின் மீண்டும் சமூக மளித்து, காபந்து அரசின் பிரதமராகக் கதிரை அமர்ந்து, புதிய தேர்தலுக்கான நாள் குறிப்பதில் மும்முரமானார் தக்சின் கினவத்ர. தினைக்களத்தின் மூத்த அதிகாரிகளுடனான அவரது உறவில் விரிசல் வளர்ந்தோங்கியது. நிலைமைகள் தொடர்ந்து மோசமாகவே கூட்டணிக் கட்சியினரும் தக்சினை கைகழுவினர். இவரின் தாய் ராக் தாய் கட்சி தடைசெய்யப்படக்கூடும் என்று எதிர்ப்பார்க் கப்பட்ட நிலையில், 2006 ஒக்றோபரில் நடைபெற அறிவிக்கப் பட்டிருந்த பொதுத்தேர்தல் தம்மைப் பெரிதும் காப்பாற்றும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். வெடிகுண்டுகள் தயாரிக்கத் தகுதியான பொருட்கள் நிறைந்த கார் ஒன்றினை தக்சினின் வீட்டிற்கருகில் கைப்பற்றினர் பொலிசார். இதனைச் சாக்கிட்டு தம்மைக் கொல்லுவதற்கு மூத்த இராணுவ அதிகாரிகள் முயலுவதாக குற்றஞ் சாட்டினார் முந்தைய தலைமையமைச்சர்.

செப்டம்பர் பதினாறு, தென் மாநில நகரான அட்யாய் குண்டு வெடிப்பில் குலுங்கியது. ஒரே போதில் வெடிக்க வல்ல ஆறு மோர்ட்டர் குண்டுகள் மக்கள் நெரிசல் மிக்க தெருவில் வெடித்ததானது மூன்று பேர் உயிரிழக்கவும் அறுபது பேர் வரை காயமடையவும் காரணமானது. தென்பகுதிக் கலவரங்கள் தொடர்பான முன்னெடுப்புகளில் இராணுவத்தினுடனான தக்சினின் உறவு முறிந்தது. முந்தைய குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் படைத்துறைத் தளபதி ஜெனரல் சொந்தி பூன்யாராட்கிலின், பத்திரிக்கை யாளர்களுடன் விரிவாக பேசி யிருந்தார். அவற்றின் சுருக்கம் பின்வருபவை:

''குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்பான வர்களின் தலைவரை அடையாளம் காணும்படி படைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துளேன். அவர்களின் உண்மையான தலைவரை இதுநாள் வரை அறிய முடியாமல் இருக்கின்றபடி யால் பேச்சுவார்த்தை மேற்க்கொள்ள முடியவில்லை என்பதோடு படை நகர்வுகளையும் தவிர்க்கவியலவில்லை.” (ஆனால் மலேசியாவில் இளைப்பாறிய பிரதமர் டொக்டர் மகாதீரின் முயற்சியில் பட்டாணி விடுதலை படைஞர் களுக்கும் தாய்லாந்து நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கும் மலேசியாவின் வரலாற்று மற்றும் சுங்க தீர்வையற்ற தீவான இலங்காவியில் வைத்து இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தாளிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.) ''நான் அவர்களின் தலைவரோடு பேசவிரும்புகின்றேன். இ*து நிறைவேறாத பட்சத்தில் தென்தாய்லாந்தில் அமைதியை நிலைநாட்ட முடியாது. அவர்களின் நோக்கம், தனிநாடு அமைப்பதே என்பது தெளிவாகின்றது. நிகழ்த்தும் வன்முறைச் சம்பவங்களும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குத்தான் என்பதும் நன்கு புலனாகின்றது என்ற போதும், தாய்லாந்து எல்லைக்குட் பட்ட நிலப்பரப்பிலிருந்து ஒரு அங்குலமேனும் கையளிக்கவோ அல்லது பிரிக்கப்படவோ அனுமதிக்கப் போவதில்லை.”

