ஓய்வு பெற்ற நீதியரசர் கர்ணனின் கைது என்பது வர்ணமும், ஆளும் வர்க்கமும் இணைந்து செய்யும் சதிச்செயலாகத் தெரிகிறது.

ஆளும் வர்க்கத்தினருக்கும், ஆதிக்கவாதிகளுக்கும் அடங்கியும், ஒடுங்கியும் போக வேண்டும். உயர்ந்த பதவிகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை மிரட்டி அடக்கி வைக்கப் பார்க்கிறது பாஜக இந்துத்துவ அரசு.

அதற்காக நீதிபதி கர்ணன் சந்தேகத்திற்கோ, குற்றங்களுக்கோ அப்பாற்பட்டவர் என்று சொல்லமுடியாது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படியும், முறைப்படியும் விசாரித்துத் தவறு இருப்பின் நடவடிக்கை எடுப்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. அதை யாரும் எதிர்கவும் போவதில்லை.

ஆனால், நீதியரசர் கர்ணனுக்கு நடந்ததோ சரியான சட்ட நடைமுறையன்று.

justice cs karnan

இவரை விடவும் அதிகமான குறைகளும், குற்றங்களும் கூறப்பட்ட பல நீதியரசர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படவே இல்லை.

இன்னும் ஒருபடி மேலே போய் பார்த்தால், அப்படிப்பட்ட நீதியரசர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கி கவுரவிக்கும்போக்கு ஆளும் இந்துத்துவ மோடி அரசின் செயலாக இருக்கிறது.

இந்நிலையில் ஒன்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நீதியரசர் கர்ணன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில், அவர் வெளிப்படையாகப் பல நீதியரசர்கள் மீது குற்றம் கூறி ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கொடுத்துள்ள புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏன்?

நீதியரசர் கர்ணன் மீது இப்படிப்பட்ட அவசரக் கைது நடவடிக்கை என்பது தலித்துக்களுக்கு எதிரான இந்துத்துவ பழிவாங்கல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஒருபக்கம் தாங்கள் தலித்துக்களுக்கு எதிரானவார்கள் அல்ல எனத் தம்பட்டம் அடிக்கிறது ஆர்எஸ்எஸ்.

இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ்&இன் தலித் ஒருவரைக் குடியரசு தலைவராக்கத் துடிக்கிறது மோடி அரசு.

தங்களின் அதிகார ஆட்டங்களுக்குத் துணை போகாதவர்களை ஒடுக்க நினைப்பதும், தங்களின் ‘மனுநீதி’ சாஸ்திர சட்டங்களைப் பின்பற்ற மறுக்கும் சூத்திரர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து இழிவுபடுத்துகிறது.

அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகச் சமூகத்தில் கேவலப்படுத்துவதும் அப்பட்டமான பார்ப் பனிய வர்ணாசிரமச் சதியின்றி வேறில்லை.

நீதியரசர் கர்ணனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த அதே நாளில்தான், விஜய் மல்லையா வழக்கை ஆர அமர பொறுமையாய் சூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

இது எப்பேர்ப்பட்ட கேலிக் கூத்து?

 விஜய் மல்லையா மீதும், அதே நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான். மல்லையாவோ ஒருமுறை கூட ஆஜராகவில்லை. ஆனால், நீதியரசர் கர்ணனோ ஒருமுறை ஆஜரானார்.

ஆந்திரா&தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி நாகார்ஜுனா ரெட்டி மீது (உதவியாளர் ஒருவரை உயிரோடு கொளுத்திய வழக்கு உட்பட) பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில் அவர் மீது Impeachment தீர்மானம் (Impeachment - Procedure to remove Judge) கொண்டுவர எம்பி-க்கள் முயன்றும் ஏதும் செய்ய இயலவில்லை. ஆனால், நீதியரசர் கர்ணன் அவர்களோ என்னை Impeachment செய்யுங்கள் நான் பாராளுமன்றத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொன்ன போதிலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் கைதுச் செய்தது.

