கீழடியை சரஸ்வதியோடு ஒப்பிட முடியாது. கீழடி என்பது வரலாறு, சரஸ்வதி என்பது ஒரு கற்பனை. முதலில் சரஸ்வதியைப் பார்போம், பின்னர் கீழடிக்கு வருவோம்.

சரஸ்வதி நதி எங்கே இருக்கிறது, எங்கே ஓடுகிறது என்பதற்கு இதுவரை தெளிவான விளக்கம் இல்லை. சரஸ்வதி நதி நதிகளின் தாய் என்றும், அது ஒரு புண்ணிய நதி என்றும் ரிக்வேதம் சொல்கிறதாம். இது ஒன்றிய அரசு கேட்கும் 'விஞ்ஞானப்பூர்வ ஆதாரமா?' என்றால் இல்லவே இல்லை, தொகுப்புதான்.

அலகாபாத் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் அனாமிகா, "புராணங்களின் கூற்றுப்படி சரஸ்வதி நதி பிரம்மாவின் மகளாக அறியப்படுகிறார். சரஸ்வதி, கெளஷாம்பி பேரரசர் புருரவா மீது காதல் கொண்டதாக புராணங்களில் உள்ளது. சரஸ்வதியின் காதலை அறிந்த பிரம்மா கோபத்தில் மறைந்து போகுமாறு சாபம் விடுத்ததாகப் புராணத்தில் கூறப்படுகிறது என்று அறியப் படுவடுவதாகவும், கூறப்படுவதாகவும் சொல்கிறார். மதுராவைச் சேர்ந்த பேராசிரியர் தனஞ்செயதாஸ் ஒரு கதை சொல்கிறார். "பத்ரிநாத் என்ற இடத்திலிருந்து சரஸ்வதிநதி உருவானதாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி நதிநீர் ஓடும்போது எழும் சத்தத்தால் முனிவர் ஒருவரின் தவம் கலைந்து விட்டதால் அவர் கொடுத்த சாபத்தில் சரஸ்வதி நதி அழிந்து போனதாகக் கதைகள் உள்ளன என்று அவரும் ஒரு கதையைச் சொல்கிறார்." வடமொழியில் புலமை பெற்ற கவிஞர் காளிதாசர் தான்எழுதிய ரகுவம்சத்தில் சிந்து, கங்கை நதிகளைச் சொல்லும்போது ஏன் சரஸ்வதியைக் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரி! இந்த நதி எங்கே இருக்கிறது?

இமாச்சப் பிரதேசம் தொடங்கி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் வழியாக குஜராத்துக்குள் நுழைந்து அரபிக்கடலில் கலந்து விடுகிறதாம். இந்திய ஒன்றியத்தின் அனைத்து நதிகளும் வங்கக்கடலில் கலக்கும்போது, சரஸ்வதி மட்டும் குஜராத்தில் உள்ள ரானாப்கட்ச் என்ற இடத்தில் அரபிக்கடலில் கலப்பது என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.

ராஜஸ்தானின் மூத்த நிலத்தடி நீர் விஞ்ஞானி டாக்டர் நாராயணதாஸ் இன்கையா தலைமையிலான குழுவினர், "ராஜஸ்தானின் ஜெய்சல்மர் என்ற இடத்தில் 850 அடி வரை தோண்டியபோது பாறைகள் உடைந்து நீர் ஊற்று வெடித்தது. இவை களிமண் பாறைகள் என்பதால் அதன் அடுக்கு மிகவும் வலுவானது. அந்த அடுக்கு உடைந்த போதுதான் தண்ணீர் இவ்வளவு ஆற்றலுடன் அதிவேகமாக வெளியேறியுள்ளது" என்று கூறினார் அவர்.

அதேசமயம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சரஸ்வதி நதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த குழுவின் தலைவருமான டாக்டர் ஜே.ஆர்.சர்மாவும் "ஜெய்சல்மரில் இப்போது வந்த தண்ணீர் சரஸ்வதி நதியில் இருந்து வந்ததா இல்லையா என்பது அந்த நீரை கார்பன்டேட்டிங் மூலம் காலக் கணடக்கிடல் செய்த பிறகுதான் தெரிய வரும்" என்று விவரித்தார்.

என்ன முயன்றாலும் சரஸ்வதி நதியைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்க வில்லையே என்று விழிபிதுங்கி இருக்கிறது ஒன்றிய அரசு. நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சொல்வதுபோல், ராஜஸ்தானில் உள்ள ஐந்து இடங்களில் பத்து குழிகளைத் தேடி சரஸ்வதி நதியைக் கண்டுபிடித்து விட்டார்களாம்.

தமிழ்நாட்டின் கீழடி - "வைகைச் சமவெளியின் நாகரீகம்" என்பதை உறுதி செய்து கொண்டு இருக்கிறது. கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்துஆய்வு செய்தபோது அந்தத் தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது கீழடியில் ஒரு பானை ஓட்டில் இருந்த எழுத்துகளை வைத்து தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. கீழடியில் 102 குழிகள் தோண்டி, 88 கார்பன் மாதிரிகள், 5700 தொன்மைப் பொருள்களைக் கொண்டு ஆய்வு செய்த ஆய்வறிக்கையை இன்று ஏற்க மறுக்கலாம் மோடியின் ஒன்றிய அரசு. எப்போதும் மறுக்க முடியாது. எகிப்திய நாகரிகம், சுமேரிய நாகரிகம், நைல்நதி நாகரிகம் வரிசையில் நாளை வைகைச் சமவெளி நாகரிகத்தையும் உலகம் படிக்கப் போகிறது.

வரலாற்றுக் கீழடியும், சரஸ்வதி என்ற கற்பனை நதியும் திராவிட - ஆரியப் போரின் தொடர்ச்சிதான்!

- எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.