தமிழ்நாடு சட்டமன்றத்தில் 17.10.25 அன்று, புதியதோர் ஆணையத்தை நியமித்து முதலமைச்சர் உரையாற்றியுள்ளார்!
அறிவில் உயர்ந்தும், ஆற்றல் மிகுந்தும் விளங்கினாலும், சமூகத்தை விட்டுச் சாதி இன்னும் விலகவே இல்லை என்பதைத்தான் அவ்வப்போது நடந்து வருகிற ஆணவக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆணவக் கொலை என்பது, மானுட சமூகத்தின் அநாகரிகம், அவமானம்!
இதனைத் தன் உரையில் சுட்டிக் காட்டி இருக்கிற முதலமைச்சர், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து சொல்ல, உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில், சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களைக் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்! அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆணவக் கொலைகளை ஒழிப்பதற்கான தனிச்சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்!
ஏற்கனவே தமிழ் நாடெங்கும் உள்ள, பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளைச் சுட்டிக்காட்டும் காலனி என்னும் சொல்லை நீக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் சாதிப் பெயர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளில் காணப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கி, சமூக நீதி விடுதி என்று பெயரிட வேண்டும் என்றும் ஆணைகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, இப்போது இந்த ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது!
மிக நுட்பமாக, இதுபோன்ற ஆணவக் கொலைகளுக்குப் பின்னால், பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமையைச் சிதைக்கும் ஆணாதிக்கமும் உள்ளது என்பதை முதலமைச்சர் எடுத்துக்காட்டியிருக்கிறார்!
அண்மையில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, ஆணவக் கொலை எதிர்ப்புத் தீர்மானத்தையும் முதலமைச்சர் சுட்டி காட்டி இருக்கிறார்!
இறுதியாக, அறிவு மயமாக ஆகியிருக்கும் இந்த உலகம், இன்னும் அன்புமயமாக ஆகவில்லையே என்னும் தன் வருத்தத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார்!
அறிவு உலகத்தை வளர்க்கலாம். ஆனால் அன்புதான் உலகத்தை ஆள வேண்டும் என்னும், மிக உயர்ந்த - வாழ்விற்குத் தேவையான செய்தியோடு தன் உரையை அவர் நிறைவு செய்திருப்பது, சட்டம் மட்டுமே போதுமானதில்லை, சமூக மாற்றமும் உடனடித் தேவை என்பதைப் புரிய வைக்கிறது!
- சுப.வீரபாண்டியன்