thamilyendhi 350எழுதுவதெல்லாம் கவிதைகள் ஆகிவிடுமா என்றொரு கேள்வி பிறக்கிறது.

திரும்பிய பக்கமெல்லாம் கவிதை எழுதுபவர்கள் இருந்தாலும், அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே தனித்துவம் பெறுவார்கள். அவர்களின் கவிதைகள் அவர்களை அடை யாளம் காட்டும்.

ஒரு கவிஞன் இப்படி எழுதினான், ‘சரி...எனக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்! வா, என்னோடு...நீயும்...பீ அள்ள’. மரபை உடைத்துக் கொண்டு வந்த இந்தப் புதுக்கவிதையில் சமூகம் இருக்கிறது. மனிதனின் அவலம் இருக்கிறது. கோபம் இருக்கிறது. சமூக நீதிக்கான சிந்தனை இருக்கிறது. இக்கவிதையில் இருக்கும் உணர்வு கவிஞனை அடையாளம் காட்டுகிறது.

கவிஞர் தமிழேந்தியும் அப்படித்தான். நல்ல மரபுக் கவிஞர். புதுக்கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். இவரின் கவிதைகளின் தொகுப்பு ‘தமிழேந்தி கவிதைகள்’.

“கந்தக நெருப்பைக் காய்ச்சிய ஓடையாய்க்

கனலைச் சுமந்த பேச்சு

எந்தப் பகைவரும் சிந்தனைக் கணையால்

கொந்தும் குறுவாள் பாய்ச்சு

சிந்தையில் சோர்வோ நடுக்கோ இல்லை

செயலில் புலியின் வீச்சு

தந்தை பெரியார் மந்திரச் சொல்இது

தமிழனை எழுப்பிய மூச்சு”

ஆரியப் பகையால் வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியாரை விரல் நீட்டிக் காட்டும் வீரார்ந்த கவிஞரின் வரிகள் இவை.

“நந்தனின் சாம்பலை உடலெல்லாம் பூசியும்/ சம்பூகன் மண்டையைக் கலயமாய் ஏந்தியும்/ பிச்சை எடுத்து வயிறு கழுவிய/ பரதேசிப் பண்டாரப் பார்ப்பனக் கும்பல்/ இன்று & சூலம் ஏந்தத் துணிந்தது எப்படி?” & சாதியத்தால் ஒடுக்கி, சனாதனத்தை நிலைநிறுத்தி இராமராஜ்யம் காணநினைக்கும் கமண்டலம் ஏந்திய பார்ப்பனக் கும்பல், சூலம் ஏந்தத் தொடங்கிவிட்டார்கள். சூலத்தின் மூன்று கூர்முனைகளில் ஒன்று கிறித்துவனுக்கு, ஒன்று இசுலாமியனுக்கு, ஒன்று இந்து மறுப்பு நாத்திகனுக்கு. வஞ்சக நரிகளை அம்பலப்படுத்துகிறது & கவிஞரின் இந்த வரிகள்.

சாதிக்கு எதிராக “நெருப்பில் வெந்து, முற்றாகப் பொசுங்கட்டும் சாதி” என்ற வரி இயல்பாகத் தோன்றினாலும், வலிமையாக வந்து விழுந்திருக்கிறது.

பார்ப்பனியத்தால் தீட்டானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். இதில் பெண்களுக்குச் சாதிபேதம் ஏதும் இல்லை. பெண் விடுதலை குறித்து வாய்கிழியப் பேசிக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவர்கள் அடிமைகளாகவே கருதப்படுகிறார்கள். இதோ பெண் கேட்கிறாள் :

“கருவறையில் உயிர் சுமக்கும் நாங்கள்

கருவறைக் கல்லைத் தொடுவது கேடா?

அருவருப்பானது உங்கள் நீதி

அடச்சே ! வெட்கம் இது ஒருநாடா?”

நியாயம்தான்! இப்பொழுது கவிஞர் தமிழேந்தி சொல்கிறார் :   “ ஓடு பெண்ணே ஓடு பெண்ணே

உச்சிப் புகழின் வெற்றிகள் எல்லாம்

உனக்கே என்று ஓடு

கச்சை கட்டிக் கவிழ்க்க நினைப்பார்

காறித் துப்பி ஓடு”

அவலத்தைச் சொல்வது மட்டும்தான் கவிஞனின் வேலை இல்லை, ஆக்கத்திற்கும் வழிகாட்டல் வேண்டும். அதை இங்கே சரியாகச் செய்திருக்கிறார் கவிஞர்.

