இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான தூண்டுதலை நமக்கு வழங்கிய தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களுக்கு - குறிப்பாக அண்ணன் சீமானின் அருமைத் தம்பிகளுக்கு - கோடான கோடி நன்றிகள்.
"தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நாங்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?. திராவிடக் கட்சிகள் தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்துவிட்டன. திராவிடம் என்பதே தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தெலுங்கர்கள் அதாவது வந்தேறிகள் கண்டுபிடித்த ஒன்று. தமிழ் மக்கள் மீட்சி அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தமிழ்த் தேசியம் தான். இதை விட்டால் வேறு மாற்றுவழியே கிடையாது" என்று கையில் உருட்டுக்கட்டையோடு சிக்ஸ்பேக் சீமானின் தம்பிகள் மிரட்டுகின்றார்கள். ராஜராஜ சோழனையும், மற்ற பிற தமிழ் மன்னர்களையும் தமிழ்த் தேசியத்தின் நாயகர்களாகவும், மற்ற மொழி பேசிய மன்னர்களை வில்லன்களாகவும் சித்தரிக்கின்றார்கள். உண்மை என்னவென்று தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. எனவே கைநடுங்க, கால் நடுங்க, உயிர் பயத்தோடு இந்தக் கட்டுரையை எழுதுகின்றோம்!. தமிழ்க்குடிதாங்கி முருகன்தான் நம்மை எல்லாம் சீமானிடம் இருந்தும், அவரது தம்பிப் பிள்ளைகளிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டும்!.
தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாடு என்று சொல்கின்றார்களே... அப்படி என்ற ஒன்று இங்கே இருந்ததா? அதுவும் பொதுவான தமிழர் பண்பாடு என்ற ஒன்று இங்கு இருந்ததா? நிச்சயமாக வரலாற்றில் அப்படி ஒன்று எப்போதும் இருந்ததில்லை. தொல்காப்பியம் கூட தமிழரின் நிலப்பகுதிகளை ஐந்தாகப் பிரித்து ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் கருப்பொருள் வேறு, உரிப்பொருள் வேறாகப் பிரித்துள்ளது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஓர் உணவு வகையும், தெய்வமும், ஒழுக்கமும் கூறப்பட்டுள்ளது. பொதுவான வாழ்க்கை முறை என்ற ஒன்று தொல்காப்பியக் காலத்திலேயே கிடையாது என்பதுவே உண்மை. ஒருவரது வாழ்நிலையே அவரின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. வெவ்வேறு வாழ்நிலைகளில் வாழும் மக்கள் வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களாகத்தான் நிச்சயம். இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தமிழ்பேசும் மக்களிடையே பல்வேறு அரசுகள் தோன்றுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் போயிருக்கும். அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இருந்திருக்காது.
நாம் தமிழக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அனைத்து இடங்களிலும் இரண்டுவகையான பண்பாடுகள் நிலவியதை சற்றென உணர்ந்து கொள்ளலாம். ஒன்று மேட்டுக்குடி பண்பாடு, மற்றொன்று சாமானிய மக்களின் பண்பாடு. உதாரணமாக உணவுப் பழக்கத்தை எடுத்துக்கொண்டால் கூட “தமிழ் மக்களில் தாழ்ந்த நிலையில் இருந்த சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் கூழோ, கஞ்சியோதான் குடித்து வந்ததாக செய்திகள் உள்ளன. அதுவும் கூட முழுவயிற்றுக்கும் கிடைத்தாகத் தகவல் இல்லை. உணவு உண்ட பின்னர் அந்த உணவு செரிமானம் அடைவதற்கு உயர் சாதித் தமிழர்கள் சில மருந்து வகைகளைத் தின்பண்டம் போலத் தயாரித்து உண்டுவந்த வேளையில் “கும்பி கருகுது கடல் காயுது” என்று கீழ்நிலையில் இருந்த தமிழ்மக்கள் கதறிக் கொண்டிருந்த பதிவுகளையும் காண்கின்றோம். சுமார் 1500 ஆண்டுகாலத் தமிழ் நாட்டின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சம் பற்றிய செய்திகள் பதிவாகி உள்ளன. அவற்றில் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனதாகவும் ஒரு வேளை உணவுக்காகத் தங்கள் மானத்தையே விற்று விட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. இன்றைய காலத்தில் கூட சுவையான சைவ உணவு வகைகளைத் தயாரிப்பவர்கள் தஞ்சாவூர் பார்ப்பனர்களாக உள்ளனர். அசைவ உணவு வகைகளைத் தயாரிப்பதில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் உள்ளனர். சுவையான இனிப்பு வகைகளைத் தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்களும், திருவையாற்றுப் பகுதிப் பார்ப்பனர்களும்தாம் முன்னணியில் உள்ளனர். பெரும்பாலான தமிழ்சாதிகள் வெறும் கூழுக்கே ஏங்கி நின்றது வரலாறாகப் பதிவாகி இருக்கையில், பாலும் தேனும் நெய்யும் கலந்த பலகாரங்கள் தயாரித்து வந்ததை மொத்த தமிழ்ச்சாதியினரின் உணவுப் பண்பாடு என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
உணவுக்கே வழியில்லாத தமிழ்ச் சாதிகளைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தங்களைத் தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகள் ஆனார்கள் என்கிற குறிப்புகள் பல உள்ளன. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்-2004 என்ற தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீட்டில் பக்கம் 202இல் குடும்பம் குடும்பமாக 100 தமிழ்ச் சாதி ஆண்களும் பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டதற்காக ஆவணம் உள்ளது.
