நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டம் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதா’ உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவரும் ஒப்புதல் அளித்துச் சட்டம் அமலானது.

இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, அக்டோபர் 19ஆம் தேதி ரம்மி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு.

அதற்கு ஆளுநர் விளக்கம் கேட்டு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்த 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது.

அதையும் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கு மேலாகக் கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் திடீரென்று, ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்ய தமிழ் நாட்டுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி திரும்பவும் திருப்பி அனுப்பியுள்ளார்.

முதலில் அக்டோபர் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுப்பிய அவசரச் சட்டமசோதாவின் போதும், தொடர்ந்து ரம்மி தடைச் சட்ட முன்வடிவு மசோதா அனுப்பப்பட்ட போதும், அதற்கான விளக்கத்தை ஆளுநர் கேட்டதற்கு அரசு அளித்த விளக்கத்தின் போதும் என்று மசோதாவைத் திருப்பித் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அப்போதெல்லாம், இந்த ஞானோதயம் ஏன் வரவில்லை?

ஒன்றிய அரசின் சட்ட அமைச்சரே இது போன்ற விவகாரங்களில் அந்தந்த மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் என்று சொல்லி இருக்கிறாரே!

இப்பொழுது மீண்டும் ரம்மி தடைச் சட்ட மசோதா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்மொழியப்பட்டு பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யப் போகிறார் ஆளுநர் ?

ரம்மி ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து 40 பேர்களுக்கு மேலும் தற்கொலைகள் தொடர்வது ஆளுநருக்குத் தெரியாமலா இருக்கிறது.

உலகமே வியக்கும் திராவிடம், திராவிட மாடல் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக மக்களால் அமைந்த அரசை முடக்குவது ஏற்புடையதன்று.

இனி வேறுவழியில்லை ஆளுநருக்கு, கையெழுத்து இடுவதைத் தவிர.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It