இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்து மதச் சாத்திரங்களின் பெயரால் மக்களில் பெரும்பான்மையினரான சூத்திரர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1835இல் மெக்காலே கல்வித் திட்டம் பொதுப் பள்ளிக் கல்வி முறையைக் கொண்டு வந்தது. அதன் பிறகே சூத்திரர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி பெறும் உரிமை கிடைத்தது.
சுதந்தர இந்தியாவுக்காக எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பெறும் உரிமையைக் குடிமக்களின் அடிப்படை உரிமையாக வைக்காமல் மேல்சாதி ஆளும் வர்க்கம் வஞ்சித்தது. அதன் முகவுரையில் அரசின் வழிகாட்டி நெறிப் பகுதியில், “இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பின் பத்தாண்டுகளுக்குள் 14 அகவைக்கு உட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வியை அளித்திட அரசு முயலவேண்டும்” என்று மட்டுமே எழுதப்பட்டது. சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த இலக்கு முழுமையாக எட்டப்படவில்லை.
அனைவருக்கும் கல்வி அளிப்பதற்கென நடுவண் அரசு பல்வேறு கல்விக் குழுக்களை அமைத்தது. 1968 மற்றும் 1986-ஆம் ஆண்டுகளில் தேசியக் கல்விக் கொள்கை களை அறிவித்தது. 2002-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் கல்வி உரிமை, அடிப்படை உரிமைப் பகுதியில் சேர்க்கப்பட்டது. இதன் அடிப்படையில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடுவண் அரசால் 2009ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
நரேந்திர மோடி தலைமையில் பா.ச.க. தனிப் பெரும்பான்மையுடன் 2014-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. இந்திய அரசில் செயலாளராக இருந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்பவர் தலைமையில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க 2016இல் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், அது கிடப்பில் போடப்பட்டது. 2017 சூன் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக இருந்த கஸ்தூரி ரங்கன் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
முன்னைவிட அதிக மக்களவை இடங்களுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் 31.5.19 அன்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை நடுவண் அரசிடம் அளிக்கப்பட்டது. 483 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் எல்லா மொழி பேசும் மக்களும் இந்த வரைவு அறிக்கை மீது சூன் 30-க்குள் கருத்துரைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்பின் இக்கால அளவு சூலை 31 வரை என்று நீட்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2019 - தேசியக் கல்விக் கொள்கை அறிக்கைக்கு எதிராகப் பல்வேறு இடங்களில் கருத்தரங்கங்கள் நடந்து வருகின்றன.
21ஆம் நூற்றாண்டின் சூழ்நிலைமைகளுக்கு வெற்றிகரமாக ஈடுகொடுக்கக் கூடிய திறன் வாய்ந்த துடிப்பான இளைஞர்களை உருவாக்குவதே தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது இந்த அறிக்கை. ஆனால் சமூக நீதிக்கும், மொழிவழித் தேசிய இனங்களின் நலன்களுக்கும், மாநிலங்களின் தன்னாட்சி உரிமைக்கும் எதிரானதாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது.
40 பக்கங்களில் சொல்லப்பட வேண்டிய கருத்தை 483 பக்கங்களில் நீட்டி முழக்கி, புரியாத சொற்கோவை களால் குழப்பி, முன்னுக்குப்பின் முரணான வகையில் எழுதப்பட்டுள்ளது. தற்போது நடப்பில் உள்ள கல்வி முறையின் சீர்கேட்டிற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் தீர்வுக்கான வழிமுறைகளைக் கூறாமல், ‘வானத்திலிருந்து குதித்த தேவதூதன்’ போல் தன்னைக் கருதிக் கொண்டு கஸ்தூரி ரங்கன் குழு தன் இனிய கற்பனைகளைப் பட்டியலிட்டுள்ளது.
இக்கட்டுரையில் பள்ளிக் கல்வி தொடர்பாக தேசியக் கல்விக் கொள்கை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் காண்போம்.