இந்த அடிமைகள் பொருள்களைப் போல கருதப்பட்டனர். அவர்களை விற்கும்போது அல்லது தானமாக வழங்கும்போது நிலத்தைப் பதிவு செய்வது போல பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. அடிமை விற்பனை பதிவு ஆவணத்திற்கு “ஆள்விலை பிரமாண இசைவுத்தீட்டு” என்று பெயர். இடைக்குடி மக்களை அடிமைகளாக வழங்கும்போது முத்திரைகள் இட்டு வழங்கி உள்ளனர். “திருவிலச்சனை செய்து சந்த்ராதித்தவரை இவ்விடையாரை நாம் கொள்ள” என்று குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முத்திரை என்பது அவர்கள் உடம்பின் மேல் இடப்படும் இலக்கமாகும். இதனை சூட்டுகோல் கொண்டோ அல்லது வேறு எப்படியோ இட்டு வந்தனர். கோவில் அடிமைகளுக்கு ஒரு விதமாகவும், அரண்மனை அடிமைகளுக்கு வேறு விதமாகவும் முத்திரை பதித்துள்ளனர்.
பெரும்பாலான தமிழ்மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியின்றி உயிரை விட்டதற்குக் காரணம் தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ அல்ல; இந்த மண்ணை ஆண்ட அதிகார வெறிபிடித்த தமிழ் மன்னர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் இந்தத் தமிழ் மன்னர்களை அனைத்து மக்களும், தங்களுக்கான மன்னர்களாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. “சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைத் தங்களுடைய மன்னர்கள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமல்லாது தங்களை அழிக்க வந்த கொடுமையான விரோதிகள் தான் மூவேந்தர்கள் என்று வெறுத்தனர். இதனைப் புறநாறூற்றின் 270 ஆம் பாடல் தொடங்கி 359 ஆம் பாடல் வரை உள்ள பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. நேற்றுவரை எங்களைப் போன்ற பழங்குடிகளாக இருந்த நீங்கள் இன்று வம்ப வேந்தர்களாகி எங்களை அதிகாரம் செய்யப் பார்க்கிறீர்களா? என்று எதிர்ப்புக்குரல் எழுப்பும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன”.
வர்க்க வேறுபாடுகள் முதன்மை அடையாத குல அமைப்பில் சொத்துரிமை தனியாருக்கு இன்றி மொத்த சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. அத்தகைய சமூகங்களில் தலைமைப் பொறுப்பு என்பது சுழற்சி முறையில் சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இத்தகைய பொதுத்தன்மைகளை நீக்க முயன்ற வேந்தர்கள் ‘பொது நீக்கி’ ஆட்சி செய்ய முயன்றார்கள் என்று புறநானூற்றுப் (8,51, 189) பாடல்கள் குறிக்கின்றன. இவர்கள் குல அமைப்பின் அங்கத்தினர்கள் அனைவரின் உரிமையை நீக்கி அந்த இடத்தில் தனிநபர் உரிமையை நிலைநாட்டினர். இத்தகைய மாறுதல்களை இயல்பானதாகக் காட்டுவதன் ஒரு பகுதியாகத் தங்களை மற்ற குலங்களிலிருந்து வேறுபட்டு உயர்ந்தவர்கள் எனக் காட்டுவதற்கு வேதங்கள், பார்ப்பனர்கள் உதவியுடன் யாகங்கள் செய்து தங்களை ஆரியகுலம், சந்திரகுலம் என்றும் பல்வேறு ரிஷிகளின் கோத்திரங்கள் வழிவந்தவர்கள் என்றும் பிரகடனப்படுத்தினர். சங்கப் பாடல்களில் வேதம், வேள்வி, பார்ப்பனர்கள் என்று வரும் இடங்கள் அனைத்தும் தமிழ் வேந்தர்களுடன் சேர்ந்தே வருவதை, ‘பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுது’ இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ போன்றவர்களைப் பாடும் பாடல்கள் வழியாகத் தெளிவாகப் பார்க்கலாம்.
நீங்கள் இன்றும் இந்த மானங்கெட்ட மன்னர்களின் வாரிசுகளை அரசியல் கட்சிக் கூட்டங்களிலும், சாதிக்கட்சிகளின் மாநாடுகளிலும் பார்க்கலாம். தங்களை வெட்கமே இல்லாமல் சத்திரியப் பரம்பரை என்றும், ஆண்ட பரம்பரை என்று கட்அவுட்டர்களிலும், பிளக்ஸ் பேனர்களிலும் போட்டுக் கொள்கிறார்கள். அவர்களிலும் பலபேர் தமிழ்த் தேசியவாதிகளைப் போல திராவிடம் என்ற கருத்தியலை வன்மத்தோடு எதிர்ப்பவர்கள் தான். சரி இந்த நில உடைமை தமிழகத்தில் எப்படி தோற்றம் பெற்றது என்று பார்ப்போம்.