ஜெனரல் சொந்தியானவர் தாய் நாட்டு வரலாற்றில் இவ்வுயரிய பொறுப்பு வகிக்கும் முதல் முஸ்லிம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

தவிர, ''மலேசிய-தாய் எல்லையில் செயற்படும் குற்றவியல் (கிரிமினல்) கும்பல்களும்கூட இலஞ்சத்தையும், வன்முறை நிகழ்வுகளையும் கூடுதலாக்கி வைக்கின்றனஃ” என்று கருத்துரைக்கின்றனர் உயர்மட்ட அரசு அலுவலர்களும் அவதானிப்பாளர்களும். ''குண்டு வைப்புகள் தென்னக மக்களைக் கலக்கத்திற்குள்ளாக்குவதற்குத்தான் என்றபோதும் இதைச் செய்பவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்பது மட்டும் உறுதிப்படுகின்றது” என்று தென்பகுதி யாலா நகரின் குண்டு வெடிப்பிற்குப் பின் கருத்து தெரிவித்திருந்தார். சைவாட் கம் சூ எனும் பெயர் கொண்ட சூலாலங்கோன் பல்கலையின் அரசியல் அவதானிப்பாளர். வன்முறை நிகழ்வுகளுக்கு விடுதலை இயக்கத்தினர் மட்டுமே காரணமில்லை என்பதற்கு அனுசரணையாக உள்ளது நாளும் நடந்தேறி வரும் சம்பவங்கள். பிரேமதாச காலத்திய திருவிலங்கை சம்பவங்களுக்கு நிகரானதாக உள்ளதா? ஓம், இன்றைய யதார்த்தம் அவற்றை ஒத்ததுதான்.

இந்தச் சந்தடியில் தடை செய்யப்பட்ட மலாய கம்யூனிச்டு கட்சியின் (1989இல் மலேசிய அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு தாய்லாந்து நாட்டு அரசு பெரிதும் பாடுபட்டது. அவ்வொப் பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலவும் நிறைவேற்றப்படவில்லை என்பது கருத்தில் எடுக்க வேண்டியதாகின்றது. தாய்லாந்தில் வாழும் சிபிஎம்மின் பொதுச் செயலாளர் தோழர் சின் பெங் உட்பட சில நூறு பேர் தங்களை நாய்நாடாம் மலேசியா விற்குள் அனுமதிக்கக் கோரி வழக்கு மன்றத்தில் வழக்கொன்றினை பதிந்துள்ளனர்.) மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் இரசீத் மைதீன் அவர்களின் மரணம்கூட பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. 89ஆவது வயதில் சாவுகள் சாதாரணமாக நிகழும் தென்தாய்லாந்து நராதிவாட் மாநிலத்தின் சிசாகொய்ன் என்னுமூரில் தம் மகளின் இல்லத்தில் இயற்கையெய்திய தோழர்,

1955ஆம் ஆண்டில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ''பாலிங் அமைதிப் பேச்சவார்த்தையில்” சிபிஎம் மை பிரதிநிதித்த மூவரில் ஒருவராவார். மேற்கு மலேசிய பேரா மாநிலத்தின் கோப்பிங் நகருக்கு அருகமைந்த ''குனோங் மெசா” எனும் கம்பத்தில் 10.10.1917இல் பிறந்தவர் தோழர் ரசீத் மைதீன். மலாய்த் தேசியப் போராளியாகத் தொடங்கி, கரந்தடி வீரராக பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, பிற தோழர்களோடு படைப்பிரிவை வழிநடத்தி, பின்னர் மலாய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மலாய்ப் படைப்பிரிவான பத்தாம்(10) ரெஜிமென்டிற்குத் தலைமையேற்று, கம்யூனிஸ்ட் கட்சியிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து முதிய அகவையில் தம் வாழ்வை முடித்துக் கொண்டார். தனிச் சொத்துடமையை அளவுகோளாகக் கொண்ட,- மாந்தத் தன்மைகள் மங்கலாகி வரும் இவ்வமைப்பில் ரசிட் மைடின், அப்துல்லா சி டி, சம்சியா பா*கே, கமாருசாமான் தே போன்ற பன்னூற்றுக் கணக்கான தியாகிகள் துரோகிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.

