அநிச்ச

“ஈடேற வழி: பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” – பெரியார் ஈ.வெ.ரா.


நிறப்பிரிகை நின்று சுமார் 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. மீண்டும் ஒரு பத்திரிகையைத் தொடங்கும் போது இந்தப் பத்தாண்டுகளில் தமிழ்ச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒரு கணம் யோசிக்கத் தோன்றுகிறது. நிறப்பிரிகை மூலம் தேசியம், நுண் அரசியல், சோசலிசக் கட்டுமானம், பெண்ணியம், தலித்தியம் தொடர்பான பல விவாதங்களை முன்னெடுக்க முடிந்தது. அமைப்பியல், பின்னமைப்பியல், பின் நவீன நிலைச் சிந்தனைகள் பலவற்றை தமிழ்ச் சூழலுக்குள் கொண்டுவர முடிந்தது. பல பிரச்சினைகளை ஒரு கோணத்தில் அணுகுவதைக் காட்டிலும் ஒரே பிரச்சினையை பல கோணங்களில் அணுகுவதற்கான சாத்தியங்களை வலியுறுத்த முடிந்தது..

இன்று பின்நோக்கிப் பார்க்கும் போது கடந்த பத்தாண்டுகளில் இந்த அம்சங்களில் எந்த அடுத்தக்கட்ட முன்னேற்றமும் ஏற்படவில்லை. பின்னோக்கிய பயணம் தான் நடந்துள்ளது - மண்ணைத் தோண்டுதல், வேர்களைத் தேடுதல், பழமையைப் போற்றுதல் என்பதாக நமது இலக்கிய, கலாச்சார செயற்பாடுகள் பின்னோக்கி நகர்ந்துள்ளன.

புதிய சிந்தனைகள், புதிய மொழி பெயர்ப்புகள் என்பவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் குறைந்து போயுள்ளது. உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், யாருடைய பதிப்பு முன்னால் வந்தது; எந்த நூலகத்தில் பழைய புஸ்தகங்கள் கிடைக்கின்றன என்பதாக இன்றைய சிறுபத்திரிகையினர் கூர்ம அவதாரமெடுத்துள்ளனர். நடுநிலை இதழ்களாக உருமாறிப் போன பழைய சிறுபத்திரிகை உலகம் அரசியல் கூர்மையற்று வரலாற்று பிரக்ஞையில்லாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது. பழைய எழுத்தாளர்களைக் கொண்டு பழைய விஷயங்களையே எழுதிக் கொண்டிருக்கும் நிலை. சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தொட யாரும் அஞ்சுகின்றனர். தங்களுடைய லாப நோக்கிற்கான / புத்தக விற்பனைக்கான சில பிரச்சனைகளை மட்டும் கவனமாக உருவாக்கி முன்னிறுத்துகின்றனர். இந்நிலையில் ஒரு சிதைவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இன்று எழு

அநிச்ச


ஆசிரியர்
நீலகண்டன்

ஆசிரியர் குழு
அ. மார்க்ஸ்
ம. மதிவண்ணன்
கண்மணி
ஓடை.பொ. துரையரசன்
தேவதாஸ் - சுகன்

படைப்புகள், விமர்சனங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி:


அநிச்ச
45 ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை,
சென்னை - 05. தொலைப்பேசி: 94442 72500

'ANICHA',
3EME DT, 1, RUE HONORE DE BALZAC,
95140 GARGES LES GONESSE,
FRANCE.

ந்துள்ளது. அத்தகைய முயற்சிக்கான ஒரு களமாக ‘அநிச்ச’ செயல்படும்.

எந்த அளவிற்கு இந்த நோக்கம் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியாகச் சொல்ல இயல வில்லை. பத்தாண்டுகளுக்கு முன் மாற்றுக் கருத்துக்கள் உள்ள பலரும் ஒன்றாகக் கூடி விவாதிக்கும் சூழல் இருந்தது. கூட்டுக்கட்டுரை என்கிற ஒரு வடிவத்தையே நிறப்பிரிகை அறிமுகம் செய்தது. இன்று அதற்கான சாத்தியங்கள் வெகுவாகக் குறைந்து போயுள்ளன. இத்தகைய எதிர்மறையான அம்சங்களுக்கிடையில் இயன்றவரை பன்மைத்துவத்தை காக்கும் முயற்சிகளை ‘அநிச்ச’ மேற்கொள்ளும்.

