தீபாவளி தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும், பருவநிலைகளோடும், சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
விளக்குகளின் வரிசை எனப்பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே. நரகாசுரன் எனும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை, திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.
இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறு அடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்தநாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம்மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளேயாகும். விசயநகரப் பேரரசான, 'இந்து சாம்ராஜ்யம்' தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி.15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒருதிருநாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்தக் காரணம்பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பிராமணர்களே தீபாவளியை 'பக்தி' சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும், சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதிநாளைக் குறிக்கும் சடங்காகும்.
தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவே அன்றி தமிழர் திருவிழா ஆகாது.
'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா?' என்று பாரதிதாசன் பாடுவது இங்கே நினைவுக்கு உரியது.
- பேராசிரியர் தொ.பரமசிவம் எழுதிய `அறியப்படாத தமிழகம்' நூலிலிருந்து