புரட்சியா! ஆட்சிக் கவிழ்ப்பா

செப்தம்பர் 19, 2006 செவ்வாய்க்கிழமை மாலை மணி ஆறு அளவில் இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற செய்தி காட்டுத்தீயைப்போல் தலைநகரெங்கும் பரவத் தொடங்கியிருந்தது. இரவு மணி 10.20க்கு, தாம் ஐக்கிய நாட்டுப் பொதுப் பேரவையில் பங்கெடுத்துள்ளதாகவும் ராணுவத் தளபதியை பொறுப்பு நீக்கம் செய்துள்ளதோடு நெருக்கடி நிலையினை பிரகடனம் செய்துள்ளதாகவும் இவற்றோடு பிறவும் அடங்கிய தக்சினின் உரையினை ஒளிப்பரப்பிய தேசியத் தொலைக்காட்சி சில நிமிட நேரத்தில் தேசிய கீதத்தையும் மன்னரின் உருவப்படத்தையும் ஒளியேற்றியது. அனைத்து வானொலி தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பிலும் மேற்ச்சொன்னவையே இடம்பெற்றன. இடைச்செருகலாக தாய்லாந்து நாட்டு நடைமுறை நிகழ்வு ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

தாய்லாந்தில் முதன் முதலாக பயனிக்கும் ஒருவரை வியப்பில் ஆழ்த்துபவை யாதெனில், திரையரங்கங்கள், பேரங்காடிகள், விளையாட்டரங்கங்கள், பேருந்து மற்றும் புகையிரத நிலையங்கள், தெருக்களென்று எல்லா இடங்களிலும் மக்கள் சிலைபோலாகி நிற்பதைக் காண்பதாகும். எதிர்பார்க்காத நிமையத்தில் திடீர் திடிரென ஒலி ஒளிப்பரப்பப்படும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் முகத்தான் அனைவரும் அசையாமல் நிற்பது தாய் மக்களிடத்தில் காணப்படும் சிறப்பம்சமாகும். தொடரும் பயிற்சியினால் விளைவதே பழக்கமாகின்றது. இதற்கு முற்றும் எதிரிடையான பழக்கத்தையும் இங்கு சொல்லத் தோன்றுகிறது. பேராசிரியர் க.ப. அறவாணர் அவர்களையும் பேராசிரியர் தாயம்மாள் அவர்களையும் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில், சென்னை பூக்கடை நிலையத்தில் பேருந்தேறி செலவு மேற்கொண் டவன்.(பயணத்திற்கான அனைத்து வழிவகைகளையும் குறித்துத் தந்தவர் 1996இல் தென்மொழி மாதிகையில் அமைச்சராக இருந்த திருவாட்டி குணவழகியாவார்.)

புதுவை பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே சிறுநீர்க் கழிக்கும் ஆடவர்களின் செயல் கண்டு உறைந்துபோனேன். தங்களைக் கடந்து செல்லும் பெண்களையும் இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதனை இப்படியா அமுல்படுத்துவது! வேறு சில நாடுகளிலும் இவ்வகை அனுபவம் ஏற்பட்டது உண்டு என்ற போதும் அவையள் ஹிந்தியாவை மிஞ்சுவதற்க்கில்லை. பெங்களூரில் தாடி மழித்துக் கொண்டிருந்தவரிடம் இதுபற்றிக் கதைத்த போது அவர் தந்த பதில், ''இதெல்லாம் இங்க சகஜங்க!” தமிழும் கன்னடமுமாக கலந்து பேசிக் கொண்டிருந்தவர் தந்த வேறு சில செய்திகள் எம்மைத் திடுக்கிட வைத்தது!

நள்ளிரவை நெருங்கிய வேளையில் அரசப் படைகள் எத்தகைய வேட்டு சத்தமுமின்றி அரசாங்கத் தலைமையத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தைக் கையகப்படுத்தினர். அக்கட்டடத்தைச் சுற்றி தகரிகள் காவலுக்கு நிறுத்தப் பட்டன. பத்து நிமைய இடைவெளியில், தாங்கள் நாட்டு நிர்வாகத்தை கையிலெடுத்திருப்பதாகவும், அரசினை வழிநடத்த ''அரசியல் சீர்த்திருத்த கவுன்சில்” ஒன்றினை அமைத்திருப்பதாகவும், ராணுவம் மற்றும் பொலிசுத் துறை அறிவிப்பு வெளியிட்டது. பின்னிரவில், முப்படை தளபதிகள் மன்னரை சந்தித்து நிலைமையை விளக்கப்படுத்தினர். இச்சந்திப்பிற்குப் பிறகே ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அரசியல் சட்டத்தை ரத்துச் செய்வதாகவும், நாடாளுமன்ற அவை, அமைச்சரவை, நாட்டின் உயர்நீதிமன்ற குழு ஆகியவைகளையும் கலைப்பதாகவும் அறிவித்தது அரசியல் சீர்த்திருத்த கவுன்சிலின் தலைமை. வைகறைக்குப்பின், அறிவன் கிழமையைப் பொது விடுமுறை நாளாக அறிவித்த கவுன்சிலின் சார்பில் பேசவல்லவர், ஒன்பது மணிக்கு மேலதிக விவரங்கள் அறிவிக்கப்படும் என்று ஓய்ந்தார்.

