எழுபதுகளின் ஆரம்பத்தில் கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் ஊரில் சாதாரண ஓலை வீட்டின் முன், வாகை மரத்தின் நிழலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கிடந்த கோபால ராவையும் (1882 - 1976). அவரது கடைசித் தம்பி சுப்பையா ராவையும் (1908 - 2003) சந்தித்தபோது நிறையப் பேசினோம்.
கோபாலராவ் அன்று ஞானசவுந்தரி தோல்பாவைக் கூத்து பற்றியும் கொஞ்சம் சொன்னார். தொடர்ந்து பேச அது பற்றிய அறிவும் எனக்கு இல்லை. அவரும் தளர்ந்து இருந்தார், காது மந்தம். அன்றைய பேச்சின் வழி ஒரு விஷயத்தை மட்டும் அறிந்து கொண்டேன்.
தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் இராமாயணம் தவிர பிற கதைகள் எல்லாம் 1920ஆம் நூற்றாண்டில்தான் தயாரிக்கப்பட்டன. பார்வையாளர்களின் வேண்டுகோளும் இதற்கு ஒரு காரணம். நல்லதங்காள் கதையும் அப்படி வந்ததுதான் என்பது உண்மையாகிறது.
கோபாலராவின் தந்தை - கிருஷ்ணராவ் (1830 - 1900) காலத்தில்தான் நல்லதங்காள் கதை தோல்பாவைக் கூத்தில் அறிமுகமானது. வாய்மொழியாக இருந்த கதை, ஸ்பெஷல் நாடகக் கதை, அம்மானைக் கதை ஆகியன கூத்துக்குப் பயன்பட்டன. 1935இல் பி.பி.ராவ் இயக்கிய ஏஞ்சல் பிலிம்ஸ் வெளியிட்ட திரைப்படத்தின் காட்சிகளை கோபாலராவ் பயன்படுத்தினார்.
நல்லதங்காள் சினிமா 1955லும் வந்தது. இது ஆர்.எஸ்.மனோகர் நடித்தது. பி.வி.கிருஷ்ணய்யர் இயக்கியது. மருதகாசி பாடல்கள் எழுதினார். எம்.எஸ்.சீர்காழி கோவிந்தராசன், பி.லீலா போன்றோர் பாடினர். கோபாலராவ், பி.லீலா பாடிய ‘அன்னையும் தந்தையும் இல்லாத’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். அது அவரோடு முடிந்தது.
நல்லதங்காள் கூத்துக்கு ஹட்ஹின்ஸ் நாடகக் கோஷ்டியார் தயாரித்த ரிக்கார்டு பாட்டுக்களையே 60களில் பயன்படுத்தினர். ஆனால் ஞானசவுந்தரி கூத்து என்பதற்கு நல்லதங்காள் கூத்து உருவான பின்னணி கிடையாது. ஞானசவுந்தரி கூத்து முழுக்கவும் சினிமாவைப் பார்த்துத் தயாரிக்கப்பட்டது.
கோபாலராவ் ஒருமுறை தோவாளை தாலுகாவில் ஒரு சிறு கிராமத்தில் ஞானசவுந்தரி கதை நடத்தியபோது, ஊர்த் தலைவர், “இதேபோல் நாளையும் இந்தக் கதையை நடத்துங்கள், சென்னையிலிருந்து ஒருவர் கூத்தைப் பார்க்க வருகிறார்” என்றாராம்.
கோபால ராவ் அடுத்த நாள் கூத்து நடத்த சிறப்பு ஏற்பாடுகளுடன் இருந்தார். பார்வையாளர்களுக்கு இடையூறு இல்லாதவாறு பிரமுகர் உட்கார நாற்காலி போட்டிருந்தார். பிரமுகர் வந்தார்; கூத்து பார்த்தார். கோபாலராவை அழைத்துப் பாராட்டினார். இரண்டு வேட்டி சேலை, கொஞ்சம் பணமும் கொடுத்திருக்கிறார்.
பரமசிவராவுக்கு அப்போது 13 வயது. இந்தப் பழைய கதையைச் சொல்லிவிட்டு அன்று கூத்துப் பார்த்தவர் சிட்டாடல் பிலிம்ஸ் தயாரித்த ஞானசவுந்தரி சினிமாவுக்கு உரையாடல் எழுதியவர்; கடுக்கரை என்ற ஊரினர்; நாஞ்சில் நாடு ஜி.ழி.ராஜப்பா என்றார்.