தமிழகத்தின் நீண்ட கால வரலாற்றை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று அவைதிக மதங்களான பெளத்தமும், ஜைனமும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த அவைதிக எழுச்சிக்காலம். இது சங்க காலத்திலிருந்து கிட்டத்திட்ட ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலம். இந்தக் காலத்தின் சமூக அமைப்பு பெரும்பாலும் இனக்குழுக்களின் சுதந்திர வாழ்க்கை எனலாம். தனியார் நிலவுடமை என்பது ஆதிக்கப் பொருளியலாக வளரவில்லை. சாதி அமைப்பு என்பது உறுதிப்படவில்லை. சுருக்கமாகக் கூறினால் தீண்டாமை என்பது உறுதிப்படவில்லை. மற்றொன்று வைதீகம் எழுச்சி பெற்ற காலம். இது 9 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரையில் நீண்டது. இக்காலம் நிலத்தில் தனியார் உடைமை தோன்றியது முதல் நிலம் பண்டப் பொருளாக மாறுவது வரை தொடர்ந்தது. வைதீகம் என்பது சைவ சித்தாந்தத்துடன் கலந்து சமூக அமைப்பில் பார்ப்பன- வேளாள கூட்டுச் சக்திகள் கல்வியைக் கையகப்படுத்தி இருந்ததால் 20ஆம் நூற்றாண்டிலும் கூட அவர்கள்தான் இலக்கியவாதிகளாகவும், தத்துவவாதிகளாகவும், வரலாற்றாளர்களாகவும் இன்னும் சொல்லப் போனால் மொத்தத் தமிழ்ச்சமூகத்தின் குறியீடாகவும் கருதப்பட்டனர்.
இன்றும் கூட அதே மேட்டுக்குடி சாதிகளைச் சார்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தமிழ்த்தேசியம் பேசுகின்றனர் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியம் பேசுபவர்களில் 99.99% பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதையும், குறைந்த பட்சம் சாதிவெறி அரசியலைக்கூட கண்டிக்கத் திராணியற்ற, அப்படியே கண்டித்தாலும் சாதியின் பெயரைச் சொல்லி வெளிப்படையாக கண்டிக்கத் திராணியற்ற அப்பட்டமான பிழைப்புவாதிகள் என்பதையும் பார்க்க வேண்டும்.
தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பட்டமான பார்ப்பனிய தாசன்கள் என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. பல்லவர் காலம் பற்றிய வரலாற்றுச் சான்றுகளாக செப்பேடுகள் 30ம், கல்வெட்டுகள் சுமார் 200 வரையிலும் கிடைக்கின்றன. பாண்டியர் செப்பேடுகள் 10ம், சோழர்காலச் செப்பேடுகள் சிலவும் கவ்வெட்டுகள் பத்தாயிரம் வரையிலும் கிடைத்துள்ளன. சோழர் கல்வெட்டுகளில் சுமார் 1500 முதல் 2000 வரை முழுமையாக அச்சில் வந்துள்ளன. இதில் பல்லவர்- பாண்டியர் செப்பேடுகள் சம காலத்தையாக உள்ளன. இந்தச் சான்றுகளின் அடிப்படையில் வைத்து அக்காலத்தைக் கணித்தால் 1) வடநாட்டுப் பார்ப்பனர்கள் (பீகார், காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) நிலவுடைமையாளர்களாகத் தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட காலம் இது கி.பி 6, 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். 2) தென்னிந்திய- தமிழ்ப் பார்ப்பனர்களும் நிலவுடைமையாளர்கள் ஆனது கி.பி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் 3) தமிழகத்து உயர் சாதியைச் சேர்ந்த வெள்ளாளர்கள் உள்ளிட்டோர் நிலவுடைமையாளர்கள் ஆன காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்று மூன்றாகப் பிரிக்கலாம்”.
இப்படி நில தானம் பெறுவதற்காக பார்ப்பனர்களுக்கு சில தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருந்தன. நிலதானம் பெற்றவர்கள் பார்ப்பனர்களாக மட்டுமே அதாவது (சந்தியாவதனம்) அந்தித் தொழுகைகள் இரண்டும் ஓம்புபவன், முத்தீ (கார்ஹபத்யம், ஆஹவனிகம், தக்ஷிணாக்கிணி) வளர்ப்பவன், நான்கு வேதங்களைக் காத்தவன், ஐந்து வேள்விகளைச் செய்பவன், ஆறு தொழில்கள் அதாவது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் போன்ற அவைதிகக் கருமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது.
