people crowd in atm

பொருளாதாரத்தில் பணப் பரிவர்த்தனைகளின் அளவைக் குறைப்பதால் பல சமூக, பொருளாதார, நிர்வாகப் பலன்களை அளிக்கும். பணப் பரிவர்த்தனைகளும் வரி ஏய்ப்பு பரிவர்த்தனைகளும் மிக அதிக அளவில் உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிகவும் பொருந்தும்.

எனவே இப்போது உள்ள பிரச்சினை இந்த நடவடிக்கையின் நோக்கம் இலக்குகள் ஆகியவை சரியானவைதானா என்பதை விட அரசுக்கு எந்த இலக்குகள் முனனுரிமையாக உள்ளன என்பதாகும். இதுவரை தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கு இலக்குகள் உள்ளன:

1.          பணப்பரிவர்த்தனைகள் இல்லா வங்கி முறைப்படுத்தப்பட்ட பொருளதாரம்.

2.         கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்து உரிய வரிப் பாக்கிகளை வசூலித்தல்.

3.         தற்போது புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளைக் கைப்பற்றுதல்.

4.         பயங்கரவாத அமைப்புகள்(?) ஆதரவாளர்களிடம் உள்ள உண்மையான கள்ளப் பணங்களைச் செல்லுபடியாக்காமல் செய்தல்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் சிக்கலான நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கு ஆயிரம் வழிமுறைகள் உண்டு. மிகச் சரியாண அணுகு முறையைக் காண இந்த இலக்குகளின் முன்னுரிமைகளைப் புரிந்து கொள்வது அவசியமாகும். பல்வேறு வழிமுறைகளை விவாதிக்கலாம் என்ற போதும், ரகசியம் காத்தல், சிக்கலற்ற முறையில் நிறைவேற்றுதல் ஆகியவை முதன்மையானவையாகும்.

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். ஒரு புறம் கருப்புப் பணம், கள்ளப்பணம், பயங்கரவாதிகள் நிதி ஆகியவற்றை பதுக்கிவைத்திருப்பவர்களைப் பிடிப்பது முதன்மையான இலக்காக இருந்தால் ரகசியம் காப்பது மிக முக்கியமானது ஆகும் இருப்பினும் இதற்காக மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தும் போது அதன் பாதிப்புகளை மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையானவர்கள் சந்திக்க நேரிடும்.

ஒரு புறம், சிக்கலற்ற முறையில் நிறைவேற்றுதல், அது நடை முறைப் படுத்தப்படும் நீண்ட காலத்தில் மக்கள் தொகையில் மிகப் பெரும் பான்மையானவர்களுக்கு அசவுகரியத்தைப் பெருமளவு குறைக்கும் ஆனால் இதில் கருப்புப்பணப் பதுக்கல்காரர்கள் எச்சரிக்கை ஆகிவிடுவர். இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு இருந்த நிலைமையின் சில அடிப்படை அம்சங்களைப் பரிசீலிப்போம்.

1.          மொத்தமாக பழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஏறத்தாழ 80 சதவீதம் ஆகும்.

2.         விவசாயம், மீன் பிடித்தல் சில்லரை வணிகம் போன்ற பல துறைகளில் பணப்பரிமாற்றம் மட்டுமே செய்யப்படுகிறது.

3.         பெரும்பாலான குடிமக்களுக்கு எ.டி.எ.ம். அல்லது டெபிட் கார்டுகள் கேஷ் கார்டுகள் காசோலைகள் போன்ற மாற்றுப் பரிவர்த்தனை முறைகள் கிடைக்கவில்லை. அவற்றில் அனுபவமும் இல்லை.

4.         இப்படிச் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளின் வாங்கும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை மேல் தட்டுமக்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று கூறமுடியாது: உதாரமணாக வீட்டு வேலை செய்பவர்களுக்குக்கூட சில ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் என்பதால் இந்த நோட்டுகளில் கொடுக்கப்படலாம்.

5.         முதியவர்கள் ஓய்வூதியம் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற மத்திய மாநில நல்வாழ்வுத் திட்டங்களிலும் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களிடம் இத்தகைய நோட்டுகள் சென்றடையலாம். இந்த நிலைமையில் சிக்கலற்ற முறையில் நிறைவேற்றுதலைக் கைவிட்டு ரகசியம் காத்ததுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைக்கு எதிரான வாதம் எடுபடுகிறது. ரகசியம் காத்தலின் பெரும் பாதிப்புகளை அனைத்துப் பொருளாதாரப் பிரிவுகளிலும் உள்ள மக்கள் தொகையின் பெரும் பகுதியினர் அனுபவிக்க வேண்டியுள்ளது.

பாதிப்புகளை மட்டும் பாராது பயன்களையும் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ரகசியம் காத்தலின் பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தால் பயன்கள் என்ன?