இந்த நிகழ்ச்சி நடந்து 2-3 நாட்களில் நாகர்கோவிலில் - நடந்த இலக்கியக் கூட்டம் ஒன்றில் ராஜப்பா பேசியிருக்கிறார். அதில் “ஞானசவுந்தரி பாவைக் கூத்து பார்த்தேன், என் உரையாடல் கதைக்குப் பெருமை சேர்ப்பது மாதிரி கூத்து நடத்தினார் கோபாலராவ் என்றாராம்." இது தொண்டன் இதழில் (1952 மார்ச்) பதிவாகியிருக்கிறது.
இப்படியாக 80களின் ஆரம்பத்தில் பரமசிவராவ் நடத்திய ஞானசவுந்தரி கூத்தை நான் பார்த்திருந்தாலும் ஞானசவுந்தரி அம்மானையைப் படிக்கவில்லை. எனது பி.எச்டி ஆய்வுக்காகக் கதைப்பாடல் தேடி அலைந்தபோது ஆறுமுகப்பெருமாள் நாடார் வீட்டில் ஞானசவுந்தரி அம்மானை நூலின் ஒரு பிரதியையும் (1979) ஏட்டுப் பிரதியையும் பார்த்தேன். அது என் ஆய்வுப் பரப்பில் இல்லாததால் ஆழ்ந்து படிக்கவில்லை.
“ஞானசவுந்தரி அம்மானை” என்னும் கதைப்பாடல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்திருக்கிறது. பெரிய எழுத்து சித்திர புத்திரன் கதை போல் இந்த அம்மானையை ஒருவன் படிக்க பிறர் கேட்பது என்ற பழக்கம் இருந்திருக்கிறது.
தமிழ் எழுத்து வடிவம் தெரியாத ஆனால் தமிழ் தெரிந்த கத்தோலிக்க மலையாளிகள் இக்கதையை மலையாள எழுத்தில் எழுதிவைத்துப் படித்திருக்கிறார்கள். இது 1945இல் அச்சில் வந்திருக்கிறது. பதிப்பாசிரியர் (பாற சாலை பர்னபாஸ்) இதன் ஒரு பிரதியை மணவாளக்குறிச்சி விக்கிரமன் தம்பியின் வீட்டில் பார்த்திருக்கிறேன்.
இந்த அம்மானையை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் வேலையில் திக்குறிச்சி கங்காதரன் நாயர் இருந்தார். இவர் தமிழிலிருந்து 18க்கு மேற்பட்ட கதைப் பாடல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை ஒரே நூலாக வந்திருக்கிறது.
ஞானசவுந்தரி அம்மானை எழுதியவரின் ஊரான தளவாய் புரத்தில் பேரா. பிரான்சிஸ் என்பவரின் வீட்டில் தேவசகாயம் பிள்ளையின் நாடக ஏட்டைத் தேடிச் சென்றபோது அதே ஊரில் ஞானசவுந்தரி அம்மானை ஏடு இருப்பதை அறிந்தேன். சென்று கேட்க முடியாத சூழல். பள்ளம், வில்லிக்கீறி என்ற ஊரிலும் அந்த ஏடு உள்ளது என்று ஒருவர் சொன்னார்.
80களில் தேடியிருந்தால் ஒன்று ரெண்டு ஏடுகள் கிடைத்திருக்கும், நான் முயற்சிக்கவில்லை.
இந்த நூல் அம்மானை வடிவிலானது. 3865 வரிகள். 149 வருக்கங்கள். இது மலையாள, பேச்சு வழக்குக் கலப்புடையது. ஆசிரியர் பெயர் நூலில் இல்லை. இது அரங்கேறியது பற்றிய குறிப்பு உண்டு.
அம்மானை பாடி அரங்கேற்ற வைத்த தலம்
இம்மாநிலத்தில் இலங்கும் பெரும் பதியாம்
மந்திக்காட்டூர் தனிலே மாதவத் தோன் கிஷன்
அந்தோணி ஆலயத்தில் அமிர்தனார் சர்குருவின்
திருநாள் கொடி யேறி தேரோட்டம் காணவந்து
இருந்த சபையோனின் இன்னாசி முத்துப்பிள்ளை
சபை எல்லாம் போர்த்த சுவாமிநாதப் புலவர்
சுயவிருப சொல்லெடுத்து துடர்ந்து முகித்த கதை
என்கிறது நூல்.