இத்தகைய பார்ப்பன கூட்டமைப்புதான் சபை எனப்பட்டது. பல்லவர் செப்பேடுகள், பாண்டியர் செப்பேடுகள் ஆகிய 40 செப்பேடுகளில் சுமார் 15000 பார்ப்பன குடும்பங்கள் இந்த நிலதானத்தைப் பெற்றுள்ளன என்று குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் குடவோலை முறை என்பது தமிழக வரலாற்றுப் பாட நூல்களில் குதூகலத்துடன் சொல்லப்படுகின்ற ஜனநாயக் முறை என்பது பார்ப்பனர்களுக்குள் நடக்கும் தேர்வுமுறைதான். அதிலும் குறிப்பிட்ட நிலச் சொத்தும், வேத, வேதாங்கம் புலமையும் நிரம்பிய சனாதானக் காவலர்களான பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கலந்துகொள்ள இயலாது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் பொது நிர்வாகம் (சிவில் நிர்வாகம்) இவர்களால்தான் நடத்தப்பட்டது. தானம் அளிக்கப்பட்ட ஊர்களுக்குள் அரசனின் படைகள் கூட நுழையக்கூடாது என்ற தடை கண்டிப்பாக அமுல் செய்யப்பட்டது.
தமிழ்மன்னர்கள் தமிழுக்குச் செய்த பணியைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் போலவே அவர்களது வழிகாட்டியாக இருக்கின்ற தமிழ்மன்னர்களும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ‘கதையை’ப் பார்ப்போம். பார்ப்பனர்களை குழந்தைப் பருவத்திலிருந்து பயிற்றுவிக்கும் வடமொழி கல்வி நிலையங்கள் என்பன பல்லவர், பாண்டியர், சோழர் காலங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவை தமிழ்நாடு முழுமையும் இருந்தன. இந்த கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் தமிழ் அரசர்களால் மானியங்கள் அளிக்கப்பட்டன. தென் ஆற்காடு மாவட்டம் இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் இருந்த ஒரு கல்லூரியில் முதுநிலை மாணவர்கள் 70 பேரும் இளநிலை மாணவர்கள் 270 பேரும் பயின்றனர். ஆசிரியர்கள் 14 பேரும் இருந்தனர். இதில் ரூபாவதார இலக்கணத்தை 40 பேர் படித்தனர். ஏனையோர் மூன்று பிரிவினராக ரிக் வேதத்தை 75 பேரும், யஜூர் வேதத்தை 75 பேரும், வாஜசனேய சாம வேதத்தை 20 பேரும், சண்டோக சாம வேதத்தை 20 பேரும், தலவாகர சாம வேதத்தை 20 பேரும், அதர்வ வேதத்தை 10 பேரும், எஞ்சிய 10 பேர் பெளதாயன கிருகஷ்ய சூத்திரம், பெளதாயன கல்ப சூத்திரம், பெளதாயன ஞான சூத்திரம் ஆகியவற்றையும் படித்தார்கள். இளநிலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது.
ஆசிரியர்களுள் கூடுதலான ஊதியமாக நாளொன்றுக்கு 1.5 கலம் நெல் கொடுக்கப்பட்டது . மீமாம்சமும் வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு 1 கலமும், மற்றவர்களுக்கு ஒரே அளவாக 0.25 கலமும் கொடுக்கப்பட்டது. இங்கே படித்தவன், சொல்லிக் கொடுத்தவன் அனைவரும் பார்ப்பனர்களே ஆவார்கள். இராஜராஜனின் மகன் இராசேந்திர சோழன் தன் குருவான பீகார் பார்ப்பனர் சர்வசிவ பண்டிதருக்கும், அவருடைய மாணவர்கள் (வட மொழி மாணவர்கள்) பலருக்கும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் நெல்லும், பொன்னும் வழங்கியதைக் கூறும் கல்வெட்டுகள் ஜயங்கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ளன. இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் திருவெற்றியூரில் ஒரு கல்லூரியும், சோழ மன்னர் இராசேந்திரனால் வேப்பத்தூர், திருமுக்கூடல், திருபுவனி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் பார்ப்பனர்கள் கற்பதற்கென்றே வடமொழிக் கல்லூரிகள் அரசர்கள் உதவியுடன் தொடங்கப்பட்டன. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவோ, தமிழ்மக்களின் கல்வி அறிவுக்காகவோ ஒரு துரும்பைக்கூட எந்தத் தமிழ் மன்னனும் தூக்கிப் போடவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.
