mk stalin and revanthஇன்னொரு அரசு விழா என்றுதான் எல்லோரும் நினைத்தோம்! ஆனால் 25.09.2025 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்னும் அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது, நெஞ்சம் நெகிழ்ந்து போனது!

ஆயிரம் ரூபாய் பெரிதாய் என்ன செய்து விடும், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்கள் எல்லாம் என்ன பெரிய மாற்றங்களைச் செய்துவிடும் என்று கேட்டவர்களுக்கும், கேலியாய்ப் பேசியவர்களுக்கும், அன்றைய விழா, கன்னத்தில் அறைந்து விடை சொல்லி இருக்கிறது!

பயன்பெற்ற பிள்ளைகள், மேடையில் ஏறித் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது, அடடா இத்தனை பெரிய திட்டங்களா இவை என்று நம்மையே கூடச் சில நிமிடங்கள் வியந்து பார்க்க வைத்தனர்! இந்தத் திட்டத்தினால் பயன் பெற்று, தாம் பெற்ற முதல் ஊதியத்தைத் தங்கள் பெற்றோரை மேடைக்கு அழைத்துப் பிள்ளைகள் இருவர் கொடுத்தபோதும், அவர்களின் பெற்றோர் தட்டுத் தடுமாறி மேடையில் வந்து அதனைப் பெற்றுக் கொண்ட போதும், கலங்காத கண்கள் உண்டா!

ஒரு மாணவன் தான் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கிய போது, மாண்புமிகு முதல்வர் குறுக்கிட்டு, தூய்மைப் பணியாளர் என்று சொல்லுங்கள் எனக் கூறினார்! அந்தப் பிள்ளை இப்போது மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்தத் திட்டங்களால் பயன்பெற்று, தான் ஜப்பானில் சென்று படித்து வந்திருக்கிறேன் என்று ஒரு பெண் கூற, அவரைப் பார்த்து அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், அப்படியானால் நீங்கள் ஜப்பான் மொழியில் பேசுவீர்களா என்று கேட்க, தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் ஜப்பான் மொழியில் பேசி, அந்தப் பெண் முதலமைச்சருக்கு நன்றி கூறினார்!

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தெலுங்கானாவின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தங்கள் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அறிவித்தார்!

திராவிடம் வழிகாட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் உள்ளது!

- சுப. வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.