இங்குக் குறிப்பிடப்படும் மந்திக்காட்டூர் நாகர்கோவில் புனித சிலுவைக் கல்லூரி அருகே உள்ள ஊர்; இங்குள்ள அந்தோணியார் கோவிலில்தான் நூல் அரங்கேறியது என்கிறார் பதிப்பாசிரியர் (தி.நடராசன் 1979 ப.11). இந்தக் கோவில் பேச்சு வழக்கில் குருசடிக் கோவில் எனப்படுகிறது.
இந்தக் கட்டுரை எழுதுமுன் இந்த ஊருக்கும் போனேன். வயதான ஒன்றிரண்டு பேரிடம் பேசினேன். அவர்கள் ஞானசவுந்தரி கதையை அறிந்திருந்தனர். நூல் பற்றியும் சொன்னார்கள். அவர்களின் தகவல்படி இந்நூல் 19ஆம் நூற்றாண்டில் அரங்கேறியிருக்கலாம் என்று ஊகித்தேன்.
குருசடிக் கோவில் திருவிழாவில் 9ஆம் நாள் தேரோட்ட விழா அன்று மாலையில் பக்தர்கள் முன் இது அரங்கேறியது. அப்போது சத்குரு இன்னாசி முத்துப் பிள்ளையும் சுவாமிநாதப் புலவரும் உடன் இருந்தனர். அதோடு சுவாமிநாதன் முதலடியை எடுத்துக் கொடுக்க ஆசிரியர் நூலைப் படித்தார் என்று நூல் கூறுகிறது.
நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றாலும் நூல் இயற்றியவரின் ஊர் குறிப்பிடப்படுகிறது.
சிறப்பிலங்கும் கோட்டாற்றுச்
சிறந்த தளவாய்புரத்தில்
சர்வேஸ்வரன் நாமம் தருவனார்
புத்திரன்தான்
என்ற வரிகளில் குறிப்பிடப்படும் ‘தளவாய்புரம்’ என்ற ஊரைச் சார்ந்தவர் இந்த அம்மானை ஆசிரியர். இது இப்போது நாகர்கோவில் இராமன்புதூர் அருகே உள்ள ஊர். இப்போது கத்தோலிக்கத்தினர் மட்டுமே வாழ்கின்றனர்.
இந்நூல் எழுதப்பட்ட காலத்தை அறிய நூலில் ஒரு சான்று உண்டு.
ஏடெழுத நான் துவங்கி எண்பத்து
ரெண்டாண்டில்
தேடியே ஆனித் திங்கள் பிறந்த
தேதி ஆறதிலே
என்ற வரிகளின் அடிப்படையில் இந்நூல் 73 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்கிறார் பதிப்பாசிரியர். அதாவது இந்நூலில் வெளியிடப்பட்ட 1979ஆம் ஆண்டிலிருந்து 73 ஆண்டுகளைக் கழித்தால் 1906 வரும். இந்த ஆண்டில் நூல் எழுதப்பட்டது என்பது நூலாசிரியர் கருத்து. இது தவறான கருத்து.
நாகர்கோவிலில் 19ஆம் நூற்றாண்டில் அச்சுப் புத்தகம் வந்துவிட்டது. 1870 அளவில் தாளில் எழுதுவதும் சகஜமாகிவிட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் தாளில் எழுதுவதற்குப் பயிற்சியும் கொடுத்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் 1906இல் இந்த அம்மானை ஓலையில் எழுதப்பட்டது என்று கூறுவது பொருந்துமாறில்லை
இந்நூலில் “ஏடெழுத நான் துவக்கி எண்பத்தி ரெண்டளவில்” என்பது மலையாள வருவத்தைக் குறிப்பது, ம.ஆ.82 என்பதை 982 ஆகக் கொள்ளவேண்டும். இதில் ஆனி மாதம் என்ற குறிப்பும் உள்ளது. ஆகவே இந்த அம்மானை கி.பி.1806இல் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதலாம்.
ஞானசவுந்தரி அம்மானை கதையின் சுருக்கம் வருமாறு: இதே கதை மிகச் சிறிய மாற்றங்களுடன் சினிமா, தோல்பாவைக்கூத்து, நாடகம் ஆகியவற்றில் வருகிறது. மூலக்கதை ஒன்றுதான்.