காலை ஒன்பது மணியளவில் முதன் முறையாக தளபதி சொந்தி, நாட்டுப் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும், தொடர்ந்த அரசியல் முறுகல் நிலையினை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தேவை குறித்து விளக்கப்படுத்தி உரையாற்றியதை தேசிய தொலைக்காட்சி ஒளி பரப்பியது. அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜெனரல் சூராயூட் சூலனோன்ட் பிரதமராக நியமிக்கப்பட்டார். புத்தாண்டிற்கு முந்தைய இரவில் தலைநகரில் வெடித்த குண்டு முசுலிம் கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டதே என்ற கூற்றை மறுத்தார் பிரதமர். வெளிநாட்டில் இருக்கும் தக்சின், அவ்வெடிப்பிற்குத் தம் ஆதரவாளர்கள் காரணமில்லை என்றார். இராஜங்க பாஸ்பார்ட் ரத்து செய்யப்பட்ட போதும் தக்சின் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை.

சரி, அனைத்தையும் அறிந்ததாக கூறப்படும் சிஐஏவும், உலகில் அமைதியை தழைக்கச் செய்வதற்காகவே நகர்வுகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் வடஅமெரிக்காவும் தக்சினை காப்பாற்றாதது ஏன்! அவற்றின் அரசியல் பின்னணி என்ன? அரச தந்திர கடப்பிதழ் ரத்துச் செய்யப்பட்டதின் பின் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டு அத்தீவின் துணைப் பிரதமர்களில் ஒருவரான எஸ்.ஜெயக்குமார் அவர்களை சந்தித்தது; சிஎன்என் மற்றும் ஆசியான் வால்ஸ்திரீட் ஜெர்னல் ஆகிய மேற்குலகின் ஊடகங்களுக்கு பேட்டியளித்ததுமான நிகழ்வுகள் தாய்லாந்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு சினமேற் றியவை. ''பழைய நண்பர்கள் இருவரினது சந்திப்பு” என்ற சிங்கப்பூரின் விளக்கத்தை தாய் அரசு ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, அத்தீவினர் பயிற்சிக்குப் பயன்படுத்திவரும் தமது நாட்டு ராணுவ தள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வது குறித்தும் முடிவெடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தாய்-சிங்கை அரசுக்களுக் கிடையிலான உயர்மட்டக் கூட்டத்தை ரத்துச் செய்ததோடு, அத்தீவின் வெளியுறவு அமைச்சருக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினையும் ரத்துச் செய்துள்ளது தாய் நாட்டரசு.

''இயல்பிற்கு மாறான, கூடுதலான நடவடிக்கை களை தாய்லாந்து மேற்கொண்டுள்ளது என்ற சிங்கப்பூரின் அறிக்கைக்கு தாய் நாட்டரசு பதிலளிக்கவில்லை என்றபோதும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சித்தி வசிதொன்ட், இது பற்றி கருத்துரைத்தபோது ''வெளியுறவு அமைச்சர் மற்றும் அதன் நிரந்தர செயலாளர் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவின் வெளியுறவு மற்றும் அதன் நிரந்தர செயலாளருக்கு தக்சின் குறித்த எங்கடை நிலைப்பாட்டினை நன்கு தெளிவுபடுத்தி யிருந்தபோதும், தாய்லாந்தின் முறுகல் நிலையினை உணரும் திறனற்ற சிங்கப்பூரின் செயலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்வது தேவை என்று பேங்காக் கருதுகிறது” என்றும், ''நண்பர்களுக்கு அழுத்தம் தருவது எங்கடை பானி அல்லவென்றபோதும், பன்முறை அறிவிக்கப்பட்ட பின்னரும் அச்செயல் நடந்தேறியதானது, நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்குள் எங்களைத் தள்ளியது” என்று விளக்கமளித்ததாக பேங்காக் போஸ்ட் செய்தி வெளியிட் டிருந்தது.

