‘₹2000’ திரைப்படத்தை டிசம்பர் 3, 2021-ல், திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கப் பட்டது. முக்கியமாக, தமிழ்நாடெங்கிலும் எத்தனைத் திரையரங்குகள் வாய்க்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அதற்கு ஏதுவாக, படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, ‘தினத்தந்தி’ நாளேட்டில் கால்பக்க விளம்பரம் செய்தாகவேண்டும். அதன் பிறகுதான் திரையரங்குகளின் ஒப்புதலைப் பெறமுடியும். இது, தமிழ்த் திரையுலகில் எழுதப்படாத விதி.

திரைப்பட நிறுவனத்திற்கும் தினத்தந்தி நாளேட்டிற்கும் இடையில் தொடர்பாளராக இயங்குவதற்கான ஏஜெண்ட் ஒருவரை நியமித்தாகி விட்டது. இனி, படத்தின் டிசைன் ஒன்றினை நாளேட்டிற்கு கொடுக்கவேண்டும். டிசைன் உருவாக்கப்பட்டு நாளேட்டிற்கு அனுப்பப்பட்டது.

அடுத்த அரைமணி நேரத்தில் ஏஜெண்ட்டிடமிருந்து அலைபேசி அழைப்பு.

“டிசைனை மாத்திக் கொடுக்கச் சொல்றாங்க சார்” என்றார்.

“என்ன பிரச்சினை” என்றேன்.

“சென்சார் தடையைத் தகர்த்துன்னு போட்டிருக்கிறத எடுக்கச் சொல்றாங்க“ என்றார்.

“சென்சார் தடை விதிச்சது, மேல்முறையீடு செஞ்சி ரிவைசிங் கமிட்டிக்குப் போனது, அவங்க சொன்ன நூற்றுக்கும் அதிகமான வெட்டுகளை எதிர்த்து 35 பக்க ஆவணங்களைக் கொடுத்து 24 வெட்டுகளா குறைச்சது, அதுக்குப் பின்னாடியும் UA சான்றிதழ்தான் தருவேன்னு சொன்னது, ‘₹’ என்கிற குறியீட சான்றிதழ்ல போடமுடியலன்னு சொல்லி தேவையில்லாம காலங்கடத்தி, சான்றிதழ்ல ரெண்டு இடங்கள்ல கையெழுத்துப் போட்டது... இதில்லாம் நடந்த உண்மைதானே.

daily thanthi logoஅதை டிசைன்ல சொல்றதுல என்ன தவறு. இதுல தினத்தந்திக்கு என்ன பிரச்சினை. கடந்த காலங்கள்லகூட பல படங்களின் விளம்பரங்கள்ல இப்படி வந்திருக்கே.” எனக் கேட்டேன்.

“சார், இதையெல்லாம் நானும் அவங்ககிட்ட சொன்னேன். டிசைனை மாத்திக் கொடுங்க, இல்லன்னா போடமுடியாதுன்னு சொல்றாங்க “ என்றார்.

நாளை வெளியாகிற தினத்தந்தியில் படத்தின் விளம்பரம் இடம்பெறாமல் போனால், திரையரங்குகளை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். மேலும், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாவதே கேள்விக்குறியாகிவிடும். உரிமைக்குரல் எழுப்புவதா அல்லது உரிமையை விட்டுக்கொடுத்து செயலினை நிறைவேற்றுவதா?

தொடக்கத்திலிருந்து, சென்சார் சான்றிதழ் வாங்கும் வரையில் பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து, போராடி உருவாக்கப்பட்ட திரைப்படத்தின் கருத்துகள் மக்களிடம் சேர்க்கப்பட்டாக வேண்டும். அப்போதுதான் கடமை நிறைவடையும் என்னும் முடிவுக்கு வந்த நான், டிசைனிலிருந்து, ‘சென்சார் தடையைத் தகர்த்து’ என்னும் வார்த்தையை நீக்கித் தருமாறு டிசைனரைக் கேட்டுக் கொண்டேன்.

திருத்தம் செய்யப்பட்ட டிசைன் தினத்தந்திக்கு அனுப்பப் பட்டது.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ஏஜெண்ட்டிடமிருந்து மீண்டும் அழைப்பு.

“சார், கோர்ட் கூண்ட எடுக்கச் சொல்றாங்க”என்றார்.

“படத்துல இருக்குறததான டிசைன்ல போட்டிருக்கோம். அதை ஏங்க எடுக்கணும் “ எனக் கேட்டேன்.

“இல்லன்னா விளம்பரத்த போடமாட்டாங்களாம், சார்”

“என்னங்க சார் இது, புதுபுதுசா கண்டிஷன் போடறாங்க” என்றேன்.