பார்ப்பானுக்கு ஒருநீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி.

காவிகளின் ஆட்சியில் ‘நீதி’த்துறை ‘மனுநீதி’யாய் மாறியது. நீதியரசர் கர்ணன் தான் சார்ந்த துறையில் ஊழல் மலிந்து இருப்பதைச் சூட்டிக்கட்டியது எப்படிச் சட்டத்திற்கு புறம்பானது.

உண்மைகளை உலகறியத் துணிவுடன் சொன்னதற்காக ஒரு நீதியரசரை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கொச்சைப்படுத்துக்கிறது நீதிமன்றம். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட

வராயின் அவரைக் கைது செய்தது அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறு.

அவர் நல்ல மனநிலையில் உள்ளதால்தான் கைது செய்தோமெனச் சொன்னால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என முன்பு சோதனையிட உத்தரவிட்டது மனித உரிமை மீறல்.

இந்த உரிமை மிறலுக்கு என்ன சொல்லப் போகிறது உச்சநீதிமன்றம்.

இந்நாட்டில் கர்ணன்கள் எப்போதும் துரோகத்தால்தானே வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சில கேள்விகள்.

1)            நீதியரசர் கர்ணன் கொடுத்த புகார்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

2)            உச்சநீதிமன்ற நீதியரசர்களானலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.

3)            இதே சூழலில் ஒரு பார்ப்பன நீதியரசர் இப்படி ஒரு புகார் கொடுத்து இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்குமா? இல்லையா?

4)            நீதியரசர் கர்ணன் கைது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த, நீதித்துறை சார்ந்த பிரச்சனையில் பிரதமர் ஏன் தலையிடவில்லை?

5)            குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட முடிவு என்ன?

6)            நீதித்துறை ஊழலும், சாதி ஆதிக்கமும் உள்ளது என்ற கர்ணன் அவர்களின் புகார் குறித்து உச்சநீதிமன்றமோ, மத்தியரசோ இதுவரை ஏன் கருத்து கூறவில்லை?

7)            ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் மத்திய பாஜக இந்துத்துவ ஆட்சியில் சட்டம் வேகமாக பாய்கிறது அது ஏன்?

8)            நீதிமன்றக் குற்றக்கூண்டில் நின்ற காஞ்சி மட ஜெயேந்திரரிடம் ஆசி பெறும் நீதியரசர்களும், குடியரசு தலைவரும் உள்ள இந்த நாட்டில் சூத்திரர்கள் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

காவி அரசின் மனுநீதியை நீதித்துறையின் மூலம் நடைமுறைப்படுத்த எண்ணுகிறது ஆளும் பாஜக அரசு.

நீதிமன்றத்தில் நிகழும் ஊழல், தலித்திய எதிர்ப்பு போன்றவைகளைத் துணிச்சலாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார் நீதியரசர் கர்ணன்.

அதற்காக நீதிமன்ற அவமதிப்பு என்று நீதியரசர் கர்ணனை அவசர அவசரமாகக் கைது செய்து ‘நீதிமன்ற மாண்பை’க் காப்பாற்றத் துடிக்கிறது அதிகார பீடம்.

நீதிமன்றத்தையே மதிக்காத, நீதிமன்ற உத்தரவுகளை மீறிச் செயல்படும் கர்நாடக அரசின் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது?

நீதியரசர் கர்ணன் மீதான நியாயமற்ற நடவடிக்கையை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய புரட்சியாளார் டாக்டர் அம்பேத்கர் உயிரோடு இருந்து பார்த்து இருப்பாரே ஆனால் &

அவரின் கண்களில் இருந்து திரண்டு வீழும் கண்ணீர் துளிகள் இந்த மண்ணோடு மண்ணாகக் கரைந்து போயிருக்கும்.

காவிகளின் அதிகாரம் அப்படிப்பட்டது.

Pin It