உண்மையில் இப்படி புறக்கணிக்கப்பட்ட தமிழ்மக்களுக்குக் கல்வி அறிவு போதித்தது சைன, பெளத்த மதமே. பழங்குடி மக்களின் பெரும்பகுதியினரைக் கல்வி கற்றவர்களாக மாற்றியது இந்த மதமே. சங்க காலத்திலிருந்தே தமிழ்க்கல்வி என்பது சமண, பெளத்த மதத்தினரைச் சார்ந்துதான் இருந்துள்ளது என்பதைத் தமிழ்நாட்டில் கிடைக்கும் ‘பிராமி’ கல்வெட்டுகளும் மணிமேகலை, திருக்குறள், நாலடியார் பழமொழிநானூறு போன்ற நூல்களிலுள்ள செய்திகளும் தெரிவிக்கின்றன. தொல்காப்பியம் தொடங்கி யாப்பெருங்கலம், யாப்பெரும்கலக்காரிகை, வீரசோழியம், நன்னூல், நேமிநாதம் போன்ற இலக்கண நூல்களும் தமிழ்க்காப்பியங்கள் பலவும் தமிழ்க் கல்விக்கு அடிப்படையான நிகண்டு நூல்களும் ஜைனர்களால் தான் எழுதப்பட்டன. எனவே தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி என்பது சமண, பெளத்தர்களால் தான் தழைத்து வளர்ந்து வந்தது என்று உறுதியாகக் கூறலாம். வருணாசிரம, சாதிய தர்மத்தை வளர்த்து வந்த உயர்சாதித் சூத்திரத் தமிழர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தைத்தான் ஆதரித்தனர் என்பதற்கு 50க்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளில் காணும் குறிப்புகளே சான்றாகும். வருணாசிரம அமைப்பிற்கு எதிர்ப்பு ஏற்பட்டு, தமிழ் மக்களின் மீதான இவர்களின் ஆளுகை கேள்விக்குள்ளாகி, சிதைவடையத் தொடங்கிய காலத்தில் தான் அந்த அதிகாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகளில் ஒன்றாகத்தான் தமிழ்மொழியிலான கல்விக்கு ஓர் இடத்தை ஒதுக்க ஆரம்பித்தனர்.
தமிழ்நாட்டை ஆண்ட இந்த தமிழ்மன்னர்கள் யாரும் தங்களுடைய குருவாக ஒரு தமிழனை எப்போதும் வைத்துக் கொண்டதில்லை. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய முதலாம் இராசராசனின் குரு வட இந்தியப் பார்ப்பனர் ஈசான் சிவ பண்டிதர் என்பவர். படைத்தலைவர் கிருஷ்ணன், இராமன் என்ற மும்முடிச் சோழ பிரமாதிராயர் என்ற பார்ப்பனர். இராசராசனுக்குப் பின்னர் அரசாண்ட (கி.பி1300) எல்லா சோழ அரசர்களுக்கும் குருவும் படைத் தலைவர்களும் பார்ப்ப்னர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய செய்திகளின் குறிப்பால் அன்றைய தமிழ் நாட்டின் சிவில் நிர்வாகம் என்பது பார்ப்பனர்களிடம் இருந்தது என்பதும் இராணுவ நிர்வாகம் மட்டுமே அரசர்களிடம் இருந்தது என்பதும் விளங்குகின்றது. ஆனாலும் இறுதி அதிகாரம் என்பது பார்ப்பன ராஜ குருக்களிடம் தான் இருந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குத் தானமாக கொடுக்கப்பட்டன. ”மனுநீதி, பகவத் கீதை போன்ற நூல்களின் சுலோகங்கள் இந்த தானத்தைக் காக்கப் பெரும்பாலான செப்பேடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாதிமுறை தவறாமல் காப்பதுதான் அரசனுடைய கடமை என்பதும் மனுவின் வழியாகக் குறிப்பிடப்படுகின்றது. தமிழக வரலாற்றில் முதன் முதலாக ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இவை சமூக அமைப்பில் நுழைகின்றன. இத்துடன் பாரதத்தைத் தமிழ்ப்படுத்துவது, சங்கம் வைத்து மொழி (தமிழ் மொழிக்கான சங்கம் என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும் கவனிக்கவும்) வளர்ப்பது போன்றவையும் அகத்தியரைத் தமிழின் முதல்வராகக் கூறுவது போன்றவையும் இங்குதான் முதன்முதலாக நாம் காண்கின்றோம். சுருக்கமாக கூறினால் புராணமயமாக்கப்பட்ட தமிழ் இலக்கிய வரலறு என்பது இந்தக்கால கட்டத்தில்தான் தொடங்குகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமிழ்ப் பழங்குடிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் இருந்ததையும், எதிர்த்தவர்களை பல்லவ, பாண்டிய மன்னர்கள் இராணுவ நடவடிக்கைகளினால் ஒடுக்கியதையும் இந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அடுத்து வந்த ஆயிரம் ஆண்டுகளிலும் இந்த எதிர்ப்பு என்பது சில இடங்களில் தொடர்ந்ததை கர்னல் மெக்கன்சியின் தொகுப்புகளில் உள்ள பழங்குடியினர் குறிப்புகள் உணர்த்துகின்றன.
