farmers victoryஉறுதியான, தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாய், அடாவடி அரசும் இப்போது அடிபணிந்துள்ளது! வென்றுள்ளன மீண்டும் வீரமும், தியாகமும்!

விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம், ஓராண்டாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்ததொரு வரலாற்று நிகழ்வு! கொட்டும் மழையில், குளிரும் பனியில் வீடு திரும்பாமல் வீதியில் கூடி நின்ற உழவர்கள் இறுதியாய் வெற்றி பெற்றுள்ளனர். அடியும் உதையும் வாங்கி, அத்தனை உயிர்களைப் பலிகொடுத்து, அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் அவர்கள் காட்டிய போராட்ட உறுதி, இன்று அவர்களின் தோள்களுக்கு வெற்றி மாலையைக் கொண்டு வந்துள்ளது.

ஓராண்டு காலமாகப் பிடிவாதம் செய்துவந்த ஒன்றிய அரசு, நேற்று திடீரென்று, விவசாய உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயச் சந்தைத் திருத்தச் சட்டம், இன்றியமையாத பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது.

இச்சட்டங்களின் நன்மைகளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விவியசாயிகள் புரிந்து கொள்ளாததால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்கிறார் பிரதமர் மோடி. ஒரு சட்டத்தின் நன்மையை ஓராண்டிற்குப் புரிய வைக்க முடியாத அரசா இது!

பாஜக அரசு பதவியேற்ற நாளிலிருந்தே விவசாயிகளின் பொருளாதார நிலை எவ்வளவு தாழ்ந்து கொண்டே போயிருக்கிறது என்பதை ஒரு புள்ளி விவரம் எடுத்துக் காட்டுகிறது. 2014ஆம்

ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் 17,000 ரூபாயாக இருந்தது. பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு அது 1,20,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இம்மூன்று வேளாண் சட்டங்களும் நடைமுறைக்கு வந்திருக்குமானால், விவசாயக் குடும்பங்கள் அழிந்தே போயிருக்கும்.

இந்தியாவில் 718 மாவட்டங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், பெரு நிறுவனங்களின் அங்கங்களாக இணைத்து விடுவதே விலக்கிக் கொள்ளப்பட்ட சட்டங்களின் சாரம். அதன் விளைவு, அதானிகளுக்கு இன்னும் ஆயிரம், லட்சம் கோடிகள் வருமானம் கூடியிருக்கும்.

சட்டங்களின் நன்மைகளைப் புரிந்து கொள்ளாததால் இல்லை, வரக்கூடிய விளைவுகளைச் சரியாகப் புரிந்து கொண்டதால்தான் விவசாயிகள் ஓராண்டு இடைவிடாமல் போராடினார்கள்.

இந்த விவசாயிகள் போராட்டத்தைத் தமிழ்நாட்டில் திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து ஆதரித்தன. நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தன. சில ஆதரவுப் போராட்டங்களையும் நடத்தின. ஆட்சிக்கு வந்தபிறகு, வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ளச் சொல்லித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு நேர் எதிராக, முந்தைய அதிமுக அரசு இச்சட்டங்களை ஆதரித்தது. நாடாளுமன்றத்திலும் பாஜக அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. சுருக்கமாகச் சொன்னால், இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததில் பாஜகவுக்கு எவ்வளவு பங்கு உண்டோ, அதே அளவு பங்கு அதிமுகவிற்கும் உண்டு!

சட்டங்களைத் திடீரென்று விலக்கிக் கொண்டதில் ஒன்றிய அரசுக்குச் சில உள்நோக்கங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை! ஒன்றிய அரசு அறிந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்றும் உள்ளது - ஒரு நாள் முடிவு, ஓராண்டு வலியை மறக்கடிக்கச் செய்து விடாது!

- சுப.வீரபாண்டியன்

Pin It