கடந்த 3 ஆம் நாள் திருவண்ணா மலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் மக்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற முழக்கத்தோடு கூட்டம் கூட்டமாக அலைமோதினார்கள், அமைதியுடன்.
அதே நாளில் மதுரை திருப்பரன்குன்றம் முருகன் கோயிலில் "பாரத் மாத்தாகி ஜே" என்று 'இந்தி'யில் காவிகள் சிலர் கூச்சலிட்டார்களே தவிர, "முருகனுக்கு அரோகரா" என்ற தமிழின் முழக்கத்தைத் தமிழ்க் கடவுளின் குன்றத்தில் கேட்க முடியவில்லை, கலவரம் உருவாக்கப் பட்டது. இவர்களிடம் காணப்பட்டது பக்தியல்ல, மதம்.
மதம் வேறு அரசியல் வேறு என்று பிரித்துப் பார்க்கும்வரை அமைதி நிலவும். இரண்டையும் ஒன்று சேர்க்கும் அரசியலில் மதவெறி துளிர்க்கும், கலவரம் வெடிக்கும் என்பதற்குச் சான்றாக நிற்கிறது, 1992 டிசம்பர் 8, அயோத்திச் சம்பவம்.
தமிழ்நாட்டிலும் அப்படியொரு சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட பாஜக முயல்வதாகத் தெரிகிறது. அயோத்தியில் பாபர் மசூதி, திருப்பரன்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா. ஆகவே காவடி எடுக்க வைக்கப்பட்டார் எல்.முருகன். இப்போது கலவரத்திற்கு முனைகின்றன இந்து முன்னணி போன்றவைகளை முன்வைத்து, பாஜக.
கடந்த கார்த்திகை நாளன்று திருப்பரன்குன்றம் மலையுச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இந்து அமைப்பினர் அடம்பிடித்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சாமிநாதன் அவர்கள், அதற்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கும்படியும் உத்தரவிட்டு இருந்தார். இங்கு கவனிக்க வேண்டிய செய்தி அந்த இடம் இஸ்லாமியரின் சிக்கந்தர் தர்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடம். நிலைமையின் சிக்கலை உணர்ந்த கோயில் நிர்வாகம், வழக்கம்போல குன்றின் மேலே உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் தீபத்தை ஏற்றியது.
பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் காவல் துறையினருடன் மோதலில் இறங்கி தடுப்புகளைத் தாண்டி மலை மேல் செல்ல முயன்றபோது "பாரத் மாத்தாகீ ஜே" என்று பலமாக அரசியல் கோஷத்தை இந்தியில் கூச்சலிட்டுக் கலவரச் சூழலை உருவாக்கினார்கள். ஆனால் அங்கிருந்த காவல் துறையினர் அந்தப் பகுதியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவைக் காட்டி நிதானமாகவும், திறமையாகவும் யாரையும் மலைமேல் செல்லவிடாமல் தடை செய்து விட்டார்கள். நீதிபதி சாமிநாதன் உத்தரவுக்குத் தடை கோரி கோயில் நிர்வாகம், விரைவாக மேல்முறையீடு செய்ததும், மாவட்ட ஆட்சியரின் 144 தடையுத்தரவாலும், காவல்துறையின் நேர்மையான, நிதானமான, விரைவான நடவடிக்கைகளாலும் நிகழவிருந்த கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்த அமைதியை, திருப்பரன் குன்றத்திலும் நிலைநிறுத்திக் காட்டினார் நம் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று சொன்ன முதலமைச்சர், தலைநிமிரச் செய்து விட்டார், திருப்பரன் குன்றத்தில்.
"திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் - முருகா, ஸ்டாலின் குரலெங்கும் எதிரொலிக்கும்" சொல்லிவிடு முருகா, காவிகளிடம்!