“ஆமாங்க சார். எனக்கும் இது புதுசாதான் இருக்கு. என்னோட நாற்பது வருஷ சர்வீஸ்ல இப்படி நடந்ததில்ல.” என்று சொன்ன ஏஜெண்ட்,

“கோர்ட் கூண்ட எடுத்துட்டு அனுப்புங்க சார்“ எனக் கேட்டுக் கொண்டார்.

செய்தியை டிசைனரிடம் சொன்னேன்.

“என்னங்க சார் இது, நம்ம படத்தோட டிசைனை முடிவு பண்றதுக்கு அவன் யாரு?“

டிசைனரின் குரலில் கோபம் தெரிந்தது.

“சரி, இப்போ என்ன செய்யலாம்“ எனக் கேட்டேன்.

“நமக்கு வேற வழியில்ல. நேரம் பார்த்து அடிக்கிறாங்க. திருத்தி அனுப்புறேன் சார்.” என்றார்.

இரண்டாவது முறையாக டிசைன் திருத்தப்பட்டு தினத்தந்திக்கு அனுப்பப்பட்டது.

சில நிமிடங்களில் ஏஜெண்ட் மீண்டும் அழைத்தார். டிசைன் ஏற்கப்பட்டது எனச் சொல்லுவார் என்னும் எதிர்பார்ப்புடன் பேசத் தொடங்கினேன்.

“சார், தாடி வெச்சிக்கிட்டு ஒருத்தர் இருக்காருல்ல, அவர எடுத்துட சொல்றாங்க.” என்றார்.

“படத்துல அவருதாங்க வில்லன். அவரு இல்லாம எப்படிங்க” என்றேன்.

“அவரு மோடி மாதிரி இருக்காராம். அதனாலதான் எடுக்கச் சொல்றாங்க.“

“அவரு பேரு கராத்தே வெங்கடேஷ். பரியேறும் பெருமாள் படத்துலகூட கொலைகள் செய்ற வேஷத்துல நடிச்சிருந்தாரு. அவரு இயல்பாவே தாடியோடதான் இருப்பாரு. நம்ம படத்துக்காக ஸ்பெஷல் மேக்கப் எதுவும் போடல.” என விளக்கினேன்.

“நானும் இதைத்தான் அவங்ககிட்ட சொன்னேன். ஆனாலும் அவரு படத்தை நீக்கினாதான் விளம்பரம் போடுவாங்கலாம்.” என்றார்.

“நாய், பூனை, குதிரை, யானை, கரடி,... இப்படி விலங்குகளைக்கூட டிசைன்ல போட்டு எத்தனையோ படங்களின் விளம்பரங்கள் வந்திருக்கு. ஒரு மனுஷனைப் போடக்கூடாதுன்னா என்னங்க அர்த்தம்“

“நானும் அப்படித்தான் கேட்டேன். வேற படங்களைப் பற்றிச் சொல்லாதீங்க, இந்தப் படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கன்னு சொல்றாங்க, சார்” என்றார்.

இப்போது, எனக்கு நடிகை கவுதமி நினைவுக்கு வந்தார். சென்சார் ரிவைசிங் கமிட்டியுடனான விவாதத்தின்போது, படத்தின் வழக்காடுமன்றக் காட்சிகளில் அம்பேத்கர் நிழற்படம் இடம்பெற்ற ஷாட்டுகளை நீக்கச் சொன்னபோது, பல படங்களில் வழக்காடுமன்றத்தில் அம்பேத்கர் நிழற்படம் இடம் பெற்றுள்ளது என்பதையும், வழக்குரைஞர் வேடத்தில் கவுதமி நடித்த திரைப்படத்திலேயே அவர் வழக்காடு மன்றத்தில் பேசும் காட்சியில் அம்பேத்கர் படம் காட்டப்படுகிறது என்பதையும் நான் சுட்டிக்காட்டியபோது,

“மற்ற படத்தைப் பற்றி பேசாதீங்க, சார். உங்க படத்தைப் பற்றி மட்டும் பேசுங்க“ என கவுதமி சொன்னதை நினைத்துப் பார்த்தேன். அதிகார வர்க்கத்தின் மொழி, எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் என்பதற்கு மற்றுமொரு சான்று.

