காட்டுத் தீயின் முதல் பொறி எங்கு தொடங்கியது என்று நமக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பொறி மிகப் பெரிய காட்டுத்தீயாய் வளரும் பொழுது நமக்கு ஏற்படும் பொருளாதார  இழப்புகளும், உயிர் இழப்புகளும் மிகவும் பெரியது.

இன்று இந்தியாவில் பாசிசம் சிறு பொறியாய்த் தொடங்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

 அழகிய மரங்களை எரிக்கும் காட்டுத் தீயைப் போல அழகிய ஜனநாயகத்தை இன்று பாசிசம் எரித்துக் கொண்டிருக்கின்றது.

 குஜராத்தும், காஷ்மீரும், மணிப்பூரும்    நம்  கண்முன்னால் உள்ள நிகழ்கால எடுத்துக்காட்டுகள்.

 இந்தியாவில், மாநிலங்கள் நிர்வாகப் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பொழுது, அந்தந்த மாநிலங்கள்  தனக்கான தனி கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்டிருக்கின்றன.

 ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று சொல்லும் பாசிசம் அதை அனுமதிக்குமா?

 நிர்வாக வசதிக்காக என்று சொல்லி மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களைச் சிறு சிறு துண்டுகளாக்கும்.

 காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று பிரிக்கும்.

மணிப்பூர் பற்றி எரியும் பொழுது, ஓட்டு அரசியலுக்காக கர்நாடகாவில் நாடகங்களை நிகழ்த்தச் சொல்லும்.

தனித்த அடையாளத்தைக் கொண்ட தமிழ்நாட்டை என்ன செய்யலாம் என்று நடிகர்களைக் கொண்டும், சில மூத்த பத்திரிகையாளர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களை கொண்டும், ‘B’ டீம் கட்சிகளை கொண்டும் உள்ளே வரத் துடிதுடித்துக் கொண்டிருக்கும்.

 வந்தால் என்னவாகும்? நாம் நமது வரிப்பணத்தில் நமது மாநிலத்தில் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் எல்லாம் வட மாநிலத்தவர் மருத்துவர் ஆவதற்காகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பார்கள்.

 குழந்தைத் திருமணம் சரிதான் என்றும், உடன்கட்டை ஏறுவது பெண்களுக்குப் புண்ணியம் என்றும் நமக்குப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

 நாம் நமது அடையாளத்தை இழக்க வேண்டியிருக்கும்.

 தற்பொழுதுதான் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறைப் பட்டதாரியாகப் படித்து அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றார்கள். அது இனி எட்டாக் கனியாகும்.

அதைத்தான்  நம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் மிகச்சரியாகச் சொன்னார், “ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ், தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம் அழிந்துவிடும்” என்று.

ஒரு சாதாரண குடிமகனாக நாம் என்ன செய்ய வேண்டும்?

 பாசிசத்தை இந்தியாவின் நிலப்பரப்பிலிருந்து முற்றிலுமாக வேரறுக்க வேண்டும்.

 ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய நாம் ஜனநாயக வழியில் 2024 ஆம் ஆண்டுத் தேர்தலில்   பாசிச பா.ஜ.கவை வீழ்த்தியே ஆகவேண்டும்.

- பேராசிரியர் புருனோ சந்திரசேகர்

Pin It