சமகால அரசியல் தேசத்தைக் கட்டமைக்கிறது. தேசம் ஒரு பழைமையை/ வரலாற்றைக் கட்டமைக்கிறது. இந்தக் கட்டமைக்கப்பட்ட பழமைக்கு எதிரான தரவுகளை, உண்மைகளை முன்வைப்போர் தேசத் துரோகிகள். இன்றைய உலகின் முக்கிய நாவலாசிரிர்களில் ஒருவரான ஓஹ்ரான் பாமுக் தனது நாட்டு (துருக்கி) நீதிமன்றத்தின் முன்பாக வரலாற்றைக் கொச்சைப்படுத்தித் துருக்கியை இழிவு செய்த குற்றத்திற்காக இன்று நிறுத்தப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 16ந்தேதி விசாரணை தொடங்க உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை அவருக்குக் காத்திருக்கிறது.

உலகம் பெரிய அளவில் மாறிக் கொண்டிருக்கிறது. இது “நாகரிகங்களுக்கிடையேயான போராட்டங்களின் காலம்’’ என்கிற குரல்கள் நாக் கூசாமல் ஒலிக்கின்றன உலகமயச் சக்திகள். புதிய அரசியல் நோக்குகள், வாழ்முறை மாற்றங்கள், அணுகல் முறைகளில் ஏற்பட்டுள்ள அதிரடியான போக்குகள் - இவை வாழ்க்கை குறித்த புதிய பிரச்சினைகளை, கேள்விகளை உசுப்பியுள்ளன. 21 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர்கள் இவற்றை எழுதுகின்றனர். ஓஹ்ரான் பாமுக் இவர்களில் ஒருவர். தமிழ்ச் சூழலைப் பொருத்தமட்டில் லத்தீன் அமெரிக்க எழுத்துக்களோடு தேங்கிக் கிடக்கின்றனர். மண்ணைத் தோண்டுதல், வேர்களைத் தேடுதல், வீடுகளுக்குத் திரும்புதல், கிராமங்களை உன்னதப் படுத்தல் போன்ற இவர்களின் பழம் பஞ்சாங்க வேலைகளுக்கு ஆதாரமாக மேற்கோள் காட்ட லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் இவர்களுக்குத் தோதாக இருக்கின்றன.

மிலன் குந்தேரா, ஓஹ்ரான் பாமுக் போன்றவர்களை நமது எழுத்தாளர்கள் கண்டுகொள்வதில்லை

இஸ்தான் புல்லில் 1952 இல் பிறந்த பாமுக் தனது 22 வயது முதல் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நேச்சுரலிச - எதார்த்தவாத பாணிகளில் எழுதிக் கொண்டிருந்தவர் இப்போது பின் நவீன நுட்பங்களுடன் எழுதத் தொடங்கியுள்ளார். 2002ல் வெளிவந்த “என்பெயர் சிவப்பு’’ என்னும் நாவல் உலக அளவில் விவாதிக்கப்பட்ட ஒன்று. 2003 அய் ஓஹ்ரான் பாமுக்கின் ஆண்டு எனக் சொல்பவர்கள் உண்டு. நாகரீகங்களுக்கிடையே மோதல்கள் மட்டுமே சாத்தியம் என்பதை ஏற்காத அவர் உரையாடல்களின் சாத்தியத்தைப் பேசுகிறார். புதிய சூழலில் இஸ்லாமின் பாத்திரத்தை விரிவான சுய பகுப்பாய்வுக்குத் தூண்டுகிறார். ஆட்டோமன் பேரரசின் வீழ்ச்சி தொடங்கியப்பின் துருக்கிச் சமூகம் எதிர் கொண்ட நெருக்கடிகளை அவர் ஆழமாக ஆய்வு செய்கிறார். தன்னிலை குறித்த புதிய பிரட்சனைகளைத் துருக்கியரிடம் அவரது எழுத்துக்கள் உருவாக்கின.

துருக்கி இன்று ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. அய்ரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கியை இணைக்க வேண்டும் என ஒரு குரல். இணைக்கக் கூடாது என்றொரு எதிர்க் குரல் துருக்கிக்குள் ஒலிக்கிறது. ஒன்றியத்துக்குள் துருக்கியை அனுமதிக்க அய்ரோப்பிய நாடுகளும் எதிர்க்கின்றன. கமால் அத்தாதுர்க்கால் உருவாக்கப்பட்ட நவீன துருக்கியின் இன்றைய ராணுவம் அத்தாதுர்க்கின் தொலை நோக்கான சமநிலைப் பார்வைகளை எல்லாம் புறக்கணித்து இறுக்கமான தேசியப் பெருமைகளைப் பேசக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் துருக்கியர்களின் மனச்சாட்சியை உசுப்பும் பாமுக்கை ராணுவத்திற்குப் பிடிக்காமல் போனதை நம்மால் புரிந்துக் கொள்ளமுடிகிறது.

நடந்தது இதுதான். சுமார் ஓராண்டுக்கு முன்பு ஸ்விஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் துருக்கியில் கருத்துச் சுதந்திரத்திற்குள்ள தடைகளைப் பற்றிப் பேசினார் பாமுக். “பத்துலட்சம் அர்மினியர்களும் முப்பதாயிரம் குர்தியர்களும் இந்நாட்டில் கொல்லப்பட்டனர். இது குறித்து நான் ஒருவனே தைரியமாய் பேசி வருகிறேன்’’ என்றார். துருக்கியில் நடைபெற்ற இந்த இனப்படுகொலைகளை உலகு அறியும். ஆனால் துருக்கிய தேசியவாதிகளின் வரலாற்றின்படி, “சில நூராயிரம் மக்கள், முதல் உலகப்போரை ஒட்டிய மோதல்களில் ஒருவரையருவர் கொன்று கொண்டனர்’’. ‘இன அழிப்பு’ Genocide என்பதை அவர்கள் ஏற்பதில்லை. பாமுக்கின் பேட்டி வெளிவந்தவுடன் தேசியவர்க ஊடகங்கள் அவரை வேட்டையாடத் தொடங்கின.

சிவில் சமுகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரது “வாயை மூடவேண்டும்’’ என வெளிப்படையாக எழுதின. கொலை அச்சுறுத்தல்களில் விளைவாக அவர் சிறிது காலம் தலைமறைவாக வாழவும் நேரிட்டது. சென்ற ஆண்டில் மீண்டும் அவர் துருக்கி திரும்பியபோது இஸ்தான் புல்liன் பொது விசாரணை அதிகாரி அவர் மீது வழக்கைத் தொடர்ந்தார். “துருக்கிய அடையாளத்தை பொது அரங்கில் இழிவு செய்தார்’’ என பாமுக் குற்றம் சாட்டப்பட்டார். சர்வதேச அளவில் எழுத்தாளர்கள் பாமுக்கிற்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர்.

Pin It