‘அநிச்ச’ என்கிற தலைப்பை புத்தரிடமிருந்து எடுத்துக் கொண்டோம். பாலி மொழியிலிருந்து தருவித்த ஒரு சொல். வாழ்வின் தன்மைகளாக ‘அநிச்ச, துக்க, அனத்த’ ஆகியவற்றை கௌதமர் முன் வைப்பர். அநிச்ச என்பது அநித்திய / Uncertain எனப் பொருள்படும் ஒரு சொல்.

கட்டுரையாளர்களின் கருத்துக்கள் அனைத்தும் ‘அநிச்ச’வின் கருத்துக்கள் எனக் கொள்ள வேண்டியதில்லை.

மூன்றுமாத காலமாக இவ்விதழ் பணி நடைபெற்றுள்ளதை இதிலுள்ள ஆக்கங்களைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இம்ரானா தொடங்கி நாராயண மூர்த்தி விவகாரம் வரை ஒரே இதழில் பேச வேண்டியச் சூழல் ஏற்பட்டுவிட்டது. இனிவரும் இதழ்கள் உரிய காலகெடுவில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்திதாசர் குறித்த விவாதத்தில் தொடர்ந்து மைய நீரோட்டத்திற்கெதிரான கருத்தை முன் வைத்து வரும் மதிவண்ணன் இவ் விதழில் ராஜ்கௌதமன் முதலியோரின் சமீபத்திய கருத்துக்களின் போதாமையை வெளிப்படுத்துகிறார்.

சமீபத்தில் இந்திய அளவில் நடைபெற்ற முக்கியமான விவாதம் ஜின்னா குறித்தது. இதை முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தில் அணுகும் மண்ட்டோவின் கட்டுரை மிகவும் முக்கியமானது, அழகானது. நமது சூழலில் படைப்பாளிகள் எழுதுகிற கட்டுரைகளுக்கும் ஆய்வாளர்கள் எழுதுகிற கட்டுரைகளுக்கும் வித்தியாசங்களிருப்பதில்லை. நம் காலத்தின் மாபெரும் படைப்பாளியான மண்ட்டோ, தான் விலகிக்கொண்டு ஜின்னாவின் காரோட்டியைப் பேசவிட்டு அவர் குறித்து ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் பாணி அலாதியானது. ராமாநுஜம் இதனை வழக்கம்போல அற்புதமாக மொழியாக்கியுள்ளார்.

மூன்றாம் மொழிப்போர் பற்றி ஆரவாரமாக பேசப்படும் சூழலில் சுகுணா திவாகரின் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஆரியர் - திராவிடர் பிரச்சினை, சிந்து வெளி நாகரீகம் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ச் சூழலுக்கு ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இது. இது குறித்து நவீனமாக வந்துள்ளக் கருத்துக்களையெல்லாம் தொகுத்து அறிமுகம் செய்கிறார் அ. மார்க்ஸ். அபத்தமான அந்தணர்களின் வரலாறுகளை சேக்கிழார் அடிப்பொடிகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இக் கட்டுரை வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ்ப் பத்திரிகையாளர் சிவராம் படுகொலை சமீபத்தில் நடைபெற்ற ஒரு மோசமான மனித உரிமை பறிப்பு. இதை கண்டிக்கும் அதே நேரத்தில் இது போன்ற பிற கொலைகள் ஏன் இந்த அளவிற்கு மனித உரிமையாளர்களின் கரிசனத்திற்கு உள்ளாகவில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்புகிறார் சி.புஷ்பராஜா.

சேரனின் தந்தையும் ஈழத்து ‘மகாகவி’யுமான உரூத்திர மூர்த்தியின் கவிதையில் வெளிப்படும் சாதிய மனநிலையை சுகன் அவருக்கே உரித்தான பாணியில் கீறிக்காட்டுகிறார். தமிழில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்திவரும் ஷோபா சக்தியின் சிறுகதை - மீண்டும் நமக்குப் பரிச்சயமற்ற புனைவு வெளி ஒன்றை அறிமுகப்படுத்தி குற்றம், தண்டனை குறித்த அறவியற் பிரச்சினைகளை எழுப்புகிறது.

உங்களிடமிருந்து விமர்சனங்களையும் புதிய ஆக்கங்களையும் எதிர்நோக்குகிறோம். ஆசிரியர் குழுவில் பங்குபெற்றுள்ளவர்கள் இதழின் ஆக்கச் செலவைச் சமமாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது தவிர பெங்களூரைச் சார்ந்த தோழர் விஜய் ஆனந்த் அளித்த நன்கொடை 1,000 இதழ் செலவிற்கு உறுதுணையாக இருந்தது. இதழ் வருமுன்னரே எதிரான பிரச்சாரங்கள் தொடங்கி விட்டதால் இதனைச் சொல்ல நேர்ந்துள்ளது.

மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம்.

Pin It