தேர்தலுக்கு முன்னால் வீராவேசமாகப் பேசிய சிலர், தேர்தல் தோல்விகளால் துவண்டும் சுருண்டும் போனபின், அப்படியே பேச்சை மாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக, தேர்தல் முடிந்த பிறகு வெளிவந்துள்ள மூவரின் நேர்காணல்கள் நம்மைச் சிந்திக்க வைப்பதற்குப் பதிலாக, வெறுமனே சிரிக்க வைக்கின்றன.

முதல் நேர்காணல், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையினுடையது. தேர்தலுக்கு முன்பு அளித்த ஒரு நேர்காணலில் அவர் சொன்னார், "எல்லாரும் குறித்துக் கொள்ளுங்கள், வாக்குகள் எண்ணப்படும் போது, தமிழ்நாட்டின் தென்பகுதியில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஓர் இடம் கூடக் கிடைக்காது".

இப்போது அதே அண்ணாமலை சொல்கிறார் - "நான் திராவிடக் கட்சிகள் என்று சொல்லலையே, அதிமுக என்றுதான் சொன்னேன்." உடனே ஊடகவியலாளர்கள் இரண்டு நேர்காணல்களையும் அடுத்தடுத்து எடுத்துப் போடுகிறார்கள். அண்ணாமலையைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது!annamalai premalatha thankar chandrababuஅடுத்தது, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் நேர்காணல்.

தங்கள் மகன் விஜய் பிரபாகரன் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு விட்டார் என்று சொல்கிறார். யார் சூழ்ச்சி செய்தார்கள்? எதிர்க்கட்சியா, கூட்டணியில் இருந்த அதிமுகவா, அல்லது தேர்தல் ஆணையமா என்பதை அவர் விளக்கவில்லை. எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார். அப்படிக் கோருவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அவர் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், மறு எண்ணிக்கை நடக்கும். நடக்கட்டும்.

ஆனால் அவர் வைக்கும் இன்னொரு கோரிக்கைதான் விந்தையாகவும், வியப்பாகவும் உள்ளது. "ஒரு சின்னப் பையன் கடைசி வரைக்கும் போராடி களத்துல நிக்கிறானே என்று நினைத்து ஆளும் கட்சி விட்டுக் கொடுத்திருந்தால், நான் தலைவணங்கி இருப்பேன்" என்கிறார். அவருடைய கோரிக்கையையும் ஆதங்கத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அடுத்து பாமகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சானின் நேர்காணல்.

இயல்பாகவே அவர் கொஞ்சம் கோபக்காரர். இப்போது தோல்வியைத் தாங்க முடியாமல், அவர் முகத்தில் அனல் பறக்கிறது! மக்களைப் பார்த்து, போட்ட சின்னத்துக்கே ஓட்டுப் போட்டு எப்படியோ போங்க என்று அலுத்துக் கொள்கிறார். வெற்றி பெற்றுப் போனவர்களைப் பார்த்து, நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்க வேண்டும் என்கிறார். மருத்துவர் அன்புமணியைப் பார்த்து அப்படி ஒரு கேள்வியை மக்கள் கேட்கவே முடியாது. அவர்தான் நாடாளுமன்றத்திற்கே போவதில்லையே!

திமுக தலைவர்கள் எல்லோரும் மன்னர்களைப் போல வாழ்கிறார்கள் என்று வேறு தங்கர்பச்சான் குறைப்பட்டுக் கொள்கிறார். ஆம், மருத்துவர் அய்யாவும், சின்ன அய்யாவும் ஏழைகளின் குடிசைகளில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மூவரையும் தூக்கி அடிக்கிற மாதிரி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். உலகிலேயே வலிமையான தலைவர் மோடிதான் என்கிறார்.

ஆமாம், வலிமையான தலைவரால் மட்டும்தானே, வெறும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் தோழமைக் கட்சிக்கு, சபாநாயகர், இரண்டு கேபினட் அமைச்சர்கள், மூன்று இணை அமைச்சர்கள் எனப் பதவிகளை வாரி வழங்க முடியும்!

ஊடகவியலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தேர்தலில் தோல்வி அடைந்த "பெரியவர்களிடம்'' இன்னும் ஓராண்டுக்குப் பேட்டி எடுக்காமல் இருந்தால், மக்களுக்கு நல்லது செய்ததாக இருக்கும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It