1968 இல் கோத்தாரி கல்விக்குழு பள்ளிக் கல்வியை 10, +2 ஆண்டுகள் என்று வகைப்படுத்தியது. அதற்கு முன் பள்ளி இறுதி வகுப்பு என்பது பதினோரு ஆண்டு கள் என்றிருந்தது. பள்ளி இறுதி வகுப்பை முடித்த பின் கல்லூரியில் ஓராண்டு புகுமுக வகுப்பு (Pre-University) படித்துத் தேறிய பின்னர் பட்டப் படிப்பில் சேர முடியும். தமிழ்நாட்டில் 10, +2 முறை 1977-78ஆம் ஆண்டு முதல் அறிமுகமாகி தற்போது வரை நடப்பில் இருந்து வருகிறது. இதன்படி 1-5 வகுப்புகள் தொடக்கக் கல்வி, 6-8 வகுப்புகள் நடுநிலைக் கல்வி, 9-10 உயர்நிலைக் கல்வி, 11-12 மேல்நிலைக் கல்வி எனப் படுகிறது. தமிழ்நாட்டில் 11, 12-ஆம் வகுப்புகள் பள்ளி களுடன் இணைக்கப்பட்டதால் ஊரகப் பகுதியிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உயர் கல்விக் குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆந்திரம், கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் மேல்நிலைக் கல்வி கல்லூரியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019இல் பள்ளிக் கல்வி 5+3+3+4 ஆண்டுகள் என்று வரை யறுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் அடிப்படை நிலை எனப்படும். இதில் மூன்று ஆண்டுகள் மழலை வகுப்புகளும் மற்றும் 1, 2 வகுப்புகளும் அடங்கும்.
3 ஆண்டுகள் ஆயத்த நிலை என்பதில் 3, 4, 5 வகுப்புகள் இருக்கும்.
3 ஆண்டுகள் நடுநிலை என்பது 6, 7, 8 வகுப்புகள் கொண்டது.
4 ஆண்டுகள் உயர்நிலை என்பதில் 9, 10, 11, 12 வகுப்புகள் அடங்கும்.
2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்ட போதே கல்வியாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கல்வி பெறும் உரிமைக்குரிய அகவை 6-14 என்றிருப்பதை அகவை 3 முதல் 18 வரை என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இப்போது தேசியக் கல்விக் கொள்கையில் 3-6 அகவைக் குழந்தைகள் கற்றல் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் கல்வி உரிமைச் சட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் பருவக் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டம் (Early Childhood care and Education - ECCE) என்று பெயரிட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
3-6 அகவையினருக்கான கல்வித் திட்டத்தைத் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வகுத்துக் கொடுக்குமாம். குழந்தைகளின் இந்தப் பருவத்தில்தான் மூளை முழு வளர்ச்சியடை கிறது என்பதால் சிறப்பு முதன்மை தரவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுவும் சரிதான். ஆனால் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள எண்ணற்ற சிறப்பு மிக்க மரபுகள் இக்குழந் தைகளின் பாடத் திட்டத்திலும் கற்பிக்கும் கட்டமைப்பி லும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்கிறது.
சாதிய ஏற்றத்தாழ்வை - பெண்ணடிமைத்தனத்தைக் கொடிய முறையில் நிலைநாட்டி வந்ததுதான் இந்தியப் பண் பாடு. இராமன் சம்புகனின் தலையை வெட்டியதும், துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டச் செய்ததும்தான் நம் புராண இதிகாசங்கள் புகட்டும் தர்மம், மேலும், “குடும்பங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் தமது முன்னோடிகள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாரம்பரியப் பண்புகளைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறிவிடுகிறார்கள். அதனால் குடும்பங்கள் இந்தக் கடமையை நிறைவேற்ற முற்படும் வகையில் உரிய கொள்கைகள் வகுக்கப்படும்” என்று இந்த அறிக்கை கூறுகிறது. 3-6 அகவை குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் பெற் றோர்களையும் இந்துத்துவமயமாக்கும் சூழ்ச்சியே இது.