நாளிதழ்களில் தனக்கு இணையான - வலுவான போட்டி நாளிதழ் எதுவும் இல்லையெனும் ஆணவத்தில் தினத்தந்தி நாளேட்டின் நிர்வாகம் சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்கிறது என்னும் எனது கருத்தினை ஏற்றுக்கொண்ட ஏஜெண்ட்,

“அதுமட்டுமில்ல சார். நம்ம விஷயத்துல ஏதோ பெரிய அழுத்தம் இருக்குன்னு நினைக்கிறேன். அவங்க பேசறதப் பார்த்தா அப்படித்தான் புரியுது.” என்றார்.

நடப்பவைகளைப் பார்க்கிறபோது, தணிக்கை வாரியத்தில் தொடங்கிய தடைமுயற்சி நாளேடுவரை தொடர்வதை உணரமுடிந்தது. புறக்கணிக்க முடியாத ஆவணங்களை முன்வைத்து சென்சார் சான்றிதழ் பெற்றாகிவிட்டது. ஒன்றிய அரசின் தணிக்கை வாரியத்திற்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவை எந்த வகையிலாவது ஈடுசெய்யும் முயற்சிகள் நடக்கும் என்பதை நான் ஊகித்திருந்தேன். எனது கணிப்பு, ’தினத்தந்தி’ வடிவில் நிஜம் ஆனது.

சில நாட்களுக்கு முன்புதான், பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன், ஒன்றிய அரசின் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப் பட்டிருந்தார்.

“கூட்டிக் கழித்துப் பாரு, எல்லாம் சரியா வரும்“ என, நடிகர் ராதாரவி ஒரு திரைப்படத்தில் பேசும் வசனம் எனது நினைவுக்கு வந்தது.

அம்புலிமாமா கதையில், அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் வேதாளத்தை மீண்டும் மீண்டும் தூக்கித் தனது தோளில் போட்டுக்கொள்ளும் விக்ரமாதித்யனிடம் இருந்த விடாமுயற்சி எனக்கும் அவசியமாகிப் போனது. ஆனால், எனது தோளில் இருப்பது கதைகள் சொல்லும் வேதாளம் அல்ல, மக்களுக்கான கருத்துகளைச் சொல்லும், ‘₹2000’. கேள்விகளை மட்டுமே வைத்திருக்கும் வேதாளம் அல்ல, மக்கள் விடுதலைக்கான கேள்விகளையும் அவைகளுக்கான பதில்களையும் வைத்திருக்கும்,’₹2000’. எனவே, மோடியின் முகம் என்று அச்சப்பட்டு தினத்தந்தி ஒதுக்கும் நடிகர் கராத்தே வெங்கடேஷ் முகத்தை எடுத்துவிட்டு டிசைனில் திருத்தம் செய்து கொடுக்கும்படி டிசைனரிடம் கேட்டுக்கொண்டேன். இப்போது, அவரது கோபம் மறைந்து, அது, என்மீதான பரிதாபமாக வெளிப்பட்டது.

“உங்களுக்கு மட்டும் ஏன் சார் இப்படி நடக்குது. எனக்குத் தெரிந்து இதுமாதிரி நடந்ததே இல்ல. உங்கள நெனைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு “

“எது நடந்தாலும் எதிர்கொண்டுதான் ஆகணும். இப்போ என்ன செய்யலாம்“

“வேறென்ன பண்றது. அந்த முகத்தை எடுத்துட்டு வேற யாரோட முகத்தையாவது போடவேண்டியதுதான்.” என சலிப்புடன் சொல்லிவிட்டு, “டிசைனைத் திருத்தி உங்களுக்கு அனுப்பறன். நீங்க ஓகே சொன்னா ஏஜெண்ட்டுக்கு அனுப்பிடறன்.” என்றார்.

டிசைன் மூன்றாவது முறையாகத் திருத்தம் செய்யப்பட்டு தினத்தந்திக்கு அனுப்பப் பட்டது.

இனி பிரச்சினை எதுவும் வருவதற்கு வாய்ப்பிருக்காது என்று நினைத்திருந்தபோது, எனது அலைபேசி ஒலித்தது. ஏஜெண்ட் அழைத்திருந்தார். நானே முதலில் பேசினேன்.

“ஏத்துக்கிட்டாங்களா சார்“

விரக்தியான குரலில் ஏஜெண்ட் சொன்னார்.

“இல்லீங்க சார்”

சற்று குரலை உயர்த்தி, “என்ன சொல்றீங்க“ எனக் கேட்டேன்.

“ஒருத்தர் தோள்ல பச்சைத் துண்டு போட்டுருக்கில்ல, அந்த துண்டு இருக்கக் கூடாதாம்.” என்றார்.

“ஏன்“

“அது விவசாய சங்கத்த அடையாளப் படுத்துதாம். அப்புறம் இன்னொன்னு.. அவரு அய்யாக்கண்ணு மாதிரி இருக்காராம். அவரையும் எடுத்துட சொல்றாங்க.” என்றார்.