மேலும் தமிழ்நாட்டில் ஆகம வழிபட்ட கோவில் வழிபாடு என்பது பல்லவர் காலத்தின் பிற்பகுதியில் தான் ஏற்றமடைகின்றது. வேள்வி, யாகம் என்பன சூத்திர அரசர்களை மையமாகக் கொண்டு பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும் ஆகமம் சார்ந்த கோவில் வழிபாடு என்பது சூத்திர குலத்துச் சமூகத் தலைவர்களை மையமாகக் கொண்டதாகின்றது. திருஞான சம்பந்தர் மற்றும் அப்பர் என்ற திருநாவுக்கரசர் நடவடிக்கைகள் இதனை வலியுறுத்தும். திருமூலர், திருமந்திரம் என்ற நூலின் வழியாக ஆகமக் கருத்துக்களைத் தமிழில் தருகின்றார். இந்தத் திருமூலர் வடநாட்டுப் பார்ப்பனர் என்று பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தமிழில் ஆகமங்களை பற்றிக் கூறும் முதல் நூல் திருமந்திரம் என்பது கவனிக்கத் தக்கது. இதனை ஆக்கி தந்த திருமூலர் சுந்தரநாதன் என்ற பார்ப்பனர், அகத்தியர் என்ற பார்ப்பனரைப் படைத்து அவர் வழியாக இறைவன் சூத்திர மொழியான தமிழைப் படைத்தார் என்ற புனைவை முன்வைத்தார். அகத்தியம் என்பது பார்ப்பனர்களின் கோத்திரப் பெயரான பரத்வாஜ் போன்ற ஒன்று என்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள சில அறிஞர்கள் பக்தி இயக்கம் என்பது சாதியை அழிக்கப் புறப்பட்ட ஒரு இயக்கம் என்று வாய்கூசாமல் புளுகித் திரிகின்றனர். அதிலும் தங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் சில பார்ப்பன அடிமைகளும் தங்கள் கட்சி அணிகளுக்கு இது போன்ற போதனைகளை வழங்கி அவர்களை முட்டாள்கள் ஆக்க முயற்சிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் சாதிகள் என்பதும், தீண்டாமை என்பதும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் தமிழ் மக்களிடம் நிலைபெற்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக தீண்டாமை என்பது 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வழக்கத்தில் வரவில்லை என்பதை வரலாற்று ஆசிரியர் கி.ர.அனுமந்தன் அவர்கள் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டில் விளக்கியுள்ளார். இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகளும் பிற்காலச் சோழர் காலத்தில்தான் சாதிகள் பெருகி தீண்டாமை இறுதி நிலைபெற்றன என்பதையும் புலப்படுத்துகின்றன.
7, 8 ஆம் நூற்றாண்டுகளில் காணப்படும் பட்டயங்களில் இலக்கியங்களில் வர்ணமுறைதான் குறிப்பிடப்படுகின்றது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வடிவத்தில் குறிப்பிடப்படும் வர்ணமுறை தமிழகத்தில் அதேபோன்று இல்லை. மாறாக பார்ப்பனர், வேளாளர், சூத்திரர் என்றுதான் குறிப்புகள் கிடைக்கின்றன. சில இடங்களில் வேளாளர்கள் சூத்திரர்களாகத்தான் குறிப்பிடப்படுகின்றனர். இடைப்பட்ட சத்திரிய, வைசியப் பிரிவுகள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்ததாகச் சான்றுகள் கிடைக்கவில்லை. சோழர்கள் மற்றும் தமிழகத்தின் குறுநில மன்னர்கள் பார்ப்பனர்களைக் கொண்டு வேத வேள்விகள் செய்தும், இரணிய கர்ப்பதானம், துலாபார தானம் போன்றவைகள் செய்தும் தங்களை சூத்திர அந்தஸ்தில் இருந்து மாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களால் சத்திரியர்கள் ஆக முடியவில்லை என்பதையும் வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தமிழ்மக்கள் சார்ந்த குலத்தவர்கள் என்பதலிருந்து மாறி, சந்திர குலத்தவர், சூரிய குலத்தவர் என்றும் பெயர் சூட்டிக் கொள்ளப் பார்ப்பனர்கள் உதவி புரிந்தனர். சோழர்கள் ஆண்ட 400 ஆண்டுகாலத் தமிழகத்து வரலாற்றில் கடைசி 100 ஆண்டுகள்தான் சாதிகளைப் பற்றிய குறிப்புகள் பெருக ஆரம்பிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது பக்தி இயக்கம் அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கியது என்பது வரலாற்றுக்கு முரணான அன்றைய நடைமுறையில் இல்லாத கூற்று என்பது வெளிப்படையாக புலப்படும்.
தமிழ் மன்னர்கள் மட்டும் இன்றி விஜயநகர அரசர்களும் பார்ப்பன அடிமைகளாகவே இருந்துள்ளனர். விஜய நகரத்தைச் சேர்ந்த குமாரக்கம்பண்ணன் போன்ற அரசர்கள் தமிழ்நாட்டில் நுழைந்த உடனே செய்த வேலை என்பது இஸ்லாமியர் வருகையால் அறுபது ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்துக் கோவில்களை கும்பாபிஷேகம் செய்தது மட்டுமின்றி ஏராளமான பொன் கொடுத்து அந்தக் கோவில்களின் நிர்வாகத்தை பழைய முறைப்படி சீரமைத்து, தமிழ்நாட்டுப் பார்ப்பன உயர் சாதி சூத்திரர்களை பழைய முறைப்படியான கோவில் அதிகாரத்தில் நியமித்ததுதான். சுருக்கமாகக் கூறினால் தமிழ்நாட்டில் நிலைகுலைந்து போயிருந்த வருணாசிரம இந்துத்துவ தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், உயர்சாதித் தமிழ்ச் சூத்திரர்களும் இந்துத்துவ விஜய நகர மன்னர்களுக்குத் தமிழ்நாட்டைத் தாரைவார்த்து இழந்த அதிகாரத்தை மீட்டெடுத்ததுதான்.