ரோம அரசர் தர்மர். அவரது மனைவி உடல்நலமில்லாமல் இறந்துவிட்டாள். 6 வயதில் பெண் குழந்தை உண்டு. பெயர் ஞானசவுந்தரி. தர்மன் லேனாள் என்ற பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டான். ஒருமுறை பொது ஜனங்கள், அரசனிடம் காட்டு விலங்குகள் விவசாய நிலங்களை அழிக்கின்றன என்று முறையிட்டார்கள்.
அதனால் அரசன் விலங்குகளை வேட்டையாடப் போனான். லேனாள் சித்தியின் பொறுப்பில் இருந்தாள்.
ஞானசவுந்தரியை ஒழித்தால் தனக்கு நிம்மதி என்று நினைத்த லேனாள் அதற்குத் திட்டமிட்டாள். இரண்டு கொலையாளிகளுக்குப் பொன் கொடுத்து ஞானசவுந்தரியைக் காட்டில் கொண்டுபோய் வெட்டிவிடுமாறு கூறினாள். கொலையாளிகள் அவளை காட்டில் வெட்ட முயன்றபோது ஏகத்துவான் இளவரசன் பிலவேந்திரன் வந்துவிட்டான், அதனால் கொலையாளிகள் அவளது கையை மட்டும் வெட்டிவிட்டுச் சென்றனர்.
இளவரசன் அவளை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தான்; பெற்றோர் விருப்பமின்றி அவளை மணந்து கொண்டான். தருமர் வேட்டையை முடித்துவிட்டு நாட்டுக்கு வந்தார். லேனாள் “எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உங்களைத் தேடி காட்டுக்குப்போய் விட்டாள்” என்கிறாள். மன்னனும் அதை நம்புகிறான்.
இந்தச் சமயத்தில் பகைவர்கள் தருமனின் நாட்டின் மேல் படையெடுத்தனர். தருமன், பிலவேந்திரனிடம் உதவி கேட்டான். அவன் படையுடன் வந்தான். போர் நடந்தது. அப்போது பிலவேந்திரனுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தூதன் கொண்டு வந்தான். பிலவேந்திரன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒரு கடிதம் கொடுத்தான்.
அதன்மூலம், ஞானசவுந்தரி உயிருடன் இருப்பதை லேனாள் அறிந்தாள். அவளை எப்படியும் கொல்லத் திட்டமிட்டு தூதனைச் சூழச்சியால் வரவழைத்தாள். பிலவேந்திரன் அவனிடம் கொடுத்த ஓலையைக் கைப்பற்றினாள். வேறு ஒரு ஓலையை எழுதி அவன் பையில் வைத்தாள்.
அதில் ஞானசவுந்தரியையும் அவளது குழந்தையையும் கொல்லும்படி பிலவேந்திரனின் தந்தைக்கு செய்தி இருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
ஞானசவுந்தரி காட்டில் பரலோக தேவநாதனைக் கண்டாள். இழந்த கைகளைப் பெற்றாள். பூரண பொலிவு பெற்றாள். பிலவேந்திரன் போர் முடிந்த பின் தன் வீட்டிற்குத் திரும்பினான். நடந்ததை அறிந்தான் காட்டுக்குச் சென்றான். ஞானசவுந்தரியைக் கண்டான். திரும்பியழைத்தான். தருமரிடம் நடந்ததைச் சொன்னான்.
விஷயம் தெரிந்து, அவர் தன் மகளை ஆசையோடு அழைத்துக் கொண்டார். லேனாளை நெருப்பில் தள்ளுமாறு தருமர் ஆணையிட்டார். தருமரின் நாடு பிலவேந்திரனின் நாட்டுடன் இணைந்தது. காலம் கடந்தது. தருமன் இறந்தான். பின் பிலவேந்திரன், ஞானசவுந்தரி ஆகியோரும் இறந்தனர்.
***
இந்த அம்மானையில் 12 கிளைக்கதைகள் உள்ளன. அவை சந்தியாகு மன்னன் கதை, செனுகர் பூராக்கினி கதை, கர்த்தர் பன்னிரண்டாம் வயதில் தப்பிச் சென்ற கதை, சவேரியார் பெண் குழந்தையை ஆண் குழந்தையாக ஆக்கிய கதை, எஸ்தாக்கியார் குழந்தைகள் கதை, கர்த்தர் தண்ணீரைத் திராட்சை ரசமாக்கிய கதை, விசத்தியப்பர் கழுதையின் கழுத்தை அறுத்துப் பின் பொருத்திய கதை ஆகியன.
