வடலூரில், வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் 200 ஆம் பிறந்த நாள் விழாவில்  ஆளுநர் ரவி, வள்ளலார்  10,000 ஆண்டுகால சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று  பேசியிருக்கிறார்.

வரலாற்று அறிவுள்ள எவரும் இப்படிப் பேச மாட்டார்கள். ஆரியர்கள், கைபர் - போலன் கணவாய்களின் வழியாக வட மேற்கில் சிந்து நதிப் பகுதிக்குள் வந்து நுழைந்து குடியேறியது கி.மு.1500 ஆம் ஆண்டில். அதாவது இப்போது 3500 ஆண்டுகள் ஆகின்றன.

பிறகெப்படி ஆரிய சனாதனம் இங்கே தோன்றியது 10,000 ஆண்டுகள் என்கிறார் ஆர்.என்.ரவி.

வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாம், சொல்கிறார் அவர்.

“சாதி சமயச் சழக்கை விட்டேன், அருட்சோதியைக் கண்டேனடி” என்று சனாதனத்தைக் கைவிட்டவர் வள்ளலார்.

தொழுவூர் வேலாயுத முதலியார் தியோசஃபிக்கல் சொசைட்டிக்கு அளித்த அறிக்கையில் வள்ளலாரின் கொள்கைகளை இவ்வாறு கூறுகிறார்,

“சாதி சமய வேற்றுமைகள் இறுதியில் ஒழிந்துபோம். அகில உலக சகோதரத்துவம் வரும். இந்தியாவில் அது நிலை நாட்டப்படும்”

இந்த இரண்டு சான்றுகள் போதும் வள்ளலார் சாதிசமய சனாதன தர்மத்தைத் தலைகீழாகத் தூக்கிப் போட்டார் என்பதற்கு.

ஒருமுறை சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வழிபடச் சென்ற வள்ளலாரைச் சூத்திரர் என்று சொல்லிக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை தீட்சிதர்கள்.

இந்த சனாதனச் செருக்கைக் கண்ட அடிகளார்,  1867ஆம் ஆண்டு சிதம்பரம் கோயிலுக்கு எதிராக வடலூரில் “சத்திய ஞான சபை”யை நிறுவினார். இன்று அது  சமரச சன்மார்க்க நெறியாக வளர்ந்து இருக்கிறது.

இது சனாதனத்திற்கு வள்ளலார் கொடுத்த அடி அல்லவா?

இவையெல்லாம் தெரியாமல் ஆளுநர் அவர் வேலையைச் செய்யாமல், சனாதன அதர்மத்தைத் தூக்கிக் கொண்டும், பேசிக் கொண்டும் திரிவது ஆளுநருக்கு அழகில்லை, வேலையும் இல்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் பதவி விலக வேண்டும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It