இப்படியாக தமிழ்மன்னர்கள் மட்டும் இன்றி தமிழ்நாட்டை ஆட்சி செய்த அனைத்து மன்னர்களும் சாதிவெறியர்களாகவும், பார்ப்பன அடிமைகளாகவுமே இருந்தனர். இதில் தமிழன், தெலுங்கன், மராட்டியன் என்ற பேதமெல்லாம் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் மக்களை ஒட்டச் சுரண்டி கோவில்கள் கட்டுவதும், அரண்மனைகள் கட்டுவதும், அதில் ஆடம்பரமாக அந்தப்புரங்கள் வைத்துக்கொண்டு கும்மாளம் அடிப்பதும்தான். மொழியோ, இனமோ இவர்கள் நேர்மையாளர்களாக இருக்க உதவவில்லை என்பதுதான் மேற்கூறிய வரலாற்று உண்மைகளில் இருந்து நாம் தெரிந்துகொள்ளும் பாடம்.
கடைசியாக தமிழ்த் தேசியவாதிகளால் மாமன்னன் என்று கொண்டாடப்படும் ராஜராஜ சோழனைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இல்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் என்ற மன்னனை கண்டுபிடித்தவர் ஹூல்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர்தான் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முதன்முதலாக பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்து இந்த எழுத்துக்கள் தமிழ்தான் என்றும், அவனுடைய காலம் கி.பி 985-1113 என்றும் சொன்னவர். அதற்கு முன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது காடுவெட்டி சோழன் என்னும் மன்னன்தான் என்று பெரும்பான்மை தமிழ்மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆக சீண்டுவார் யாருமின்றி அனாதையாக கல்வெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜராஜனை அதில் இருந்து எழுப்பிவிட்ட பாவத்தைச் செய்தவர் ஓர் ஆங்கிலேயரே ஆவர்.
இந்த ராஜராஜன் சாதாரண அரசன் அல்ல, பத்தாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்த நரேந்திர மோடி ஆவான். அவனது உடல், பொருள், ஆவி என அனைத்தயும் பார்ப்பனியத்தை வளர்ப்பதற்காகவே செலவிட்டவன். இந்த ராசராசன் இரண்டாம் பராந்தகனின் இரண்டாவது மகன் ஆவான். அவனது அண்ணன் ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசன். அவன் உடையார்குடி பார்ப்பனர்களால் கொல்லப்படுகின்றான். கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ராஜராஜ சோழன் அவர்களைத் தண்டிக்காமால் விட்டுவிட்டான் என்ற செய்தி உடையாளூர் கல்வெட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அண்ணனின் உயிரை விட பார்ப்பனின் உயிர் ராஜராஜனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. பார்ப்பனனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்ற பார்ப்பன சிந்தனையே அவனை அவ்வாறு செய்ய வைத்தது.
இன்று தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும், கன்னடர்களாலும் தமிழ்நாட்டில் வளங்கள் சுரண்டப்படுவதாக கூப்பாடு போடும் தமிழ்த் தேசியவாதிகள் ராஜராஜனின் அரசியல் பிழைப்புவாதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். “நாடுபிடிக்கும் ஆசையில் இருந்த ராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை வேங்கி நாட்டு மன்னன் விமலாத்தித்தனுக்கு மணம் முடித்து வைத்தான். அது போல ராசேந்தர சோழன் தன்னுடைய மகள் அம்மங்கா தேவியை கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் ராஜராஜனுக்கு மணம் முடித்து வைத்தார். பின்னாளில் அரியணை ஏறிய முதலாம் குலோத்துங்கன் அம்மங்காதேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழனுக்குப் பிறக்காதவன்.
ராஜராஜன் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக்காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக்குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரியகோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.
ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்பட்டனர் என்ற செய்தியை தஞ்சை பெரியகோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இந்தப் பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ்மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசிமுறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும் அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும் வரலாறு.
ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம், தேவதானம், சீவிதம் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டன. அப்படி கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு எந்த வரியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை விவசாயிகள் மீது கொடுமையான வரிகள் விதித்து, அவர்களைத் துன்புறுத்திய ராஜராஜன் பார்ப்பனனின் நிலங்களுக்கு வரிவிதிக்காதது மற்றும் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கியதில் இருந்தே அவனின் பார்ப்பன அடிமைத்தனம் பல் இளிக்கின்றது.
கங்கையைக் கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் புகழ்கின்றார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு என்ன செய்தான் என்பதுபற்றி யாரும் வாய் திறப்பதில்லை. சாதிவெறி பிடித்தவனாகவும், பார்ப்பன அடிமையாகவும், போர்வெறி பிடித்தவனாகவும் உள்ள ஒருவன் சாமானிய மக்களுக்கு எதைச் செய்திருக்கப் போகின்றான்? மக்கள் மீது எக்கச்சக்கமாக வரி விதித்து ஊர் ஊருக்கு கோவில்கட்டியதைத் தவிர அவனது சாதனைகள் என்று எதைச் சொல்வது?