மூன்று ஆண்டுகள் மழலையர் கல்வி என்பது முதன்மையாக கதை, பாடல், நாடகம், விளையாட்டு ஆகியவற்றின் மூலம் குழந்தைகளின் மொழி அறிவை யும் ஆர்வத்தையும் கூட்டுணர்வையும் வளர்ப்பதற் கானதாகும். எண்கள், எழுத்துகள் அறிமுகப் பயிற்சி யும் தரப்படும். இந்த மூன்று ஆண்டுகளை, முறை யான கல்வி தொடங்கும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புடன் இணைத்திருப்பது அறிவுக்குப் பொருத்த மற்றதாகும். அதேபோல் உயர்நிலை, மேனிலை வகுப்புகளை ஒரே தொகுப்பாக்கியிருப்பது காலங்கால மாகக் கல்வி மறுக்கப்பட்ட வகுப்பினருக்கு எதிரான தாகும். எந்தவொரு அறிவியல் ஆய்வின் அடிப்படை யில் அல்லாமல் தம் விருப்பத்திற்கு ஏற்ப இம்மாற்றங் களைச் செய்துள்ளனர்.
பயிற்று மொழிக் கொள்கை
“வாய்ப்பு இருக்குமெனில் அய்ந்தாம் வகுப்பு வரை தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; அதிக அளவாக எட்டாம் வகுப்பு வரை இருக்கலாம். அதற்குப் பிறகு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் அம்மொழியை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம்” என்று தேசியக் கல்விக் கொள்கை கூறுகிறது.
21ஆம் நூற்றாண்டிலும் வளர்ச்சி பெற்ற நாடுகள் அனைத்திலும் பள்ளிக் கல்வி முழுதும் தாய்மொழி வழியில் அமைந்திருக்கும் நிலையில், 5ஆம் வகுப்பு வரை அல்லது எட்டாம் வகுப்பு வரை மட்டும் பயிற்று மொழியாகத் தாய்மொழி இருக்கலாம் என்பது மறை முகமாக ஆங்கிலவழிக் கல்விக்கு வழிவகுப்பதாகும். ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவிப்பதன் வாயிலாக உள்நாட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங் களுக்கும் குறைந்த கூலியில் ஊதியம் செய்வதற்கான இளைஞர்களை உருவாக்குகிறது. இந்திய அளவில் பள்ளிக் கல்வியில் 50 விழுக்காட்டிற்குமேல் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 2018-19ஆம் ஆண்டின் நிலை கீழே தரப்பட்டுள்ளது.
பள்ளிகள் எண்ணிக்கை மாணவர் எண்ணிக்கை
அரசுப் பள்ளிகள் 37,459 44,13,338
அரசு உதவிபெறும் பள்ளிகள் 8,357 22,31,088
மொத்தம் 45,816 66,44,426
தனியார் பள்ளிகள் 12,918 64,81,598
தனியார் பள்ளிகள் முற்றிலுமாக ஆங்கில வழி யிலேயே பயிற்றுவிக்கின்றன என்பது சொல்லாமலே விளங்கும். அரசு உதவிபெறும் பள்ளிகள் 80 விழுக் காடு அளவுக்கும், அரசுப் பள்ளிகளில் 20 விழுக்காடு அளவிற்கும் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது. எனவே மொத்தத்தில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற் போது 65 விழுக்காட்டிற்குமேல் ஆங்கிலமே பயிற்று மொழியாகக் கோலோச்சுகிறது. இன்னும் பத்து ஆண்டு களில் இது 90 விழுக்காடாக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆனால் தேசியக் கல்வி அறிக்கையில், “வளமான இந்திய மொழிகள் இருந்தும் அவற்றுள் செறிவான இலக்கியம் இருந்தும் பள்ளிகளும் சமூகமும் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது” என்று ஒப்பாரி வைக்கப்பட் டுள்ளது. மேலும் ஒரு படி சென்று, “தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பிற வளர்ந்த நாடுகள் பயிற்று மொழியாக அந்தந்த நாட்டு மொழியையே பயன் படுத்தும் போது இந்தியாவில் மட்டும் பெரும்பான்மை யோர் ஆங்கிலத்தைக் கற்றல் மொழியாகத் தேர்வு செய்தது ஏன்?” என்கிற வினாவையும் தொடுத்திருக் கிறது. ஆனால் இதே அறிக்கை தான் 5ஆம் வகுப்பு வரையில் தாய்மொழி வழிக் கல்வி போதும் என்று சொல்வது எத்தகைய பித்தலாட்டம்?