திருவிதாங்கூரில் போர்ச்சுக்கீசியரின் வரவிற்குப் பின் வாசகப்பா, பாஸ்கா போன்ற கலை வடிவங்கள் நுழைந்தன. இவற்றிற்குப் பின்னணியாக உள்ள கதைகளும் கத்தோலிக்கரிடம் வாய்மொழியாகப் பேசப்பட்டன. இப்படியான கதைகளில் ஞானசவுந்தரி கதையும் ஒன்று.
மத்தேயு சுவிஷேசத்தில் வரும் சில நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இக்கதை. ஆபிரகாம் (தருமர்), ஆதார் (ஞானசவுந்தரி), சாராய் (லேனாள்) என்னும் பாத்திரங்களுடன் தொடர்புடையது.
மலைப்பொழிவில் (மத்தேயு) துயருறுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் என்பதற்கு ஞானசவுந்தரி கதையை சான்றாக்குவர்.
விவிலியக் கதைப்படி லேனாள் தூக்கிலிடப்பட்டு நெருப்பில் தள்ளப்படுகிறாள்.
***
ஞானசவுந்தரி அம்மானை அரங்கேறிய மந்தங்கரை குருசடிக் கோவிலில் 80களில் கூட ஞானசவுந்தரி சினிமாவை பொதுமக்களுக்காகக் காட்டினார்களாம். கேபிள் டி.வி கூட பரவலாகாத காலம். அதனால் அந்தக் கதை பரவலாக அந்த ஊர் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.
ஞானசவுந்தரி கதையை ஒரே சமயத்தில் இரண்டு பேர் திரைப்படமாக்கினார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை.
இந்திய சுதந்திரத்தின் அடுத்த வருஷம் ஜெமினியின் ஞானசவுந்தரி சினிமா வந்தது. (1948 ஜூன்) இயக்கம் முருகதாசா, தயாரிப்பு நாயனார். கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை உரையாடலையும் சில பாடல்களையும் எழுதியிருந்தார். பாபநாசம் சிவனும் சில பாடல்களை எழுதியிருந்தார். இசை எம்.டி.பார்த்தசாரதி.
இந்த சினிமாவில் பிலவேந்திரனாக எம்.கே.ராதாவும் ஞானசவுந்தரியாக எஸ்.வி.சுசீலாவும் நடித்திருக்கின்றனர். படம் படுதோல்வி. இதே சமயத்தில் ஜோசப் தளியத் எடுத்த படம் அமோக வெற்றியடைந்தது. அதனால் ஜெமினிவாசன் தான் எடுத்த படத்தின் படச் சுருளை எல்லாம் திரும்பிப் பெற்று ஒன்றாகப் போட்டு நெருப்பு வைக்கச் சொன்னாராம். அந்தப் படம் எடுக்கப்பட்டதன் அடையாளம் கூட இல்லாமல் ஆனது.
சிட்டாடல் பிலிம்ஸ் தயாரித்த ஞானசவுந்தரி சினிமாவும், 1948 தை மாதம் 8ஆம் தேதி வெள்ளியன்று வெளியானது. ஜெமினி படம் தோல்வியடைந்த பிறகுதான் சிட்டாடல் படம் வந்தது. இந்த சினிமாவை ஜோசப் தளியத், எம்.நாகூர் இருவரும் இயக்கியிருந்தனர். தயாரிப்பு ஜோசப் தளியத். இது அமோக வெற்றிப் படம்.
படம் முழுவதும் நீயோடன் ஸ்டுடியோவில் எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தின் உரையாடலை நாஞ்சில் நாடு டி.என்.ராஜப்பா என்பவர் எழுதியிருந்தார். இவர் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், கடுக்கரை ஊரைச் சார்ந்தவர். இவரது தம்பி பிரபல தி.மு.க. பிரமுகர் நீலநாராயணன், இப்படத்தில் இருபது பாடல்கள் இருந்தன.
பாடல்களை பாலச்சந்திரகவி, கம்பதாசன், பாபநாசம் சிவன், கே.ஆர்.சாரங்கபாணிபிள்ளை, கே.டி.சந்தானம் ஆகியோர் எழுதியிருந்தனர். இசை எஸ்.வி.வெங்கட்ராமையா. லலிதா, பத்மினி இருவரின் தனி நடனக் காட்சிகள் உண்டு.
