ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் கடனாளியாகி, மன உளைச்சல் காரணமாக இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பணம் பறிக்கும் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, 26.09.2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டு 01.10.2022 அன்று அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் 03.10.2022 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.kanimozhi on governorஅந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் 19.10.2022 அன்று தாக்கல் செய்தார்.

சட்ட மசோதாவிற்கு ஆறு வார காலத்திற்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலவரையறை 27 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், இது குறித்து “உள்துறைச் செயலாளரும், சட்டத்துறைச் செயலாளரும், நானும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இது வரை அனுமதி வழங்கப்படவில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 24.11.2022 அன்று வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவித்தார். அந்த அழுத்தம் காரணமாக ஆளுநர் மசோதாவில் விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பினார். அதற்குத் தமிழ்நாடு அரசு முறைப்படி பதில் அளித்தப் பின்னரும் ஆளுநர் ஒப்புதல் தராததால் ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா காலாவதி ஆகி விட்டது.

ஆளுநரின் இந்த நடவடிக்கை அவர் ஆன்லைன் ரம்மியை ஆதரிக்கிறாரோ என்ற ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டு, சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற விளக்கங்களைக் கேட்டு காலம் தாழ்த்திச் சட்ட மசோதாவைக் காலாவதியாக்கி இருப்பது மக்களாட்சி மாண்பைக் குலைக்கும் செயலாகும்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா போகிற போக்கில் அவசர கதியில் கொண்டு வரப்பட்டதல்ல. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து அதைப் பரிசீலித்து பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களை உள்ளடக்கியதே இந்தச் சட்ட மசோதா. இதை ஆளுநர் கவனத்தில் கொள்ளாமல் காலவதியாக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆன்லைன் ரம்மிக்கு 28% வரி விதிக்க இருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி இருந்ததை நாம் இதனுடன் தொடர்புப் படுத்த வேண்டி உள்ளது.

மக்கள் இதனால் படும் அவதியை கருத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசு இதை வைத்து பொருள் ஈட்ட நினைக்கிறது. அதற்குத் துணை போகத்தான் ஆளுநர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

போகிற இடமெல்லாம் சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கிற ஆளுநர் மகாபாரத்தில் வருவது போல் அனைவரும் சூதாட வேண்டும், அப்போதுதான் சனாதன தர்மத்தை வலுப்படுத்த முடியும் என்று எண்ணுகிறார் போலும்.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

 செல்வத்தைத் தேய்க்கும் படை”

என்ற திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப குடிமக்களின் கண்ணீருக்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்!

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It