பரம ரகசிய அணுகுமுறையை அரசு கையாண்டுள்ளதால், கருப்புப்பணம், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கும் அமைப்புகள் ஆகியவற்றை பிடிப்பதாலும் கள்ள நோட்டுகளைக் கைப்பற்றி அழிப்பதாலும் பெரும் பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும்? மேலும் முக்கியமாக இத்தகைய பரமரகசிய நடவடிக்கை இந்த நோக்கங்களை அடைய சரியான அணுகு முறையா ?

கீழ்க்கண்டவற்றைப் பரிசீலிப்போம்.

1.          2014ம் ஆண்டு சிறப்புப் புலனாய்வு அறிக்கையில் அரசே கூறியது என்னவென்றால், கருப்புப் பணசொத்துகளில் 5 சதவீதம் மட்டுமே இந்திய ரூபாய் நோட்டுகளாக உள்ளன. இந்த சொத்துகளில் மிகப்பெரும் பகுதி நிலம், கட்டிடங்கள், பட்டியலிடப்பட்ட மூலதனங்கள், பட்டியலிடப்படாத மூலதனங்கள் ஆகிய வடிவங்களிலும், வெளிநாடுகளில் பல்வேறு நாட்டு பணங்களாகவும் சர்வதேச வங்கிகளிலும் உள்ளன.

2.         நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் அளவுகள் குறித்து அவ்வளவு சிரத்தை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஒரு வேளை காஷ்மீர் போன்ற எல்லைகளில் மாநிலங்களில் இருக்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் இதன் அளவு 0.02 சதவீதம் என்று தெரிவித்தார்.

3.         வரலாற்றில் உலக அளவிலேயெ அரசுகளின் இத்தகைய முயற்சிகளுக்கு பலன்கள் குறைவேயாகும். இந்தியாவில் மிகமிகக் குறைவாகும். இந்தியாவில் பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள் பொறிகளிலிருந்து தப்பிக்க வழிகண்டு பிடித்துவிடுவார்கள். மாட்டிக் கொள்பவர்கள் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர்தான்.

ஏற்படக் கூடிய பாதிப்புகள், அடையக் கூடிய பலன்கள் ஆகிய இரண்டையும் பரிசீலித்தால் மக்கள் தொகையின் பெரும் பகுதியை மோசமாகப் பாதிக்கக் கூடிய பெரும் பொருளாதார பாதிப்புகளைப் புறந்தள்ளிவிட்டு பரம ரகசிய முறைக்காக வாதம் செய்வது சிரமமாகும்.

இதற்குச் சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு மாறாக, அரசியல், தேர்தல் போன்ற இதர நோக்கங்கள் இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்திருக்கலாம். ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற சாத்தியமற்ற விவகாரங்களை விவாதிப்பதை விட இந்த முடிவை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவை பற்றிக் காணலாம்.

கோடிக்கணக்கான மக்கள் ஏற்கனவே ஏராளமான இடையூறுகளைச் சந்தித்துவிட்டனர். இந்நிலையில் மக்களின் வாழ்க்கையில் பொருளாதாரச் சிக்கல்கள், இடையூறுகள் ஆகியவற்றைக் குறைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

முதலாவதும் மற்றும் மிக முக்கியமானதும் என்னவென்றால், அரசிடமிருந்து வெளியாகும் தகவல்களின் உள்ளடக்கமும், காலமும் மாறவேண்டும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதை விட அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளிக்கவே தகவல்கள் வெளியிடப்படுகின்றன. பிரதமர் அலுவலகத்தின் அதிமேதாவிகள் வெளியிடும் செய்திகளான “நள்ளிரவில் சட்டவிரோதப் பணம் கட்டுதல்” 2.5 லட்சம் ரூபாய்க்குமேல் விடாது தொடரப்படும்” போன்றவை சமுதாயத்தில் கல்வி அறிவு குறைவானவர்கள், தகவல் தொடர்பு குறைவானவர்கள் ஆகியோருக்கு கிலியையும், அச்சத்தையும், ஏற்படுத்தும். இத்துடன் வாட்ஸ் அப் போன்றவற்றால் ஏற்படுத்தப்படும் புரளிகள் வேறு!

நாட்டுக்குள்ளேயே வங்கிகள், பெட்ரோல் பங்குகள், ரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களில் சட்டபூர்வ செலாவணி என்றும் மற்ற இடங்களில் செல்லாது என்றும் அறிவிக்கப்படுவதைச் சாதாரணமக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் ?

மற்றொரு பக்கத்தில், ரூபாய் நோட்டுகளில் முழுமதிப்பும் தக்கவைக்கப்படும். வங்கிகளில் பணம் எடுப்பதில் சலுகை, பயன்பாட்டுத் தேதி நீட்டிப்பு போன்ற செய்திகள் இந்த தகவல்கள் அவசியம் சென்றடைய வேண்டியவர்களுக்குச் சென்றடைவதில்லை.