இப்படத்தில் பிலவேந்திரனாக டி.ஆர்.மகாலிங்கமும் ஞானசவுந்தரியாக எம்.பி.ராஜம்மாவும் சிறுமி ஞானசவுந்தரியாக பேபி ராஜா மனைவியும் லேனாளாக பாக்கமும் நடித்திருந்தனர். மற்றும் பாலசுப்பிரமணியம் (தருமர்), பி.ஆர்.மங்களம் (ஆரோக்கியம்), புளிமூட்டை ராமசாமி (அந்தோணி) பபூன் சண்முகம் (சூசை) ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்தப்படம் நாகர்கோவிலில் அழகப்பா தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. இதே வருஷம் கோட்டாறு சவேரியார் கோவில் திருவிழாவின்போது 25 நாட்கள் ஓடியது. ஒரு நாளைக்கு காலை இரவு என ஐந்து காட்சிகள். இதற்காகத் திரைப்படப் பாடல்கள், கதைச் சுருக்கம் அடங்கிய பாட்டுப் புத்தகம் பிரசுரமாயிருக்கிறது. (நாகர்கோவில் அலெக்சாந்திரா பிரஸ். 1948. அக்.)
ஐம்பதுகளில் கூட பல வருஷங்களில் சவேரியார் திருவிழாவின் ஞானசவுந்தரிப் படத்தைப் போடுவது என்ற வழக்கம் நாகர்கோவிலில் இருந்தது. கத்தோலிக்கர்களில் பலருக்கு இந்தப் பட வசனம் மனப்பாடமாயிருந்திருக்கிறது.
ஞானசவுந்தரி தோல்பாவைக் கூத்தை முதலில் தூத்தூர் கடற்கரை கிராமத்தில்தான் பார்த்தேன். பரமசிவராவ் நடத்தினார். கோபாலராவும் கோமதிபாயும் பின்பாட்டுப் பாடினர். இது 1984 ஜூலை மாதம். தூத்தூர் கேரள எல்லையில் உள்ளது. இங்கு புனித தாமசின் ஆலயம் உண்டு. இது அரபிக் கடலுக்கும் ஏ.வி.எம் சானலுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கிறது. இது ஓர் அற்புதமான இடம்.
திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா டச்சுப் படையை எதிர்த்துப் போரிட்டபோது இந்த ஊர் மீனவ மக்கள் அவருக்கு உதவினர். மார்த்தாண்டவர்மா இங்கு புனித தோமையார் ஆலயத்தைக் கட்டிக் கொடுத்தார் (1741) என்கிறார்கள். இங்கு புனித அந்தோணியார் குருசடி உண்டு.
இங்கு நடக்கும் பாஸ்கா திருவிழா குறிப்பிடத்தகுந்தது. துக்க வெள்ளி நிகழ்வும் நடக்கும்போது இயேசுவின் சொரூபம் வீதி வழிவரும். பக்தர்கள் தெருவில் முழந்தாளிட்டு வணங்கும் அதிசயக் காட்சியைக் காண்பதற்கென்று கூட்டம் வருகிறது.
பரமசிவராவ் ஊர்மக்களின் அழைப்பின் பேரில் இந்த ஊரில் ஒரு நாளும், பக்கத்து ஊர்களில் 4 நாட்களும் ஆக 5 நாட்கள் நடத்தினார். நான் ஒரு நாள் தூத்தூரில் நிகழ்ச்சி பார்த்தேன்; பதிவும் செய்தேன்.
அடுத்தநாளே நிகழ்ச்சியை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே எழுதி எடுத்துவிட்டேன்.
ஞானசவுந்தரி நிகழ்ச்சி எல்லாமாக 92 பக்கங்கள் வந்தன. 4 பாடல்கள் சிட்டாடல் தயாரிப்பு சினிமாப் பாடல்கள் இரண்டு. மீதி இரண்டும் நல்லதங்காள் கூத்திலும் ராமாயணத்திலும் வருபவை. சில மாற்றங்களுடன் இருந்தன.
வெண்திரையில் உச்சிக் கொப்புளான், உளுவத்தலையன், கோமாளி ஆகிய மூன்று பாத்திரங்களும் உரையாட ஆரம்பிக்கும். இது நகைச்சுவை நிகழ்ச்சி, முடிந்ததும் கோமாளி “இனி கவனியுங்கள் ஞானசவுந்தரி கதையை. இது ரோம் நாட்டில் நடந்த கதை; அன்னை மரியால் கை உருப் பெற்ற அபலையின் கதை” என்று சொல்லிவிட்டு இடது பக்கம் வழி ஓடுவான். பின் இசைக் கருவிகளோடு ஒரு பாடல்.
