பறை நம் இசை!
பறை நம் உணர்வு!
பறை நம் முழக்கம்!
அந்தப் பறையை முழக்கி, சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொங்கலுக்கு முதல் நாள் சென்னை, எழும்பூரில் தொடக்கி வைத்த போது, அந்த மேடையின் நீள, அகலம், எழிலார்ந்த வடிவம், எடுப்பான தோற்றம் என மலைக்க வைத்த நிலை கண்டு அரங்கமே மகிழ்ந்தது, எழுந்தது, அந்தப் பகுதியே அதிர்ந்தது!
தமிழர்களின் கலை உலகும், இசை அழகும் எவ்வளவு விரிந்து பரந்தவை என்பதை அன்றைய நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டின. திரை அரங்கில், அதுவும் 70 எம்.எம். திரைகளில் மட்டுமே காணக்கூடிய கண்கொள்ளாக் காட்சிகளை அந்த அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் கண்டு களித்தனர்!
முத்தமிழும் ஒத்து விளையாடிய அன்றைய தொடக்க விழாவிற்குத் தொடக்கமாய் இருந்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்! அவர் காட்டிய வழியில் நின்று, இயல், இசை, நாடகக் கலைஞர்களின் ஏற்றமிகு கலைத்திறனை நாடே போற்றும் வகையில் அரங்கேற்றியவர் - இன்றும் அரங்கேற்றிக் கொண்டிருப்பவர் - கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள்!
ஓர் இனத்தின் பெருமை, அதன் போர்த்திறத்தில் மட்டுமில்லை! அந்த இனம் கட்டிக் காத்து வரும் கலைகளின் வடிவிலும் அது காலங்களைக் கடந்து நிற்கிறது!
இதனை நன்கு உணர்ந்திருக்கும் கனிமொழி அவர்கள், பழங் கலைகளைக் காப்பாற்றுவதோடு, அந்தக் கலைஞர்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்! அவர்களில் சிலரை நான் சந்தித்தபோது, அவர்கள் மிகுந்த அன்போடும், நன்றி உணர்ச்சியோடும் இதனை வெளிப்படுத்தினார்கள்!
வெறுமனே வீட்டில் பொங்கல் வைப்பதோடு நின்றிருந்தால், அது பத்தோடு பதினொன்றாக முடிந்திருக்கும்! இப்போது தெருவெல்லாம் கேட்கும் இந்தக் கலைகளின் முழக்கம், பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாய் - திராவிடப் பொங்கலாய் உயர்த்திப் பிடித்திருக்கிறது!
கலைகளையும், கலைஞர்களையும் காத்துப் போற்றி வரும் தமிழ்நாடு அரசும், அவர்களை அரவணைத்துப் போற்றும் கனிமொழி அவர்களும், என்றும் நம்முடைய மிகுந்த பாராட்டிற்கு உரியவர்கள்!
- சுப. வீரபாண்டியன்