ஓர் இனத்தின் மொழி அழிந்தால் அந்த இனம் அழியும். பல மொழிகளை, பன்முகப் பண்பாடுகளைக் கொண்டிருக்கும் இந்நாட்டில் ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற வல்லாண்மையில் இந்தியை ஆட்சிமொழியாக்கத் துடிக்கிறது பார்ப்பனக் கூட்டம். 1938,1965 மொழிப்போர் தமிழர்களின் உரிமைப்போர்.

கவிஞர் சொல்கிறார்,

 “மொழிப் போர் இன்னும் முடியவில்லை!

 இருள் மூடிய வாழ்வும் விடிய வில்லை”.

 எழுடா தமிழா எழுடா

 இன்னொரு மொழிப்போர் தொடங்க எழு”

என்று சொன்னதோடு, காரணத்தையும் சொல்கிறார்,

“செத்த மொழிக்கா செல்வாக்கு

சீச்சீ...இந்தி மொழிக்கா பல்லக்கு!”

செத்த மொழி சமஸ்கிருதம். அண்மையில் மத்திய மோடி அரசால் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட ஆணை பிறப்பித்துள்ள நிலையில் கவிஞர் தமிழேந்தியின் இவ்வரிகள் காலத்தால் ஒன்றிவிடுவதைக் காணலாம்.

நூலின் தொடக்கத்தில் சங்கப் பாடல்களான புறநானூறு 4 பாடல்கள், நற்றினை & குறுந்தொகையில் ஒவ்வொரு பாடல்கள், திருக்குறள் 10 பாடல்கள் என்று எடுத்து, அவைகளுக்கு உரை சொல்வதுபோல் எளிய இனிய கவிதைகளைப் படைத்திருக்கும் பாங்கு அருமைக்குரியதாக இருக்கிறது.

இனநலம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும், கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, இந்து மத மறுப்பு, ஆரிய எதிர்ப்பு, மொழி உரிமை, பெண்விடுதலை, அரசியல் சார்ந்த கவிதைகளுடன், மொழி அறிஞர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்த கவிதைகளையும் நூலில் காணமுடிகிறது.

கவிஞர் தமிழேந்தி பிஞ்சுக் குழந்தைகளையும் கூட விடவில்லை. எதிர்காலத்தின் வித்துகள் அவர்கள். இளமையில் சொல்லல் கல்லில் பதிவு அல்லவா!

வள்ளுவரை, மார்க்சை, பெரியாரை, அம்பேத்கரை, புத்தரை, வ.உ.சி.யை, காமராசரை, புரட்சிக் கவிஞரை எல்லாம் அறிமுகம் செய்கிறார் குழந்தைகளுக்கு.

“பு-த்தகத்தைப் படித்துப் படித்துப் புதைந்து போகாதே, பள்ளிக்கூடப் படிப்பு மட்டும் உனக்குப் போதாது”

“பெண்ணும் ஆணும் எதிலும் இணையாம் எண்ணம் வளர்த்திடு...மண்ணில் பெண்கள் ஆணைவிடவும் மட்டம் என்பது திண்ணைப் பேச்சு மூடர் சேர்ந்து செப்பும் பொய்யது”

“நல்ல தமிழில் பேசப்பழகு” & “சொல்லில் பிறசொல் கலப்பை நீக்கு”

“முன்னோர் சொன்னவை முற்றிலும் உண்மை

என்றே எதையும் ஏற்காதே

மூடத் தனத்தில் மூழ்கி உன்தன்

முயற்சி தன்னில் தோற்காதே”

இவை போன்ற வரிகளால், குழந்தைகளுக்கு அவர்களின் பிஞ்சு சிந்தனையில் சமூக விதைகளை மென்மையாகத் தூவ முனையும் கவிஞரின் உணர்வு போற்றற்குரியது.

மரபுக்குரிய விருத்தப்பாக்கள், வெண்பாக்கள், சந்தப்பாக்கள் இவைகளுடன் புதுக்கவிதைகளையும் உள்ளடக்கிய “தமிழேந்தி கவிதைகள்” என்னும் இந்நூலில், 30 குழந்தைப் பாக்களுடன், 194 பயனுறு கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர் தமிழேந்தி.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், கவிஞர் தமிழ்ஒளி வழியில் கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் & அமைய வேண்டும் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு.

தமிழேந்தி கவிதைகள்

விலை : ரூ.100/&

வெளியீடு: மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

19, முருகப்பா தெரு மாடி,

சேப்பாக்கம், சென்னை & 5.

தொலைபேசி : 044&2852286

94434 32069, 91711 14048

Pin It