தரும மகாராஜன் வாறாரே
ஒய்யாரமாக
தரும மகாராஜன் வாறாரே
மல்லிகை சூடச் சூட
ஒய்யாரமாகக் கையைவீசி
தரும ராசா வாறாரே
இப்பாடல் ராமாயணக்கூத்தில் உள்ளது. தசரதன் வருகையில் பாடப்படுவது. தசரதன் என்னும் பெயர் தருமர் என மாற்றப்பட்டிருக்கிறது.
தருமராசன் வேட்டைக்குச் செல்லும் போது இரண்டாவது மனைவியிடம் “லேனாளே என் மூத்த மனைவி பெற்ற பிள்ளையாக இருக்கக் கூடிய ஞானசவுந்தரியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்கிறார். சிறுமி ஞானசவுந்தரி தந்தையுடன் காட்டுக்கு வருவேன் என அடம்பிடிக்கிறாள். அவன் சமாதானப்படுத்துகிறான்.
மூன்று முதல் பத்து வரை உள்ள காட்சிகளில் ஞானசவுந்தரியை லேனாள் துன்புறுத்தல், கொலையாளிகள் ஞானத்தின் கைகளை வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள். 11-14 காட்சிகளில் ஞான சவுந்தரியை பிலவேந்திரன் காப்பாற்றுதல், கல்யாணம் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள். 15-23 காட்சிகளில் துர்கிஸ்தான் படையை விரட்ட பிலவேந்திரன் வருதல்; அவனுக்கு குழந்தை பிறந்த செய்தி, அதை ஞானசவுந்தரிக்கு எதிராக மாற்றி லேனாள் சூழ்ச்சி செய்தல், ஞானம் மறுபடியும் காட்டுக்கு செல்லுதல், மாதாவின் அருளைப் பெற்று கரங்களை மீண்டும் பெறுதல், பிலவேந்திரன் அவளைக் கண்டுபிடித்தல் ஆகியன.
24 - 26 காட்சிகளில் தருமர் உண்மை அறிதல்; காவலரிடம் லேனாவுக்கு மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றச் சொல்லுதல்; பின் கொலையாளிகளுக்கு மரண தண்டனை, வேலைக்காரி ஆரோக்கியத்துக்கு நாடு கடத்தல் தண்டனை என தருமர் நியாயம் சொல்லுதல் ஆகிய காட்சிகள், இறுதியில் “அருள் தரும் தேவமாதாவே...” பாடலுடன் நிகழ்ச்சி முடியும்.
ஞானசவுந்தரி நாடகத்தில் தான் பிரதி ஒன்றை ஞானசவுந்தரி அம்மானை எழுதியவரின் ஊரில் (தளவாய்புரம்) பார்த்தேன். பேராசிரியர் பிரான்சிஸின் வீட்டிலிருந்த அந்தப் பிரதி 1951இல் எழுதப்பட்டது. அதே ஊரில் நடிக்கப்பட்டது.
இந்த நாடக வடிவம் பெரும்பாலும் சினிமாவுடன் ஒத்துப்போவதே, பாடல்கள் சினிமாப் பாடல்களே.
1921இல் பாண்டிச்சேரியில் டி.கே.எஸ் சகோதரர்கள் இந்த ஞானசவுந்தரி நாடகத்தை மேடை ஏற்றியிருக்கின்றனர். அப்போது இதற்குரிய கதையை கே.ஜி.குப்புசாமிநாயுடு என்பவர் எழுதியிருந்தார். இவர் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்.
வாசன் நாடகம், ஸ்பெஷல் நாடகங்களில் நடிப்பதற்குப் பயன்பட்ட கதையின் அடிப்படையில் குப்புசாமி நாடகக் கையெழுத்துப் பிரதியைத் தயாரித்திருக்கிறார். இந்த நாடகத்தில் டி.கே.சண்முகம் ஞானசவுந்தரியாகவும், டி.கே.முத்துசாமி லேனாளாகவும் நடித்தனர், பாண்டிச்சேரியில் நாடகம் அரங்கேறிய போது சங்கரதாஸ் சுவாமிகள் பார்வையாளராக இருந்து பார்த்தார்.