இந்தியாவில் மக்கள் தொகையில் 15 விழுக்காட்டி னராக உள்ள பணக்காரர்கள்தான் ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்; இவர்கள் தாய்மொழிகளை மதித்து அவற்றுக்குரிய இடத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகின்ற அறிக்கையின் அதே பக்கத்தில் அரசு மற்றும் அரசு சாராப் பள்ளிகளில் ஆங்கிலம் சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும்; ஆங்கில மொழி யைச் சரளமாகப் பயன்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஒட்டுமொத்தத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் பயிற்று மொழிக் கோட்பாடு ஆங்கிலத்துக்கு ஆக்கம் சேர்ப்பதாகவும், தாய்மொழிவழிக் கல்வியை அழிப்பதாகவும் இருக்கிறது.
மும்மொழி
“1969, 1986 ஆகிய ஆண்டுகளின் தேசியக் கல்விக் கொள்கைகளில் வலியுறுத்தியிருப்பது போல் மும்மொழிக் கொள்கை எத்தகைய மாற்றமும் இல்லாமல் தொடரும்” என்று இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இதன்படி ஆறாம் வகுப்பில் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தம் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மூன்றாவது மொழியாக இந்தியைப் படிக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங் களில் மூன்றாவது மொழியாக ஏதாவதொரு இந்திய மொழியைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 1968-இல் அண்ணா முதலமைச்ச ராக இருந்த போது, தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிக் கொள்கை சட்டமாக்கப்பட்டது. இன்று வரை யில் இதுவே தமிழக அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படு வதில்லை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தின் (சி.பி.எஸ்.சி.) கீழ் இயங்கும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது.
கஸ்தூரி ரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை 2019 சூன் 1 அன்று வெளியானதும் ஆறாம் வகுப்பு முதல் இந்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற கருத்துக்குத் தமிழ்நாட்டில் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்ததும், கஸ்தூரி ரங்கன் இந்தி மட்டும் என்றிருந்ததை ஏதாவதொரு இந்திய மொழி என்று மாற்றி விட்டதாக 3.7.19 அன்று அறிவித்தார். ஆனால் மும்மொழிக் கொள்கையில் மாற்றம் இல்லை. அ.தி.மு.க. தலைமை யிலான தமிழக அரசு மும்மொழிக் கொள்கை பற்றி இதுவரை எந்தக் கருத்தையும் கூறவில்லை.
1968 முதல் தமிழ்நாடு தவிர்த்த தென்னக மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய வற்றில் மும்மொழிக் கொள்கையின்படி, பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. எனவே மும்மொழித் திட்டம் என்பதே இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் நோக்கம் கொண்டதாகும். இந்தி-வடவர் ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சி முளைவிடாமல் மழுங்கடிக்கும் சூழ்ச்சித் திட்டம் இது!
2019-இன் தேசியக் கல்விக் கொள்கை ஆறாம் வகுப்பிலிருந்து இந்தியை - மூன்றாவது மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று இருந்ததை குழந்தையின் இரண்டு அகவை முதலே கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. “2-8 அகவை குழந்தைகள் மிக வேக மாகக் கற்றுக்கொள்வார்கள். பன்மொழிகளைக் கற்பது அவர்களுடைய அறிவாற்றலை மேம்படுத்தும். அதனால் குழந்தைகள் அடிப்படை நிலையிலேயே (3-8 அகவை) மூன்று மொழிகளைக் கற்கத் தொடங்க வேண்டும்” என்று அறிக்கை கூறுகிறது.
