மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பார்கள்.

தெற்கே தமிழ்நாட்டின் கோட்டையில் இருந்து கழகத் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அவர்களும், வடக்கே நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி அவர்களும் பலமான அடிகளைக் கொடுத்திருக்கிறார்கள் பா.ஜ.கவுக்கு.

நீட் விலக்குக் கோரிய தமிழக அரசின் வேண்டுகோளை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததைச் சுட்டிக்காட்டிப் பேசினார் ராகுல்.

அப்போது அவர் தமிழக மக்கள் பக்குவப் பட்டவர்கள், சிந்திக்கத் தெரிந்தவர்கள், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சாவெல்லாம் பலிக்காது, தமிழ்நாட்டின் ஆட்சியை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் பிடிக்க முடியாது என்று அனல் பறக்கப் பேசினார்.

கூடுதலாக இந்தியா என்பது மன்னராட்சியின் கீழ் ஒரு நாடாக இல்லை. அது பல மாநிலங்களால் ஒன்றிணைந்த கூட்டமைப்பு என்று செவிப்பறையில் அடித்தாற்போலப் பேசினார்.

அப்போது அவையில் செய்வதறியாது தவித்தனர் பா.ஜ.கவினர் என்பதைப் பார்க்க முடிந்தது, தொலைக் காட்சியில்.

இது ஒருபுறம் இருக்க, தமிழ் நாட்டின் வல்லமை மிக்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள், வடக்கே சோனியா காந்தி தொடங்கி தெற்கே ஒ.பன்னீர்செல்வம் வரை ஒன்றியத்தின் 37 அரசியல் ஆளுமைத் தலைவர்களுக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒன்றியம் முழுவதும் சமூக நீதிக்காக ஒன்றுபட வேண்டும், ஓரணியில் ஒன்றுபட்டுத் திரள்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார் அவர்.

பா.ஜ.கவின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டார்கள் ஸ்டாலினும், ராகுல் காந்தியும்.

இது ஒரு நல்ல அறிகுறியாகத்தான் இருக்கிறது. நம் முதல்வரின் முயற்சி நிறைவேறும் என்ற நம்பிக்கைக்கு ஒன்றியத்தின் அரசியல் சூழல் சாதகமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து தந்தை பெரியார் அவர்களின் “சமூக நீதி”க் கொடியை, ஒன்றியம் முழுவதும் பறக்கவிட முயலும் ஸ்டாலின்தான் உண்மையான “மக்கள் தளபதி”.

Pin It