அவர் மிகவும் தளர்ந்திருந்த சமயம் அது, இந்த நாடகம் பற்றிய வேறு விவரங்கள் கிடைக்கவில்லை.
அம்மானை, சினிமா, தோல்பாவைக்கூத்து மூன்று வடிவங்களிலும் உள்ள கதை பொ¤ய அளவில் மாற்றமில்லை.
அம்மானையில் நகைச்சுவை என்பது மருந்துக்குக் கூட இல்லை. தோல்பாவைக்கூத்து, சினிமாவின் நிலைவேறு. புளிமூட்டை ராமசாமி (அந்தோணி), பபூன் சண்முகம் (சூசை), மங்களம் (ஆரோக்கியம்) என்னும் சினிமா பாத்திரங்கள் காமெடிக் காட்சியில் வருகின்றன.
இவை கதைப்போக்கில் அமைந்தவை; ஆரோக்கியம் வேலைக்காரியாக வருகிறார். சினிமாவில் வரும் இரு காமெடி நடிகர்களும் தோல்பாவைக் கூத்தில் உளுவத்தலையன் உச்சிக்குரும்பனுமாக வருகின்றனர். ஆரோக்கியம் அதே பேரில் வருகிறாள்.
சினிமாவில் லலிதா, பத்மினி நடனக் காட்சி உண்டு. தோல்பாவைக் கூத்தில் கிடையாது. சினிமாவில் உள்ள இரண்டு பாடல்கள் கூத்தில் அப்படியே பாடப்படுகின்றன, அம்மானை கதைமுடிவில் லேனாள் நெருப்பில் தள்ளப்படுகிறாள்; சினிமாவில் லேனாள் மன்னிக்கப்படுகிறாள்; தோல்பாவைக் கூத்தில் கொலையாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர். ஆரோக்கியம் நாடு கடத்தப்படுகிறாள்.
பரமசிவராவ் 80களில் சொன்னது நினைவு இருக்கிறது, அப்பா கோபாலராவ் அழகப்பா தியேட்டரில் ஞானசவுந்தரி சினிமாவை அஞ்சாறு முறை பார்த்துவிட்டு நல்லதங்காள் கதைக்குரிய பாடல்களை வைத்தே சமாளித்து விடலாம்; படங்களை இராமாயணத்திலிருந்து எடுக்கலாம் என்றாராம்.
பரமசிவராவின் மனைவி “நல்லதங்காளை அண்ணி கொடுமைப்படுத்துறா ஞானசவுந்தரி கதையில் சித்தி எல்லாம் ஒன்றுதான்” என்றாள்.
பின் இணைப்பு: சிட்டாடல் பிலிம்ஸ் ஞானசவுந்தரி சினிமா பாடல்கள்
அருள்தரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே
இருள் நீங்கவே இகமீதிலே -
ஈடிலா நிதியே
தொகையறா
திருவே துணை நீயே - தேவத்தாயே
சிறியாள் வினைதீராய்
வானின் தேவதையே - அருள்வாய் மரியே
தேனின் மேலாம்ப தமிதே
ஜீவாதாரமே - நல் ஆதி
விதியிதுவோ பேதை நதி இதுவோ
என் செய்வேன்
கன்னியே மாமரித்தாயே என்
காணிக்கை கண்ணீரே
இன்னல் கடல்தனிலே இறகில்லா
பட்சிபோல் வீழ்ந்தேன்
மின்னல் நிகரான வாழ்வில் மீளாத
சோகம் கொண்டேனே
பெண்களில் நான் பெரும்பாவி ஏன்
பிறந்தேன் இப்புவிமீதே
அன்னையில்லாத சேய் நான் அன்பாக
ஏழைபால் அருள்வாய்
- கம்பதாசன்
வெட்டுண்ட கைகள் வேதனை
கொண்டேனே
விதிவசத்தால் இந்தக் கதியை
அடைந்தேனே
கொட்டுண்ட ஏக்கமே கொஞ்சமோ
மாதாவே
கும்பிடுங் கரங்களைக் கொண்டு
சென்றாரே
இனிவரும் வாழ்வில் துணை
புரிவாயே
கனவிலும் உனை மறவாத
மனந்தருவாயே மாமரித்தாயே
-கே.ஆர்.சாரங்கபாணிபிள்ளை