“மூன்றாம் வகுப்புக்குள் மூன்று மொழிகளில் பேசவும், எழுத்துக்களை அடையாளம் காணவும், அடிப்படையான வாசிப்புப் பகுதிகளை வாசிக்கவும் திறமை பெறவேண்டும் என்கிற இலக்கோடு இம்மொழி களை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மொழியியல் வல்லுநர்கள் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அம்மொழி யில் திறம்படப் பேசுகின்ற - எழுதுகின்ற ஆற்றலைப் பெறமுடியும்.
ஆறாம் வகுப்பில் தான் இரண்டாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். மழலை மொழியே மாறாத குழந்தை களுக்கு மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்பது குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதாகும். தாய்மொழியை இயல்பாகவும் மகிழ்வுடனும் கற்க விடாமல் தடுக்கும். மழலையர் கல்வி என்பதே மகிழ் வான விளையாட்டு முறைகள், பாடல், ஆடல், கதை மூலம் கற்றல் திறனை வளர்ப்பதாகும். இந்த அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகையில் மும்மொழிக் கொள்கை குழந்தைகளை மிரட்டுகிறது.
தற்போது தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் சேரும் குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடல்களும், எழுத்துகளுமே முதலில் கற்றுத்தரப்படுகின்றன. கருத்துகளைப் பரிமாறல் - பேசுதல் என்பது ஆங்கில மொழி மூலமே பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆங்கில வழியில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாண வர்களில் பெரும்பாலோரால் - தமிழை ஒரு மொழிப் பாடமாகப் படித்திருந்த போதிலும் - இயல்பாகத் தமிழில் பேச முடிவதில்லை; பிழையின்றி நான்கு வரி எழுத முடிவதில்லை. ஆங்கிலத்திலும் இதே நிலைதான். இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளின் மாணவர்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், முதல் வகுப்பு முதலே ஆங்கில வழியில் கற்பிக்க அனுமதியளித்திருந்த தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2019 சூன் 3 அன்று 2,381 நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன் வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆங்கில வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. இவற்றில் 52,000 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு மேலும் மூவாயிரம் பள்ளிகளில் ஆங்கில மழலையர் வகுப்புகள் தொடங் கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழே அறியாத தலைமுறைகளை உருவாக்கும் இந்தக் கல்வி முறையைத் தொடர்ந்து எதிர்த்து மாற்ற வேண்டியது உண்மைத் தமிழர்களின் தலையாய கடமையாகும்.
சமற்கிருதத் திணிப்பு
“சமற்கிருதம் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. அறிவியல், கணிதம், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், அரசியல், இசை, நாடகம், கட்டடக் கலை என 64 கலைகளின் வளர்ச்சியில் சமற்கிருதம் பெரும் பங்களிப் பைச் செய்துள்ளது” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய அறிவியல் துறை எதுவும் சமற்கிருத நூலில் கூறப்பட்டதன் அடிப்படையில் வளரவில்லை. மேலை நாட்டின் அறிவியல் கண்டுபிடிப்புகளே அடித்தளமாக இருக்கின்றன. பிரதமர் மோடி யானைத் தலையுடன் உள்ள கணபதி வேத காலத்தில் இருந்த “பிளாஸ்டிக் சர்ஜரி”க்குச் சான்று என்று கூறுவது போன்றவைதான் இனி பாட நூல்களில் இடம்பெறும்.
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், கலாச்சார ஒற்றுமைக்கும் சமற்கிருதம் ஆற்றிய ஒப்பற்ற - பெருமை மிகுந்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வி யிலும் சமற்கிருதம் விருப்பப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது. இந்துத்துவக் கொள்கைகளைத் திணிப்பதே இதன் நோக்கமாகும்.
வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில் எழுதப்பட்ட படைப்புகள் சமற்கிருதத்தில் இருப்பதாகப் பெருமை பேசுகிறது இந்த அறிக்கை. இதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளது. மும்மொழியுடன் சேர்த்து 6 முதல் 8ஆம் வகுப்புக்குள் இரண்டு ஆண்டுகள் ஒரு செம்மொழியைக் கற்க வேண்டுமாம். மாணவர்களைப் பல மொழிகளைக்கற்கும் இயந்திரங்களாக மாற்றுகிறது தேசியக் கல்விக் கொள்கை. கடந்த நூற்றாண்டில் “தீண்டப்படாதவர்” என்பதற்காகப் பள்ளியில் சமற்கிருதத்தை ஒரு பாடமாகக் கற்க அம்பேத்கருக்கு வாய்ப்பை மறுத்தவர்கள், இன்று எல்லோரும் சமற்கிருதம் படியுங்கள் என்று கூறுவதன் பின்னுள்ள சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பள்ளித் தொகுப்பு (பள்ளி வளாகம்)
2016-17ஆம் ஆண்டில் இந்தியாவில் 28 விழுக்காடு தொடக்கப் பள்ளிகளிலும் 14.8 விழுக்காடு நிடுநிலைப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை 30க்கும் குறைவாகவே இருந்தது. இந்த நிலை தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதில் பெரும் தடையாக இருக்கிறது என்று அறிக்கை கவலை தெரிவிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுவண் அரசு மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடவேண்டும் என்று அறிவுறுத்தி மாநில அரசுகளுக்கு மடல் எழுதியது. இச்சிக்கலுக்கான தீர்வாகப் பள்ளித் தொகுப்பு முறையை இந்த அறிக்கை முன்மொழிந் துள்ளது. இது பள்ளி வளாகம் என்றும் கூறப்படுகிறது. பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கான காரணத்தை இந்த அறிக்கை திட்டமிட்டே மறைத் துள்ளது.
1990 முதல் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் எனும் கொள்கை நடுவண் அரசாலும் மாநில அரசுகளாலும் செயல்படுத்தத் தொடங்கிய பின் ஆங்கில வழியிலான தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் தோன்றின. அரசுப் பள்ளிகளில் சேருவதைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேரத் தொடங்கினர். இது ஆண்டிற்கு ஆண்டு வேகமாக வளர்ந்தது. கடந்த 25 ஆண்டுகளில் இப்போக்கைத் தடுத்திட அரசு தவறியதும், தனியார் பள்ளிகளை ஊக்குவித்ததும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த தற்குக் காரணமாகும்.
பள்ளித் தொகுப்பு என்பதில் 5 முதல் 10 மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் ஒரு மேல்நிலைப் பள்ளியுடன் இணைக்கப்படும். ஒரு வகுப்பில் குறைந்தது 15 மாணவர்கள் இருந்தால்தான் இணக்கமானகற்கும் சூழல் இருக்கும். குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் தாம் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகக் கருதும் நிலை மாறி, பள்ளிகளில் உள்ள ஆதாரங்களும், ஆசிரியர்களும் தேவைக்கு ஏற்பப் பகிர்ந்து கொள்ளப்படுவார்கள், இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரே அனைத்துப் பள்ளிகளுக்கும் சேர்ந்து தலைவராக இருப்பார் என்று அறிக்கை கூறுகிறது.
இதன்படி, 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படும். இவற்றில் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். தமிழ்நாட்டில் பத்துக்கும் குறை வாக மாணவர்கள் உள்ள 1,248 பள்ளிகள் மூடப்பட்டு நூலகங்களாக இயங்கும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். இந்திய அளவில் 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள ஒரு இலக்கம் பள்ளிகள் மூடப்படும்.
2009ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு பள்ளி அமைய வேண்டும் என்று விதித்துள்ளது. ஆனால் தேசியக் கல்விக் கொள்கை இந்த விதிக்கு மாறாகப் பள்ளிகளை மூடலாம் என்கிறது. தனித்து இயங்கவல்ல பள்ளிகள் மட்டும் தனியாக இயங்க அனுமதிக்கப்படும்; மற்ற பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்படும் என்று அறிக்கை சொல்கிறது. 1968-இல் கோத்தாரி கல்விக் குழு முன்மொழிந்த அருகமைப் பள்ளி முறையும் கைவிடப்படுகிறது.
