ஹிந்தி தெரியவில்லை என்றால் "விரைவில் கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறாமல், "உனக்கு இங்கு வேலை இல்லை" என்று சொல்லும் வட இந்திய நிறுவனங்களை கண்டிக்காமல், ஹிந்தி தெரியாததை ஒரு தேசிய குற்றம்போல் பேசிக் கொண்டிருக்கிறார் டாக்டர் தமிழிசை (https://www.facebook.com/share/v/QYR6vk94x3HGmbvi/?mibextid=w8EBqM).

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலேயே ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மட்டுமே தெரிந்த இந்தியர்களை நாம் அனுமதிக்கிறோமே! இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

தமிழ் கற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே இங்கு வேலை என்று சொல்லி அவர்களை அனுப்பி விடலாமா?parveen sultana and thamilisaiதமிழ்நாட்டில் பல தனியார் நிறுவனங்களிலும் ஹிந்தி மட்டுமே தெரிந்த, தமிழ் தெரியாத வட இந்திய பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இங்கு வந்து தமிழை கற்றுக் கொள்கிறார்கள். தமிழ் தெரியவில்லை என்பதற்காக அவர்களை நாம் புறக்கணிப்பதில்லை.

பல துறைகளிலும் வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு சாரை சாரையாய் தமிழ் தெரியாமல் வருகிறார்கள். கட்டிடப் பணி உள்ளிட்ட பல வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தமிழின் அடிப்படையே தெரியாது. அப்படி இருந்தும் அவர்களை நாம் அனுமதித்து ஏற்றுக் கொள்கிறோம்.

இந்திய நாட்டின் மூத்த மொழியான தமிழை அறியாமலேயே இந்திய நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வரும் தலைவர்களை தமிழ்நாட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறோம்.

அந்தத் தலைவர்கள் அரைகுறையாக 'வணக்கம், நன்றி' என்று கூறுவதை பார்த்து மகிழ்ந்து விரைவிலேயே தமிழை கற்றுக் கொண்டு விடுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் அந்த தலைவர்கள் ஒருபோதும் தமிழை கற்றுக் கொள்வதில்லை. நமது திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும், பாரதியையும் காலம் காலமாக பிழையாகவே மேடைகளில் வாசித்து தமிழர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதை கண்டு வருத்தப்பட்டு நிற்கிறோம். அவர்கள் யாரும் தமிழை கற்றுக் கொள்ள சிறு முயற்சி கூட எடுத்ததாக தெரியவில்லை.

தமிழ்நாட்டுக்கு வரும் எந்த ஆளுநர்களும் தமிழ் மொழியை தெரிந்து கொண்டு ஆளுநர் மாளிகைக்கு வருவதில்லை. அத்தனை ஆளுநர்களையும் அன்போடு வரவேற்று இருக்கிறது தமிழ்நாடு. தமிழ் தெரியாத ஆளுநர்தான் தமிழ்நாட்டின் அத்தனை பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக அலங்கரிக்கப்படுகிறார்.

ஏதோ ஒரு வட இந்திய தனியார் நிறுவனம் இந்தியாவின் மூத்த இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை தரவில்லை என்பதற்காக தமிழர்கள் யாருக்கும் வேலையே கிடைக்கப் போவதில்லை. இந்தி தெரிந்து கொண்டால் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் என்பது போன்ற நம்பிக்கைகளை தமிழ்நாட்டில் விதைத்து, தமிழர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைப்பதைத் தான் இந்தித் திணிப்பு என்று கூறுகிறோம்.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட போது கூட தமிழ்நாட்டின் அத்தனை அலுவலகங்களிலும் தமிழ் இருந்தது. இன்று நம்மை நாமே ஆளுகிறோம். ஆனால் ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழை நிலைநிறுத்த போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்‌.

நாம் உலகம் முழுவதும் தமிழை பரப்புகிறோம். அதற்காக எந்த நாட்டிடமும் சென்று உங்கள் பள்ளிகளில் தமிழை ஒரு மொழியாக கற்றுக் கொடுங்கள் என்று கூச்சலிடுவதில்லை. மாறாக தமிழ்ச்சங்கம் வைத்து நமது நிதியை கொண்டு தமிழை பரப்புகிறோம். உலகெங்கும் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்களை அனுப்பி வைக்கிறது.

ஹிந்தி மொழியை தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஹிந்தி பேசும் மாநில அரசுகள் விரும்பினால் ஹிந்தி பரப்புரையை தமிழ்நாட்டில் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. ஹிந்தி பிரச்சார சபா தமிழ்நாட்டில் வியாபித்திருக்கிறது. அதற்கு எந்த தடையும் இல்லை.

தமிழ்நாடு அரசு நடத்தும் அரசுப் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக் கொடுக்க, ஆசிரியர்களை நியமிக்க, அவர்களுக்கு சம்பளம் கொடுக்க இந்தி பேசும் மாநிலங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுமா? நாம் அந்த மாநிலங்களில் தமிழை கற்றுக் கொடுக்க பொறுப்பேற்றுக் கொண்டால் அவர்கள் கற்றுக் கொடுக்க ஆயத்தமாக உள்ளார்களா? இதற்கெல்லாம் டாக்டர் தமிழிசை பதில் தருவாரா?

டாக்டர் தமிழிசை அவர்களை நேர்காணல் செய்த பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களின் முக உணர்வுகளே ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு.

அன்பிற்கினிய டாக்டர் தமிழிசை அவர்களே! நீங்கள் இந்தியாவின் முகமாக ஹிந்தி மொழியை மட்டுமே பார்க்கிறீர்கள். இந்தியாவின் முகம் ஹிந்தி மட்டுமல்ல. உங்கள் பெயர் தாங்கியுள்ள தமிழும் தான். தமிழ்மொழி கற்ற, தமிழ் மொழியில் கற்ற நீங்கள் வட இந்திய தலைவர்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

ஹிந்தி தெரியாதது அவமானம் அல்ல.

தமிழின் பெருமையை, அதன் தொன்மையை, உலகெங்கும் சென்று பறைசாற்றும், உங்களின் தலைவர் தலைமை அமைச்சர் பத்தாண்டுகளாக பதவியில் இருந்த பொழுதும், இந்திய ஒன்றிய அரசின் நிர்வாக மொழியாக தமிழை உங்களால் மாற்ற முடியவில்லையே? என்பதுதான் அவமானம்.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர் 

Pin It