காவிரியில் கல்லணையைக் கட்டியவர் யாரெனக் கேட்டால் பளிச்செனச் சொல்லி விடுவார்கள், கரிகாலன்தான் என்று. இன்று பெரும்பான்மையினர் இப்படிச் சொன்னாலும் முக்கியமானவர்கள் இதைப்பற்றிப் பேசாமல் இருக்கிறார்கள் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. யார் அவர்கள்?
வரலாற்றுப் பேராசிரியர்களான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், டாக்டர் மா.இராசமாணிக்கனார், பேராசிரியர் க.அப்பாத்துரையார், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், மயிலை சீனி.வேங்கடசாமி, பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் போன்ற சோழர்கள் குறித்த ஆய்வாளர்கள் ஏன் கரிகாலன் கட்டிய கல்லணை குறித்து எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தார்கள்?
கல்லணையைக் கட்டியவன் கரிகாலன்தானா?
பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணியன் சொல்கிறார், சங்ககாலத்தில் கரிகால் சோழர்கள் மூவர் இருந்தார்கள் என்று. அதாவது சங்கப் பாடல்கள் மூலம் பாடப்பட்டவன் முதல் கரிகாலன். பொருநராற்றுப்படையின் கரிகாலன் இரண்டாம் கரிகாலன். பட்டினப்பாலைக் கரிகாலன் மூன்றாம் கரிகாலன் என்று அவர் தன் ஆய்வு நூலில் சொல்கிறார் (கரிகாலர் மூவர்).
இந்தக் கூற்றை மறுக்கிறார் பேராசிரியர் மா.இராசமாணிக்கனார். இரண்டு கரிகாலன்தான் சங்ககாலத்தில் இருந்தார்கள் என்று உறுதி செய்கிறார் (சோழர் வரலாறு). இவரின் கருத்தை கா.அப்பாத்துரையார் ஏற்றுக் கொண்டு, அதற்கு வலிமை அவர் சேர்க்கிறார். (தென்னாட்டுப் போர்க்களங்கள்).
சோழன் கரிகாலன், வெண்ணிப் பறந்தலைப் போரில் சேரன் பெருஞ்சேரலாதன் நெஞ்சில் வேலெறிந்து, அவ்வேல் முதுகுப்புறம் வந்ததால் நாணி வடக்கிருந்து அம்மன்னன் உயிர்நீத்தான் என்பதைப் புறநானூறு கூறுகிறது. இந்தச் சோழன்தான் முதல் கரிகாலன் ஆவான்.
புலவர்கள் கழாத்தலையார் (புறம்: 65), வெண்ணிக் குயத்தியார் (புறம்:66), பரணர் (அகம்: 125, 246, 376), மாமூலனார் (அகம்: 55), நக்கீரர் (அகம்: 141) உள்ளிட்டப் புலவர்கள் பாடிய இந்த அகப் புறப்பாடல்களால் சோழன் கரிகாலனின் வீரம் உள்ளிட்ட செரிந்த செய்திகளை நாம் அறிகிறோம். ஆனால் சங்கப்பாடல்கள் எவையொன்றிலும் கரிகாலன் கல்லணை கட்டினான் என்றோ அல்லது கல்லணை பற்றிய சிறு குறிப்போகூடக் காணக் கிடைக்கவில்லை. இக்கரிகாலன் காலம் கி.மு.2 ஆம் நூற்றாண்டு என்பார் மா.இராசமாணிக்கனார்.
இனி இரண்டாம் கரிகாலனைப் பார்ப்போம். இம்மன்னனின் இயற்பெயர் திருமாவளவன். 'பத்துப் பாட்டு' நூல் வரிசையில் இரண்டாம் பாட்டாக இருப்பது 'பொருநராற்றுப் படை'. 248 அடிகள் கொண்ட இந்த ஆற்றுப்படை நூலைப் பாடியவர் பெயர் முடத்தாமக்கண்ணியார். அதுபோல பத்துப்பாட்டின் ஒன்பதாம் பாட்டாக வருவது 'பட்டினப்பாலை'. 301 வரிகளைக் கொண்ட இந்நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இவ்விரு நூல்களுக்கும் பாட்டுடைத் தலைவன் கரிகால் வளவன் தான். இந்த இரு பாட்டிலக்கியமும் காவிரியின் சிறப்பு, சோழநாட்டு வளம், துறைமுகம், உழவர் குடிச்சிறப்பு, திருமாவளவன் ஆட்சி ஏற்றல், திருமாவளவனின் போர்கள், ஆக்கப்பணிகள் போன்றவைகளைப் பற்றிப் பேசுகின்றன. காட்டை அழித்து நாடாக்கி, குளங்கள் பல தோண்டி, நாட்டின் வளத்தைப் பெருக்கியவன் கரிகாலன் ( 283-285) என்று சொல்லும் இந்நூலில், ஏன் காவிரியில் கல்லணை கட்டிய செய்தி வரவில்லை. இவன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு.
இவை தவிர நச்சினார்க்கினியர், இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், அடியார்க்கு நல்லார், அரும்பதவுரைக்காரர், பேராசிரியம், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்கள் கரிகாலன் கல்லணை கட்டினான் என்று எங்கும் சுட்டிக் காட்டவில்லை. இறையனார் அகப்பொருளுரையில் கூட இச்செய்தி கூறப்பவில்லை.
1) முதலாம் கரிகாலனைப் பேசும் சங்கப் பாடல்களில் அவன் கல்லணை கட்டியதாகச் செய்தியில்லை. 2) பொருநராற்றுப்படை / பட்டினப்பாலையிலும் கல்லணையைக் கரிகாலன் கட்டினான் என்ற செய்தியில்லை. 3) சங்கநூல்களின் உரையாசியர்களும், இன்றைய வரலாற்றுப் பேராசிரியர்களும் கல்லணை பற்றிப் பேசவில்லை.
அப்படியானால் காவிரியாற்றில் கல்லணை கட்டிய சோழ மன்னன் யார்? வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் இவர்கள்தான் இதற்கான விடையைக் கண்டு சொல்ல வேண்டும், உரிய சான்றுகளுடன்.
- எழில்.இளங்கோவன்