இலங்கை அதிபர் அனுர குமாரதுங்க திசாநாயக்க செப்டம்பர் 1ஆம் தேதி கச்சத்தீவுக்குச் சென்றுள்ளார். இத்தீவுக்குச் சென்ற முதல் இலங்கை அதிபர் அவர்தான்.
அங்கு அவர் கச்சத்தீவு மீனவர்களுடன் பேசும்போது, 'கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமான மண். இனி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடல் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்துச் சிக்கினால், அந்த மீனவர்களை அவ்வளவு எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பிக் கொடுக்க மாட்டோம். அது இலங்கைக்கே சொந்தமாகும்' என்று கூறியிருக்கிறார்.
1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையிடம் தமிழ் நாடு கச்சத்தீவை இழந்தது.
அன்றிலிருந்து இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், இலங்கைச் சிறையில் அடைக்கப்படுவதும், படகுகளைப் பறிகொடுப்பதுமான இன்னல்களுக்கு இன்றுவரை ஆளாகி வருகின்றார்கள். இந்நிலையில்தான் அனுர குமாரதுங்க திசாநாயக்க மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் கச்சத்தீவில். இது இன்னுமா இந்தியப் பிரதமர் காதுகளுக்கு எட்டவில்லை.
டிரம்ப்பின் 50 விழுக்காடு வரிவிதிப்பால் திருப்பூர் பின்னலாடை தொழில் முடங்கி விட்டன. நாளொன்றுக்கு 500 முதல் 700 கோடியும், இந்த நிலை தொடர்ந்தால் மாதம் 2,000 கோடிக்கு மேலும் இழப்பு ஏற்படும் என்று திருப்பூர் உற்பத்தியாளர்கள் சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் கச்சா எண்ணெய், குஜராத் மாநில தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்காக மட்டும் பயன்படுத்துகிறதாம் ஒன்றிய அரசு. தன் சொந்த மாநிலத்திற்குக் காட்டும் இந்த அக்கறையை, 'பிரதமர்' என்ற முறையில் பிற மாநிலங்களுக்கும் அவர் காட்டவேண்டும், அதில் தமிழ்நாடும் அடங்கும்.
காவிக் கூட்டங்களைத் தமிழர்கள், தமிழ் மண்ணிலிருந்து துடைத்து எறிந்துவிட்டார்கள் என்பதால், தமிழ்நாட்டின் மீது, தமிழர்கள் மீது வெறுப்புணர்வுடன் நடந்துகொள்கிறார் பிரதமர் விஸ்வகுரு மோடி.
தமிழ்நாடு மீனவர்கள் குறித்தும், திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும் மிக விரைவில் நல்ல தீர்வுகாண அவர் முன்வரவேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதமர் என்ற முறையில். தமிழ்நாடு முதல்வர் சொன்னதுபோல மோடி 'விஸ்வகுரு' என்று சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதைச் செயலில் காட்டவேண்டும், அவர்.
- கருஞ்சட்டைத் தமிழர்