அய்யா சுபவீ அவர்கள் சோதிடம் குறித்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டது பல பேருக்கு வியப்பாக இருந்திருக்கக் கூடும். அஷ்டமி, நவமி சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டாலே அது ஏதோ புதிர் போன்று நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்கிறார்கள் என்றார். அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்த நாள்களின் எண்ணிக்கை அடிப்படையில் அஷ்டமி என்றால் அது எட்டு என்பதையும், நவமி எனில் அது ஒன்பதையும்

குறிப்பதாக அமையும் என்றும் தசமி எனில் அது பத்தாம் நாள். எண்ணிக்கையின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பே ஒழிய வேறொரு மறைபொருளும் அதில் இல்லை என்றார்.

அவர் சொல்ல வந்த செய்தியின் உட்கரு, புரியாத மொழி எனில் எல்லாமே நமக்கு மந்திரமாக அமைந்து விடும். எதனுடைய உட்கருத்தும் புரிந்து விட்டால் அப்பொருள் மீதான அச்சம் விலகிவிடும் என்பதே.

அவர் மற்றொன்றையும் வேடிக்கையாக சொல்வார். நாட்காட்டியை வாங்கிப்பார்த்த மாணவன் ஒருவர் சொன்னாராம். ‘‘இந்த வருஷம் லீவு ஜாஸ்தி’’ என்று. இதில் வருஷம் என்பது சமஸ்கிருதம், லீவு என்பது ஆங்கிலம், ஜாஸ்தி என்பது உருது. எல்லாம் போக தமிழில் ‘‘இந்த’’ என்ற சொல் மட்டுமே நிற்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் சொற்களில் ஏராளமான பிற மொழிச் சொற்கள் நம்மை அறியாமலேயே கலந்துவிடுகின்றன. இதனை அடையாளம் கண்டு தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.

தூய தமிழ்ச்சொல் எனும் செயலி நமக்கு உதவும் google Play Store செல்லுங்கள். TooyaTamil என தட்டச்சுங்கள். செயலியை தரவிரக்கம் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு ஐயமான தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்து இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் கண்டு பயன்படுத்தலாம்.

பொதுவாக, கிரந்த எழுத்துகள் கலந்த சொற்கள் தமிழ் சொற்களாக இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறான சொற்களோ அல்லது பொருள் தெரியாமல் வழக்கத்தில் பயன்படுத்தும் சொற்களோ இருக்குமானால் நேராக இச்செயலியில் தட்டச்சு செய்து பார்க்கலாம்.

உயிர், மெய், கிரந்த எழுத்துகள் அடங்கிய விசைப்பலகையினை இச்செயலியில் அளித்துள்ளனர். இதில் தொடு தேர்வு மூலமே சொற்களை வடிவமைத்து அதற்கிணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறியலாம்.

நீண்ட நெடு நாள்களாக தமிழ்ச்சொற்களென நாம் நினைத்துப் பயன்படுத்தி வந்த பிற மொழி சொற்களை நாம் அடையாளம் காணவும் முடியும்

அடிக்கடி பயன்படுத்தும் சொற்களைச் சேமித்து வைத்து காண்பிக்கும் வசதி இதில் கொடுத்திருக்கிறார்கள். அர்த்தம், சந்தோஷம், இஷ்டம், சுலபம், தினம், நமஸ்காரம், புஷ்பம், ரதம், விஷயம் போன்ற சொற்களை நாம் மீண்டும் மீண்டும் நடைமுறையில் வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். ஆனால் இவையாவும் தமிழ் சொற்கள் அல்ல.

அதற்கிணையான தமிழ்ச் சொற்களாக முறையே பொருள், மகிழ்ச்சி, விருப்பம், எளிது, நாள், வணக்கம், மலர், தேர், செய்தி எனத் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி நாம் நம்முடைய தாய்மொழியை செம்மைப்படுத்துவோம். இன்னும் இன்னும் கூடுதல் சொற்களுடன் இச்செயலி மேம்படுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கையினை இதன் வாயிலாக வைக்கிறேன்.

இச்செயலியினைப் பயன்படுத்துவோம். பிற மொழிச் சொற்களை நம் தாய்மொழியில் இருந்து அகற்றுவோம். தூய தமிழ்ச் சொற்களை எழுதுவோம், பேசுவோம்.

இந்தச் செயலியினைத் தரவிரக்கம் செய்ய இந்த இணைப்பைச் சுட்டவும்

https://play.google.com/store/apps/details?id=com.google.

Pin It