Sophia Loisஒரு விமானப் பயணத்தில், பா.ஜ.க. வின் மாநிலச் செயலாளர் தமிழிசை அவர்களைப் பார்த்து, சோபியா என்னும் கனடாவில் படிக்கும் மாணவி, “பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக” என்று முழக்கமிட்டார் என்ற செய்தி சென்ற வாரம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது குறித்து, நம் ஆசிரியர் குழு உறுப்பினர், தோழர் உதயகுமார், ஒரு செய்தியைப் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு குறித்துச் சற்று வேறுபட்ட என் பார்வையை இங்கு கூற வேண்டியுள்ளது.

இதில் மூன்று செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை என்று கூறலாம். (1). சோபியாவின் கூற்று எதுவும் பெறப்படாமல், ஒரு பக்கச் செய்தியை மட்டுமே கொண்டு நம் ஊடகங்கள் விவாதித்தன. (2). தமிழிசையின் கூற்றுப்படியும், சோபியா வன்முறையைத் தூண்டும் வகையிலோ, அருவெறுப்பான சொற்களாலோ எந்த முழக்கத்தையும் எழுப்பவில்லை. (3) விமான நிலையத்தில், சோபியாவிற்கு எதிராகத்தான், ஆபாசமான சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கைது நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளது. இப்போது அவருடைய கடவுச் சீட்டை முடக்குவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

சோபியாவின் பக்கம் குறையாகச் சொல்லப்படுவது, அவர் முழக்கமிட்ட இடம் தவறு என்பதுதான். அதற்கு இத்தனை ஆபாசச் சொற்களா? இவ்வளவு கடுமையான ஒடுக்குமுறை முயற்சிகளா? விமானம் முழக்கமிடுவதற்கான இடமா என்று கேட்கின்றனர். இல்லைதான். அதற்காக இவ்வளவு எதிர்வினை புரிவது என்பது எவ்விதத்தில் நியாயம்? பா.ஜ.க. ஆட்சி பாசிச ஆட்சிதான் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

தமிழிசை இதனை எளிமையாகக் கடந்து போயிருக்கலாம். அல்லது, காவல்துறையிடம் ஒரு புகார் கொடுத்துவிட்டுத் தன் பணிகளுக்குச் சென்றிக்கலாம். இவ்வளவு பெரிதாய் இதனை ஆக்கியதன் மூலம், சோபியாவையும், அவர் முழக்கத்தையும் நாடறியச் செய்துள்ளார் என்பதே உண்மை.

எப்படியோ, பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக என்னும் முழக்கத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தமைக்காகத் தமிழிசைக்கு நாம் ஒரு நன்றி சொல்லத்தான் வேண்டும்!

Pin It