அதிமுகவிலிருந்து பிரிந்து போன அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் - அதுவும் பத்து நாள்களுக்குள்ளாக என்று மனம் திறந்திருக்கிறார் செங்கோட்டையன்!

போகாத ஊருக்கு, இதை விட எப்படி எளிமையாக வழி சொல்ல முடியும்? ஆளுக்கு ஒரு துருவத்தில் இருக்கும் அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையானால் அந்தப் பணியை நானே தொடங்குவேன் என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது எடப்பாடி தலைமையிலான அதிமுகவை ஏற்க முடியாது என்பதுதான் இதனுடைய ஒரு வரிச் சாரம்!

தான் கட்சியை விட்டு விலகிப் போகிறேன் என்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துச் சொல்லி இருக்கிறார் செங்கோட்டையன். அவருடைய "நல்ல எண்ணத்தை" வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதுதான் பல ஐயங்களை உருவாக்குகிறது! செங்கோட்டையன் குரலில் பாஜக பேசுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

இதில் பாஜகவுக்கு என்ன பங்கிருக்க முடியும் என்று அரசியல் அறிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்.

இதன் மூலமாக எடப்பாடியை மிரட்டு வதும், வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக மேலும் சில இடங்களைப் பெறுவதும் பாஜகவின் முதல் நோக்கமாக இருக்கலாம். அவர்களின் இறுதி நோக்கம், அதிமுகவை அழிப்பதுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்!

எல்லோரும் ஒன்றாக இணை வதுதான் கட்சிக்கு நல்லது என்கிறார் செங்கோட்டையன். ஆனால் அது தனக்கு நல்லதில்லை என்பது எடப்பாடிக்குத் தெரியாதா என்ன!

எக்காலத்திலும் இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர முடியாது என்பதை நன்கு உணர்ந்தே, செங்கோட்டையனை இப்படிப் பேச வைத்திருக்கிறது பாஜக என்று நம்பலாம்!

வேண்டுமானால், இன்னொரு அதிமுக அணி உருவாகக் கூடும்! அது தனக்கு நல்லது என்று பாஜக கருதுகிறதோ, என்னவோ!

இறுதியில், இந்தப் பிளவுகள் எல்லாம் திமுகவிற்குத்தான் பெரும் நன்மையாக அமையப் போகின்றன என்பதை 2026 தேர்தல் முடிவுகள் சொல்லும்!

- சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.