தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்றால் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வரலாம். அதை விட்டுவிட்டு எடப்பாடி, தன் கட்சி உறுப்பினர்களுடன் கருப்புப் பட்டையைக் கையில் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.
இதைப்பார்த்த பேரவைத் தலைவர், “கருப்புப் பட்டை கட்ட, உடனே எல்லாருக்குமா ஒன்று போல பிபி கூடியிருச்சோ என்று நினைத்தேன்” எனக் கேட்டார் ஒரு புன்முறுவலுடன். அமைச்சர் ரகுபதி அவர்கள் "சிறையில் கைதிகள் இப்படித்தான் கட்டியிருப்பார்கள்" என்று ஒரு போடு போட்டார்.
கரூரில் நடந்தவைகளைக் கோர்வையாக, மக்களுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளை உரிய சான்றுகளுடன் நம் முதல்வர் பேரவையில் மிகத் தெளிவாகப் பேசினார்.
கரூர் துயரச் சம்பவத்தின் ஊசலாட்டப் பேச்சும், அதை அரசியலாக்க முயல்வதைக் கவனித்த முதலவர், தூத்துக்குடி துப்பாக்கிசூடு பற்றி நான் சொல்லட்டுமா? என்று கேட்டபோது, குரலடங்கிவிட்டார், எடப்பாடி.
அதுசரி அவர் ஏன் வெளிநடப்பு செய்தார்? பேரவையில் முதல்வர் கரூர் சம்பவத்தைப் பற்றி விளக்கம் அளித்து விட்டாராம். அதுவும் எடப்பாடி கேள்வி கேட்கும் முன்பே முதல்வர் கரூர் பற்றி விளக்கம் அளித்து விட்டாராம். முறுக்கிக் கொண்டு வெளியே போய்விட்டார்.
அமைச்சர் ரகுபதி எடப்பாடியை மிகச்சரியாக எடை போட்டிருக்கிறார், பேரவையில். அவர் சொல்கிறார், "போரில் வாள் சுழற்ற முடியாத வீரன், வீட்டில் வில் வித்தை காட்டினானாம்! கரூர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாகப் பேச முடியாத எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெளியே போய் பயில்வான் வேடம் போட்டிருக்கிறார்".
- கருஞ்சட்டைத் தமிழர்