இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை. நிகழ்த்தியது சிங்கள இனவெறி இராஜபக்சே அரசு.

ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் அமெரிக்கா கொண்டு வந்த போது, அத் தீர்மானத்தில் இலங்கைக்குச் சாதகமாக திருத்தங்கள் செய்து இராஜபக்சேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டது முந்தைய காங்கிரஸ் அரசு.

இப்பொழுது இலங்கை அரசின் மீது சாட்டப்பட்டிருக்கும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு ஒரு குழுவை அமைத்துள்ளது- ஐ.நா. மனித உரிமை ஆணையம்.

இக்குழுவினர் இலங்கைக்குள் நுழைய இராஜ பக்சே அரசு (விசா) அனுமதி கொடுக்கவில்லை.

அதனால் ஈழத்தில் நடந்த போரின்போது பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி, அகதிகளாகப் பிறநாடுகளில் தஞ்சம் அடைந்தவர் களிடம் அவர்கள் வாழும் நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்த  அக் குழு முடிவுசெய்துள்ளது.

அந்த அடிப்படையில் ஈழத்தில் இருந்து இந்தியாவுக்ககுள் குறிப்பாகத் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களிடம் விசாரணை நடத்த ஐ.நா. விசாரணைக்கு குழு இந்தியா வர அரசிடம் அனுமதி கோரியபோது, மோடி அரசு அதை ஏற்கவில்லை. விசா வழங்க அனுமதி மறுத்துவிட்டது பா.ஜ.க. அரசு.

இராஜபக்சே மீதான இனப்படுகொலை குறித்த போர்க்குற்றம் இன்று சர்வதேச பிரச்சினையாக,மனித நேய அடிப்படையில் பார்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

மோடி அரசு ஐ.நா. விசாரணைக் குழுவிற்கு விசா மறுத்ததன் மூலம் மனிதநேயத்தைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டது.

முந்தைய காங்கிரஸ் மன்மோகன்சிங் அரசு அன்று என்ன செய்ததோ, அதை அப்படியே பா.ஜ.க. அரசு இன்று செய்து கொண்டு இருக்கிறது.

பா.ஜ.க.வின் தமிழகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மோடி பிரதமரானால் ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஓடி ஓடிப் பேசினார்கள். இப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

இலங்கை நடத்திய இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக இந்தியா வரவிருக்கும் விசாரணைக் குழுவிற்கு அனுமதியளித்து, முழு ஒத்துழைப்புத் தரவேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அதைச் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

குற்றம் செய்வதற்குத் துணைபோவது மாபெரும் குற்றம். மோடி அரசு இதனை உணர வேண்டும்.

Pin It