மகாராஷ்டிராவில் ‘மும்ழொழி’ ரத்தானது

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியைக் கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஜாதி கயிறுகளுக்குத் தடை!

பள்ளிகளில் ஜாதி அடிப்படையிலான மோதல், சமூக வேறுபாடுகளை ஆகியவற்றை தடுத்து, நல்லிணக்கம், நற்பண்புகள் வளர்க்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களை வரிசை மாற்றி அமர வைப்பது, ஆசிரியர்கள் ஜாதிப் பெயர் குறிப்பிடக்கூடாது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் ஜாதிரீதியான சிந்தனை பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஜாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் தோன்றுவதைத் தடுக்க வேண்டிய முக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியே அனைத்திற்கும் முக்கியம் என கற்பிக்கப்படும் இடத்தில், ஜாதி மாணவர்களின் மத்தியில் மோதலையும், வெறுப்பு உணர்வைத் தூண்டக்கூடாது என்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதியுடன் உள்ளது எனவே, இதுபோன்ற உணர்வுகள் மூலம் ஏற்படும் வன்முறைகள் உருவாகுவதைத் தடுப்பதற்காகவும், மாணவர்களுக்கு நல்லிணக்கம். நற்பண்புகளை குறித்து அறிவுரை வழங்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.