தொலைவில் உள்ள பள்ளிக்குக் குழந்தைகள் செல்ல முடியாமல் பள்ளியை விட்டே நின்றுவிடு வார்கள். ஊரகப் பகுதிகளில் வாழும் மாணவர்களின் கல்வி பாழாகும். தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதற்குப் பள்ளித் தொகுப்பின் கல்விக்குழு மிதிவண்டி, ரிக்ஷா, பேருந்து முதலான வசதிகளை அதன் சொந்தப் பொறுப்பில் செய்து தர வேண்டும் என்று நடைமுறைக்கு இயலாத ஒன்றைப் பரிந்துரை செய்துள்ளது.
தேர்வுகள்
2009ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தில் எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டிலேயே 5ஆம் வகுப்பிலும் 8ஆம் வகுப்பிலும் மாணவர்களை நிறுத்தலாம் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. இப்போது தேசியக் கல்விக் கொள்கையில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை அறிவதற்கான தேர்வாகவும், மனப்பாடத் திறனை மதிப்பீடு செய்வதாக இருக்காது என்றும் கூறப்பட்ட போதிலும் 3ஆம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்பது மாணவர்களின் இயல்பூக்கத்தைச் சிதைக்கும்; இடைநிற்றலை அதிகமாக்கும்.
9, 10, 11, 12 ஆகிய நான்காண்டுகளின் கல்வி எட்டுத் தேர்வுகளைக் கொண்ட பருவ முறையாக (செமஸ்டர்) அமைக்கப்படும். இது மனப்பாட முறை யிலிருந்து மாணவர்களை விடுவிக்கும். அறிவியல் படிப்பவர்கள் கலைப் பாடங்களையும், கலைப் பாடங்களைப் படிப்பவர்கள் அறிவியல் பாடங்களையும் விருப்பப் பாடமாகப் படித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அடிப்படைப் பாடங்கள் 24, விருப்பப் பாடங்கள் 16 என்று வகுத்திருக்கிறார்கள். பாடச் சுமையைக் குறைப்பதாகக் கூறிவிட்டு, பாடச் சுமை யையும் பொதுத் தேர்வுகளின் எண்ணிக்கையையும் அதிகமாக்கியிருப்பது மாணவர்களுக்குப் பெரும் மன அழுத்தத் தரும். இதனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். இவ்வளவு தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றாலும் பட்டப் படிப்பில் சேருவதற்கு இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது மாநிலங்களின் உரிமை யைப் பறிப்பதாகும்.
தொழிற்கல்வி
வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்ற பெயரில் 3, 4, 5 வகுப்பு குழந்தைகளுக்குத் தோட்டக் கலை, மண்பாண்டம் செய்தல், மரவேலை குறித்து அருகில் உள்ள பயிற்றுநர்கள் கற்றுக்கொடுப்பார்கள். 6-8 வகுப்புகளிலும் இது தொடரும். 9ஆம் வகுப்பு முதல் கூடுதலாக வேளாண்மை, மின்னணுவியல், வட்டார வணிகம் முதலானவற்றில் தொழிற்கல்வி வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயர்நிலை-மேனிலைப் பள்ளிகளில் பல ஆண்டுகளாகத் தொழிற்கல்வி முறை இருந்து வருகிறது. இதற்கான கட்டமைப்போ, ஆசிரியர்களோ இல்லை. மீண்டும் இதையே வலியுறுத்துவது படிப்பில் பின்தங்கிய மாண வர்களைத் தொழிற்கல்வியில் ஈடுபடுத்தி அவர்களின் உயர்கல்வி வாய்ப்பை வீணடிப்பதாகும். 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் ஐ.டி.ஐ. போன்ற தொழில் பயிற்சி நிறுவனங்களில் தாம் விரும்பும் தொழிற்கல்வியைப் பெறுகின்றனர். இதை முறையாக மேலும் செம்மையாக நடத்துவதற்கு மாறாகப் பள்ளி நிலையில் அனைவரும் தொழிற்கல்வி பயில வேண்டும் என்பது புதிய வருணாசிரமத்தைப் புகுத்துவதாகும்.