மேலும் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படுவதைக் குறைக்கவும் அரைகுறையாகத் தகவல் அறிந்த மக்கள் பணத்தைக் கழிவுக்கு மாற்றுதலை தடுக்கவும் அரசு கடுமையான ஒருங்கிணைப்பு முயற்சியை எல்லாமட்டங்களிலும் எடுக்க வேண்டும். அமைதியையும் நம்பிக்கையையும் உண்டாக்க வேண்டும்.

வங்கிகளின் முன்னால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதையும். தெரு மூலைகளில் தங்கள் பணத்தை கழிவு போக மாற்றிக் கொள்வதையும் குறைத்து அதன் மூலம் சாலை பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு கருப்பு பணம் உருவாவதையும் தவிர்க்கவேண்டும்.

மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நடவடிக்கையின் விளைவுகளைப் போக்க அரசு எந்தக் கட்டுப்பாட்டு அமைப்புகள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் என்பதைக் காண வேண்டும்.

உதாரணமாக, ரூ.500 மற்றும் அதற்குக் குறைவான மதிப்பு ரூபாய் நோட்டுகளை மிகப் பெரும் அளவில் அச்சிடுவது மட்டும் போதாது. அவற்றை விநியோகிக்கும் ஏற்பாடுகளான நாடு முழுவது முள்ள 1.25 லட்சம் வங்கிக் கிளைகள், 2.5 லட்சம் ஏ.டி.எம்.கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பரமரகசியமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதால் ஏ.டி.எம்.கள் பலவாரங்கள் செயலிழந்தன. எனவே டிசம்பர் 30 கெடு தேதிக்குள் அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவது முக்கியமாகும்.

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் மருத்துவமனைகள், பெட்ரோல் மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்களில் இறுதிக் கெடுநாளுக்குப் பிறகும் தொடர்வதுடன், இச்சலுகையை உரம் மற்றும் விதைகள் விற்பனை, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறை போன்ற துறைகளில் மொத்த வியாபார பரிவர்த்தனைக்கும் அனமதிக்க வேண்டும். பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் முன் நீண்ட வரிசையைத் தவிர்க்க தினசரி உச்சவரம்பை ரூ. 5,000 அல்லது 10,000 ஆக உயர்த்த வேண்டும்.

ரூபாய் நோட்டு செலாவணி சிரமமாக இருந்தால் பொருளாதாரத்தின் சிலதுறைகள் ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்படும். போதுமான அளவு புதிய நோட்டுகள் வருவதற்கு முன் பெட்ரோல் பங்க்குகளில் பழைய நோட்டுகள் வாங்குவது நிறுத்தப்பட்டால், தாங்கள் பிடித்த மீன்களை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகளிடமிருந்து மீனவர்கள் பழைய நோட்டுகளை வாங்கமாட்டார்கள். இதன் விளைவாக அவர்களால் படகுகளுக்குத் தேவையான டீசல் வாங்கிக் கடலுக்குள் செல்லமுடியாது. சில்லரை வியாபாரிகளுக்கு மீன் கிடைக்காது. அதனால் அவற்றின் விலைகள் உயரும். அல்லது அவற்றைக் கையிருப்பில் வைத்து மீன்கள் அழுகிப் போகும். இதுதான், நிலைமையை உணர்ந்து அரசு பெட்ரோல் பங்குகளில் நவம்பர் 24 வரை பழைய நோட்டுகள் வாங்கப்படும் என்று அறிவிப்பதற்கு முன்பு நவம்பர் 11 முதல் 14 வரை ஏற்பட்டது.

இப்போது கேள்வி என்னவென்றால், நவம்பர் 24ந் தேதி வாக்கில் எல்லா இடங்களிலும் புதிய நோட்டுகள் போதுமான அளவுக்கு விநியோகம் செய்யப்பட்டு மீன் பிடித்தொழிலில் இப்பிரச்சினை ஏற்படாமல் இருக்குமா? இதை எப்படி அரசு கண்காணிக்கும்? பிரச்சினை தொடர்ந்தால் நவம்பர் 24க்குப் பிறகும் பெட்ரோல் பங்குகளின் பழைய நோட்டுகள் வாங்கப்படும் என்று அரசு அறிவிக்குமா ?

இந்த அணுகு முறை பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் கடைப்பிடிக்கபட்டு, போதுமான அளவு புதிய நோட்டுகள் விநியோகிக்கப்பட வேண்டும் அல்லது அவை வரும் வரையில் பழைய நோட்டுகளின் செலாவணி அனுமதிக்கப்பட வேண்டும்.

முடிவாக, டிசம்பர் 30க்கு மீதமுள்ள நாட்களில் அரசு அச்சுறுத்தும் போக்கை கைவிட்டு, கீழ் மட்டங்களில் பணச் செலாவாணி எளிதாக இருத்தல், சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும் வண்ணம் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முனைப்பான கவனம் செலுத்தவேண்டும்.

நன்றி: முரசொலி

Pin It