நம் ஒவ்வொருவருக்கும் முகங்கள் வேறு என்றாலும், மொழி ஒன்றுதான்!

 உருவங்கள் வேறு வேறு என்றாலும், உணர்வு ஒன்றுதான்!

 ஆகவே சொன்ன செய்திகளையே திரும்பத் திரும்ப நானும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதாலும், எனக்குப் பின்னால் இன்னும் பலர் உரையாற்ற உள்ளனர் என்பதாலும், ஒரு செய்தியை மிகச் சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.hindi agitation 330இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி 85 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தன் உரையில் குறிப்பிட்டார் கவிஞர் வைரமுத்து அவர்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது, கண்டிப்பாக இருக்கிறது என்றே கூற வேண்டும்.

முன்பெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கும். ஆனால் இன்று நம் முதலமைச்சரின் குரல் கேரள முதலமைச்சரின் குரலாகவும் எதிரொலித்திருக்கிறது. தெலங்கானாவில் இந்தி எதிர்ப்பு முழக்கம் கேட்கிறது. மிகக் குறிப்பாக, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊர்வலத்தில், நம்முடைய பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் படங்களைக் கைகளில் ஏந்தித்தான் அவர்கள் சென்றிருக்கிறார்கள். திராவிட மாடல் இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது!

கால மாற்றத்திற்கு ஏற்ப நாமும் நம் போராட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. இது மொழிச்சிக்கல் மட்டுமில்லை, இது ஒரு ஜனநாயகப் போராட்டம்! இது தமிழ்நாட்டிற்கான சிக்கல் மட்டுமில்லை, இந்தியா முழுமைக்குமான போராட்டம்!

ஆகவே “தமிழைக் காப்போம், இந்தித் திணிப்பை எதிர்ப்போம்” என்னும் நம் முழக்கத்தை வேறு மாதிரியாகக் கொண்டு செல்வதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நம் முழக்கத்தை நான் மாற்றச் சொல்லவில்லை. கொஞ்சம் விரிவாக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இந்தியா முழுமைக்கும் பொருத்தமாக நம் முழக்கத்தை ஆக்க வேண்டுமெனில், “தாய் மொழியைக் காப்போம், எம்மொழித் திணிப்பையும் எதிர்ப்போம்” என்று எடுத்து வைத்தால் அந்த முழக்கம், இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும்! இது ஜனநாயகத்தின் குரலாகத் திசையெங்கும் ஒலிக்கும்! நாம் நமக்காக மட்டும் போராடவில்லை, நாட்டில் உள்ள அத்தனை மொழி பேசும் மக்களுக்காகவும் போராடுகிறோம்!

நாம் எடுத்திருக்கும் இருமொழிக் கொள்கையே இந்தியாவை முன்னேற்றும்!

அவரவர் நாட்டில் அவரவர் தாய்மொழி, அடுத்தவரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம்! முழக்கம் இதுதான், நம் மொழிக் கொள்கை இதுதான், இந்தியாவிற்கு உதவக்கூடிய கொள்கையும் இதுதான்!

எதிர்காலத்தைச் செழிப்பாக்கும் இதனை நாடெங்கும் பரப்புவோம்! இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியா எங்கும் பரவட்டும்! என்றும் ஜனநாயகம் தழைக்கட்டும்!

நன்றி: முரசொலி

(26-10-2022 அன்று வள்ளுவர் கோட்டம் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட உரையின் ஒரு பகுதி)

- சுப.வீரபாண்டியன்

Pin It