தன்னார்வலர்கள்
2025ஆம் ஆண்டிற்குள் அய்ந்தாம் வகுப்பு, அதற்கு மேற்பட்ட வகுப்புகளின் மாணவர்கள் ஒவ் வொருவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் ணறிவை அடைந்திடல் வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை சொல்கிறது.
தற்போது தொடக்கக் கல்வி பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களில் பெரும் பகுதி மாணவர்களால் - 5 கோடிக்குமேல் - 2ஆம் வகுப்புக்குரிய மொழிப் பாடத்தைப் படிக்க முடியவில்லை; எளிய பெருக்கல், வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடியவில்லை. இது முதன்மையான ஒரு குறைபாடாகும்.
இரண்டாவதாக இடைநிற்றல் ஒரு முதன்மையான சிக்கலாக இருக்கிறது. 2016-17ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதம்-அதாவது முதல் வகுப்பில் சேர்ந்த 100 மாணவர்களில் 5ஆம் வகுப்பில் 95 விழுக்காடு, 8ஆம் வகுப்பில் 90.7 விழுக்காடு, 10ஆம் வகுப்பில் 79.3 விழுக்காடு, 12ஆம் வகுப்பில் 51.3 விழுக்காடு என்று குறைந்துவிட்டது. 5ஆம் வகுப்புக்குப்பின் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. 6-18 அகவைக்குட்பட்ட சிறுவர்களில் 6.2 கோடிப் பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தனர். இக்குறைபாடு களை நீக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பத்து கோடி யாக உயரும் என்று தேசியக் கல்விக் கொள்கை வரைவு அச்சம் தெரிவிக்கிறது.
ஆனால் இக்குறைபாடுகளை ஆசிரியர்களால் மட்டுமே தீர்க்க முடியாது என்று கூறுகிறது. தன் சமூகத் திற்கும் தேசத்திற்கும் சேவை செய்யும் நோக்கமுள்ள படித்த தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதன் மூலமே இதை மாற்ற முடியும் என்கிறது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட தொடக்கக் கல்வியில் கற்றல் குறை பாடு உள்ள குழந்தைகளுக்கு இருக்கின்ற ஆசிரியர் களைக் கொண்டே கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறதே தவிர, தன்னார்வலர்களுக்குக் கதவைத் திறந்துவிட வில்லை.
தன்னார்வலர்கள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆள்களைப் பள்ளிக் கல்விக்குள் நுழைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, கற்றல் குறைப hடுள்ள குழந்தைகளுக்குத் தனியாகவோ, குழுவாகவோ பள்ளி நேரத்திலோ, பள்ளி முடிந்த பின்போ பயிற்சி தருவார்களாம். அதேபோல் பள்ளியை விட்டு நின்று விடுகின்ற மாணவர்களைச் சந்தித்து ஊக்கமூட்டி மீண்டும் பள்ளியில் சேர்ப்பார்களாம். தன்னார்வலர் களே உண்மையான உள்ளூர் கதாநாயகர்கள் என்று இந்த அறிக்கை புகழ்கிறது.
பெருகி வருகின்ற தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கிறது இக்கல்வி அறிக்கை. கட்டணக் கல்வி வழங்கும் நிலை மேலோங்கியுள்ள நிலையில் அரசின் இலவயக் கட்டாயக் கல்வி என்பது ஏட்டளவில் நிற்கும் நிலை ஏற்படும். கல்விக் கட்டணத்தை சில வரம்புக் குட்பட்டு நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
கல்வி கற்கும் சூழலை மேலும் சுமையானதாக ஆக்குகின்ற - மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற - இந்தி, சமற்கிருத மொழிகளையும் இந்துத் துவத்தையும் திணிக்கின்ற சமூக நீதிக்கும் சனநாயக நெறிமுறைக்கும் எதிராக இருக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நோயைவிடத் தீமையான தீர்வை முன்மொழிந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை முற்றிலுமாக எரிக்கப்பட வேண்டும்.