“என்ன விளையாட றாங்களா.. கதையின் கருவே அந்தக் கேரக்டர்தாங்க. அதை நீக்கமுடியாது. அவர் பேரு அய்யநாதன். தினமும் பல சேனல்கள்ல விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கவரு. தினத்தந்தி டிவியிலேயே பலமுறை பேசியிருக்காரு. அவருக்கும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவுக்கும் உருவ ஒற்றுமை எதுவும் இல்ல.” என நான் கோபத்தின் உச்சியிலிருந்து கத்தினேன்.

ஏஜெண்ட் அமைதியாக சொன்னார். இது, சலிப்பில் வரும் அமைதி.

“எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லிட்டேன். ஒத்துக்க மாட்டன்றாங்க. இப்போ அவங்க, பரமசிவன் கழுத்துல இருக்கற பாம்பு மாதிரி சார்”

“விளம்பரப் பிரிவின் நிர்வாகியுடன் நானே பேசறன். அவரோட நம்பர் கொடுங்க” என்றேன்.

“வேணாங்க சார். நீங்க டென்ஸன்ல எதையாவது பேசி காரியத்தைக் கெடுத்திடாதீங்க. இன்னொருவாட்டி நானே பேசிப் பாக்கறேன்“ என சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

காத்திருந்தேன். ஒருசில நிமிடங்களில் தொடர்புக்கு வந்தார், ஏஜெண்ட்.

“சார், அவங்க என்ன சொல்றாங்கன்னா...“ என இழுத்தார்.

“தயங்காம சொல்லுங்க சார்“ என்றேன்.

“பச்சைத் துண்டு போட்டுக்கிட்டு டிசைன்ல இருக்கருவரு அய்யாக்கண்ணு இல்ல, அவருக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லன்னு நீங்க லெட்டர் கொடுக்கணும்னு சொல்றாங்க. அதுமட்டுமில்ல. இதனால ஏதாவது பிரச்சினை வந்தா அதுக்கு நீங்கதான் பொறுப்பின்னும் எழுதிக் கொடுக்கணுமாம்.”

“இதென்னங்க மடத்தனமா இருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் அந்தந்த டைரக்டரோட லெட்டர் வாங்கிணுதான் விளம்பரம் போடறாங்களா? ஓவரா ஆடறாங்க சார். இது சரியில்ல” என்றேன்.

“உங்கள நெனைச்சா எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. கொஞ்சம் பொறுமையா இருங்க சார். இப்போ நமக்கு வேலை ஆகணும். தயவுசெஞ்சி அவங்க கேட்டபடி லெட்டர் எழுதி அனுப்புங்க சார்.” என்றார்.

“சரி, லெட்டர் அனுப்பறன். இதுதான் என்னோட கடைசி முயற்சி. இதுக்குப் பிறகும் ஏதாவது சொன்னாங்கன்னா, தினத்தந்தி விளம்பரமே வேணான்னு முடிவெடுத்துடுவேன்.” என்றேன்.

“உடனே அனுப்புங்க சார். லேட்டாயிட்டா பேஜ் (றிணீரீமீ) ஒதுக்க முடியாதுன்னு சொல்றாங்க” என அவசரப்படுத்தினார்.

நான், அலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு கடிதம் எழுதத் தொடங்கினேன். இடையில், டிசைனர் அழைத்தார்.

“ஓகே ஆயிடுச்சிங்களா சார்” எனக் கேட்டார்.

என்னிடமிருந்து உறுதிமொழி கடிதத்தைக் கேட்டிருப்பதாக சொன்னேன். அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை. தினத்தந்தி மீது அவர் பொழிந்த வசைவார்த்தைகளை எழுத்தில் எழுதுவதற்கு என்னால் இயலாது.

‘₹2000’ படத்தில் நடித்திருக்கும் தோழர் அய்யநாதன் அவர்களைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டு, அவர், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அல்லர் என்று உறுதியளித்து கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஏஜெண்ட் பேசினார்.

“ஓகே சார், நாளைக்கு நம்ம விளம்பரம் வந்துடும்“ என்றார். அவரது குரலில், விரக்தியிலிருந்து மீண்ட இளைப்பாறுதலை உணர முடிந்தது. அலைச்சலின் அயற்சியும், முயற்சி நிறைவேறியதன் மகிழ்ச்சியும் கலந்த குரல், அது.

அவரே தொடர்ந்து பேசினார்.