நம்முடைய கேள்வி எல்லாம் ஒரு மன்னனை எதற்காக ஆதரிக்க வேண்டும், எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதுதான். பல நாடுகளை வெற்றி கொண்டான், கோவில் கட்டினான், குளங்களை வெட்டினான், ஏரிகளை உருவாக்கினான் என்பதற்காக ஒரு மன்னனை தமக்கான வழிகாட்டியாக ஒருவனால் ஏற்க இயலுமா? வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் ஆய்வு செய்யும் யாரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி செய்த மன்னர்கள் மீது வெற்றுப் பிரமிப்பை உருவாக்கிக் கொள்வதால் யாருக்கு லாபம்? சமூக மாற்றம் வேண்டுவோர் எப்படி வரலாற்றைப் பார்க்க வேண்டும்? பத்துப்பைசா பிரயோசனம் இல்லாத பழம்பெருமைகள் பேசி ஒருவன் சமூக மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றான் என்றால் நிச்சயம் அவன் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாகவே இருப்பான். ஜாரை எதிர்த்துதான் ரஷ்ய புரட்சி நடந்தது. சீன நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்தை எதிர்த்துதான் சீனப்புரட்சி நடந்தது. இங்கே யாரும் தங்களை ஆண்ட மன்னன் என்பதற்காக அவர்களை எதிர்க்காமல் விட்டுவிடவில்லை. தங்களை ஆண்ட, ஆளும் மன்னன் ஒரு கொடுங்கோல்வாதி, பிற்போக்குவாதி, ஏகாதிபத்திய அடிமை என்று தெரிந்தபோது நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று அவர்களை வீழ்த்தினார்கள். அதற்குப் பெயர்தான் புரட்சி. சாதிவெறி பிடித்தவனையும், பார்ப்பனியத்தின் அடிமையாகக் கிடந்தவனையும் மாபெரும் இலட்சியவாதியாக ஒருவன் சித்தரிக்கின்றான் என்றால், அவனும் அதைப் போல சாதிவெறி பிடித்தவானகவும் பார்ப்பனியத்தின் அடிமையாகவும்தான் நிச்சயம் இருக்க முடியும்.
ராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் அவமானச் சின்னம் என்பதுதான் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம். அவன் மட்டும் அல்ல சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் அனைவரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். நாம் வீரபாண்டிய கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், கோபால நாயக்கரையும் ஆதரிப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் கும்பினி அரசை எதிர்த்து போரிட்டார்கள் என்பதற்குத் தான். அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த பல தமிழ் மன்னர்கள் கும்பினி ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அவர்களது அடிமைகளாய் மாறிவிட்ட சூழ்நிலையில் கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால நாயக்கர் போன்றோரின் எதிர்ப்புக்குரல் அன்றைய கும்பினி ஆட்சியை குலை நடுங்கவைத்தது. அவர்களின் தன்னலமற்ற தியாகமும் நெஞ்சுரம்தான் அவர்களை பின்பற்றச் சொல்லி நம்மைத் தூண்டுகின்றது.
ராஜராஜ சோழன் போன்றவர்களைக் கடுமையாக நாம் எதிர்ப்பதற்குக் காரணம் அவன் சாதிவெறியானாகவும், பிற்போக்குவாதியாகவும், பார்ப்பன அடிமையாகவும், பெண்களை தேவதாசிகள் ஆக்கி அழகுபார்த்தவன் என்பதற்காவும் தான். நாம் தமிழ்த் தேசியவாதிகளை கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணமும் அவர்கள் ராஜராஜ சோழனை தமிழ் இனத்தின் மீட்சிக்காக பாடுபட்டவன் போன்று சித்தரிப்பதுதான். அவர்களும் ராஜராஜ சோழன் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களிடம் நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் போன்றே பார்ப்பனியத்தின் அடிமையாக இருக்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் காந்தளூர்ச் சாலையில் பல மலையாளிகளின் தலையை அறுத்து துள்ளத் துடிக்க கொலை செய்தது போல, இவர்களும் இங்குள்ள தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களின் தலைகளை அறுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போது தெரிகின்றதா தமிழ்த் தேசியவாதிகள் ஏன் ராஜராஜ சோழனை ஆதரிக்கின்றார்கள் என்று. ராஜராஜ சோழனை ஆதரிப்பது என்பதன் பொருள் சாதிவெறியனாகவும், பார்ப்பன அடிமையாகவும், இனவெறியனாகவும் நாம் மாற நினைக்கின்றோம் என்பதுதான்.
உதவிய நூல்கள்:
1) கோவில்- நிலம்- சாதி- பொ.வேல்சாமி
2) பொற்காலங்களும் இருண்ட காலங்களும்- பொ.வேல்சாமி
3) பொய்யும் வழுவும்-பொ.வேல்சாமி
4) தமிழகத்தின் அடிமைமுறை-ஆ.சிவசுப்பரமணியன்
5) வரலாறும் வழக்காறும்- ஆ.சிவசுப்பிரமணியன்.
6) ராஜராஜ சோழனின் மறுபக்கம்- துரை.இளமுருகு
7) இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்- சி.இளங்கோ
8) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வேங்கடசாமி.
9) வரலாறும் வக்கிரங்களும்- ரொமிலா தாப்பர்
- செ.கார்கி