சாதாரண கடப்பிதழில் பயணம் செய்யும் தக்சின், நாட்டிற்குள் அமைதி காக்கும் படியும், மீண்டும் பதவிக்கு வரத் தாம் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பதோடு கலை மற்றும் அறப்பணி செயல்களில் ஈடுபாடு கொள்வதோடு எஞ்சிய நேரத்தை தம் குடும்பத்தோடு அமைதியாகக் கழிக்க விரும்புவதாகவும் சிஎன்என் உடனான நேருரையில் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் சூராயூட் சூலனோன்ட்” தாய்லாந் திற்குள் நுழைவதற்கு தக்சினுக்கு தடையிருப் பதால் அவர் திரும்ப விரும்பினால் அவரோடு நாங்கள் உரையாடல் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் திரும்பி வந்தவுடன் அவர் எத்தகைய அரசியல் இயக்கங்களிலும் பங்கெடுக்கக் கூடாது. அத்தகைய செயற்பாடுகள் நாட்டில் குழப்பம் ஏற்பட வழிவகுக்கும். எதிர்நோக்கியுள்ள இலஞ்ச ஊழல் குற்றங்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளுவதற்காக நாட்டிற்குள் வர அவர் அனுமதிக்கப்படுவார்! என்றவர் செய்தியாளர்களை நோக்கி ''மெய்யாகவே அவருக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டுமா?” என்று வினவியதாக ராய்ட்டர் செய்தியை என் எஸ் டி வெளியிட்டிருந்தது.

ஆட்சிக் கலைப்பிற்குப் பின் சிங்கப்பூர் தீவின் தலைமையமைச்சர் லீ சியான் லுங் மற்றும் தெமாசிக் ஓல்டிங்சின் முதன்மை பொறுப்பாளரான பிரதமரின் மனைவி ஆகியோரினது கொடும்பாவிகளை தாய் நாட்டு தலைநகரின் தீவுத் தூதரகத்தின் முன் வைத்துக் கொளுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. மூன்றாம் தடவையாக ஓரிரு நாட்களுக்கு முன் தீவு தூதரகத்தின் முன் குழுமிய மாணவர்கள் ''எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலை யிடாதே, சிங்கப்பூரே வெளியே போ” என்பன போன்ற பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர் என்பது கவனிக் கத்தக்கது. தாய்லாந்தின் நிறுவனங்களில் வெளிநாட்டவர் 50%க்கு மேல் பங்குகள் வைத்திருக்க கூடாது என்பது அண்மையில் நடப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டமாகும்.

தொடர்ந்து அரங்கேறி வருபவைகளையிட்டு பார்க்கும் போது இது மன்னருக்கு ஆதரவான அல்லது அவரின் ஆசி பெற்ற மாற்றமாகவே தெரிகின்றது. மன்னர் எப்படி? நிலக்கிழாரிய எதிர்ப்பாளர்கள்கூட, தேவலாம் என்று சான்றிதழ் வழங்கும் வகையைச் சேர்ந்தவர். அடுத்து வரும் சமயங்களில் அது பற்றி விரிவாய் கதைக்கலாம். தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் தலைமையமைச்சராக நியமனம் செய்யப் பட்டுள்ள சட்ட விவகாரங்களுக்கான மதியுரைஞர் சூராயூட் சூலனோன்ட், முன்னாளைய பிரதமர் ஜெனரல் பிரேம் தின் சூலான் ண்டாவின் ஆதரவைப் பெற்றவர். 80களில் தலைமையமைச்சராக பதவி வகித்த பிரேம், அரண்மனைசெயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் என்று அறியப்படுகின்றவராவார். எது எப்படியிருப்பினும் இக்கால ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள குழுவே வெல்லும் என்கின்றார் தென்கிழக்காசிய விவகாரங்களில் பழுத்த அனுபவம் கொண்ட மேற்கத்திய எழுத்தாளர்.

இன்றும் தெற்கில் வெடிச்சத்தங்களும் மக்களின் கதறல்களும் ஓய்ந்தப்பாடில்லை. இந்நிலை மெல்ல வடக்கு நோக்கிப் பரவுகிறது. இராணுவ தளபதிகளின் எச்சரிக்கைகளோடு கோரிக்கை களும் ஏடுகளை நிரப்புகின்றன. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து கேளிக்கை என்ற பெயரில் பாலியல் சுகத்திற்கு செல்வோரின் எண்ணிக்கையும் சரிவு கண்டுள்ளது.

Pin It