“இன்று முதல், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் அப்படின்னு கொடுக்கிற விளம்பரங்கள்ல எந்தப் பிரச்சினையும் வராம பார்த்துக்கோங்க, சார்.” என்றார்.

‘₹2000’ திரைப்படத்தைப் பொறுத்தவரை, தினத்தந்தியின், ‘நிலைப்பாடு’ என்ன என நான் புரிந்து கொண்டிருப்பதாகவும், அந்த நிலைப்பாட்டின் கயிற்றினை ஆட்டுவிக்கும் கரங்களைத் தெரிந்து கொண்டிருப்பதாகவும், அதனால், அடுத்தடுத்த விளம்பரங்களுக்கான டிசைன்கள், ‘அவர்கள்’ விருப்பப்படியே அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் நான் சொல்லியதைக் கேட்டு, ஏஜெண்ட்டுக்கு ஏற்பட்டிருந்த களைப்பும் சோர்வும் விலகியிருக்க வேண்டும்.

நிகழ்கால சூழலில், ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவாகக் குரலெழுப்புவதைப் போலவே, ஊடக எதேச்சதிகாரத்திற்கு எதிராகக் குரலெழுப்புவதும் அவசியமாகிறது.

பின் குறிப்பு :

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ‘‘THE ROOSTER NEWS’’ என்னும் You Tube சேனலுக்கு, தோழர் அய்யநாதன் அளித்திருந்த நேர்காணலில், ‘₹2000’ திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும், படத்தின் சிறப்புகளையும் பதிவு செய்திருந்தார். மேலும், தற்போது, சமூக ஊடகங்களின் வழியே ஏறத்தாழ ஒரு கோடி பேர் பார்த்திருப்பதை சாதனை எனக் குறிப்பிட்டார். கூடவே, திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, ‘தினத்தந்தி’ யில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என குறைபட்டுக் கொண்டார். அவரது நேர்காணலைப் பார்த்த நான், உடனே அவருடன் தொடர்பு கொண்டேன். படத்தின் விளம்பரங்கள் தொடர்பாக, தினத்தந்தி நாளேட்டுடன் நடத்தப்பட்ட ’போராட்டம்‘ குறித்து முதன்முறையாக வெளிப்படுத்தினேன். நடிகர் அய்யநாதன் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியவர்கள் தொடர்பாக தினத்தந்திக்கு நான் கொடுத்த உறுதிமொழிக் கடிதத்தையும் அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு தொடர்புக்கு வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால், இன்றுவரை தொடர்பு கொள்ளவில்லை. ஒருவேளை, ‘தினத்தந்தி’ தொலைக்காட்சி உட்பட ஏறத்தாழ அனைத்து தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து உரையாடி வரும் தன்னை அடையாளம் தெரியாதவர்கள் தினத்தந்தி குழுமத்திலேயே இருக்கிறார்களே என்றோ, அல்லது, தன்னைத் தெரிந்துகொண்டும் தெரியாதவர்கள் போல அலட்சியப்படுத்தி விட்டார்களே என்றோ ஏதோ ஒரு அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் தோழர் அய்யநாதன் ஆழ்ந்திருக்கலாம்.

முக்கியமான பின் குறிப்பு :

‘₹2000’ திரைப்படம் குறித்து அறிந்திருந்தும், இதுபற்றி மறந்தும்கூட ‘மூச்சுவிடாத’ மார்க்சிய, ‘புரட்சிகர’ இயக்கங் களைச் சார்ந்த, ‘தோழர்கள்’ மற்றும் இயக்கங்கள்... தங்களை, பெரியாரியவாதிகளாகவும் அம்பேத்கரிவாதிகளாகவும் சொல்லிக் கொள்கிற ஆளுமைகள் மற்றும் இயக்கங்கள்... ஆகியவர்கள் மீதும், மக்களுக்கான படைப்பின் மீதான கபட மவுனம் பற்றி எழுதப்போகிறேன். கூடவே, பிரபலமானவர்கள் நடித்திருக்கிறார்கள் அல்லது பிரபலமானவர்கள் இயக்கியிருக்கிறார்கள் என்பதற்காகவே, ‘தோழர்களாலும் சமூக ஆர்வலர்களாலும்‘ விழாக்கள் எடுக்கப்பட்டும் பாராட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் கொண்டாடப்பட்ட வணிகத் திரைப்படங்களின் ‘மக்களுக்கான அரசியலை’ வெளிக்காட்டப் போகிறேன். அதன்மூலம், புரட்டல்வாதிகளை அம்பலப்படுத்தப் போகிறேன்.

- இயக்குனர் ருத்ரன்

Pin It