dravida-family 35020.07.2014 அன்று, திண்டுக்கல் அருகிலுள்ள நொச்சோடைப்பட்டி என்னும் கிராமத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பேரவையின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புலேந்திரன், தலைவர் ஞானசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர். கருஞ்சட்டைத் தமிழர் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் வேடச்சந்தூர் ரவி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். மா. உமாபதி, ஒன்று கூடலுக்குத் தலைமை ஏற்றார்.

அரசியல் விவாதம், வாழ்வியல் பொழிவுகள், அனைவரையும் மகிழவைத்த விளையாட்டுகள், பாடல்கள் எனப் பல்வேறுபட்ட வடிவங்கள் சலிப்புக்கே இடமின்றி, அனைத்து அமர்வுகளையும் நிறைவு செய்தன. 78வயதுப் பெரியவர் தொடங்கி, 5 வயது சிறுவர்கள் வரையில் அனைவரும் தங்கள் வயது வேறுபாடுகளை மறந்து, மகிழ்ந்து கலந்திருந்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலைவாணன் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் திறம்பட அமைத்துக் கொடுத்தார். பரிசுகளுக்கான செலவுத் தொகையை ஊற்றங்கரை கருணாநிதி ஏற்றுக்கொண்டார்.

குடும்ப உறுப்பினர்களின் சமூக அரசியல் சார்ந்த வினாக்களுக்கு, பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் விடையளித்தார். பொருளாளர் எழில். இளங்கோவன், துணைப்பொதுச் செயலாளர்கள் சிங்கராயர், சிற்பி செல்வராசு, மதுரை மாவட்டச் செயலாளர் ஜெயபால் சண்முகம், மாநில இலக்கிய அணிப் பொறுப்பாளர் பாரி முடியரசன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர்.

ஆறு மாதத்திற்குப் பிறகு அடுத்த குடும்ப ஒன்றுகூடலை, உடுமலைப் பேட்டைக்கு அருகிலுள்ள, திருமூர்த்தி மலையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி கோரினார், உடுமலை நகரச் செயலாளர் தண்டபாணி.

எங்கள் திராவிட இயக்கம் இங்கே

                உறவுகள் ஆயின ; உணர்வுகள் ஆயின!

சங்கைக் குரிய சுபவீ தலைமையில்

                சாதிகள் மறந்து சமத்துவ மாக

சங்கமம் ஆகிச் சிந்தை மகிழ

                சிரித்தோம் மகிழ்ந்தோம் சிறுவிளை யாட்டும்

இதுதான் எங்கள் திராவிடக் குடும்பம்!

பாட்டுகள் பாடினர்; பலப்பல கேள்விகள்

                பயனுற விழுந்தன, பதிலும் உடனே!

சீட்டுகள் வைத்துச் சதுரம் செய்தனர்

                சிறுவால் ஒட்டிக் கழுதை காட்டினர்

போட்டியில் சிறியவர், பெரியவர் இணைந்து

                போட்டனர் ஆட்டம் ; போடும் போதே

ஆட்சியில் வடமொழி ஆட்டம் என்றால்

                எதிர்ப்போம் களத்தில் என்றது உச்சம்.

Pin It